Shivanandalahari – Verse 20
20 – மனக்குரங்கைக் கட்டுவித்த மாறன் அடி போற்றி!
नटत्याशाशाखास्वटति झटिति स्वैरमभितः |
कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलं
दृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनं कुरु विभो ||२० ||
நடத்யாஶாஶாகா₂ஸ்வடதி ஜ₂டிதி ஸ்வைரமபி₄த꞉ |
கபாலின் பி₄க்ஷோ மே ஹ்ருத₃யகபிமத்யந்தசபலம்
த்₃ருட₄ம் ப₄க்த்யா ப₃த்₃த்₄வா ஶிவ ப₄வத₃தீ₄நம் குரு விபோ₄ ||20 ||
அழகுமுலை மலையேகி – கிளைதோறும்
அதுஇதெனப் பலவாக அவதியுறும் வெகுவேக
மலையுநிலை விலையாகி – மதிபோகும்
கனியசிவ மயமான இனியபர மேயெனது
கலையுமன வனவான – ரனையுநீயே
கட்டிவிடவே அன்புக் கயிறிலிடவே கரமுள்
சுட்டசிர ஓடேந்தும் – குருசீலா
(20)
எப்போதும் அலையாய் அலைக்கழிக்கும் ஆசை மிகுந்தால், மனம் அறிவின் மயக்கம் எனும் காட்டிலும், அழகு முலை என உடற்காமக் கூட்டிலும், உலகில் அது இது எனப் பல வழிகளிலும், குரங்கு எனத் தாவித் திரிகிறது. ஆசையெனும் கிளைகளில் தொங்கி அலைகிறது. நாற்புரமும் அலைவதால், மதியின் நிலைப்பாடும் கலைகிறது. கைகளில் ஏந்திய கபாலம் எனும் மண்டை ஓட்டினில் இரந்துண்டு வாழும் அருளே! (அதாவது, தன் மதியுள் தமையுணர்ந்த பேரருளே)! எனது மனமாகிய குரங்கினை, அன்பெனும் கயிற்றினால் உறுதியாகக் கட்டி, உம்முடனயே இட்டுச் செல்லும், நற்குருவே!
குறிப்பு:
அற வாழ்வும், இறை பக்தியும் இருந்தாலும் கூட, மனம் அவ்வப்போது நழுவி விடுகிறதே! ஆசை எனும் பாசத்தில் வழுக்கி விழுகிறதே! அதனால் மேன் மேலும் ‘அவித்தை’ வயப்பட்டு, வினைகளைச் செய்து, அதன் விளைவு மூட்டைகளைப் பெருக்குகிறதே! ‘பிராரப்த கர்மம்’ எனும் முன்வினையால் விளைந்து கொண்டிருக்கும் துயரை நான் சகித்துக் கொள்கிறேன்.
ஆனால், இனிமேலும் தீவினைகள் செய்யாமல் இருக்க, மனமாகிய குரங்கினை அடக்கி ஆள வேண்டுமே? இறைவா, அன்பு எனும் கயிற்றினால் கட்டி, எனது மனக் குரங்கைக் கூட்டிச் செல். நீவிர் ஆட்டிவைத்தபடி அது ஆடட்டும். இவ்வாறு துதித்து, மனமாகிய பெருவிசை அடங்குவதற்கு இறைவனது அருள் அவசியம் தேவை என்பதைக் காட்டுகின்றார் பகவான் ஆதி சங்கரர்.
‘கபாலின் பிக்ஷோ’ – அதாவது மண்டை ஓட்டில் பிச்சை ஏற்று, அதனை உண்பவர் சிவன். கபாலம் என்பதற்கு ‘சுட்ட சிரம்’ எனும் சொல் கொடுத்து, அதனால், ஆணவம் ஆகிய ஓட்டம் எல்லாம், முற்றும் அறிவுத்தீயால் அவிக்கப்பட்ட மனம் எனப் பொருள் காட்டப்பட்டது.
அதில் ஏற்கும் பிச்சை, ஆன்ம உணர்வாகிய சுக நிலை. அதனை உண்டு வாழ்பவனே யோகி. இதையே முதற் பாடலில் ‘ஆனந்த3 ஸ்பு2ர த3னுப4வாப்4யாம்’ – அதாவது, தன்னை முற்றும் உணர்ந்த பரவச நிலையிலேயே சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிவசக்தியர் என்று பகவான் துதிக்கிறார். அதுவே கபாலத்திலிருந்து உண்டு வாழுதல் என்பதாக இச்சுகநிலை சுட்டிக் காட்டப்படுகின்றது. (20)