Pages: 1 2 3 4 5 6
Pages: 1 2 3 4 5 6

(Read in ENGLISH)

ஆறுமுகர் அந்தாதி

ஆதியிலா அந்தமிலா அடிமுடியென் றேதுமிலா
சோதியினா லாகியருள் சோபித்த முருகேசா
பாதிமதி யேனுனையே பாவிப்ப தாலந்த
ஆதிவுலா வந்ததிதில் அருள்சுரப்ப துன்பாடு

தொடக்கமும் முடிவும் இல்லாதவனாய், தோற்றத்திலும் (ஹரியாலும், பிரம்மனாலும்) தலையும், காலும் அளக்கமுடியாத ஜோதி வடிவனாக விளங்கிடும் பரசிவனின் அருள் ஜோதியான முருகேசா, அரைகுறை அறிவுடையனாக நான் உன்னையே (அல்லது, பிறை அணியும் சிவனையே) ஆராதிப்பதால், இந்த அந்தாதிப்பாடல்களில், அருளைச்சுரப்பது உன்னுடைய பொறுப்பு.

1. Beginning He has none, neither any end; His crown and feet are unbeholdable; His limitless effulgence is Kumaran. As I forever contemplate the crescent-crested Aarumukha-Sivan, it is for You, O Muruga, to suffuse these verses with grace.

பாடுவதும் பாட்டும் பாடவைத் துலகில்வினை
கூடுவதும் கூட்டும் கூர்த்தபய னாக்கிவிளை
யாடுவதும் நீயதனால் யாவுமுனக் கேயதனால்
ஏதுமிலை என்னுடமை என்பதனால் இல்லைசுமை

உலகில் பாட்டும், பாடுவதும், பாடவைப்பதும் நீ. உலகில் கர்மங்களைச் செய்யவைப்பதும் செய்வதால் வரும் பலனைச் சேரவைப்பதும் உன் விளையாட்டு. ஆதலினால், செய்யும் செயலும், செயலால் வரும் பயனும் உனக்கே சேரும். அதனால், என்னுடையது என்று எதுவும் இல்லை. அதன்படி, எனக்குச் சுமை ஒன்றும் இல்லை.

2. Grace is You who cause this world, the song, the singing and the propagation. Your divine play is the cause for the deeds, linking the doers. The deeds and their fruits belong to You only. As I am not the doer, I stand unencumbered, with no burden to bear!

சுமையில்லாச் செயற்றுறவு சுகித்தாலும் முற்கருமஞ்
சமைவதனால் வினைப்பளுவும் சங்கடமும் எடைப்படுத்தி
அமைவதனால் ஆணவத்தால் அமைதியிலை ஆறுமுகா
உமைசுதனே உன்னருளே சுமைப்பயணச் சுகந்தூக்கி

இதனை உணர்ந்து, எல்லாம் உனக்கே அர்ப்பணம் என்று செயல் துறவாக எனது கடமைகளைச் செய்வதன்மூலமும் சுமை ஒன்றும் எனக்கு இல்லை என்றாலும், முந்தைய பிறவிகளில் செய்த வினைகளின் காரணமாக நலமும் கேடும் எனக்குச் சங்கடத்தையும், “நான்” எனும் ஆணவத்தையும் பெருத்த சுமையாக வைத்தது. அதனால் அமைதியில்லாதிருக்கிறேன். ஆறுமுகனே, உமையின் புதல்வனே, உன்னுடைய அருளே என்னுடைய பாரத்தைத் தூக்கி நிற்கும் சுமைதாங்கி. அதனால், எனது வாழ்க்கைப்பயணம் சுகமாகட்டும்.

3. Bearing nothing, I am poised in a burdenless, deedless beatitude, yet my deeds in the past fructify and cause me troubles. My egoity prevents peace; O Aarumukha! O Son of Uma! May your grace ease my travel and bear the burden I carry.

தூக்கிப் பிடித்தென்னை தூயவனாய் ஆக்குதற்கோ
தாக்கிப் படிப்பினையே தருவதற்கோ துயர்த்தீயில்
ஆக்கிப் புடம்போட்டாய் அருங்குமரா அருள்வெள்ளம்
தேக்கித் தருங்கழல்கள் தெளிந்தமையால் பவமெளிது

அவ்வாறு எனது சுமைகளைத் தூக்கிப்பிடித்து, மேலும் என்னைப் பரிசுத்தமாக்குவதற்காகவே, இன்னல்கள் போன்ற படிப்பினைத் தந்து, தீயில் இட்டுப் பளிச்சிடவைக்கும் தங்கத்தைப்போல எனக்கு கஷ்டம் போல் தெரிகின்ற அறிவார்ந்த அனுபங்களைக் கொடுத்தாய்! ஒப்பிலாக்குமரா, உன்னுடைய அருள் வெள்ளத்தைத் தேக்கித் தருகின்ற திருவடிகளை நான் இன்று கண்டு உண்மை தெரிந்து கொண்டதால், இனிமேல் எனக்கு இவ்வாழ்க்கை எளிது.

4. Carried in Your care, You bear all my burden; To purify me through the onslaught of ordeals, You have immersed me in agonizing and transmuting fire. O peerless Kumara! Life will henceforth flow smooth for me as Your grace-abounding, ankleted feet have conferred on me divine clarity. So this life is simple!

எளிதானதால் மிகவும் இனிதானதால் கருணை
ஒளியானதால் உயிரின் உயிரானதால் அருளின்
மழையானதால் அழகு மயில்வாகனா மிசையின்
நிலையானவா மிக்கு மிதயாசனா யென்வசமே

எளிமையாயும், இனிமையாயும், கருணை வெளிச்சமாயும், உயிர்களுக்குள்ளே உயிராயும், எல்லார்க்கும் அருளும் மழையாயும், உலகின் நிரந்தர உண்மையாயும் இருக்கின்ற, அழகான மயிலைத் தனது வாகனமாகக் கொண்ட, முருகா, என் இதயம் உன் ஆசனம். ஆதலினால், நீ என் வசமாகி விட்டாய்.

5. Simple for me Your access sweet; You are the divine light of Mercy; You indeed are the Life of all entia; And the grace-conferring downpour. O One whose mount is the beauteous Peacock! My bosom is Your throne; no wonder I own You in my hold!

