(Read in ENGLISH)

ருத்ர வில்

ஐயாவுடன் உரையாடல் (25)

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐயாவைச் சந்தித்ததால் வழக்கமான காலை 5 மணி நடைப்பயிற்சி இன்று மேலும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. எனது முந்தைய உரையாடல்களிலிருந்து உங்களில் சிலருக்கு ஐயாவைத் தெரிந்திருக்கலாம்; ஐயா ஒரு வகை நாடோடி – ஓர் அலையும் துறவி போன்றவர் எனவும் சொல்லுவேன். ஆனாலும் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் எனது வழிகாட்டியாக, என் அருகில் இருப்பார்.

“காலை வணக்கம் ஐயா”

நீட்டிய எனது கையை, அவர் தனது வழக்கமான பரிவுடன் பிடித்து, மெதுவாகக் குலுக்கி, “உங்களுக்கும் காலை வணக்கம்!” என்றார்.

“ஐயா, நாங்கள் சந்தித்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. இக்காலைப் பொழுதில் உங்களைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.”

ஐயா ஆமோதிப்பதாகத் தலையசைப்புடன் சிரித்தார்.

“ஐயா, மே முதல் வாரத்தில் இலண்டனில் இருக்கிறீர்களா?”

“இருக்கலாம், ஏன்?”

“இலண்டனில் மகா ருத்ர ஜப யக்ஞம் நடைபெற உள்ளது. பக்தர்கள் பலரால் திட்டமிடப்பட்ட இந்த நல்ல காரியத்தில், எனக்கும் ஒரு சிறிய பங்கு, சேவை செய்யும் வாய்ப்பாகக் கிடைத்துள்ளது. மே 7 ஆம் தேதி நிகழ்வு நடைபெறுவதால், நீங்கள் எங்களுடன் இருப்பது ஒரு பெரிய விஷயமாக இருக்கும்.”

“பார்க்கலாம்! இத்தகைய நல்லொழுக்கமான யக்ஞம் செய்ய வேண்டும் என எண்ணுகின்ற சரியான நண்பர்களுடன் நீங்கள் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறேன்!”

“நன்றி ஐயா! அத்தகைய வேள்வியை வேத நடைமுறைப்படிச் செய்வதற்கு நாங்கள் அனைவரும் எவ்வளவு தகுதியானவர்கள் என்று தெரியவில்லை, ஆனால் நிகழ்ச்சியைத் தலைமை தாங்குவதற்கும் வழி நடத்துவதற்கும் கடவுளின் அருளையும், மற்றும் எங்களது சிவஸ்ரீ கல்யாணசுந்தரம் தலைமையிலான சிவாச்சாரியர்களின் துணையையும்தான் நம்புகிறோம்.”

இருவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்தோம்.

நான் தொடர்ந்தேன்.

“அவ்வப்போதும், குறிப்பாக சிவராத்திரி சமயத்திலும் பல இடங்களில் ஒன்றாகச் சேர்ந்து ஸ்ரீருத்ரம் ஜபிப்போம். இந்த வாரம்கூட மான்செஸ்டரில் டாக்டர் நாச்சியப்பன் அப்படி ஒரு வைபவம் ஏற்பாடு செய்திருக்கிறார். ஆண்டுதோறும் எங்கள் நண்பர்களில் ஒருவரான சுப்புவும் பலரும் கூடி ஜபிக்க ஏற்பாடு செய்கிறார்.”

ஐயா மகிழ்வுடன் சிரித்தார்.

நான் தொடர்ந்து கூறினேன்.

“இப்போதுதான் முதல் முறையாக, சமுதாய நலத்திற்காக, மஹா ருத்ர ஜப யக்ஞம் இலண்டனில் செய்ய வாய்ப்பு வந்தது ஐயா!”

படபடவென்று நான் சொல்லியதில், ஒரு வேளை எனது மனதுள் இருந்த எழுச்சியும், ஆர்வமும் மிகையாகத் தோன்றியிருக்கலாம்.

ஐயா சொன்னார்.

“எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும். ஆஸ்திகர்களின் பங்கேற்பும், சிவாச்சாரியார்களின் வழிகாட்டுதலும், அனைத்திற்கும் மேலாக, நீங்கள் செய்யும் எந்தச் செயலிலும் உண்மையான அர்ப்பணிப்பு இருக்கும் வரை, அனைத்தும் நன்றாகவே நடக்கும்.”

“நன்றி ஐயா! ஆஸ்திகர்கள் என்று சொன்னீர்களே! அது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்ற பொருளிலா?”

“அப்படி அன்று!”

“அப்படியானால், ஆஸ்திகர்கள் என, ஒரு குறிப்பிட்ட சாதி, மதம் போன்றவற்றைத் தகுதியாகக் குறிக்கிறீர்களா?”
ஐயா அதற்குப் பதில் சொல்வதற்குள் நான் விரைந்தேன்.

“ஐயா, இது இலண்டன் என்பதாலும், இங்கு வாழும் எங்களின் குறிக்கோள் பொதுநல சேவை செய்வது என்பதாலும், சமூகத்தில் உள்ள அனைவரையும் அரவணைத்து, மகிழ்ச்சியையும் அமைதியையும் ஏற்படுத்துவதே குறிக்கோளாக இருக்கிறது. ஆனாலும், நிச்சயமாக வேத நெறிப்படி நடக்க வேண்டிய யாகத்தின் புனிதத்தை நீர்த்துப்போகச் செய்யாமல் நடத்ததான் விழைகிறோம்.”

ஐயா சிரித்தார்.

“நிச்சயமாக! மனிதர்களை மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா உயிரினங்களையுமே தெய்வீகமாகத் தான் போற்ற வேண்டும். எல்லா மக்களும் வழிபாட்டுக்கும், சேவைக்கும் ஏற்றவர்கள்தான். இருப்பினும், வேத வேள்விகளை, ஏன் எந்த ஒரு நற்காரியத்தைச் செய்தாலும், அதனில் முழுமையான ஈடுபாடும், அர்ப்பணிப்பும், அதைச் செய்பவர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இலக்கான பலனை அடைய முடியும்.”

என் மனதுள் சிறு கலக்கம்! ஒருவேளை ஐயாவின் கருத்து, நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடையே வேண்டாத வேறுபாட்டை விளைத்துவிடுமோ என யோசித்து மேலும் கேட்கக் காத்திருந்தேன்.

ஆனால் ஐயாவின் வார்த்தைகள் புதிராகவும், புத்துணர்ச்சி தருவனவாகவும் இருந்தன.

“உண்மையிலேயே ஆறுதல் தரும் கருத்து என்ன தெரியாமா, எல்லா மனிதர்களுமே அடிப்படையில் ஆஸ்திகர்கள்தான் என்பதே! ஒருவர் எந்த இனம், எந்த மதம், எந்த நம்பிக்கை கொண்டிருந்தாலும், ஏன் முரண்பாடான கொள்கை கொண்டிருந்தாலும், அடிப்படையில் ஆஸ்திகர்களே.”

இது எப்படி இருக்க முடியும்? ஆஸ்திகர் என்ற சொல்லைப் பற்றிய எனது புரிதல் வேறுபட்டது. எனக்குத் தெரியும்,
ஐயா எப்போதுமே காலத்துக்கும், நடைமுறைக்கும் பொருத்தமான ஒழுக்கத்தையும், அறிவினையுமே விளக்காமக் கொண்டு வருகிறார். எனவே, ஒரு பயனுள்ள விவாதத்துக்கு ஏதுவாக கேள்விகளைக் கேட்பதில் நான் ஊக்கம் கொண்டு, அவரிடம் கேட்டேன்.

