Pages: 1 2 3 4 5
Pages: 1 2 3 4 5

கேனோபநிடதம்

Part I – முதல் பாகம்

om keneṣitaṁ patati preṣitaṁ manaḥ
kena prāṇaḥ prathamaḥ praiti yuktaḥ |
keneṣitāṁ vācamimāṁ vadanti
cakśuḥ śrotraṁ ka u devo yunakti || 1-1||
எவரால் ஈர்க்கப் பட்டு, எவ்விதம் ஏவப் பட்டு
விவகா ரங்கள் என்று விடயத்தில் வீழும் மனது?
எவரால் ஏவப் பட்டு எழுவது இந்தப் பிராணன்?
எவரது விருப்பத் தாலே ஏதது பேசக் கூடும்?
எவ்விதத் தெய்வ சக்தி என்விழி, செவியி னூடே
அவ்விதத் தொழிலைச் செய்ய ஆணையிட் டுதவும் என்றே
பவ்விய மாகச் சீடன் பக்கத்தில் அமர்ந்து கேட்டான்;
கவ்விய கேள்வி ‘கேனே’ காரண உபநிடதப் பெயரே! (1-1)

(பட்டென்று போட்டு உடைக்கும் வகையில் பாடங்களைத் தருவதுதான் உபநிடதங்கள். வடமொழியில் ‘கேனே’ எனும் ‘எவரால்’ என்ற கேள்வியுடன் ஆரம்பிப்பதாலேயே இவ்வுபநிடதம் கேனோபநிடதம் எனப்படுகிறது.)

(பலகாலப் பயிற்சியால் பக்குவப்பட்ட மாணவன், உலக விஷயங்களினால் நிரந்தரமான உண்மை கிடைக்காது எனத்தெரிந்து,) ஏன் மனம் எழுந்தது? யாரால் இந்த மூச்சு இயங்குகிறது? எவரால், இதைப்போன்ற பேச்சு சாத்தியமாகிறது? கண், காது என இவற்றை இயக்குவது யார்? எனும் ஆழ்ந்த வினாக்களைத் தனது ஆசானிடம் சமர்ப்பிக்கின்றான்.

śrotrasya śrotraṁ manaso mano yad
vāco ha vācaṁ sa u prāṇasya prāṇaḥ |
cakśuṣaścakśuratimucya dhīrāḥ
pretyāsmāllokādamṛtā bhavanti || 1-2||
செவிக்குச் செவியாக, செய்மனதின் மனதாக,
மொழிக்கு மொழியாக, முனைத்துயிரின் உயிராக,
விழிக்கு விழியாக விளங்குவதே ஆன்மா!
இதையறியும் தீரர்களே இங்கேயே ஆசைகளை
விதையழித்து விலங்கொடித்து வீழாது நிலைப்பாரே !

(தீரர்எனச் சொன்னதன் சாரம் என்ன?
அறிவும் வளமும் அனைத்தான பேறிருந்தும்
துணியும் வைராக்யம் துணையின்றி ஆன்மநெறி
துளியும் அடையாரே, துணிவோரே பெரும்தீரர்!) (1-2)

காதுகளின் காதாக, வாக்கின் வாக்காக, கண்ணுக்குக் கண்ணாக இருப்பது ஆன்மா ஆகும். இதனை (வைராக்கியம் எனும் கடினமான உறுதியுடைய) தீரர்கள் இப்பிறவியிலேயே அறிந்து கொள்வதால், பிறவி எனும் விலங்கினை விலக்கி, சாகாது நிலைப்பார்கள்.

na tatra cakśurgacchati na vāggacchati no manaḥ |
na vidmo na vijānīmo yathaitadanuśiṣyāt |
anyadeva tadviditādatho aviditādadhi |
iti śuśruma pūrveṣāṁ ye nastadvyācacakśire || 1-3||
ஆன்மா எனுமந்த அருநிலையின் இருப் பிடத்தைக்
கண்கள் காணாது; கவிமொழியும் புகலாது;
எண்ணம் ஈட்டாது; ஏதுவெனக் கைப்பிடித்துக்
குறித்துக் காட்ட குருவாலும் முடியாது;
விரித்துக் காட்டி விளக்கிடவும் தெரியாது!
அறிந்த வற்றுளது அடங்காது; அறியாமல்
விரிந்த வற்றுக்கும் அப்பாலே விரிந்தது!
அவ்வாறே பரஞான ஆசாரி யார்களெலாம்
இவ்வாத உண்மையினை இயம்பியது நம்பேறு! (1-3)

அந்த ஆன்மாவைக் கண்களால் காண முடியாது. வாக்கினால் விளக்க முடியாது. மனதினால் அடைய முடியாது. குருவாலும், இதுதான் என்று காட்டுவதற்கும் வகை கிடையாது. அது அறிந்தவற்றிலிருந்து வேறுபட்டது. அறியாதவைகளுக்கு அப்பாற்பட்டது. இவ்வாறே முந்தைய வேதமுனிவர்கள் கூறியுள்ளார்கள்.