வசமுனக்கு மாமயிலே வகையிருக்கும் எனவருத்தும்
விஷமிருக்கு மரவங்கள் விளைந்திருக்கும் உன்விருந்து
நிஜமிதற்கு நின்கணக்கு நீசுமக்கும் பரிசதுவே
கஜமுகத்துக் கிளையவனின் கட்டாயத் தரிசனமே

வசம் என்னிடமே பெரிய மயிலே, உனக்கு விருந்தாகக் கொடுக்க, வருத்தக்கூடிய குணங்களாகிய விஷப்பாம்புகள் என்னுள்ளத்திலே விளைந்திருக்கின்றன. அதனால், என் வசம் வா. இது உண்மை. இதற்கு நன்றியாக நீ செய்ய வேண்டிய கடன், நீ சுமக்கின்ற ஒப்பற்ற பரிசை, யானை முகத்து விநாயகரின் இளைய சகோதரனை, நிச்சயமாகத் தரிசனமாகத் தரவேண்டும் என்பதாகும்.

6. Hold is in me, O great Peacock, I treasure you. For your sumptuous fare, I offer you the variform and harrowing and venomous serpents teeming in me. I have truly spoken. To show me your gratitude, you must, for sure, cause me envision Him- the Younger Brother of the tusker-faced Lord, His divine Vision.

தரிசனமே தரவருக மயிலே தன்னான்ம பலமான ஒயிலே
கரிசனமே பெறமனது மேகம் கலைந்தாடும் நிலையான தாகும்
விரிசடையன் விழிஞான முத்தை விளங்குசிவ பரஞான சத்தைப்
பரிசனெவே தரவேண்டும் குருவே பறவையென உருவான திருவே

(அத்தகைய) தரிசனத்தைத்தர வா மயிலே. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற ஆன்மபலத்தைச் சுட்டிக்காட்டுவது உனது அழகு உருவம். இரக்கம் மிஞ்ச, கலைந்தாடும் மேகத்தைப் போன்ற எனது மனது நிலைக்க, விரிந்த சடையினை உடைய சிவபெருமானது ஞானக்கண்ணில் விளைந்த முத்தை, உலகெல்லாம் விளங்கும் சிவமாகிய ஞானத்தின் விளக்கத்தை, என்னுடைய பரிசாகத் தரவேண்டும், பறவையைப் போன்ற உருவில் வந்திருக்கும், குருவாகிய, மயிலே, செல்வமே!

7. Vision divine I ask, O Peacock, do come to me to bless me with the coveted darshan. Your pulchritudinous presence points to each soul its innate beatitude, its ultimate gain. My inner sensorium is tossed like scattered clouds. Let your compassion prevail, O Guru, O bird-incarnate Opulence, dear!

திருவே திருத்தணிகை விருத்தான திறமே தினம்நினைக்கும்
உருவே உயிர்கட்குள் உயிரான உயர்வே உளம்பணிக்கும்
குருவே சிவனார்க்கும் குருவான குணமே பவமிணைக்கும்
கருவே கலாபமயில் கனிவான கனியேநின் கழலேதுணை

செல்வமே, திருத்தணியிலே விளக்கமாக நிற்கும் திறமே, தினசரி என்மனதில் நினைக்கும் உருவமே, எல்லா உயிர்களுக்குள் உயர்ந்திருக்கும் உயிரே, மனதால் பணிந்தடைய வேண்டிய குருவே, ஆதிசிவனுக்கும் குருவாக நின்று காட்டிய பண்பே, உலகினை இணைக்கும் கருவே, அழகான மயில்மீது இனிமையாக வரும் கனியே, கழல்களணிந்த உன் திருப்பாதங்களே துணை.

8. Dear, O Wealth! O Valiancy atop Tirutthanikai! O Form ever-ensured in my contemplation! O Loftiness that is the Life of all lives! O Guru who rules and exercises our hearts! O One whose Guruship embraces Siva! O Uterus of the Cosmos! O Fruitage! O Rider of the beauteous Peacock! Your anklet feet are our succor.

துணையெனவே முருகாநீ துலங்கியருள் கனிந்ததனால்
இணையடிகள் இருதயத்தில் இருத்தியதால் வருத்தியமுன்
பிணைகளிலை பிணியுமிலை பிரபஞ்சத்துப் பெருஞ்சுவர்கள்
அணையுமிலை அறிவிதனால் ஆனந்தம் ஏவியதே

முருகா, நீயே துணை என்பது தெளிவாக விளங்கியதால், உன்னுடைய பொருத்தமான பாதங்களை என்மனத்தில் பொருத்தினேன். அதனால், என்னைத் துன்பப்படுத்திய முந்தைய வினைகளெனும் விலங்குகள் இனியில்லை. அதனால் வரும் துயரங்களுமில்லை. உலகங்களும், பிறவிகளுமான கட்டுப்பாடுகள் இல்லை. இவற்றை அறிந்துணர்கின்ற நிலையால், எனக்குள் ஆனந்தம் பிறக்கிறது.

9. Succor is You, O Muruga! As You shine as my help, suffusing me with grace, I have installed Your feet twain in my heart. So, the harrowing shackles of my former deeds have snaped. Maladies are no more. The great walls of the cosmos incarcerating embodiments have ceased. With newly-gained Gnosis, bliss ensues therein.

ஏவிய உலகினில் எடுத்திடும் பிறவியில்
மேவிய வினைகளில் மெலிந்திடும் உறவினில்
ஆவிய விகையில் அடைக்கல மாவது
கூவிய கோழிக் கொடியுடை வேலனே

பிறக்கின்ற உலகங்களில், எடுக்கின்ற பிறவிகளில், செய்த கருமங்களில், சேர்ந்து இழக்கும் உறவுகளில், உயிர் உடலை விட்டுப் போகையில் – இத்தகைய எல்லா நிலைகளிலும் அடைக்கலமாய் அருளுவது, கூவுகின்ற கோழியாகிய சேவற்கொடி பிடித்துள்ள வேலனின் தாள்களே ஆகும்.

