Shivanandalahari – Verse 11
11 – எந்நிலையில் வாழ்ந்தாலும் ஏகன் அடி போற்றி!
नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति |
यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते
तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि ||११ ||
நரோ வா ய: கஶ்சித்₃ப₄வது ப₄வ கிம் தேன ப₄வதி |
யதீ₃யம் ஹ்ருத்பத்₃மம் யதி₃ ப₄வத₃தீ₄னம் பஶுபதே
ததீ₃யஸ்த்வம் ஶம்போ₄ ப₄வஸி ப₄வபா₄ரம் ச வஹஸி || 11 ||
துறவி எவராக – ஆனாலும்
எதிலும் சேராது வதியும் ஆளாக
உலகில் யாராகிப் – போனாலும்
பயனு மேது மலரிதய மீதுசிவ
பரமன் பாதமது – ஆனாலே
பரவி வசமுருகிப் பிறவிப் பிணியுழலும்
பளுவுன் பாரமது – உயிர்நாதா
(1)
உண்மை அறிவினைத் தேடும் மாணவனாகவோ, இல்லறம் ஏற்றவனாகவோ, வனத்தில் திரியும் முனிவனாகவோ, எல்லாம் துறந்த துறவியாகவோ, (இந்த நான்கு நிலைகளும் இல்லாத) வேறு எந்த ஒரு நிலையில் இருப்பவனாகவோ, எப்படி வேண்டுமானாலும் ஒருவன் உலகில் இருந்துவிட்டுப் போகட்டும்! அதனால் என்ன பயன்? எவனுடைய மனமாகிய மலரில், பரசிவனே, நினது பாதமலர்கள் பதிந்து இருக்கிறதோ, அவனது மனதின் வசத்தில் இருந்து, பழவினையாவும் அகற்றிப் பாதுகாப்பது நின்னருளே, பசுபதியே!
குறிப்பு:
பிறவிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், இறைவனைத் துதித்திருந்தாலே போதும் எனப் பத்தாம் பாடலில் காட்டிய பகவான் ஆதி சங்கரர், இப்பிறவியில், நாம் இருக்கும் சூழ்நிலை, ஏற்ற பொறுப்புக்கள் எவ்வாறாக இருப்பினும், இறைச் சிந்தனை எனும் ஒரே குறிக்கோளில் நிலைத்திருந்தால், அதுவே போதும் எனக் காட்டுகின்றார்.
குருவிடம் பாடம் கற்கும் மாணவப் பருவமானாலும், இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட நிலை என்றாலும், இல்லறம் விட்டு வனம் எல்லாம் திரிந்து நல்லறிவு தேடும் நிலை என்றாலும், எல்லாம் துறந்து, துறவியாய் இருக்கின்ற நிலை என்றாலும், இப்படி எந்தவொரு குறிக்கோளும் இல்லாத நிலை என எப்படி இருந்தாலும் – இவற்றால் எல்லாம் என்ன பயன் வந்து விடப் போகிறது?
மனம் எப்போது பரம்பொருளிடம் நிலைபெற்று இருக்குமோ அப்போதே நம்முடைய வினைச் சுமை எல்லாம் பரம்பொருளாலேயே சுமக்கப்பட்டு, நம்மை விடுவிக்கும். நாம் இறைவனிடம் இது வேண்டும், அது வேண்டும் என்று எதுவும் கேட்க வேண்டியதில்லை. மனம் எப்போதும் சிவானந்த வெள்ளத்தில் மூழ்கி இருந்தாலே போதும். (11)