yadvācā’nabhyuditaṁ yena vāgabhyudyate |
tadeva brahma tvaṁ viddhi nedaṁ yadidamupāsate || 1-4||
வாக்காலே விளக்க வாய்க்காத தெதுவோ
வாக்காக விளங்கி வாய்க்கிறது எதுவோ – அதுவே
பிரம்மம் என்று அறி! – பிறிதோர் அறியாமல்
இதுவென்று எதையும் – இறையென்று சொன்னாலும்
இதுவல்ல அது என்றுணர்! (1-4)

எது வாக்கினால் விளக்குவதற்கு அப்பாற்பட்டதோ, எது வாக்கு விளங்குவதற்குக் காரணமானதோ அதையே பிரம்மம் என்று அறி. அதைவிடுத்து, வேறு எதையும் இது (பிரம்மம்) என்று உபதேசித்தாலும், அது (பிரம்மம்) அன்று என உணர்ந்து கொள். (1-4)

yanmanasā na manute yenāhurmano matam |
tadeva brahma tvaṁ viddhi nedaṁ yadidamupāsate || 1-5||
மனதாலே உணர மாட்டாத தெதுவோ
மனதிற்குக் காரண மாகின்ற தெதுவோ – அதுவே
பிரம்மம் என்று அறி! – பிறிதோர் அறியாமல்
இதுவென்று எதையும் – இறையென்று சொன்னாலும்
இதுவல்ல அது என்றுணர்! (1-5)

எது மனதினால் (எண்ணம், அறிவு) உணரப்பட மாட்டாதோ, எதனால் மனம் (எண்ணம், அறிவு) உணரப்படுகிறதோ அதையே பிரம்மம் என்று அறி. அதைவிடுத்து, வேறு எதையும் இது (பிரம்மம்) என்று உபதேசித்தாலும், அது (பிரம்மம்) அன்று என உணர்ந்து கொள். (1-5)

yaccakśuṣā na paśyati yena cakśūṣi paśyati |
tadeva brahma tvaṁ viddhi nedaṁ yadidamupāsate || 1-6||
கண்ணாலே எங்ஙான்றும் காணா தெதுவோ
கண்காணக் காரண மாகின்ற தெதுவோ – அதுவே
பிரம்மம் என்று அறி! – பிறிதோர் அறியாமல்
இதுவென்று எதையும் – இறையென்று சொன்னாலும்
இதுவல்ல அது என்றுணர்! (1-6)

எதைக் கண்களால் காண முடியாதோ, எதனால் கண்கள் காணப்பெறுகின்றதோ, அதையே பிரம்மம் என்று அறி. அதைவிடுத்து, வேறு எதையும் இது (பிரம்மம்) என்று உபதேசித்தாலும், அது (பிரம்மம்) அன்று என உணர்ந்து கொள். (1-6)

yacchrotreṇa na śṛṇoti yena śrotramidaṁ śrutam |
tadeva brahma tvaṁ viddhi nedaṁ yadidamupāsate || 1-7||
செவிகளிலே ஒலியாகச் சேரா தெதுவோ
செவிகளுக்குச் செவியான சேதனமும் எதுவோ – அதுவே
பிரம்மம் என்று அறி! – பிறிதோர் அறியாமல்
இதுவென்று எதையும் – இறையென்று சொன்னாலும்
இதுவல்ல அது என்றுணர்! (1-7)

எது செவிகளினால் கேட்கப்பட மாட்டாதோ, எதனால் செவிகள் கேட்கும் பணியைச் செய்கிறதோ, அதையே பிரம்மம் என்று அறி. அதைவிடுத்து, வேறு எதையும் இது (பிரம்மம்) என்று உபதேசித்தாலும், அது (பிரம்மம்) அன்று என உணர்ந்து கொள். (1-7)

yatprāṇena na prāṇiti yena prāṇaḥ praṇīyate |
tadeva brahma tvaṁ viddhi nedaṁ yadidamupāsate || 1-8||
மூக்கால் மணமாக முகரா தெதுவோ
மூக்கின் முகரும் மூலமது எதுவோ – அதுவே
பிரம்மம் என்று அறி! – பிறிதோர் அறியாமல்
இதுவென்று எதையும் – இறையென்று சொன்னாலும்
இதுவல்ல அது என்றுணர்! (1-8)

எதை மூக்கினால் முகர்ந்து உணர முடியாதோ, எதனால் மூக்கு முகரும் திறனை அடைகிறதோ, அதையே பிரம்மம் என்று அறி. அதைவிடுத்து, வேறு எதையும் இது (பிரம்மம்) என்று உபதேசித்தாலும், அது (பிரம்மம்) அன்று என உணர்ந்து கொள். (1-8)

|| iti kenopaniṣadi prathamaḥ khaṇḍaḥ ||
இவ்வாறு கேனோபநிடதம் முதல் பாகம் நிறைவு.

Pages: 1 2 3 4 5

Related Posts

Share this Post