“ஐயா, ஆஸ்திகர் என்பது வேதங்களில் நம்பிக்கை உள்ளவர்களை மட்டுமே குறிப்பதாக அன்றோ வழக்கம்! அப்படியாயின், நீங்கள் சொல்வதை நான் எப்படிப் புரிந்துகொள்வது?”

ஐயா பதிலளித்தார்.

“நான் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் ஒரு செயலைச் செய்தால், அதனால் ஒரு விளைவு ஏற்படும் அல்லவா?”
“நிச்சயமாக ஐயா! ஆனாலும் என் விஷயத்தில், விளைவுகள் பல சமயம் நான் விரும்புவது போல் இருக்காது” – நான் லேசான சிரிப்புடன், வேடிக்கையாகச் சொன்னேன்.

“பரவாயில்லை! செயலின் விளைவு நன்மையாகவோ அல்லது பாதகமான தாக்கமாகவோ இருக்கலாம். ஆனால் விளைவு வரும் என்பதை உறுதியாக ஏற்றுக்கொள்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது, இல்லையா?”

“ஆம் ஐயா! அது ஒரு பொதுவான அறிவுதானே!”

“சரி, இப்போது சொல்லுங்கள், உங்கள் செயல்களின் விளைவு என்ன என்பது எல்லா நேரங்களிலும் புலப்படுகிறதா? தெரிகிறதா?”

“ஆம் ஐயா, பெரும்பாலும்.”

சில நொடிகள் யோசித்துவிட்டு மீண்டும் சொன்னேன்.

“எல்லா நேரமும் இல்லை ஐயா! சில சமயங்களில் நமது செயலினால் ஏற்படும் விளைவு என்ன என்பது நம்மால் காணப்படாமலும் அறியப்படாமலும் இருக்கும்! ஏனெனில் விளைவு பின்னொரு காலத்தில் ஏற்படலாம்.”

“மிகச்சரி! விளைவுகள் ஒரு செயலுக்குப் பின் உடனடியாக விளையலாம். அல்லது நேரம் கழித்தும் நிகழலாம். அவ்விளைவு புலனால் அறியப்படுவதாகவும் இருக்கலாம் அல்லது அறியப்படாமலும் போகலாம். விளைவுகளின் தாக்கம், செயல் செய்த உங்களையோ அல்லது வேறு யாரையோ அல்லது வேறு பொருளையோ பாதிக்கலாம்! நான் சொல்வதைப் புரிந்து கொள்கிறீர்களா?”

நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“இந்தப் புல்லில் நாம் நடக்கின்ற செயல், சில பூச்சிகளை நசுக்கக்கூடும், ஆனால் அந்த விளைவை நாம் பார்க்க முடிவதில்லை.”

“ஆம் ஐயா!”

“ஒரு பாதையை அகலப்படுத்த நீங்கள் ஒரு மரத்தை கீழே சாய்க்கலாம். ஆனால் அச்செயலின் விளைவு, சில காலம் கழித்து ஒரு நிலச்சரிவைத் தூண்டுவதாகவும் ஆகலாம்.”

“ஆமாம் ஐயா. நமது செயலின் விளைவு எதிர்காலத்தில் எப்போதாவது ஏற்படலாம். எப்போது, எப்படி என்று நமக்குத்
தெரியாது.”

“இவை அனைத்தும் பகுத்தறிந்து சரியானவை என்பதும், அதனால் இதில் ஏதும் மறுப்பு என்பதும் இல்லை அல்லவா?”
“ஆமாம் ஐயா! நான் இவற்றை உண்மைகளாகப் பார்க்கிறேன், எந்தப் பகுத்தறிவு உள்ளவனும் இதனை ஏற்றுக்கொள்வான்.”

ஐயா என் தோளில் தட்டிப் பதில் சொன்னார்.

“அப்படியானால் எந்த பகுத்தறிவு உள்ளவர் ஒவ்வொரும் ஆஸ்திகர்தான்.”

அதைப் புரிந்து கொள்ள முடியாதால், ஆர்வம் கலந்த ஒரு வெற்றுப் படமாக என் முகம் இருந்திருக்க வேண்டும்.

ஐயா தொடர்ந்தார்.

“நமது தர்மம், நமது செயல்களால் ஏற்படும் விளைவுகள் த்ரிஷ்ட-பலம் (கண்ணுக்குத் தெரியும் விளைவுகள்) எனவும் அத்ரிஷ்ட-பலம் (கண்ணுக்குத் தெரியாத விளைவுகள்) எனவும் இதைத்தான் சொல்கிறது. இதனைப் பகுத்தறிந்த அனைவருமே ஆஸ்திகர்கள்தான்.”

“சரி, நீங்கள் அப்படி ஒரு விளக்கம் வைத்தால், அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.”

“அப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்! அதை அறிந்த பகுத்தறிவாளி அப்படியானால், செயல்களின் விளைவுகள் எல்லாம் எப்படி வழங்கப்படுகின்றன, யாரால் வாழங்கப்படுகின்றன எனும் கேள்வியையும் கேட்டு ஆய வேண்டும். கோடிக்கணக்கான மக்களும் கோடிக்கணக்கன செயல்களும் உலகில் நடப்பதால், அவற்றின் விளைவுகளைச் சரியானபடி விநியோகிக்கின்ற பெரும் பொறுப்பு, ஓர் ஒப்பரிய தெய்வசக்திக்குத்தான் இருந்தாக வேண்டும் என்பது புரியும். அச்சக்தியை நீங்கள் ‘இயற்கை’ என்றோ ‘இறைவன்’ என்றோ எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள்.”

“ஆம் ஐயா! அப்படியானால் பகுத்தறிவினால் கடவுள் இருக்கிறார் என்பதுதான் உறுதியாகிறது. கடவுள் இல்லை என்பது இல்லை! ஆனால் எதற்காக ஆஸ்திகர் என்றால் வேத்தை நம்புபவர் என்பதான விளக்கம் பொதுவாக இருக்கிறது?”

“இதன் தொடர்பு உங்களுக்குத் தெரியவில்லையா? ஆஸ்திகரான அந்தப் பகுத்தறிவாளி, இறைவன் எனும் ஒரு சக்தி உலகில் எல்லாச் செயல்களுக்குமான விளைவை விநியோகம் செய்கிறார் என்றால், அதற்கு என்ன அடிப்படைச் சட்டம் இருக்கிறது, எந்த அறிவு இதனைத் தருகிறது, அப்படிபட்ட இறைவனிடம் எப்படி நமக்கான துயர விளைவுகளுக்கு விலக்கும், மன்னிப்பும், பரிகாரமும் எப்படிக் கேட்பது, எப்படி நலத்தை வேண்டுவது, இதற்கான முறையான அறிவு எங்கு இருக்கிறது எனப் பல கேள்விகளையும் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.”

“ஆம் ஐயா! எப்படி, எதனால்?”

நானும் அக்கேள்விகளையே எதிரொலித்தேன்.

“இங்கேதான் வேதங்கள் வருகின்றன. வேதங்கள்தான் ‘பிரமாணம்’ எனும் மேலான அறிவுச் சாதனம். அவையே இந்த ஒப்பற்ற உண்மையைத் தருகின்றன. எனவே வேதங்களை நாம் விலக்கிவிட்டால், இந்த ஒப்பற்ற உண்மையைத் தருவதற்கு வேறு எந்தக் கல்வியும், அறிவு நெறியும் நமக்கு இல்லை! அதனால் நாம் அறியாமை எனும் பாழிருளில் எப்போதும் உழல வேண்டியதுதான்.”

“ஐயா, அப்படியானால், வேதங்களில் குருட்டுத்தனமாக ஒருவர் நம்பிக்கை வைக்க வேண்டுமா?”

