Shivanandalahari – Verse 80

80 – கூடமாம் கல்மனதுள் கூத்திடுவான் அடி போற்றி!

एष्यत्येष जनिं मनोऽस्य कठिनं तस्मिन्नटानीति म-
द्रक्षायै गिरिसीम्नि कोमलपदन्यासः पुराभ्यासितः |
नोचेद्दिव्यगृहान्तरेषु सुमनस्तल्पेषु वेद्यादिषु
प्रायः सत्सु शिलातलेषु नटनं शंभो किमर्थं तव ||८० ||
ஏஷ்யத்யேஷ ஜனிம் மனோ(அ)ஸ்ய கடி₂னம்
தஸ்மின்னடானீதி ம
த்₃ரக்ஷாயை கி₃ரிஸீம்னி கோமலபத₃ன்யாஸ:
புராப்₄யாஸித: |
நோசேத்₃தி₃வ்யக்₃ருஹாந்தரேஷு
ஸுமனஸ்தல்பேஷு வேத்₃யாதி₃ஷு
ப்ராய: ஸத்ஸு ஸி₂லாதலேஷு நடனம்
ஸ₂ம்போ₄ கிமர்த₂ம் தவ || 80 ||
பிறவியடை வானிவனின் இறுகியடர் வானமனம்
அருகிநட மாடலருள் – அதனாலே
அடவியடை வானமலை தடவிநட மாடியுன
தடிகளடை யாளமிடும் – அதுநாளே
கரவியொரு காரணமுந் தெரியவிலை வேறுயெனில்
களமுநல மானவகம் – சிவசம்போ
மலருமட மாம்படுகை மறையுதிட லாமிருக்க
மலையில்நட மாடும்நிலை – எதனாலே
(80)

சிவ சம்போ, ‘இவன் பிறவி அடையப் போகிறான், இவனது மனம் கடினமாக இருக்கப் போகிறது. அக்கடின மனதில் யான் நடனமாமிட வேண்டும்’ என்று (இதைப் போல் யோசித்து) எனக்கு அருள் செய்யத்தான், தாங்கள் கடினமான மலைப் பகுதிகளில் தங்கள் பாதங்கள் பட, முன்பு நடனமாடினீர்கள் போலும். (வேறு காரணம் என்று) அப்படி இல்லை என்றால், ஒளி மிகுந்த இல்லம் இருக்க, மலர் அரங்கங்களும் மறை மேடைகளுமென அதிகமிருக்க, மலைகளில் நடனம் ஆடுவதன் காரணம் எது?

குறிப்பு:
79-ம் பாடலில், எமனை உதைத்த சிவனின் மென்மையான கால்களை வலிக்காமல் பிடித்து விட வேண்டி, அத்திருவடிகளின் தரிசனத்தை வேண்டிய ஆதி சங்கரர், இப்பாடலிலே, ஒருவேளை, தமது கால்களுக்குக் கரடுமுரடான தடத்தில் நடம் புரிய வேண்டிய அனுபவம் வரவேண்டும் என்பதற்காகத்தான், மலைகளில் சிவன் நடனமாடுகிறாரோ என வியக்கிறார்.

அப்படி இருப்பின், அதுவும் நல்லது. ஏனெனின், வினை வயத்தால், பிறவிப் பிணியில் திணிக்கப்படுகின்ற மனிதனின் மனம், வன்மை கொண்டதாக இருக்கும். அம்மனதில் தமது காலடிகளைப் பதித்து, அருள்கூட்ட வேண்டுமென்றால், சிவனுடைய பாதங்கள் கரடுமுரடான இடங்களிலே ஆடிப் பழக வேண்டி இருக்கும் எனும் நயமிகு கற்பனை இப்பாடலில் காட்டப்படுகிறது.

எப்படி இருப்பினும், எப்பொருளாயினும், அப்பொருளினுள்ளே ஆண்டவனின் தாண்டவம் நடந்து கொண்டு தானிருக்கிறது. பக்தியால் மனம் மென்மையடையும் போது, தெளிந்த அறிவின் துணையினால் மனமாகிய மேடையில் ஆன்மாவின் ஒளி தோன்றும். அதுவே ஆடுகின்ற திருவடிகளாக நமது கண் படும். அப்போதே நமது மனம் பண்படும். (80)

79 – நமனார் உதைத்தருளும் நல்லான் அடி போற்றி!

81– முற்றுணர்வார் உள்ளத்தின் முக்திப்பயன் போற்றி!

Share this Post

Leave a Comment