Shivanandalahari – Verse 71

71 – பக்திக் கணை குறித்த முக்திப் பயன் போற்றி!

आरूढभक्तिगुणकुञ्चितभावचाप-
युक्तैः शिवस्मरणबाणगणैरमोघैः |
निर्जित्य किल्बिषरिपून् विजयी सुधीन्द्रः
सानन्दमावहति सुस्थिरराजलक्ष्मीम् ||७१ ||
ஆரூட₄ப₄க்திகு₃ணகுஞ்சிதபா₄வசாப-
யுக்தை: ஸி₂வஸ்மரணபா₃ணக₃ணைரமோகை₄: |
நிர்ஜித்ய கில்பி₃ஷரிபூன் விஜயீ ஸுதீ₄ந்த்₃ர:
ஸானந்த₃மாவஹதி ஸுஸ்தி₂ரராஜலக்ஷ்மீம் || 71 ||
சத்தென முத்திய பத்திக யிற்றறி
வித்தம னத்திடம் – வில்லாகி
வெத்துவ கற்றிய சித்துசி வத்தருள்
உற்றம கத்துவங் – கணையாக
வித்துவி னைப்பட மொத்தம ழித்தரு
புத்தன கத்திடன் – பெருவீரன்
சுத்தநி லைப்பட வெற்றி அகப்பட
நித்திநெ றிப்பட – நிறைவோனே
(71)

உயரிய பக்தியாகிய கயிற்றால் கட்டப்பட்ட நற்குணமாகிய வில்லில், ஒரு போதும் பயன் அற்றதாக ஆகாத ‘சிவச் சிந்தனை’ எனும் கூர்த்த அம்புகளை ஏற்றி, குற்றமளிக்கும் தீ வினைகளான எதிரிகளை எல்லாம், முற்றும் அழித்து வெற்றி அடைபவனே அறிவிற் சிறந்தவனாகி, நிலையான செல்வங்களை எல்லாம் ஆளுபவனாக ஆகிறான்.

குறிப்பு:
அப்படித் தன்னுளே, இறைவனை அறியும் திறன் வந்து விட்டால், அதனால் என்ன பயன்? தீ வினைகளைக் களைவது அதன் முக்கிய விளைவு. அதற்கு பக்தியால் கட்டப்பட்ட நற்குணமாகிய வில் தேவை.

குணமாற்றம் என்பது வளர்ச்சியின் அடையாளம். கர்ம யோகமும், பக்தி யோகமும் நற்குண மாற்றங்களை நம்முள் விளைக்கிறது. அதனால் பணிந்து வளையும் வில்லாகிய பண்புகளினால், சிவத்தியானமாகிய குறிக்கோளுடன் கூடிய கணைகளை ஏற்றி, பெருநிலையான இறையடிகளைக் குறித்துச் செலுத்த வேண்டும். அதாவது தியானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால், எந்த வினைகளும் ஒட்டாமல், நந்நிலை மட்டுமே எப்பொழுதும் நம்முடன் இருக்கும். இதுவே இப்பாடலின் உட்கரு. (71)

70 – எளிதாகி இனிதாகி ஏற்பான் அடி போற்றி!

72 – ஆதார மானதிரு அடியுடையான் அருள் போற்றி!

Share this Post

Leave a Comment