Shivanandalahari – Verse 57

57 – எல்லோர் உள்ளிருக்கும் ஏற்றம் அடி போற்றி!

नित्यं स्वोदरपोषणाय सकलानुद्दिश्य वित्ताशया
व्यर्थं पर्यटनं करोमि भवतः सेवां न जाने विभो |
मज्जन्मान्तरपुण्यपाकबलतस्त्वं शर्व सर्वान्तर-
स्तिष्ठस्येव हि तेन वा पशुपते ते रक्षनीयोऽस्म्यहम् ||५७ ||
நித்யம் ஸ்வோத₃ரபோஷணாய
ஸகலானுத்₃தி₃ஶ்ய வித்தாஶயா
வ்யர்த₂ம் பர்யடனம் கரோமி ப₄வத:
ஸேவாம் ந ஜானே விபோ₄ |
மஜ்ஜன்மாந்தரபுண்யபாகப₃லதஸ்த்வம்
ஶர்வ ஸர்வாந்தர
ஸ்திஷ்ட₂ஸ்யேவ ஹி தேன வா பஶுபதே
தே ரக்ஷனீயோ(அ)ஸ்ம்யஹம் ||57 ||
நித்தம்என் பொத்தப்பெருவுத
ரத்துப்பசி யுக்தப்பலரிடை
வித்துப்பொரு ளுற்றுப் பிணியுற – விழைந்தோடி
சித்தம்நினை மெத்தத்துதியற
சுத்தும்புவ னத்துத்திருநிறை
சத்துக்கரு வித்தைப்பணிவுற – மறந்தேனே
முத்தம்வினை சுத்தப்பெருகிநி
மித்தப்படி சித்தப்புலனிடை
அத்தன்உரு மொத்தப்பொருளிடை – அறிவாகி
பத்தப்பரி சுத்தப்பொருளுனைப்
பற்றப்பல னுற்றுத்தகுதியைப்
பெற்றப்பெரு பேறேயானும் – பெறுவேனே
(57)

தினமும், என்னுடைய வயிற்றை நிரப்ப (உலக ஆசைகளை நிறைவேற்ற) பலரிடமும் பொருளுக்காய் என் வாழ்வை விற்று, வீணாக அலைகின்றேன். அதனால், உலகங்கள் எங்கும் நிறைந்த, எல்லா உயிர்களின் கருவாக விளங்கும் நினது அருளை நினைத்துத் துதிக்கின்ற கடமையை யான் மறந்துவிட்டேன். ஆனாலும், முன் செய்த அறத்தின் விளைவாக, எல்லோருடைய சித்தத்தினுள்ளும், சிவனே, நீங்களே இருக்கிறீர்கள் என்பதை யான் அறிய முடிந்தது அல்லவா! அதனாலேயே, (என்னுள்ளும் இருக்கும் உம்மால்) நின்னை அடையும் பலனைப் பெற யானும் தகுதி உள்ளவனாக ஆகிவிடுகிறேன்.

குறிப்பு:
இறை பக்தி இருந்தாலும் கூட, வயிற்றுப் பிழைப்புக்காக எல்லாவித வேடங்களும் இட்டு, செயல்களைச் செய்து கொண்டு வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள், எப்போதேனும் மனதுக்குள் ஏங்குவர். ‘இறைவா, இப்பாவங்களை விட்டு, உன்னையே யான் நினைத்து இருக்கும்படி செய்ய மாட்டாயா’ என வேண்டுவர். அந்த மனநிலையை இப்பாடலில் காட்டும் பகவான் ஆதி சங்கரர், இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறான் எனும் உண்மையின் ஒரு முனையையாவது நமது மனதினுள் பிடித்துக் கொண்டு விட்டால், அதுவே நல் விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்று தெளிவுறுத்துகிறார். உலக விவகாரங்களில் மட்டுமே அலைந்து அதனால், உடலையும் வாழ்க்கையும் வீணே கழித்துக் கொண்டிருக்கும் நாம், காலத்தை அப்படி வீணாக்காமல், இறைப்பணி செய்ய வேண்டும் அல்லவா? அப்படிச் செய்ய முடியவில்லையே எனச் சோர்வுறும்போது, இறைவன், கடவுள் என எல்லோரிடமும் உள்ளத்துள் இருக்கிறான் எனும் அறிவு நமக்குப் புரிந்து விட்டால், அப்படிப் புரிவதற்கான புண்ணியத்தை நாம் செய்திருக்கும் வேளையில், நமக்குப் பெருத்த ஆறுதல் கிடைக்கிறது. நமக்குள்ளும் இறைவன் இருப்பதால், நாம் தெய்வத்தைச் சுமந்து இருக்கின்ற புண்ணிய உடலாக ஆகின்றோம். ஆதலால், நமக்கு இறைவனது அருளை நிர்ப்பந்தப் படுத்திக் கேட்கின்ற தகுதியும் உரிமையும் கிடைக்கிறது. இவ்வாறு பாடி இருப்பதன் மூலம், பகவான் ஆதி சங்கரர், இறைவனிடத்தில், பெரிய ஞானிகளுக்கு இருக்கின்ற உரிமையும், தகுதியும், நம்மைப் போன்ற எளியோருக்கும் இருக்கிறது என்று உறுதி கொடுக்கின்றார். (57)

56 – நல்லான் நவினுலகை நாட்டுவான் அடி போற்றி!

58 – கதிர் கிரணக் கோடியெனக் காட்டும் எழில் போற்றி!

Share this Post

Leave a Comment