Shivanandalahari – Verse 38

38 – முழுமதியாய் மனமுகிழ்த்த மூதோன் அடி போற்றி!

प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः .
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ||३८ ||
ப்ராக்புண்யாசலமார்க₃த₃ர்ஶிதஸுதா₄மூர்தி:ப்ரஸன்ன: ஶிவ:
ஸோம: ஸத்₃கு₃ணஸேவிதோ ம்ருக₃த₄ர: பூர்ணஸ்தமோமோசக: .
சேத: புஷ்கரலக்ஷிதோ ப₄வதி சேதா₃னந்த₃பாதோ₂னிதி₄:
ப்ராக₃ல்ப்₄யேன விஜ்ரும்ப₄தே ஸுமனஸாம் வ்ருத்திஸ்ததா₃ ஜாயதே ||38 ||

ப்ராக் = முந்தைய (கிழக்கு); புண்யாசலமார்க₃ = நல்வினை (புனிதமான) மலை வழியாக; த₃ர்ஶித = காணப்பட்ட; ஸுதா₄மூர்தி: = இனிய வடிவினராக; ப்ரஸன்ன: = தெளிவான; ஶிவ: = நந்நிலை தருபவர்;

ஸோம: = உமைபாகன் (சந்திரன்); ஸத்₃கு₃ணஸேவித: = நற்குணங்கள் சுற்றித் தொழ (விண்மீன்கள் சூழ) ம்ருக₃த₄ர:= மானை ஏந்தியவர் (மானுருவை தன்னுள் கொண்ட); பூர்ண: = முழுநிறைவான; தமோ மோசக: = அறியாமை அழிப்பவர் (இருளை அழிப்பவர்);

சேத: புஷ்கரலக்ஷித: = மதி எனும் வெளியில் விளைபவர் (ஆகாய வெளியில் விளைபவர்); ப₄வதி சேத் = அப்படியானவர் என்றால்; ததா₃ = அப்போது, ஆனந்த₃பாதோ₂நிதி₄: = மகிழ்ச்சிக் கடலாகிய நிதி;

ப்ராக₃ல்ப்₄யேன = மிகவும் எழிலாக; விஜ்ரும்ப₄தே = பொங்குகிறதே; ஸுமனஸாம் = நல்ல மனமுடையாருக்கு; வ்ருத்திஸ்ததா₃ = முன்னேற்றம் (மலர்ச்சி)அதனால்; ஜாயதே= உண்டாகும்.

(சிவனுக்கும் சந்திரனுக்கும் சிலேடை)

மேலினெதி ரானதிசை யூழுமறி யாதமலை
யாகுமத னாலினிய – வடிவாகி
தீதுகளை வோரிணைய மாதுவுமை யானுகர
மானினுரு வாகியுரு – தெளிவாகி
சூழுமிருட் போர்வைகளை மூழுமதிப் பேரழகை
நீளும்வெளித் தேறலமுத – ஒளியாகிக்
காணுமுனி யோரின்மனங் காணுமகிழ் வாகுங்கடல்
காணும்யர் வாகிமலர் – மனமேயாம்
(38)

மேலினெதி ரானதிசை = மேன்மைக்கு எதிரான திசை அதாவது பாவம் (மேற்கின் எதிர்ப்புரமான கிழக்கு); ஊழுமறி யாதமலை = அற்ற நல்வினையாகிய மலை ஆகும் (அறியப்படாது இருக்கும் மலை வழி); அதனால்; இனிய வடிவாகி;

தீதுகளை வோரிணைய = தீமை களைந்த நற்குணத்தார் சூழ (தீ துகள் = நெருப்புத் துண்டான விண்மீன்கள்); ஐவோரிணிய = ஆவோர் சூழ; மாதுவுமை யான் = அன்னை உமை உடையான் (பெண் எனும் உவமைக்குரியவன்); தெளிவாகி;

சூழுமிருட் போர்வைகளை = அறியாமை எனும் இருளைக் களைபவர் (சூழ்ந்திருக்கும் இருட்போர்வை நீக்கும்); மூழுமதிப் பேரழகை = முழுமையான அறிவின் எழிலை (முழுமையான நிலவின் அழகை); நீளும்வெளித் தேறல் = அகன்ற மனத்தின் விளக்காக (நீண்ட வானின் விளக்காக); அமுத ஒளியாகி;

காணுமுனி யோரின் = காணுகின்ற நல்மனம் முனைந்த மனிதரின் மனத்தில்; காணுமகிழ் வாகுங்கடல் = கடல்போல் மகிழ்ச்சி காணும்; காணுமுயர்வாகி = உயர்வான நிலையாகில்; மலர் மனமேயாம் = மனம் மலர்ச்சி அடையும்;

மலையாய்க் குவித்த முன் செய்த நல்வினையின் பயனாக (கீழ்த்திசையில், புனித மலைகளின் வழியாக), இனியவடிவினராய் (இனியவடிவாக), தெளிவுடையவராய் (தெளிவானதாக), நந்நிலை தருபவராய் (மகிழ்ச்சி தருவதாக), அன்னை உமையுடன் கூடியவராகவும் (பெண்ணுக்கு உவமையானதாக), நற்குணமுடையார் சுற்றித் தொழ (விண்மீன்கள் சுற்றியிருக்க), கைகளில் மான் ஏந்தியவருமாக (தன்னுள்ளே மானைப் போன்ற நிழலைக் கொண்ட), முழுமைப் பொருளாக (முழுமதியாக), அறியாமை எனும் இருளை அகற்றுபவராக (இருளை அகற்றுவதாக), பரசிவன் நல்மனம் கொண்டாரின் மனமாகிய வெளியிலே தோன்றுவதால் (சந்திரன், வான வெளியில் மிகவும் எழிலாக வருவதால்), காண்பவர்களுக்குக் கடல் போல் மகிழ்ச்சி பொங்கும்; அதனால் நந்நிலை (மனமலர்ச்சி) கிடைக்கிறது.

குறிப்பு:
ஆன்ம ஒளி வீசுவதால், மனமானது சுகப்படுகிறது. ஆன்மாவே பரம்பொருளான பரசிவம். உதிக்கின்ற முழுமையான மதியினைப் போல, பரசிவம் குளிர்ச்சியான அருளொளியுடன் விளங்குகின்றது. அதனைக் காட்டவே, பூரண நிலவுக்கும், ஆன்ம ஒளிக்கும் ஒப்புமை காட்டப்பட்டது. (38)

37 – கடைந்தடையும் பேரமுதக் கற்பகத் தரு போற்றி!

39 – அடைந்தென்னை ஆள்கின்ற அய்யன் அடி போற்றி!

Share this Post

Leave a Comment