Shivanandalahari – Verse 84

84 – அறிவாய் ஆட்கொண்ட அண்ணல் அடி போற்றி!

शिव तव परिचर्यासन्निधानाय गौर्या
भव मम गुणधुर्यां बुद्धिकन्यां प्रदास्ये |
सकलभुवनबन्धो सच्चिदानन्दसिन्धो
सदय हृदयगेहे सर्वदा संवस त्वम् ||८४ ||
ஶிவ தவ பரிசர்யாஸன்னிதா₄னாய கௌ₃ர்யா
ப₄வ மம கு₃ணது₄ர்யாம் பு₃த்₃தி₄கன்யாம் ப்ரதா₃ஸ்யே |
ஸகலபு₄வனப₃ந்தோ₄ ஸச்சிதா₃னந்த₃ஸிந்தோ₄
ஸத₃ய ஹ்ருத₃யகே₃ஹே ஸர்வதா₃ ஸம்வஸ த்வம் || 84 ||
சிவப் பரசுகமே பவப் பெருநிலையே
நலத் திடவுறவே – கடலான
நிஜத் தறிவுமய சுகத் தருநிதியே
உகத் துணையுமையி – னுடனாகி
வளத் தடமரிய குணப் படவுயரும்
மனத் தெளிவறிவென் – மகளேநின்
பதப் பணியமரத் தரப் புகுவிதயப்
பதிப் பதன்பதியே – பரமேசா!
(84)

சிவமாகிய சுகமே! உலகின் நிலையே! எல்லா உயிர்களின் உறவே! சத், சித், ஆனந்தமாகிய கடலே (நிலைத்த, அறிவுமயமான சுகக் கடலே)! அருள் தருபவரே! கௌரியாகிய உமையுடன் இருக்கும் உமக்குத் தொண்டு புரிய, நெறியால் நற்குணங்கள் கொள்ளுமாறு வளர்க்கப்பட்ட எனது அறிவாகிய நல்ல மகளை, யான் அளிக்கிறேன். ஏற்றுக்கொண்டு, என்னுடைய உள்ளமாகிய வீட்டில் நீங்கள் எப்போதும் நிலைப்பீராக!

குறிப்பு:
முன்பு தமது மதியினைப் பரசிவனுக்கு மணப்பெண்ணாகக் கொடுத்த பகவான் ஆதி சங்கரர், இப்பாடலிலே சிவசக்தியருக்கு அருகில் இருந்து தொண்டு புரியும் வேலையாளாகத் தன்னுடைய மதி இருக்கட்டும் என்பதாக, அறிவாகிய மகளைத் தானம் செய்யும் தந்தை என்று உவமானம் காட்டுகின்றார்.

அய்யன் மோனித்திருந்தாலும், அன்னை வேலைக்காக வந்திருக்கும் ஏவலாளுக்கு ஆணையும், அருளும் செய்வார் என்றுதானோ என்னவோ, பகவான் ஆதி சங்கரர், அன்னையையும், அப்பனையும் விளித்து, தன் அறிவை அடிமையாக ஏற்கத் துதிக்கிறார்!

எப்படிப் பிறந்த வீட்டிலிருந்து அனுப்பும் மகளுக்கு, எல்லா நற்குணங்களும் ஏற்படுத்தி, நல்லிடத்துக்கு அனுப்ப விழைவது பெற்றோரின் கடமையோ, அதைப் போலவே, மனத் தூய்மையும், மதித் தெளிவும் அடைந்த தனது நிலையினையே, சிவஞானமான திருவடிகளை அடைந்து பணிபுரியும் தகுதிக்கு உட்படுத்த விழைகிறார் பகவான் ஆதி சங்கரர்.

ஞானத்தில் நிலைத்து இருக்க வேண்டுமானால், முதலில் நற்குணங்களை நிறைத்துக் கொள்வது அவசியம் என்பதும் இதனால் சுட்டிக் காட்டப்படுகின்றது. எனவே, அறம் வழுவாத வாழ்க்கையை ஏற்று, நமக்கான கடமைகளைப் பழுதற, கர்ம யோகமாகச் செய்து, அதன் பயனாகவே, மனத் தெளிவும், திட அறிவும் கொண்ட நற்குண நங்கையாக நம் மதியினை நாம் மாற்றி, அதனை எப்பொழுதும் பரம்பொருளின் பிடிப்பிலே இருத்தும் பணிக்குத் தயார் செய்ய முடியும். (84)

83 – அல்லற் பிறவி அறுத்தருள்வான் அடி போற்றி!

85 – துதியறியா என் துன்பம் துடைப்பான் அடி போற்றி!

Share this Post

Leave a Comment