10. In all my embodiments on earth, in the wasting away of kinship owing to karmic resultants and in the hour of death, the sole refuge is the Lord whose banner sports a bantam and who wields the Spear!

வேலே கிரவுஞ்சமலை போலே எனதுநிலை
யாலே கடும்மனது மேலே விடுமுனது
சூலே சுடறறிவ தாலே சுகமகண்ட
காலே கலாபமயில் வேளே கற்கண்டே

வேலே, எனது மனம், நீ முன்பு தகர்த்த கிரவுஞ்ச மலையைப் போலே கல்லானது. ஆதலால் அத்தகைய கல்லான இதயத்தில் உனது வேலைச் செலுத்து. அதனுடைய சுடரால், உண்மை எனும் ஒளி தெரிய, சுகத்தை உணரும் நேரம் எனக்கு வரும். இதுவே எனது நிலை. அழகான மயில்மீது வரும் என் தலைவா, கற்கண்டாய் இனிப்பவனே!

11. O Spear! Rocky is my heart like the Crowncha Mount You smote. Do away with it by Your puissance. Pat will I come by radiant knowledge that will reveal to me the Truth and I will be established in weal. Praise be , O Sovereign-Lord, mounting on the Peacock, You are an uncloying lump of sugar, so sweet!

கற்கண்டே கதிர்காமக் களஞ்சியமே கருவித்தே
சொற்கண்ட அருணகிரிச் சுடரொளியே சுகவித்தே
தெற்கொண்ட பரசிவனார்த் தெள்ளறிவே உருவத்தே
கற்கொண்ட கலைவடிவுள் காட்சிதரும் கண்முத்தே

கற்கண்டாய் இனிப்பவனே, கதிர்காமத்திலிருக்கும் கொள்ளக் குறையா நிதியே, கருவிற்குள் விதையே, சிறந்த சொற்களைத்தந்த அருணகிரிநாதரின் ஒளிவெள்ளமே, பேரானந்தத்திற்கான மூலமே, தெற்குத்திசை நோக்கி இருக்கும் பரமசிவனின் தெளிந்த ஞானத்தின் தேறலே, உருவத்தில், அழகான கற்சிலைக்குள் வடிவாகக் காட்சி தரும் முருகா, நீ என் கண்ணின் முத்து.

12. Sweet, O surfeitless lump of sugar! O Cornucopia of Katirgaama! O Womb-of-all! O radiant effulgence of Lord Arunagiri- the lord of language! O Seed of eternal bliss! O lucid Gnosis of Supreme Siva who dances facing south! Your form is glimpsed in the stone artfully chiseled. You are in my eye as its pearl!

முத்தைத் தருபதத்தைத் திருவரு ளருளாலே
வித்தைப் புலவனித்தம் தரவரு புகழாலே
கத்தைக் கவிகற்றுத் தரவர உனைவேண்டி
நித்தம் மதிபித்துப் பிடித்தது பெருவேளே

“முத்தைத்தரு” எனும் வாக்கியத்தை மிகச் சிறந்த புலவனாகிய அருணகிரிநாதருக்கு எடுத்துக் கொடுத்து, தினம் அவர் உருகிப் பாடி மலர்ந்த திருப்புகழின் அழகாலே, நானும் உன்னிடம் மொத்தமாகக் கவிதை (ஏகத்தை – ஒன்றாகிய பிரம்மத்தை) கற்றுத்தர வேண்டி, தினம் அறிவு மயங்கி, பித்துப் பிடித்து இருக்கிறேன் பேரரசே!

13. Pearl as the phrase You gave with grace – You blessed the bard par excellence with the opening words: ԍutthai-th-tharuԠwhich unleashed his divine hymns. From his lips emerged forever, song and psalm and solemn strain. Chanting them daily I stand possessed by a fine frenzy. I beseech You to bless me with such poesy at all times!

வேளை இதுவே வேலனைக் கலாபமயில் நாதனை
நாளை வருமா வெனவறியா நாடகமாமிவ் வேதனை
சூளை இட்டகல் சுட்டதாக் கெட்டியாக் கொள்மனத்
தாளை விலக்கி யாள்பவத் தடாகம் பூத்த மலரே

இதுவே தருணம். எதிர்காலம் என்னவென்றறிய முடியாமல், நாடகமான இவ்வாழ்க்கையெனும் வேதனை, நெருப்பில் சுட்டுக் கெட்டிப்பட்ட செங்கல்போல மனதில் ஒட்டியிருக்கிறது. அந்தப் பூட்டை உடைத்து, வேலேந்திய, அழகு மயிலேறும் நாதனை, ஆள்பவனாக, வாழ்க்கை எனும் தடாகத்திலே பூத்த மலராக ஏற்றுக் கொள்வதற்கு, இதுவே தருணம்.

14. Time is now, O Lord that wields the Spear and rides the splendorous Peacock. This life is a perilous play and the advent of the morrow is an uncertainty. Like the brick baked in the kiln, my heart is dry and hard. Remove my fetters and rule me, O Flower burgeoning in the Pool of Bliss!

மலரணைய மார்பிலே மணிவயிர சார்பிலே மகுடமணி கிரீடத்திலே
கழலணியுங் காலிலே கரமணியும் வேலிலே கைச்சேவற் பதாகையிலே
புலனவிய உள்மனப் புறமறியத் தன்மனப் பூசைக் கோலத்திலே
உலகறிய நின்றுனது உருவறிய நன்றறிவு உருவித்த ஞானவிரிவே

மலர்மாலை தழுவிய மார்பிலே, அழகிய வயிற்றிலே, அணிகலன் மிகுந்த தலை அலங்காரத்திலே, தண்டை அணிந்த கால்களிலே, ஒரு கையின் வேலினிலே, மறுகையில் உள்ள சேவற்கொடியினிலே – எங்கு பார்க்கினும் அங்கே என் ஐந்தறிவுகளும் அடங்க, ஆறாம் அறிவானது, மனதையே பூசைக்கோவிலாக்கி, அதன் உள்ளேயே வெளிஉலகையும், அவை எங்கும் பரந்த உன் திருவுருவத்தையும் நன்றாக அறியும்படியான பேரறிவினை எனக்கு அளித்த முருகா, நீ ஞானத்தின் விரிப்பு.

