Shivanandalahari – Verse 18
18 – மாறாச் சுகந்தந்த மறையோன் திறம் போற்றி!
वहन्तस्त्वन्मूलां पुनरपि भजन्ते हरिमुखाः |
कियद्वा दाक्षिण्यं तव शिव मदाशा च कियती
कदा वा मद्रक्षां वहसि करुणापूरितदृशा ||१८ ||
வஹந்தஸ்த்வன்மூலாம் புனரபி ப₄ஜந்தே ஹரிமுகா₂: |
கியத்₃வா தா₃க்ஷிண்யம் தவ ஶிவ மதா₃ஶா ச கியதீ
கதா₃ வா மத்₃ரக்ஷாம் வஹஸி கருணாபூரிதத்₃ருஶா || 18 ||
வித்தச்சுக வித்துப் பெருநிதி
அத்தனுனை கத்துப்பெருவறி – வதனாலே
தத்தம்பத வித்தகுதகுதியை
நித்தம்பெற தத்துந்திறைதுயி
லத்தன்அய னொத்தர்அமரரும் – பணிவாரே
பத்தப்பணி வார்க்கருட்பூமழை
முத்தப்பய னாற்சுகமேயதி
கத்தந்தா ளுமையாலுமை – அணைவோனே
மெத்தப்பல வாசையன்தாசனைச்
சுத்தப்பட வாக்கியதாமருள்
வித்தன்விழி யாலிவன்மேலருள் – விளைவாயே
(18)
இறைவா, நீவிர் ஒருவரே எல்லோருக்கும் நிலையான சுகத்தை அளிப்பவர். நினது அருளே பெருநிதி என்றும், நீவிர் அளிக்கும் பதவியே பெரிது என்றும், திருமாலும் பிரம்மனும் உம்மையே மேலும் மேலும் துதிக்கின்றனர். பணிந்தோர்க்கெல்லாம் பல சுகமும் அருளும் பொழியும் நின்னுடைய கருணை அளவிட முடியாதது. என்னுடைய ஆசையும் அதைவிட அளவிட முடியாதது. அதனால், சிறியனான என் மேல் கருணை மிகுந்த நினது பார்வையினைக் காட்டி அருள வேண்டும்.
குறிப்பு:
உண்மையை மறைக்கின்ற ஆசையாகிய திரையை அகற்ற வேண்டிக் கொண்டது, முந்தைய பாடல். ஆனால் ஆசைகள் ஏதுமிலாமல் இருப்பது எப்படி முடியும்? ஆசை உயர்வான, நிலையான சுகத்தின் மேல் இருந்தால், அதனால் பயன் உண்டு அல்லவா? ஆசைப்பட்டதை எல்லாம் அள்ளித் தருபவன் சிவன் அல்லவா? அதனாலேயே, பெரிய பதவியை அடைந்தும், திருமாலும், பிரம்மனும், மேலும் மேலும் சிவனைத் தொழுகின்றனர். நமக்கும் அளவிட முடியாத ஆசைகள் இருக்கின்றன. அவை எல்லாம் நிலையான சிவ சுகப் பெருவெள்ளத்தை விழைந்தால், அவ்வாசைகளை ஏற்று, அச்சுகத்தை அளிப்பவர் அல்லவா பரம்பொருள்! (18)