“இல்லை! அப்படிக் குருட்டு நம்பிக்கையாளர்களை வேதங்கள் வரவேற்கவில்லை! கேள்வி கேட்பவர்களை, ஆராய்பவர்களை, உண்மையைத் தேடுபவர்களைத்தான் வேதங்கள் போற்றுகின்றன! ஆனால், அப்படி ஆய்வதற்கும், தேடுவதற்கும், கேள்விகள் கேட்பதற்கும் முதலில் வேதங்களை அறிவுக்களமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்று அவற்றின் கருத்துக்களை முறையாகப் பயில்வருக்கே, ஆயவும், விசாரிக்கவும் உரிமை உண்டு. அப்படி செய்யாமல், வேதங்களைப் பற்றி விடமான கருத்துக்களைக் கூறுவதற்கு எவருக்கும் அதிகாரமோ, தகுதியோ இல்லை.”

“ஐயா! அதனால்தான் நீங்கள் அனைவரும் அடிப்படையில் ஆஸ்திகர்கள் என்றும், ஆனாலும் அதனை உணராமல், வேதங்களைப் பற்றியும், அவற்றின் பெருமை பற்றியும் அறியாமல் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறீர்கள்.”

“ஆம்! ஆனாலும் வேதங்களை முழுமையாக யாராலும் அறிய முடியாது! வேதங்களை முழுமையாக எவரும் அறிய வேண்டிய தேவையும் இல்லை! நான் இதனை ஏன் சொல்கிறேன் என்றால், வேதங்கள் என்பது எல்லையற்ற அறிவுச்சுரங்கம். அவற்றில் உலகத்தின் எல்லா வகையான செயல்களுக்கும், அவற்றின் விளைவுகளுக்கும் நெறிகள் எல்லாம் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவை ‘தர்மம்’ எனும் ஒரு கட்டமைப்புக்கள் அமைந்துள்ளன. இவையெல்லாம் நன்மை – தீமை எனும் விளைவுகளுக்கும், நல்லோர் – தீயோரின் செயல்களுக்குமான பாடங்களை எல்லாம் தருகின்றன. எனவே நமது ஒவ்வொருவரும் மேற்கொண்ட வாழ்க்கைப் பாதைக்கும், வாழ்க்கையின் குறிக்கோளுக்கும் தேவையானவை எதுவோ அவற்றை அறிந்து கொள்வதே முதன்மைக் கடமை ஆகும்.”

“யார் இவற்றை எல்லாம் நமக்குச் சொல்லித் தருவது?”

“முக்கியமாக ஆச்சாரியார்கள்தான்.”

ஐயா உடனேயே தொடர்ந்து சொன்னார்.

“சரி, நாம் ஸ்ரீருத்ர ஜப நிகழ்ச்சிக்கு வருவோம். அதில் ஆஸ்திகர்களின் பங்கேற்பு என நான் சொன்னதன் பொருள், சிவாச்சாரியர்களை மட்டுமல்ல, அங்கு மந்திர ஜபம் செய்பவர்கள், அவற்றைக் கேட்பவர்கள், அந்த மங்கள காரியத்திற்கு உதவி செய்பவர்கள், அங்குள்ளவர்களுக்குச் சேவை செய்பவர்கள் என பங்கு பெறும் அத்தனைபேரும் ஆஸ்திகர்கள் என்பதே! அதனால், மஹா ருத்ர ஜப யக்ஞத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரும், தாம் ஆஸ்திகர் என்னும் உறுதியும், அதனால், வேதங்களைப் பற்றி அறியவும், பயிலவும் தங்களுக்கு உரிமையும், கடமையும் உண்டு எனத் தெளிவு பெறட்டும்!”

“அப்படியே ஐயா! இது நிச்சயமான தெளிவு தருகின்றது. நான் மனதில் இருக்கும் ஒரிரு கேள்விகளைக் கேட்கட்டுமா?”

இப்படிக் கேட்டுவிட்டு, ஐயாவின் பதில் வரும் முன்னே, கேட்டேன்.

“ஸ்ரீருத்ரம் என்பது வேத மந்திரமாக இருந்தாலும், பெண்களும் இதனைச் சொல்லாம் அல்லவா?”
ஐயா உடனடியாக இதற்குப் பதிலிட்டார்.

“நிச்சயமாக! பெண்கள் வேத விற்பன்னர்களாக இருந்ததற்கு வரலாற்றில் ஏராளமான எடுத்துக் காட்டுகள் உள்ளன. தயவு செய்து மனதில் பதியுங்கள்! நமது தர்மத்தில், பெண்களுக்கு ஆண்களுக்குச் சமமாக அல்ல, அதைவிட உயர்வான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘தாய்மை’ எனும் புனிதத்துவம் கொண்டவர்களாகப் பெண்கள் குடும்பத்திலும், சமுதாயத்திலும் பெருமையுடன் போற்றப்படுகிறார்கள்! போற்றப் படவேண்டும்! ஒன்று தெரியுமா, சாத்திரங்களின்படி, கணவனின் புண்ணியத்தில் ஒரு பாதி நேரடியாகவே மனைவிக்குப் போகிறது. ஆனால், கணவனின் பாவச் செயல் எதிலும் மனைவிக்குப் பங்கு கிடையாது! இந்த ஒரு உண்மையை உணர்ந்தாலேயே, திருடனாய் இருந்தவரும் ஆதி கவி வால்மீகாயாக ஆனார்!”

இப்படிச் சொல்லிவிட்டு ஐயா சிரித்தார். நானும் சேர்ந்து சிரித்தேன்.

தொடர்ந்து ஐயா சொன்னார்.

“ஏனோ வழக்கில் மாற்றம் ஏற்பட்டு, அதன்படி, தகுதியான ஆண்கள் மட்டும் உலக நலனுக்காக வேதம் ஓதுவதும், வேள்விகள் செய்வதுமான கடமையை ஏற்கவும், அவர்களுக்குத் தத்தம் இல்லத் துணைவியர் தக்க துணையாக இருந்து உதவி செய்யவும் நடைமுறையானது.”

ஐயா அடுத்து என்ன சொல்லப் போகிறார் எனக் காத்திருக்கையில், சில , நிமிடங்கள் ஓடின.

ஐயா கூறினார்.

“எனவே வேத மந்திரங்களைச் சொல்ல விழைவாரும், சொல்லத் தெரிந்த எல்லோரும் ஜபிக்கட்டும். வேற்றுமைக்கான காரணம் எதுவும் இல்லை.”

அவ்வார்த்தைகளில், எனக்குள் பெரும் அமைதி விளைந்து. எனினும் அடுத்து ஐயா சொன்னது, சிறிதே கலக்கத்தை ஏற்படுத்தியது.

“இதனையும் மனதில் கொள்ளுங்கள்! ஸ்ரீருத்ர மந்திரங்களை, அதற்கான ஒழுக்கமும், உச்சரிப்பு முதலான நெறியும் இல்லாமல் இறைவனின் மேல் உள்ள பக்தியால் மட்டுமே சொல்வது என்பது சரிதான். ஆனால் அப்படிச் சொல்பவர்களின் மனம் தூய்மையாகத் தன்னலம் கருதாமல் பொது நலத்திற்காக வேண்டுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.”

“ஏன் அப்படி ஐயா?”, பதட்டத்துடன் தொடர்ந்து கேட்டேன்.

“எல்லோருக்கும் ‘முக்தி’, ‘ஸம்ஸார நிவ்ருத்தி’ போன்ற உயர்ந்த எண்ணங்கள் எல்லாம் விரைவில் வந்து விடாது.
‘நிஷ்காம பக்தி’ என்பது எளிதல்லவே! சாதாரணமாக நாம் வேண்டுவதெல்லாம் நல்ல ஆரோக்யம், சொத்து, சுகம்,
அமைதி மற்றும் துயரம், பயத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதுதானே! அதற்காகத்தானே கடவுளைத் துதிப்பது, வேதங்கள் ஓதுவது, வேள்விகள் செய்வது எல்லாமும்! இது ஆசைகளுடன் கூடிய ‘காம்ய பக்தி’ என்பதுதான்! ஏன் அத்தகைய பக்தி ஸ்ரீ ருத்ரம் போன்ற வேதச் சடங்குகளைச் செய்யும் தூண்டுகோலாக இருக்கக் கூடாது?”