15. Blissful Wreaths bedeck Your chest and the waist adorned with jewel the best; Your crown is inlaid with gems and anklets decorate Your feet; Your hands wield the Spear and the banner of Rooster; adorable is Your presence which quells and causes the inner sensorium to envision all: thus You stand enshrined to enlighten the whole world. O Expanse of Wisdom, You have blessed me to comprehend Your form!

விரிமலரின் இதழிலே விழிவிரிவின் முனையிலே
வியக்கின்ற மொழியழகிலே
வரிவடிவ முகப்பிலே வாக்கிய அமைப்பிலே
வாக்கிலா மோனத்திலே
புரியுநிலை முனையிலே புத்தியின் இணைப்பிலே
பூசை விளக்குருவிலே
அறிவனுரு அழகுவேல் ஆகின்ற தென்பதால்
ஆவன யாவும் அவ்வே

மலரிதழ்களிலே, நீண்ட விழிகளின் ஓரங்களிலே, ஆச்சரியமான மொழிகளின் அழகிலே, கவிதைகளின் எதுகை மோனைகளிலே, வாக்கியங்களின் வடிவமைப்பிலே, வாக்கற்ற மெளன நிலையிலே, அத்தகைய தியானங்களின் கூர்மையிலே, அனைத்தையும் உணர்ந்தறியும் அறிவின் இணைப்பிலே, பூசை செய்யும் குத்துவிளக்கின் அமைப்பிலே நான் அறிவதெல்லாம் அழகான வேல் என்பதால், பார்க்குமிடமெல்லாம் நீயே ஆவாய்.

16. Form of the petals of burgeoning blooms, the corners of beholding eyes, the beauty of wondrous words, the calligraphic script, the forms of language, the wordless silence ineffable, the plane of understanding, and the assimilation of intellect, and the form of the burning lamp in the adytum: in all these I behold the eesome Spear of the Omniscient. So, I affirm that things beheld are informed by Your omnipresence and all in You.

அவ்வைக்கொரு செவ்வைக்கனி அன்புக்கனிவாகி
நையக்குறை பையப்புனி தெய்யச் செயலாகி
மெய்யப்பயம் கொய்யப் பலம்உய்யப் பெருமானே
ஐயப்பிழை துய்யத் தெரிந்தய்யா வருவாயே

ஔவையாருக்கு (அருள்தரும் பொருட்டு, செம்மையான நாவல் கனி தருகின்ற சிறுவனாக) அன்பு கனிவாக வந்தாய். அதனால் குறைகள் நைந்து அழிய, மெதுவே புனித நலம் ஓங்கி, பயம் விலகி, உண்மை விளங்கி, வலிமை கூடியது. தவறுகளைத் தவிர்க்கும் இவ்வுன்னதமான வழி சந்தேகமில்லாமல் எனக்கு விளங்கியதால், நீ (என்னிடத்தே) வருவாயே!

17. You are the Fruit of Love who blessed Avvai with salvific fruit. Blemishes vanished and upsurfaced gradually the holy weal; dread disappeared and puissance surged up. O God, be pleased to manifest before me, to bless me with Your lofty way as my folly it undoes!

வருங்கால மிருளுமோ வதைக்குமோ எனமருளிப் பதைத்துஓலம்
இருங்கால மிழப்பதோ சிதைப்பதோ இடக்கால் உதைத்துக்காலன்
விடுமால காலனருள் விளைவான ஆறுமுகங் கனியவேலன்
அருங்கால் அடைக்கல மானதால் அமையுமினி இனியகாலம்

இனிவரும் எதிர்காலம் இருண்டிருக்குமோ, இன்னல் கொடுக்குமோ எனப் பயந்து ஓலமிட்டு, இப்போதிருக்கும் காலத்தையும் இழப்பதும், அழிப்பதும் அழகோ? இடதுகாலால் காலனை உதைத்த, ஆலகால விஷத்தை அருந்தியும் உலகத்தை அருளிக்காக்கும் சிவபெருமானின் விளைவாக, ஆறுமுகங்களுடன் கனிவாக உருவெடுத்த முருகனுடைய திருவடிகளை அடைக்கலமாய் அடைவதனால், நமக்கு இனி வரும் எதிர்காலம் இனிமையான காலமாய் இருக்கும்.

18. Does it become me to lament aloud in dreadful commotion, shatter and lose the present, thinking that the future will be enveloped in murk, replete with troubles? It behoves one to seek refuge in the salvific feet of the Six-faced Lord, the Wielder of the Spear and the Scion of Siva who with his left foot smote Death to death. This will make oneӳ future tranquil, sweet and even.

காலமெனும் மாயவலைக் கோலமிதில் மாய்ந்தபோதும்
ஞாலமிதில் பாழ்பிறவிச் சூலதனில் ஓய்ந்தபோதும்
ஆலமிர்த மாய்புவன மாளும்பர மேசன்மகனே
நீலமயில் மீதுவரும் நேயம்மன மேற்கச்சுகமே

காலமாகிய மாய சக்தி எங்கும் வலை விரித்து, கோலமாகப் பரவி நம்மை வெளியில் விடாமல் மாய்த்தாலும், உலகத்தில் பாவமெனப் பிறவி எனும் கருப்பையில் களைப்படைந்து நாம் விழுந்தாலும், ஆலாகால விஷத்தையும் அமிர்தமாயுண்டு, உலகத்தைக் காக்கும் பரமேஸ்வரரின் மகனை, நீலநிற மயில்மீது அமர்ந்து வரும் முருகப்பெருமானை அன்புடன் நாம் மனதில் ஏற்பதால், சுகம் விளைகிறது.

19. Even if life be entangled and made effete by the magic net of Time and even if one is repeatedly pushed into the womb to get born utterly fatigued in the world, saving grace will ensue if one ensouls Him who mounts the blue Peacock and is the Son of Siva that quaffed the Oceanic Venom as though it were nectar indeed.

