Shivanandalahari – Verse 55
55 – உந்தியெனுள் ஆடும் உள்ளான் அடி போற்றி!
विद्यानन्दमयात्मने त्रिजगतः संरक्षणोद्योगिने |
ध्येयायाखिलयोगिभिः सुरगणैर्गेयाय मायाविने
सम्यक्ताण्डवसंभ्रमाय जटिने सेयं नतिः शंभवे ||५५ ||
வேத்₃யாய ஸாத்₄யாய தே
வித்₃யானந்த₃மயாத்மனே த்ரிஜக₃த:
ஸம்ரக்ஷணோத்₃யோகி₃னே |
த்₄யேயாயாகி₂லயோகி₃பி₄:
ஸுரக₃ணைர்கே₃யாய மாயாவினே
ஸம்யக்தாண்ட₃வஸம்ப்₄ரமாய
ஜடினே ஸேயம் நதி: ஶம்ப₄வே ||55 ||
ஆகியுரு வாகியருட் – கலையாகி
ஆயுமதி தேயுமன மோயுசுக மூநிலையும்
ஆக்கியரு ளூக்கமிறை – நிலையோனே
ஓதியுணர் யோகிமனம் ஓடிசுரர் பாடியடை
ஓயறியா மாயமறிந் – தாள்வோனே
ஒப்பிலனே கூத்தரசே அப்பிசடை யற்புதனே
நற்பலனே நாதனுனை – நயப்பேனே
(55)
யாதுக்கும் முந்தியதாய், அளவிட முடியாத ஒளிப்பிழம்பாய் (யாதிலும் விளங்குவதாய்), மறைகளின் உண்மையாய், உருவங்களாகிய கலையாய், நன்மதியால் ஆய்ந்துணரும் பேருண்மையாய், அதனால் மனதில் விளையும் பெரும் சுகமாய், மூன்று நிலைகளும், மூவுலகங்களும் ஆக்கி, அருளும் பரம்பொருளாய், உணரும் யோகிகளின் மனதிலும், பக்தியால் பாடிப் பணியும் தேவர்களின் தவத்திலும் நிறைபவராய், மாயை அறிந்து ஆள்பவராய், சடைமுடி அணிந்து ஒப்பற்ற நடனம் ஆடும் பெருமானே, நின்னையே, இப்பாடலினால் யான் நயந்து பணிகின்றேன்.
குறிப்பு:
மாலை நடனம் ஆடும் சிவபிரானைப் பாடிய பகவான் ஆதி சங்கரர், இப்பாடலில், ஆண்டவனின் தாண்டவமே நீண்டுலக மாற்றங்கள் எல்லாவற்றின் நியதி எனக் காட்டுகின்றார்.
மாறானாய் இருந்து கொண்டே மாற்றங்கள் ஆற்றுகின்ற பேரான பேரொளியாய், சிவபிரானின் நடனம் என்றும் நடந்து கொண்டே இருக்கிறது.
சிவ தாண்டவமே, எல்லா அசைவுக்கும் விசை. அவ்விசையே சக்தி. அதனாலேயே எல்லா மாற்றங்களும், ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. விழிப்பு, கனவு, துயில் எனும் மூன்று நிலைகளும், நேற்று, இன்று, நாளை எனும் மூன்று கால நிலைகளும், வல்லுடல், மெல்லுடல், காரணவுடல் எனும் மூன்று உடல்நிலைகளும் ஆகிய இவைகள் எல்லாமே, சிவதாண்டவத்தின் விசையால் எழும் மாற்றங்கள்…. அல்ல… மாற்றம் போல் தெரியும் தோற்றங்கள். அத்தோற்றப் பொய்மையே மாயை. அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் மாயையை, அறிந்து ஆட்டிப் படைப்பவர் சிவபெருமான்.
இப்பாடலின் உட்கரு, வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எல்லா மாற்றங்களையும், விளைவுகளையும் இறைவன் விதித்த வழியாக எண்ணி, அவற்றை ஏற்றும், இரசித்தும் நாம் உலகில் வாழக் கற்க வேண்டும் என்பதே ஆகும். (55)