இப்படிக் கேட்கும்போது எனது மனதுள் ஒரு எண்ணம் வந்தது. ஸ்ரீ ருத்ரத்துடன் ‘சமகம்’ ஓதப்படுகிறதே! அதில் உலக வளங்களை எல்லாம்தானே ஆசையுடன் கேட்கிறோம்.

ஐயா பதில் கூறினார்.

“நிச்சயமாக அதில் தவறில்லை. காம்யபக்தி வேண்டியதுதான். கடவுளிடம் கேட்பது என்பதே நல்ல விஷயம்தானே! அப்படிக் கடவுளிடம் நமது நலனுக்காக வேண்டிக் கொள்ளவும், துதிக்கவும் ஏராளமான பாடல்களும், ஸ்லோகங்களும், வழிமுறைகளும் இருக்கின்றனவே! கட்டுப்பாடுகள் ஏதுமில்லாமல், கடவுளையே நமக்குப் பிடித்த வடிவத்தில் தொழவும், துதிப்பதற்குப் பல பாதைகளைப் பின்பற்றவும் வழி இருக்கிறதே! கண்ணப்ப நாயனார் தன்னுடைய அசுத்தமான கரங்களாலும், எச்சிலாலும் இறைவனுக்குப் படைத்து, வேத நெறிகள் எதுவும் இன்றியே முக்தி அடையவில்லையா!”

“ஆம் ஐயா! நான் கேட்பது, தனது ஆசைகளை அடைவதற்க்காக வேத மந்திரங்களை ஓதியும், வேள்விகள் செய்தும் ஒருவர் பயனடையலாமே என்பதே”

“கண்டிப்பாகச் செய்யலாம். அப்படித் தன்னுடைய நலத்திற்காகவும், தமக்கான ஒரு பயனை விரும்பியும் வேத மந்திரங்களை சொல்லியும், வேள்விகள் செய்தும் துதிக்க விரும்பினால், அதுவும் நலமே! ஆனால் அதற்கான விதி முறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றியே ஆக வேண்டும். அதுதான் நியதி.”
சில நொடிகள் மௌனமாக இருந்த ஐயா தொடர்ந்தார்.

“வேத மந்திரங்களை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் ஆயுதம் எனக் கருதுங்கள். அதனைப் பயன்படுத்த வேண்டுமென்றால், அதற்கான பயிற்சியும், ஒழுக்கமும், பாவனைகளும் அதனைப் பிரயோகிப்பவர்களுக்கு வேண்டும்.”

“ஐயா, இதுமாதிரியான நியதிகளை எல்லாம் எல்லோராலும் பின்பற்றுவது முடியாது. அப்படியானால், ஸ்ரீருத்ர ஜபம், வேள்வி முதலியவற்றினால் என்னைப் போன்ற சாமானியர்கள் எப்படிப் பயன் அடைவது?”

“நல்ல கேள்வி! இதற்கான விடை எளிது! இதமானது! வேள்வி நியமங்களை ஒழுக முடியாதவர்கள், அதற்காக மனம் தளரவேண்டியதில்லை. தங்களின் சார்பாகச் சிவாச்சாரியர்களையும், வேத மந்திரங்களை நியமப்படி ஓதுவோர்களையும், மற்றும் பொது நலத்துக்காக நிஷ்காம பக்தியுடன் துதிப்பவர்களையும் அதிகாரிகளாக வைத்து, அவர்களால் ஸ்ரீ ருத்ர பாராயணம், யக்ஞம் முதலானவற்றை நடத்தும்படிச் செய்யலாம். அப்படி நடக்கின்ற வைபவங்களுக்கு வசதி செய்து கொடுப்பதாலேயே, ஒருவர் யக்ஞத்தின் முழுப் பயனையும் அடைய முடியும்.”

“வசதி செய்து கொடுப்பது என்றால்?” – நான் கேட்டேன்.

“எவ்வகையில் முடியுமோ அவ்வகையில். நிதியுதவி, பொருளுதவி, வேள்விக்கான திரவிய உதவி, அன்ன சேவை,
மற்ற உடலுதவிகள்…. எதுமுடியுமோ அது.”

“ஐயா, அப்படி எதுவும் செய்ய முடியாத ஆஸ்திகர்கள்?”

“அவர்கள் பங்கேற்றாலே போதுமே! அதுவே பெரும் சேவை. அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வரட்டும்! மந்திரத்தின் புனித ஒலியில் இலயிக்கட்டும். மனதில் நிம்மதி பெறட்டும். நடக்கின்ற வேள்வியப் போல, இலண்டனில் மேன்மேலும் எதிர்காலத்தில் நடக்கட்டும் என்று ஆசீர்வதிக்கட்டும்! அதுவே அவர்களுக்கும் பயனை வழங்கும்.”

எனக்குள் மகிழ்வும், உற்சாகமும் மிகுந்தது.

“ஐயா, ருத்ர மந்திரங்களைக் கேட்டாலே நமக்குப் பயன் கிடைக்குமா?”

“நிச்சயமாக! எனவே மந்திரங்களைச் சொல்லவோ, புரிந்து கொள்ளவோ முடியவில்லை எனும் மனக் கவலையே வேண்டாம்! எப்படிப் பயிற்சி பெற்ற சமையல்காரர்கள் முறைப்படி சமைத்து நல்ல விருந்தைப் பரிமாறுவார்களோ, அப்படியே மந்திரம் சொல்பவர்களும், வேள்வியில் ஈடுபட்டவர்களும், தெய்வீக அனுபவத்தைப் படைக்கட்டும். விருந்தை உண்ணுகின்ற பாக்கியம் நமக்குக் கிடைக்கிறதென்று மகிழ்வதை விட்டுவிட்டு, சமைக்க முடியவில்லையே எனத் தாபம் கொள்ள வேண்டிய அவசியம் எதற்கு! அதனால்தான், வேதச் சடங்குகள் எல்லாமே மற்றவர்களின் மற்றும் உலக நன்மைக்காகவுமே வேதியர்களால் நடத்தப்படுவதாக் கருதப்படுகின்றன.”

“நன்றி ஐயா1 எனக்கு ஸ்ரீ ருத்ரம் முதலான மந்திரங்களை ஓரளவுக்குச் சரியாகச் சொல்லத் தெரியும். அவற்றின் பொருள் முழுமையாகத் தெரியாவிட்டாலும், நானும் சிவாச்சாரியர்களுடன் சேர்ந்து மந்திரம் ஓதலாம் அல்லவா?”

“கண்டிப்பாக! பொருள் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.”

ஐயா என்னுடைய கேள்விக் குழப்பம் படிந்த முகத்தைப் பார்த்திருக்க வேண்டும். அதனால் தொடர்ந்தார்.

“பல விஷயங்களில் நமக்குப் பொருளோ காரணமோ தெரியாது. ஆனால் அந்த அறியாமை நம்மைத் தடை செய்வதில்லையே! சாப்பிடும் உணவு எப்படி சீரணமாகிறது என்பது தெரிந்துகொண்டுதான் நாம் சாப்பிடுகிறோமா! விதை எப்படி முளைக்கிறது என்ற அறிவுடனா பயிர் செய்கிறோம்? டாக்டர் கொடுக்கும் மருந்து எப்படிச் செய்யப்பட்டது எனத் தெரியாமலேயே அதனைச் சாப்பிடுவது இல்லையா! எனவே வேத மந்திரங்களின் பொருள் தெரியாது என்பது, பங்கேற்பதற்கோ ஓதுவதற்கோ ஒரு தடையே இல்லை.”