சுகமெனும் சும்மா இருக்கின்ற சுத்தத் தவம் எய்யவே
அகமெனும் அலையாழி அசையாது இசைவாக ஐயாவுனை நெய்யவே
பகலெனும் கதிர்வேலைப் பன்னிருகை யருளாகப் பார்க்குமருள் பெய்யவே
மிகவுன் னதப்பிறவி தகவுந் தந்தயவுத் தத்துவம் இச்சந்தமே

உண்மைச் சுகத்தை (மனதாலும், வாக்காலும், செயலாலும்) சும்மா இருக்கின்ற செயலே தருகிறது. அவ்வரிய தவத்தை நாம் அடையவும், உள்ளமெனும் கடலானது (ஆசைகளால்) அசையாமல், ஒருமையுடன் முருகனை நினைவால் இணைத்திருக்கவும், சூரியனைப் போன்ற கதிர்வேலை, பன்னிரு கையினால் அருள்பவனாகப் பார்க்கின்ற பாக்கியம் அடையவும், மனிதப் பிறவிதான் மிகவும் பொருத்தமானது. முருகா, அதற்கு, அதற்கு உன் கருணைதான் காரணம் என்னும் தத்துவம்தான் இப்பாடல்.

20. Indeed it is pure tapas to remain poised in the transcendental serenity. This I must gain. My inner sensorium, a billowy ocean, must stand still. I must be one-with You, my Sire. Vouchsafe to me the lofty life to vision everything as Your grace, O twelve-handed Lord whose Spear shines with sunny splendour. This, in sooth, is the merciful truth that informs my verses.

சந்தத்தமிழ் சிந்துப்புகழ் உந்தக்கவி துந்த
கந்தப்பதம் சந்திப்பெனும் சிந்தைபட வில்லை
சிந்தைப்படும் எந்தைக்குறை அந்தக்கவி இந்த
விந்தைக்கு ழந்தைகு விந்தபதில் என்ன?

அழகிய சந்தங்கள் நிறைந்த சிந்தாக, புகழைக் கொடுக்கும் (திருப்புகழ்) பாடலை, (அருணகிரிநாதரைப் போல) தானாக மனதில் ஊற்றாக்கிப் பாடுவதற்கு, அருள் தரக்கூடிய கந்தனது பாதங்களை, எனது சிந்தையிலே நான் இன்னும் இருத்திக்கொள்ளவில்லை. இந்த வேதனையை சிந்தையில் உணர்ந்து, அந்தக் குற்றத்தினூடேயே, அந்தாதி எனும் இந்தக் கவிதையைப் படைக்கின்ற விநோதமான, சிறு பிள்ளையான எனக்கு, முருகா, உன்னுடைய பதில் என்ன?

21. Verses with meaning in depth, metrical in the glorious Sindu genre, sung by Arunagiri will enshrine in my heart the feet of Kandan. But my mind has not cultivated this thought. Yet I am emboldened to indite this Anthaati, a novel marvel, in my childish way. O Muruga, How to account for this hence?

என்ன யினிக்கவலை எண்ணமெலாஞ் செந்தில்மலை
அண்ண லவன்மயிலை ஆளும்சிவக் கொழுந்தை
வண்ண வடிவேலை வள்ளிமணந் தருள்வேளை
விண்ண வரின்கோவை விளம்பியதால் இயல்மனமே

இனிமேல் எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால், எனது எண்ணத்தில் செந்தில் நாதனை, மலைகளின் தலைவனை, மயில் மீது (அல்லது திருமயிலைத் தலம் மீது) ஆட்சி செய்கின்ற சிவக்குமாரனை, அழகிய வடிவேலனை, ஸ்ரீவள்ளியம்மாவை மணந்து அருளும் தலைவனை, உயர்ந்த வானவர்களுக்குத் தலைவனான முருகனை, நாளும் இருத்தி அழைப்பதால், என் மனம் இயல்பாய் உள்ளது (அல்லது மனம் நினைத்ததெல்லாம் செயலாக்க முடிகிறது).

22. Henceforth I feel liberated from worries, as in my thought I have enshrined the great One of Sentil, the Lord of mountains (the Lord of Tirumayilai whose mount is the Peacock), the Shoot of Siva, the Consort of Valli, the blessing Sovereign-Lord, the Monarch of the supernals. Absolutely tranquil is my mind.

மனந்தான் சிக்கல் மதிதான் பழனிமலை
குணந்தான் கதிர்காமம் குடிதான் படைவீடு
உணர்ந்தால் உயிர்மூச்சு உருவேயுன் னினைவோடு
தினந்தாள் பணிந்துயருந் திறமே உடன்பாடு

எனது (குழம்பிய) மனமே சிக்கல் எனும் உன் கோவில். என் அறிவே நீ இருக்கும் பழனிமலை. (ஆசை முதலான) பல குணங்கள்தான் உன்னுடைய கதிர்காமம். என் உயிரின் குடிலான உடலே உனது படைவீடு. (பக்தியாலும், யோகத்தாலும், ஞானத்தாலும்) உணரும்போது, என் உயிர்மூச்சில் உன் உருவம் தெரிகிறது. உன் நினைவாகவே, தினந்தோறும் உனது திருவடிகளைப் பணிவது என் கடமை. இதற்குப் பிரதிபலனாக என்னுடைய துயரங்களை அறுப்பது உன் கடமை. இதுவே நமக்குள் உள்ள உடன்பாடு.

23. My mind indeed is the shrine at Sikkal; my intellect is the Mount Pazhani; my virtues constitute Kadirkaamam; my body is Your bivouac; when (by Your grace) I comprehend You, I behold in my life-breath Your form divine; with my thought solely centered in You, I adore You. This indeed is my quotidian and ever-crescent beatitude of concord, I sing.

பாடுதற்கழகு பக்தியால் திருப்புகழ்ப் பாமாலை ஞானமுறையே
கூடுதற்கழகு குமராஉன் திருப்பதக் கோவிலே தியானநிறையே
நாடுதற்கழகு நாதனே சண்முகா நாளுமுன் நாமமறையே
ஓதுதற்கழகு ஒப்பிலாக் கந்தனே உருமறிவு வளருபிறையே

பாடுவதற்கு அழகானது, ஞானவழி அளிக்கும் திருப்புகழ்ப் பாமாலையினைப் பக்தியால் பாடுவதே ஆகும். கூடுவதற்கு அழகானது, உன்னுடைய திருவடிகளை மனதால் ஆலயமாக நினைத்து, தியானத்தால் இணைவதே ஆகும். விருப்பமுடன் நாடுவதற்கு அழகு, தினந்தோறும், நாதா, உன்னை அடைவதே. பூசிப்பதற்கு அழகு, ஆறுமுகா எனும் உன்னுடைய பெயரினைத் தினம் உரைப்பதே ஆகும். ஒப்பிடமுடியாக் கந்தப்பெருமானே, இவ்வழகிய செயல்களால், உன்னை உருவகிக்கும் அறிவு எனக்குள் வளர்பிறையாக வளரும்.

