Shivanandalahari – Verse 73
73 – மதி விதையப் பதியநில மானசிவன் அடி போற்றி!
भूदार एव किमतः सुमते लभस्व |
केदारमाकलितमुक्तिमहौषधीनां
पादारविन्दभजनं परमेश्वरस्य | ७३||
பூ₄தா₃ர ஏவ கிமத: ஸுமதே லப₄ஸ்வ |
கேதா₃ரமாகலிதமுக்திமஹௌஷதீ₄னாம்
பாதா₃ரவிந்த₃ப₄ஜனம் பரமேஸ்₂வரஸ்ய | 73 ||
சொந்தத்திரு வுந்தப்பூமியுள் – அரியாகும்
எந்தப்பொரு ளெந்தப்பூமியுள் நொந்தப்படு மந்தப்பேரிடர்
அந்தப்பட வந்தச்சூரணம் – சரியாகும்
தந்தப்பயி ருந்தச்சீர்வளஞ் சிந்தப்பய னந்தச்சீரடி
சிந்தைப்பட எந்தைப்பரசிவ – எனத்தேடி
முந்திபெறு நன்மதிசீரிய புந்திக்கரு சின்மயமாகிய
முற்றுப்பெற மற்றுப்பொருளெது – முறைவாயே
(73)
ஸ்ரீதேவியையும், பூதேவியையும் தமது துணையாய் உடைய திருமால், எதனை நாடி, பூமியின் ஆழத்தைத் தோண்டும் (வராஹ) அவதாரம் எடுத்தாரோ, மற்றும் உலகின் துன்பங்களிலிருந்து விடுதலை தரும் உயரிய மருந்துக்கு எது விளைநிலமாக இருக்கிறதோ அந்தப் பரசிவனின் திருவடிகளைப் பணியும் கடமையை, ஓ நல்லறிவே, நீ ஏற்றுச் செய். அதைவிட வேறு பேறு ஏது! (இல்லை).
குறிப்பு:
கீழுலக, மேலுலக வாழ்வு எனும் இருநிலைகளே தர்மம் காட்டிய வழியில் நடக்கும் உயிரினங்களுக்குப் பொதுவாக மாறி மாறி அமைகின்ற பயணம். வினைகளுக்கேற்ப தக்க உடலெடுத்து இவ்வாறான உலகங்களில் இருத்தப்பட்ட வாழ்க்கையினைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
தமது சக்திகளையே பூதேவி, ஸ்ரீதேவி எனும் துணைவியர்களாக உடனிருத்தி, எல்லா உலகங்களையும் வியாபித்துக் காத்து வரும் திருமால், ‘கர்ம பல தாதா’ எனும்படியாக, நமது வினைகளை ஒட்டி, அதற்கேற்ற உடலையும் பயனையும் கொடுத்து, இவ்வாறான உலகங்களிலே நம்மைத் தொடர்ந்து ஆழ்த்தி வருகிறார்.
ஞானம் ஒன்றினாலயே, தர்மத்தால் முதிர்ந்த மனிதர்கள், பிறவிப்பயன் அடைந்தவர்களாக, இவ்வுலகங்களைக் கடந்த பரம்பொருளான பிரம்மத்தை அடைந்து, பிறந்து இறக்கும் பெரும் பிணையை விலக்கி, முக்திப் பேற்றினை அடைய முடியும். அதனைச் சுட்டிக் காட்டவே, திருமால் பூமியை அகழ்ந்து பரம்பொருளின் திருவடிகளைத் தேடுவதாகப் புராணங்கள் சொல்கின்றன. பரம்பொருளின் திருவடிகளே, முக்தியாகிய துன்பத்திலிருந்து விடுவிக்கும் மருந்தினை வளர்க்கும் வளமையான வயல் என்று காட்டப்பட்டது. அத்திருவடிகளிலேயே, நல்லோர் மனமும், மதியும் எப்போதும் பதிய வேண்டும் என்பதே இப்பாடலின் கரு. (73)