“ஆனாலும் ஐயா, பொருளை அறிந்துகொண்டால் நல்லது தானே!”

“அப்படி உங்களுக்கு ஒரு விருப்பம் இருந்தால், அதனைத் தெளிவாக உணர்ந்துகொள்ள ஒரு சரியான நேரமும், சரியான ஆசிரியரும் கிடைக்கும்வரை காத்திருங்கள். ‘சரியான நேரம்’ என ஏன் சொல்கிறேன் என்றால், வேத மந்திரங்களின் கருப்பொருளை ஆசிரியர் கொடுக்கும்போது, அதனைச் சரியாக உணரக்கூடிய மனத் தெளிவும், அறிவுக் கூர்மையும் நமக்கு வந்திருக்க வேண்டும். அத்தகைய மனத் தெளிவும், கூர்மையும் பக்தியுடன் துதிப்பவர்களுக்குத் தானாகாவே வந்து விடுகிறது என்பதால், பொருளை அறிவதற்குக் காத்திராமல், பங்கு பெறுங்கள். முக்கியமாக குருவின் துணை கண்டிப்பாக வேண்டும் எனப் புரிந்து கொள்ளுங்கள்.”

“புரிகிறது ஐயா!”

“நீங்கள் அகராதி வைத்துக் கொண்டும், இண்டர்னெட் மூலமும் படித்தும் வேத மந்திரங்களின் சொற்பொருளை எல்லாம் அறிந்து கொண்டு விடலாம்! ஆனால் சரியான கட்டமைப்பும், சரியான ஆசிரியரும் கூடினால்தான் மந்திரங்களின் கருப்பொருளைத் தெளிய முடியும்! சொற்பொருளை மட்டுமே தெரிந்து கொண்டால், அந்தக் குறை அறிவு, தவறான புரிதலை ஏற்படுத்தி, அதனால், உங்களது நம்பிக்கையையும் வீணாக்கிவிடும் அபாயம் இருக்கிறது.”

“நன்றாகப் புரிகிறது ஐயா! காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா சொன்னதை முன்பு படித்து நினைவு இருக்கிறது. புதையல் கொண்ட பெட்டி, பூட்டப்பட்டு சாவி இல்லாமல் கிடந்தால், அதைத் திறக்க முடியாது என்று போவோமா என்ன! புத்திசாலியானவன், சாவி என்றாவது கிடைக்கும் என்று அந்தப் பொக்கிஷப் பெட்டியை உயிராகப் பாதுகாப்பான். அதுபோலப் பொருள் தெரியாது எனும் பூட்டும் ஒருநாள் திறந்து, பொருள் விளங்கிவிடும்.”

“உண்மை! ஸ்ரீ ருத்ரம் மிக அரிதான பொக்கிஷம். வேதங்களில் கர்ம காண்டத்தை இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைக்காகப் படிக்கச் சொல்வார்கள். ஞான காண்டத்தை ஞானம் அடைவதற்கான சாதனமாகச் சொல்வார்கள். ஆனால் ஸ்ரீ ருத்ரம் என்பதை உலகப் பயனை அடைந்தாலும், ஞானத்தை அடைந்தாலும், தொடர்ந்து ஓதப்பட வேண்டிய அறிவாகப் புகழ்வார்கள். ஸ்ரீ ருத்ரம் என்பது ஒவ்வொருவரின் அருகில் இருப்பதாயும், அறியாமை இருளை அழிப்பதாயுமான உபநிடதம்.”

“ஐயா, ஸ்ரீ ருத்ரம் என்பது சிவபெருமானின் ருத்ர வடிவம், பாவம் செய்தவர்களைத் தன் பாணங்களால் துயரத்தில் ஆழ்த்துகிறது என்பதால், பாவிகளாகிய நாம் அதற்கு மன்னிப்புக் கேட்கவும், துயரைக் குறைக்க் கோரியும் வேண்டுகின்ற மந்திரங்கள் எனத்தான் நான் நினைத்திருக்கிறேன்.”

“நல்லது, ‘ருத்ர’ எனும் வடமொழிச் சொல்லின் பொருளே ‘துயரத்தை அழிப்பவர்’ என்பதுதான். எனவே ருத்ரரின் கருணை நமக்கு வேண்டியதுதான்.”

தனது கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, ஐயா தொடர்ந்து சொன்னார்.

“இதோ பாருங்கள். வாழ்க்கை என்பது அனுபவங்களின் சங்கிலி. அதில் சுகம், துக்கம் எல்லாம் இருக்கும். ஆனால் நாம் சுகத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. துக்கம்தான் நமக்குப் பெரும் கஷ்டமாக இருக்கிறது, இல்லையா? எனவே ருத்ரரிடம் நம் துயரத்தை நீக்கச் சொல்லிக் கேட்பதுதான் சரி”

“அப்படியானால், உலகில் சுகம் வேண்டும் எனக் கேட்க, வேறு ஒரு தெய்வ வடிவத்தைத் துதிக்க வேண்டுமா? அது தேவை என்றால், பின் எதற்காக ஸ்ரீ ருத்ரத்துடன் படிக்கும் சமகத்தில், உலகச் சுகங்கள் எல்லாமும் வேண்டப்படுகிறது! என் புரிதல் தவறா?”

“இல்லை, தவறில்லை! பருப்பு, கோதுமை எனத் தொடங்கி பல வசதிகளை எல்லாம் நாம் சமகத்தில் வேண்டுகிறோம். ஆனால் அதற்கும் மேலான கருத்து இதில் இருக்கிறது.”

“தயவு செய்து சொல்லுங்கள் ஐயா”

ஐயாவுக்கு அப்போது நேரம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், மனதில் எழும் கேள்விகளை வைத்துக் கொண்டு, அவரை எப்படிப் போக விட்டுவிட முடியும்!

ஐயா சொன்னார்.

“நமது தர்மத்தில், எந்த வடிவில் வேண்டுமானாலும் இறைவனை வணங்கலாம். எந்த வகையிலும் வணங்கலாம். ஆனால், உங்களின் கேள்வி, இன்னொரு அறிவைத் தொடுகிறது.”

“அது என்ன ஐயா?!

“சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்கிறேன்! வாழ்க்கையின் இன்பங்கள் – அவை என்ன?”

“இந்த உலகில் நாம் வாழ்வதன் நோக்கமே அவைக்குத்தான் ஐயா! இன்பம் என்பது அன்பு, பணம், குழந்தைகள், வீடு வசதி போன்றவை.”

“துன்பம் என்பது…?”

“நாம் அனுபவிக்கும் வலிகள் அனைத்துமே துன்பம்தான்! தோல்வி, சோர்வு, வியாதி, பிரிவால் ஏற்படும் துயரம் … எத்தனையோ ஐயா”.

“இன்பத்தையும் துன்பத்தையும் ஒரு தெளிவான வேறுபாட்டால் நீங்கள் தனிதனியே பிரித்துவிட முடியுமா! அன்பு வலிக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா! பணம் கவலையையும், பயத்தையும் கொடுக்கவில்லையா! குழந்தைகள் துக்கத்தை கொண்டு வருகிறார்கள் அன்றோ! சுகங்களோ அவை நமக்குக் கிடைக்காதபோது, மனதில் அமைதியற்ற தன்மையை உண்டாக்குகின்றன, அனுபவிக்கும்போதோ சலிப்பைத் தருகின்றன! அவற்றை இழக்கும்போதோ துக்கத்தை விளைக்கின்றன!”