24. Singing with devotion informed by Gnosis, the garland of Tiruppukazh, is sweet. Sweet indeed is the gain, through meditation of Your feet twain- the true shrine; sweet is the quest that seeks You. O Lord Shanmukha, sweet is the chanting of Your names, hailed by the Veda. O peerless Kanda, my knowledge- true as well as metaphoric, is on the ascendant!

பிறைமதி தலையணி சிவனுமை அருள்மணிப் பிரவாகமான ஜோதி
சுரமகள் இயக்கமும் குறமகள் இணக்கமும் கூருவேல் ஞானமாகி
கரைகதி ரொளிஒலி சேவற் பதாகைமயில் கைவல்ய மானஆழி
வரைவழி தரும்கலி வளரிடர் பெருவலி வாராது காக்கும்விழியே

வளர்பிறை தலைசூடி, உமையாருடன் இருக்கும் பரசிவனின் ஞானக்கண்களிலிருந்து விளைந்த, அருள்ஒளி வெள்ளமாகிய முருகா, தேவமகளான தெய்வானை எனும் இயக்கசக்தியும் (கிரியா சக்தி), குறமகளான வள்ளி எனும் இணக்கசக்தியும் (இச்சா சக்தி), கூர்வேலாகப் பரஅறிவும் (ஞான சக்தி) சேர்ந்திருக்க, (மாயஇருள் மடிந்து) விழிப்பைக் குறிக்கும் சேவற்கொடியும், சுத்த ஞானநிலைக்கு ஆதாரமான ஆன்மபலமாக மயிலும் அருகில் இருத்தி, நல்வழிகாட்டவும், கலித்துயர் நீக்கவும், அருள்விழிகளுடன் தரிசனம் தருகிறாய்.

25. Ascending forth as the flood of flame from the crescent-crested Siva concorporate with Uma, O Lord! Your power of Kriya (Action) is Deivaanai, of Iccha (Volition/Will) is sylvan Valli, of Gnaana (Gnosis) is Your sharp Spear. The Chanticleer in Your banner proclaims the advent of the sunrise of Knowledge; Your Peacock is the pure and sempiternal beatitude: with these You reveal Your presence, Your eyes suffused with saving grace to quell the might of evil stemming from Kali, the current Iron-Age that is.

விழிக்கின்ற போதோ உறக்கம் விடிகின்ற இதுவோ காலை
கழிக்கின்ற சுகமோ வாழ்க்கை கலைகின்ற மனதோ வேளை
மொழிக்கின்ற துதியோ ஞானம் முற்றிய துறவோ வீடு
வழிக்கின்று வடிவே லாமுன் வைத்தெனன் ஐயப் பாடு

நாம் தினம்தோறும் தூங்கி விழிப்பதுவா உண்மையான விழிப்பு? தினசரி எழுகின்ற காலை நேரமா, உண்மையான ஞானம் உதிக்கின்ற காலை? ஓடி ஆடிக் கழிக்கின்ற, அனுபவங்களாலான இதுவா உண்மையான வாழ்க்கை? மாறி மாறி மனம் ஓடுவதால் பிறந்தது தானோ காலம்? வார்த்தைகளால் பொழிகின்ற மொழியா உண்மையான துதி? இவற்றை எல்லாம் அறிந்து முற்றிய அறிவை அடைவதுதானோ “வீடு பேறு” எனும் முக்தி? வடிவேலா, இன்றே இதற்கான விடையும், எனக்கான வழியும் கிடைக்க வேண்டி, என் சந்தேகங்களை உன் முன்னே சமர்ப்பிக்கிறேன்.

26. Is it the true dawn when eyes open freed from slumber? Is this the morn harbingering the advent of bliss? Is true life baffled by the buffets of phenomena? Does verbiage constitute true praise? Is renunciation the true fruit of Wisdom, constitutive of deliverance? O Lord who wields the Spear, before You, these are my doubts, I place thereto!

பாடுபட் டறியாப் பொருளைப் பட்டென்று சுட்டிக் காட்ட
வீடுவிட் டோடும் உயிரை வித்தென்று ஒட்டிக் காட்ட
ஈடுபட் டுணரா எந்தன் இதயத்தில் கட்டிக் காக்க
மேடுபட் டாளும் முருகா மெய்ப்பவா குருவாய் வருக

(உண்மை அறிவு இல்லாத காரணத்தால்) கஷ்டப்பட்டும் கண்டறியாப் பரம்பொருளை, நேரடியாக “இதுதான் அது” என்று காண்பிக்க, (அதன் பிரதிபலிப்பை), உடலை விட்டு ஓடும் உயிரில் விதையாக இருப்பதை உணர்ப்பிக்க, இத்தகைய ஞான வேட்கையில் முற்றும் ஈடுபட்டு உணருகின்ற பக்குவம் இல்லாத எனது இதயத்திலே இவ்வுண்மையை எந்நாளும் பாதுகாக்க, உயர்ந்த நிலையில் (மலையில்) இருந்து ஆட்சி செய்யும் முருகா, உண்மையைக் காட்டுபவா, எனக்குக் குருவாக வருக.

27. To indicate the Supreme Ens that does not manifest, mighty endeavours notwithstanding, to discover the Seed-of-all recondite in my soul that is ready to quit its embodiment and to foster the Truth in my bosom which is not at all mellow, may You, the Revealer of Truth who is established in the Peak of Gnosis, be pleased to present Yourself before me as my Guru, O Muruga.

வருகவே முருகவேள் வருத்துமனம் இருத்தி அகம்
உருகவே லருகுவேல் உணருமதி விருத்தி சுகம்
பருகவே இருகநினைப் பகத்துவிதி நிறுத்தி முகம்
தருகவே பெருகுமழைத் தந்தருள்க ந்தமே கமே

தலைவனாகிய முருகா, வருக ! (புறவினைகளால்) வருத்துகின்ற மனத்தில் உனை நிலையாக நிறுத்தி, அதனால் உள்ளம் உருகி, அருள்வேலின் கருணையால் ஞான சக்தியை வளர்த்து, புறநினைவால் கடினப்பட மனதினுள் ஆனந்தம் விளைத்து, உன் அருளால், விதியின் விளைவுகளை நிறுத்தி (அதாவது விளைவுகள் மனதைப் பாதிக்காத உறுதி கொண்டு) நிற்கின்ற வடிவத்தை எனக்குத் தரும் அருள் மழையைக் கந்தனாகிய கருணை மேகமே, தா.

28. O Muruga! May You come, the Sovereign-Lord! May You still my agitated mind-heart, cause it to thaw in devotion and flourish thanks to Your Spear of Wisdom! May You remove the stony in me and make me fit to receive bliss, removing from me the fettering Karma! May Your countenances shower on me abiding Grace! May You, bless me thus, Kanda the merciful cloud.

மேகமதி மூட்டமும் கரு நாகமெனும் ஆட்டமும் இரும்
பாகமன வாட்டமும் பெரு போகமெனும் நாட்டமும் அருள்
தாகமழை வேட்கையும் தரும் தோகைமயில் கூட்டன் விரை
வாகமன வேடகம் வரக் கேகயனைக் கேட்ப தறிவே

மேகமூட்டம் போல் என் மனம் குழம்பி இருக்கிறது. அதன் செயல்கள் கருநாகம் போல (சீற்றமும், விஷமும் கொண்டு) உள்ளது. மனக்கவலை இரும்பாக கனத்து இருக்கிறது. ஆசையினால் போகப்பொருட்களில் திரிகிறது. (அத்துடன் கூடவே) நல்லருள் தாகத்தால் (ஞான) மழைக்காக ஏங்குகிறது. (இத்தகைய இடம் மயிலுக்கு ஏற்றதென்பதால்), தோகை மயிலில் வாகனமாக ஏறி இருப்பவனை, வேகமாக, மனமாகிய கூடத்திற்கு வரக்கோரி, அந்த மயில்வாகனனிடமே கேட்பது அறிவுடமை ஆகும்.

29. Clouded densely is my heart; it dances like a deadly cobra; it is iron-hard; it covets fugitive pleasures galore; yet it thirsts for goodly grace and yearns for the downpour of Wisdom. Truly it can serve as the habitat of Your fan-tailed Peacock. It will spell salvific knowledge for me to insist on the advent of Muruga in all celerity, riding His Peacock. Seeking thus is the Gyaanam (liberating knowledge)!

அறிவே வேல்வடிவு ஆக்கமே தெவ்வானைச்
செறிவே சேவற்கொடி செயல்நோக்கே ஸ்ரீவள்ளி
பரிவே பதப்பீலி பட்டழியும் மலநாகம்
திருவே முருகருருத் தெய்வ நிலையாகும்

வேலின் வடிவம் “ஞான சக்தி” எனும் பரஅறிவைக் குறிக்கும். “கிரியா சக்தி” எனும் இயக்க சக்தியை தெய்வானை அம்மையும், “இச்சா சக்தி” எனும் செயல் நோக்கத்தை வள்ளி அம்மையும், சிறப்பைச் சேவற்கொடியும், கருணையைக் காலருகில் நிற்கும் மயிலும், ஆணவ மலத்தைக் கால்பட்டு அடங்கும் பாம்பும் குறிப்பதற்காகக் கொண்ட அழகிய செல்வமே, முருகப்பெருமானின் தெய்வீகமான உருவத்தின் கருப்பொருளாகும்.

30. Gyaanam (liberating knowledge ) is the Spear; Kriya Sakti (Energy of Action) is Devaanai; Iccha Sakti (Power of Will) is Sri Valli; divinising force is the Rooster adorning Your banner; compassion indeed is Your beatific Peacock and Aanava mala is the serpent held in the claws of the Peacock. O opulent Grace, O Muruga, All these are in Your image!

ஆகுமே திசைகளாறு ஆக்கிடும் யோகப் பேறு
ஏகுமே விசைகளாறு ஏற்றிடும் ஆறறிவின் கூறு
ஈகுமே இயக்குமாறு இயற்கையில் இயல்போ டாறு
வாகையே வடிவேலாறு வைத்தாறு முகங்கள் பேறு

ஆறுமுகப்பெருமானின் வடிவம், ஆறு திசைகளையும், மற்றும் உடலில் யோகசக்தியால் உணரப்படும் “சஹஸ்ர சக்கரம்” எனும் விசை மிகுந்த ஆறு உயிர்நிலைகளையும், ஐம்புலனும், மனமுமாகிய ஆறு அறிவினையும், எல்லாம் அளித்து அண்டங்களை இயக்கும் ஐம்பூதங்களுடன் (ஆகாயம், காற்று, தீ, நீர், மண்) ஆறாகக்கூடிய பிரம்மத்தையும் (தக்கவர்க்குத் தக்கவாறு) காட்டும் வகையில் விளங்குகிறது. வடிவேலா, உன்னாறு முகங்களையும் காணுதல், மிகப்பெரிய பேறு ஆகும்.

31. Image of Arumukan inspires, metaphysical; The six faces signify the six directions, the six chakras, the energising seats of life in the human body, the pentad of senses and the inner sensorium as well as the five primordial elements and the Brahmam beyond those five. These six are the six different natural activisers. To behold them in the Lord that wields the Spear constitutes true beatitude.