“ஆம் ஐயா! அப்படியானால், வாழ்க்கையின் அனைத்து இன்பங்களும் கூடத் துன்பங்கள்தான் என்று நீங்கள்
கூறுகிறீர்களா?”

“பதஞ்சலி முனிவர் சொல்வது அதைத்தான்!”

“ஐயா, அப்படியானால் இன்பம், துன்பம் இரண்டையும் ஒரே கூடையில் வைத்துவிடலாம். அதைப் பொதுவாக

‘துயரம்’ என்று சொல்லிவிடலாம்!”

“ஆம்! ஆழமாக உண்மையை அறிய, அப்படியான புரிதல் மிக முக்கியமானது. நம்முடைய எல்லாத் துயரங்களின் அடிப்படை என்ன என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அது பயம்!”

“பயம்?”

“ஆம், இழந்து விடுவோமோ என்ற பயம்! இந்த உலகில் நமது செயலுக்கும், செயலற்ற தன்மைக்கும் காரணம் பயம்தான்! அந்த பயம் நீக்கப்பட வேண்டும். நமது தேவை எல்லாம் ‘அபயம்’ என்பதுதான்.”
“ஐயா, நீங்கள் மரண பயத்தை மறைமுகமாகச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்? ஸ்ரீ ருத்ர யக்ஞத்தின் ஒரு பகுதியாக மிருத்யுஞ்சய மந்திரம் ஜபிக்கப்படுவதை நான் அறிவேன். ஏனெனில் அந்த மந்திரம் வலியற்ற மரணத்தை வரமாக் கேட்கிறது. ஏனெனில் மரணம் தவிர்க்க முடியாதது.”

“சரி, அதைப்பற்றிப் பிறகு பேசலாம்! இப்போது சொல்லுங்கள், மரணம் என்றால் என்ன, மரண பயம் என்றால் என்ன?”

“என்ன ஐயா!” – அத்தகைய கேள்விக்கான பதில் அற்பமானது என்று நான் நினைத்தேன்.

“இறப்பு என்பது இந்த வாழ்க்கையின் முடிவு. மரண பயம் ….. மரண பயம்!” – நான் முணுமுணுத்தேன்.

ஐயா தெளிவுடன் சொன்னார்.

“இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே மரணம் நிகழ்கிறது. அவ்வளவுதான்! மரணம் வருவது உறுதியானது என்பதை நாம் அனைவரும் இயல்பாகவே அறிவோம்! எப்படியும் நடக்கப் போகிறது எனும் விளைவுக்கு நாம் பயப்படத் தேவையில்லை. ஆனாலும் பயப்படுகிறோம். முழு வாழ்க்கையுமே மரண பயத்தில் கழிகிறது! ஆனால் மரணமோ, ஒரு நொடியில், ஒரு உடனடி நிகழ்வாக, அந்தக் கொடிய மரண பயத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது! விசித்திரமானது அல்லவா!”

நான் காத்திருந்தேன்.

“நம்முடைய அறியாமையால் நாம் அறியாதவற்றைப் பற்றி அஞ்சுகிறோம்! அறியாமை எப்போதும் அறிவைக் கண்டு பயப்படுகிறது.”

“எனக்கு புரியவில்லை ஐயா.”

“நான் இறந்த பிறகு எனக்கு என்ன நடக்கும்? இந்த கேள்வி பயத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் தனக்கு ஒரு முடிவு இருப்பதாக யாரும் நினைப்பதில்லை. ஒரு உண்மையான ஆஸ்திகர் மரணம் என்பது, ஒரு புதிய உடலுடன், ஒரு புதிய உலகத்தில், ஒரு புதிய வாழ்க்கைக்கு நம்மை மாற்றும் நிலையாகக் கருதுவார். பிறகும்அவருக்கு அதில் ஏன் பயம்? ஏனென்றால் அந்தப் புதிய வாழ்க்கை, புதிய உடல், புதிய உலகம் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை என்பதே!”

“ஐயா, நான் அவ்வளவு ஆழமாக நினைக்கவே இல்லை! ஆனால் இறந்தவரைப் பார்த்தது எனக்குப் பயமாக இருக்கிறது.”

நான் சிரிக்க முயற்சித்தேன்.

ஐயா சில நொடிகள் நிறுத்திவிட்டுச் சொன்னார்.

“கிட்டத்தட்ட இறந்ததைப் போல ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து நீங்கள் பயப்படுகிறீர்களா?”

“இல்லை ஐயா! மாறாக நான் அவரது ஆழ்ந்த உறக்கத்தைக் கண்டு பொறாமைப்படலாம்.”

“ஆழ்ந்த உறக்கத்தில் உங்கள் ஆர்வத்திற்கு என்ன காரணம்?”

“அமைதியான நேரம் ஐயா”.

“சரியாகச் சொன்னீர்கள்! நீங்கள் கவனித்தீர்களா, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நீங்கள் அனைத்தையும் இழந்துவிட்டீர்கள்! உங்கள் உடல், மனம், உடைமை, அடையாளம், உங்கள் நோய்கள் மற்றும் இன்பங்கள் எல்லாம் போய்விட்டன! அப்போது உங்களுக்கு எதுவும் சொந்தமில்லை! உங்களின் அனைத்து பந்தங்களும் முற்றிலும் பறிக்கப்பட்ட இடம், ஆனால் நீங்கள் தினமும் அங்கு செல்ல ஆர்வமாக உள்ளீர்கள், ஏன்?”

ஐயா தொடர்ந்தார்.

“ஆழ்ந்த உறக்கத்தின் நிலை சுவாரஸ்யமாக இருப்பதாலும், அதைவிட முக்கியமாக, உறக்கத்திற்குப் பிறகு எழும்போது உங்களுக்கு உடலும், உலகமும், எதிர்கால வாழ்வும் இருக்கிறது என நம்புவதாலுமே! அந்த நம்பிக்கையின் அறிவு மட்டுமே தூக்கத்தின் பயத்தை நீக்குகிறது. அதேபோல, மரணம் என்றால் என்ன, இந்த நான் என்றென்றும் மரணமில்லாதவன் எனும் அறிவும் வந்தால், அங்கே ‘அபயம்’ இருக்கும். அந்த சுதந்திரம்தான் ‘முக்தி’. இன்பமோ துன்பமோ இல்லாத பேரின்ப நிலை அது. இது வேதாந்தத்தில் ‘ஆனந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.”

“ஐயா, அதாவது, ‘முக்தி’ வரும் காலம் வரை, வாழ்க்கையில் வரும் இன்பம் துன்பங்கள் இரண்டுமே துயரம்தான்!
அப்படித்தானே!”

“ஆம்!”

“இந்தச் சூழலில் ஐயா, ஸ்ரீ ருத்ரம் மூலம் கடவுளிடம் என்ன கேட்பது?”

“நல்ல கேள்வி. கவனமாகக் கேளுங்கள்!”

உன்னிப்பாகக் கேட்டேன்.

“நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பம் நமது செயல்களால் நாமே உருவாக்கிவிடுவது என்பதை நாம் ஒப்புக் கொண்டோம். அதாவது உலக வாழ்க்கையில் நாம் சம்பாதிக்கும் இருவினைப் பயனால், நாம் பிறந்து இறக்கும் சுழற்சியில் நம்மை ஆழமாக பிணைக்கும் துயரத்தைத்தான் சம்ப்பாதித்துக் கொள்கிறோம். நமது வினைக் கடனால் நம்மைத் தாக்குகின்ற ருத்ரவடிவமாக இறைவனைக் கண்டு, அவரை நமது கர்ம பலனை அனுப்புபவராகவும், அவற்றைத் தமது கூர்மையான அம்புகளால் எய்து நம்மைத் துளைப்பதாக வும் ஸ்ரீ ருத்ரம் உருவகப்படுத்தி இருக்கிறது.”

“அதனால்தான் ருத்ரரை பயமூட்டுகின்ற ‘கோர’ வடிவமாகச் சித்தரிக்கப்பட்டதா?”

“நாம் பயத்தில் திளைத்திருப்பதால், நமக்கு ருத்ரரின் வடிவமும் ‘கோரமாக’, பயம் அளிப்பதாகத் தெரிகிறது! ஒவ்வொருவரின் வினைக்கேற்பத் துளையிடும் அம்புகளைச் செலுத்தும் ருத்ரர் ஒட்டுமொத்தமாக உலகிற்கும் புயல், நில நடுக்கம், சூறாவளி, நோய்ப் பரவல் எனும் அம்புகளினால் இயற்கை மாற்றங்களையும் உண்டாக்குகின்றார். அதனால் அவரது வடிவம் அச்சமூட்டுவதாகச் சித்தரிக்கப்பட்து. புலித்தோல் அணிந்தும், பாம்பினால் அலங்கரிக்கப்பட்டதும், ஆயிரக்கணக்கான ஆயுதங்களுடன் கூடிய ‘பினாகா’ எனும் வெல்வதற்கரிய ருத்ர வில், கூர்மையான அம்புகள் நிறைந்த அம்பறாத்துணி முதலியவற்றுடனும் அவரது வடிவம் உள்ளது. ருத்ரனின் நெற்றி அல்லது ‘லலாடம்’ தீராத கோபத்தின் சுடரால் பிரகாசிக்கிறது. அப்படித்தான் பக்தன் இறைவனை பிரமிக்கச் செய்கின்ற இயற்கையின் சக்தியாகக் காண்கிறான்.”

“ஐயா, அதனால்தான் ஸ்ரீ ருத்ரம் தொடங்கும்போதே ருத்ரரின் கோபம், கை, அம்பு, வில் போன்றவற்றுக்குத் துதி
பாடித் தொடங்குகிறதா!”

“ஆம், அந்த வரிசையிலும் கூட! ஏனெனில் கோபம் முதலில் வருகிறது. வந்தவுடன் கையை உயர்த்தி, அம்பினை எடுக்கவும், அதை வில்லில் ஏற்றவும் செய்து குறிபார்த்து வைக்கச் செய்கிறது. பக்தனும் இந்த இயக்கவியலை அதே வரிசையில் கண்டு, கருணைக்காக தனது பிரார்த்தனைகளைச் செய்கிறான்! எவ்வளவு நுட்பமான சிந்தனை! ”

“ஆம் ஐயா! ஏன் ருத்ரர் தமது அமைதியான முகத்தைக் காட்ட முனியவில்லை?”

“அதைத்தான் பக்தன் கேட்கிறான்! அந்த கோரமற்ற ‘அகோர’ வடிவையே காண விழைகிறான். காணும் பிழை அவனுக்குள் அல்லவா இருக்கிறது! அதைக் காண அவனுக்குள்ளும் மாற்றம் வரவேண்டும் அல்லவா! கடவுள் மிகவும் இரக்கமுள்ளவர், அன்பின் வடிவம் அல்லவா!”.

தொடர்ந்து ஐயா சொன்னார்.

“முக்கியமாக இதில் பக்தரின் வேண்டுகோள் நுணுக்கங்களை நீங்கள் பாராட்ட வேண்டும்.”
இப்படிச் சொல்லிவிட்டு, ஸ்ரீ ருத்ரத்தில் இருந்து இரண்டு வரிகளை ஐயா வாசித்தார்.
விஜ்யம்த⁴நு: கபர்தி³நோ விஶல்யோபா³ணவாக்³ம் உத ।
அநேஶந்நஸ்யேஷவ ஆபு⁴ரஸ்ய நிஷங்க³தி²: ।

நான் ஆவலுடன் சொன்னேன்.

“ஆமாம் ஐயா, ஸ்ரீ ருத்ரம் முதல் அனுவாகத்தில் இருக்கிறது”

“ஆம்! இந்த இரண்டு வரிகளையுமே இந்த அனுவாகத்துக்கு, ஏன், ஸ்ரீ ருத்ரத்தின் மையமாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். பக்தன் இறைவனிடம், ‘ஓ உனது வில் அவிழ்ந்திருக்கட்டும், அம்புகளின் குடுவை வெறுமையாக இருக்கட்டும், அம்புகள் முனை மழுங்கட்டும்’ என்று கூறுகிறான். இந்த வேண்டுகோள் எவ்வளவு கண்ணியமாகவும் சாதுர்யமாகவும் இருக்கிறது!”

“கடவுள் அந்த வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தாரா?”

“நிச்சயமாக! இதற்கு பகவான் கிருஷ்ணரே சாட்சி! மகாபாரதத்தில், ஒரு அத்தியாயத்தில் உள்ளது. ஒருமுறை ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனரும், கைலாயம் சென்று இறைவனின் கருணையை வேண்டித் தொழுது பாசுபதாஸ்திரம் கேட்கிறார்கள். இறைவன் அவர்கள் இருவருக்கும் கருணை செய்து, ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள ஒரு மரத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்துகிறார். அவர்கள் அங்கு சென்றடையும் போது, சோதனையாக அணுகுவதைத் தடுக்கும் விதமாக பயமுறுத்தும் பாம்புகளுடன் பொங்கி எழும் நெருப்பு சூழ்கிறது. உடனே ஸ்ரீ கிருஷ்ணர் கீழே அமர்ந்து தியானம் செய்து, ஸ்ரீ ருத்ர மந்திரங்களை ஓதுகின்றார். இதைக் கேட்டதும், ருத்ரரின் கோர முகம், கருணையுள்ள அகோர முகமாகி ஸ்ரீ கிருஷ்ணருக்கு அனைத்து அருளையும் அளித்தது. எனவே இறைவன் நிச்சயமாக ஸ்ரீருத்ர பாராயணத்தைச் செவி மடுத்துக் கருணை தருவான்.”

ஐயா தொடர்ந்தார்.

“இராமாயணத்திலும் ஒரு பெரிய நுணுக்கம் உள்ளது தெரியுமா! ஸ்ரீ கிருஷ்ணரைப் போலவே, ஸ்ரீ ராமரும் சிவபெருமானின் சிறந்த பக்தர். உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஸ்ரீ ராமர், சீதா பிராட்டியருடன் திருமணம் செய்வதற்காக, பரசிவனின் வில்லை உடைத்த வரலாறு!”

“ஆமாம் ஐயா! நான் சிறுவனாக இருந்தபோது, சிவனின் வில்லை உடைத்ததால், ஸ்ரீ ராமர் எல்லோரைம் விட மிகவும் சக்தி வாய்ந்தவர் என வியப்பேன். இளமையில் நமக்கெல்லாம் மிகுந்த வீரம் கொண்ட ஹீரோக்கள்தானே இலட்சியம்!”

ஐயா சிரித்தார்.

“இதிகாசங்களும் புராணங்களும் இதுபோன்ற பல கதைகளினால் பெரும் உண்மையை விளக்குகின்றன. சிவனின் வில்லை உடைத்ததன் மூலம் ஸ்ரீ ராமன் நமக்கு எதைக் தெளிவு செய்தார் என்பதுதான் முக்கியமான விஷயம். இப்போது உங்களுக்கு இருக்கும் ஸ்ரீ ருத்ரம் பற்றிய புரிதலுடன், அதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்ரீ ருத்ர மந்திரங்களில், நாம் பயப்படுகின்ற, எப்படியேனும் கட்டவிழ்ந்து விட வேண்டும், பயன்படுத்த முடியாததாக ஆக வேண்டும் என வேண்டுகின்றோமே, அந்த ருத்ரவில், ஸ்ரீ ராமரின் கையில் ஒரு உலர்ந்த குச்சியைப் போல உடைந்து விழுந்து! எப்படி?”

தொடர்ந்து கூறினார்.

“இதற்குக் காரணம் ஜீவன்-முக்தராகிய ஸ்ரீ ராமருக்கு கர்ம பலனைப் பற்றிய பயம் இல்லாததால்தான்! ஒரு கர்ம யோகியாக, அவர் அனைத்து செயல்களின் விளைவுகளாலும் தீண்டப்படாதவராக விளங்கினார்! எனவே ருத்ரனின் துளைக்கும் அம்புகள் ஸ்ரீ ராமரிடம் செல்ல வேண்டிய காரணமற்றதாக ஆனதே! எனவே தனக்கு முன்னே உறங்கிக் கிடந்த அந்த வில்லினால் ஒரு பயனும் இல்லை என்பதுதான், அவரின் கையினால், அவ்வில் உடைந்ததற்குக் காரணம்! ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு முன்பு, அந்த வில்லை அசைக்கவும் முடியாது தோல்வியுற்ற மன்னர்கள் எல்லோரும் நம்மைப் போலவே, சுயநல ஆசைகள் மற்றும் அகங்காரத்தால் அறிவின்மை ஏற்றப்பட்டவர்களாக, வினைப் பலனாகிய பாரத்தால் வலிவினை இழந்தவர்களாக, ருத்ரனின் வில்லின் கூர்மையான அம்புகளுக்குப் பயப்படுபவர்களாக இருக்கிறார்கள். எனவே எப்படி வில்லை உடைப்பது? அதற்கான முயற்சியும் நம்மால் முடியுமோ! நம்முடைய பாவங்களையும், அறியாமையையும் ஒப்புக்கொண்டு ருத்ரரிடமே கருணையைக் கேட்பதுதான் நாம் செய்யக்கூடிய சிறந்த செயல். இதைத்தான் ஸ்ரீ ருத்ரம் ஓதுவதன் மூலம், முழு மனதுடன் பணிந்து வேண்டுகிறோம். முக்கியமாகம், ருத்ர கட்டப்படாமல் இருக்கட்டும் எனவும், ருத்ரின் அம்புக் குடுவை காலியாக இருக்கட்டும் எனவும், அம்புகள் மழுங்கலாகப் போகட்டும் எனவும், ருத்ரின் கோபம் தணியட்டும் எனவும் விழைகிறோம். அது ஒன்றே நாம் செய்யக்கூடியது.”

“ஐயா! அதாவது, எப்பொழுதும் இறைவனின் கருணை வடிவான அகோர முகத்தைக் காணவும், கர்ம பலனின் கூரான அம்புகளிலிருந்து விடுபடவும், நமது செயல்கள் அனைத்தையும் கர்ம யோகமாகச் செய்ய வேண்டும். சரியா?”

“ஆம்! அத்துடன் பக்தியும் நிஷ்காம-பக்தியாக மாறட்டும், நீங்கள் கர்ம-யோகத்தின் வழியைப் பின்பற்றும்போது அது இயற்கையான துணையாக இருக்கும்.”

“ஐயா, நன்றி! மரண பயம் எப்போது மறையும்? மிருத்யுஞ்சய மந்திரம் இதனைத் தானே கேட்கிறது”

இப்படிச் சொல்லிவிட்டு, அந்த மந்திரத்தை ஓதினேன்.

த்ர்யம்ப³கம் யஜாமஹே ஸுக³ந்தி⁴ம் புஷ்டிவர்த⁴நம் ।
உர்வாருகமிவ ப³ந்த⁴நாந்ம்ருத்யோர்முக்ஷீய (அ)ம்ருதாத்।

அதை ஆமோதிக்கும் புன்னகையுடன் ஐயாகூறினார்.

“நல்லது! மிருத்யுஞ்சய மந்திரம் ஸ்ரீ ருத்ரத்தில் இல்லை. ஆனாலும் இது ஒரு பொருத்தமான சேர்க்கையாக ஞானிகளால் தரப்பட்டது. ஏனெனில் அது அழகாக வேண்டுதலையும், விளைவையும் இணைக்கிறது. இதனை விளக்கிச் சொல்ல தற்போது நேரம் இல்லை. ஆனால் சுருக்கமாக மிருத்யுஞ்சய மந்திரம் எதனை வேண்டித் தருகிறது என்றால், மரணத்தின் போது, எப்படிப் பழுத்த வெள்ளரிப்பழம் அதன் கொடியை விட்டு மென்மையாக விடுபடுமோ அதுபோலவே பிண்டமாகிய உடம்பிலிருந்து சீவன் பிரிய வேண்டும் என்பதே! அதனால் மரணவலி இல்லை என உறுதி கிடைக்கிறது. அதை ஒட்டிய மரண பயமும் போகிறது. சுவாரஸ்யமாக, அதற்கு முன் ஒரு நுணுக்கமும் உள்ளது. அப்படி வலியற்ற மரணம் அதற்கான நேரத்தில் வரும் வரைக்கும், வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க து உடலும் மனமும் ஊட்டமும், வீரியமும் நிறைந்ததாக இருக்கட்டும் ஸுக³ந்தி⁴ம் புஷ்டிவர்த⁴நம் எனக் கேட்கிறது. அற்புதமான வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, அமைதியாக உயிர் பிரிதல் எனும் பெரும் வரத்தைக் கேட்கிறது! எவ்வளவு அற்புதம்!”

“ஐயா, கேட்க மகிழ்ச்சியாக உள்ளது!”

“அதுமட்டுமல்ல! மிருத்யுஞ்சய மந்திரம், மரணத்தை வெல்லும் மந்திரமாக அறியப்பட்டாலும், அது மரண பயத்தை வெல்லும் மந்திரமாகவும் கொள்ள வேண்டும். ‘அச்சமின்மை’ என்பதுதான் சுதந்திரம். கொடியிலிருந்து வெள்ளரிப்பழம் நழுவிகிறது என்பதை விட, முதிர்ந்த வெள்ளரிப் பழத்தைவிட்டுக் கொடியே நழுவிப் போகிறது என்பதாக, உலக வாழ்க்கையில் இருக்கும்போதே, உலக விஷயங்களில் பற்றின்மையால், அவற்றின் பாதிப்பு எதுவும் இல்லாமல் நாம் வாழ, அத்தனை பந்தப்படுத்தும் துயரக்கொடி நம்மை விட்டு விலகிவிடுகிறது!”

“ஐயா, உலக விஷயங்களில் இருந்து விலகுவது என்றால் என்ன? துறவா?”

“துறவு என்பது அனைத்தையும் விட்டுவிட்டு அலைந்து திரிவது அல்லது குகையில் ஒளிந்து கொள்வது எபன்பது அல்ல! அப்படியும் நடக்கலாம்! விலகுவது என்பதன் பொருள் நம் வாழ்வின் அனைத்து முயற்சிகளையும், முழு ஈடுபாட்டுடனும் கவனத்துடனும் செய்தாலும், தேவையற்ற பற்று, உணர்ச்சி பூர்வமான விருப்பு வெறுப்பு போன்றவற்றில் சிக்காமல் இருப்பதே ஆகும். அவைதான் சம்ஸாரத்தின் வலைகள்!”

இவ்வாறு கூறிவிட்டு ஐயா விடைபெற்றுப் பூங்காவைக் கடந்து சென்று விட்டார்.

என் மனதில் பல கேள்விகளை அவர் எரிய விட்டுச் சென்றதால், அவரை மீண்டும் பார்க்க வேண்டும் எனும் உறுதியுடன் என் நடைப்பயணத்தைத் தொடர்ந்தேன்! அப்போது தெளிவும், அமைதியும் மனதில் இருந்தது.

மீ. ராஜகோபாலன்
18-2-2023

Related Posts

Share this Post