பேறென்ன முருகனடி பெயர்கந்தத் திருநாமம்
ஊரென்ன ஆறுபடை உணர்கந்த ரனுபூதி
ஆறென்ன சிவபோகம் ஆய்ந்தருண கிரிவேதம்
வேறென்ன பவப்பேறு வேலாநீ விடைகூறு

மிகப்பெரிய பேறு (பாக்கியம்) என்ன? முருகனது திருவடிகள் தான். உகந்த பெயர் கந்தனுடைய திருநாமம் தான். ஊரிலே சிறப்பானவை முருகனின் அறுபடை வீடுகள். உணர்வதற்குப் பேறு கந்தரனுபூதி. (பரமாத்மாவாகிய கடலில் இணைய இழுத்துச் செல்லும்) நதியினைப் போன்ற சிவபோகத்தை ஆராய்ந்து அளிக்கின்ற அருணகிரியாரின் கவிதைகளே வேதம். இவற்றை எல்லாம் விட உலகில் வாழ்க்கைக்கு வேறு என்ன பெரிய பாக்கியம் உள்ளது? வேலா, நீயே விடை தரவேண்டும்.

32. Beatitude, what that is the greatest of all? It is the feet twain of Muruga. His hallowed name is Kandaa. His best abodes are the six shrines. What confers realisation? It is the opus Kandar Anubhuti. What indeed is the river that draws one in its current merging with the sea of Sivaӳ bliss? What indeed are the Vedas? They are, in sooth, the hymns sung by Saint Arunagiri. Say, O Muruga, what else can be reckoned as boon for human life, for sure?

கூரிட் டரிந்தால் கருவைக் குறிப்பிட் டிருக்கும் திருவை
வேரிட் டகன்ற தருவை வெற்றிவே லாயுதக் குருவை
மாரிட் டுயரும் நெறியை மயில்வா கனனின் உருவை
பூரித் தணிவே னதனால் புண்ணிய மடைவேன் கோடி

என்னைப் பிளந்து அரிந்தால், எல்லாவற்றுக்கும் கருவாகக் காட்டியிருக்கும் செல்வத்தை, எங்கும் ஆழமாக வேர் பதித்து அகலமாக வளர்ந்திருக்கும் கற்பகத்தருவை, வெற்றி தரும் ஞானமாகிய வேலை ஏந்திய குருவை, என் உள்ளத்தில் (முருகனை) வைத்து உயருகின்ற நல்ல நெறியை, மயில் வாகனனின் உருவத்தை, உண்மையான மகிழ்ச்சியுடன் நான் அணிந்து கொண்டிருப்பது (விளங்கும்), அதனால் நான் அடையும் புண்ணியங்கள் கோடி.

33. Surely if I am dissected, these will be discerned: the embryonic opulence that is omneity, the well-grown, celestial, wish-yielding tree with its deeply-embedded roots, the victorious Guru-Lord that wields the Spear, the goodly way leading to the lofty goal, the figure of the Rider of the Peacock. I am truly poised in bhakti delightfully decked with such jewels.So there I earn, merits innumerable.

கோடியிடி கூடிமன மேகமிடை ஒடிவினை
வாடிமடி தேடிபய மானகனம் மூடிஎனை
சாடிஉடைந் தாலடையுந் தேயமறந் தாளும்பிழை
கேடடைய நாடியடைந் தேனடிமை சிவபாலா

கோடிக்கணக்கான இடிகள் ஒன்றாகக்கூடி எனது மனமாகிய ஓடும் மேகத்தைத் தாக்கியதுபோல, வினைகளின் விளைவுகள் என்னை வருத்த, அதனால் மடியில் கட்டிய கனமாக எதிர்காலத்தைப் பற்றிய பயம் என்னை முற்றிலும் மூடிக்கிடக்கிறது. (இம்மயக்கத்தால்), ஜாடி உடைந்தால் அதனுள் இருந்த வெற்றிடமானது எவ்வாறு எங்கும் பரந்த வானுடன் கலந்துவிடுகிறதே (அதுபோலவே, உடலில் அடங்கிய உயிர், உடல் இறந்தால், பரம்பொருளுடன் கலந்து விடுகிறது என்ற உண்மையை), அதனை மறந்து வாழ்கின்ற பிழை என்னை விட்டுக் கெட்டொழிய (அதாவது உண்மை அறிவு உண்டாக), விருப்பத்தால் உன்னை அடைந்தேன், சிவன் மகனாகிய முருகா, உனக்கு நான் அடிமை.

34. Innumerable thunder-bolts smite my mind-heart which is like a swift, roving cloud. The outcome of my deeds pains me. The fear of my future- a burden which I carry about-, shrouds me. When a jar breaks, the space in the jar freely mingles with the ubiquitous space; even so, if life flits from the body, it merges with Life of lives. My flaw is the ignorance of this truth. To have this annulled and gain true knowledge, I seek You in love. I am Your bonded slave, O Muruga, the Scion of Siva.

பாலாவி சாலானு கூலாக பால சிவ
மூலாதி காலாஉ லாசாக லாப மயில்
வேலாவி லாஸாசு ரேசாப்ர காச குரு
மேலாபி மானாநீ யானாகக் காணக் குறி

(சிவ) பாலா, எங்கும் பரந்தவனே, அருளால் ஆட்கொள்பவனே, கபாலமணிந்த சிவனுடைய மூலப்பொருளானவனே, ஆதியான காலனே, ஆனந்தமானவனே, அழகு மயில் வேலனே, அறிவு விளக்கமானவனே, சிவ ஒளியான குருவே, மேலானவனே, அபிமானமாகிய கருணையைக் காட்டுபவனே, நீயே நான் என்பதை எனக்குக் குறித்துக் காட்டு.

35. O the Scion of Siva! O One omnipresent! O ever-abiding Help! O original Essence of Siva! O the Alpha of Time! O blissful One! O One who wields the Spear and whose mount is the Peacock! O Expanse of Enlightenment!. O Effulgence of Siva! O Guru! O Lofty One! O One infinitely merciful! The truth is that I who am in You, am You Yourself. This is for You to reveal!

குறிக்குமறை நிறைக்குமிறை விரிக்குமுல குயிர்க்குளுறை
தரிக்குமுடல் மரிக்குமிடர் தவிர்க்கும்மறு பிறக்கும்முறை
எரிக்குமரன் விழிக்குமரன் எனக்குமறி வுரைக்கத்திரை
திறக்கும்மதி மறக்கவிதி சிறக்ககதி அருள்நிதியே

குறித்துக்காட்டுகின்ற வேதங்களால் எங்கும் பரந்தவனாகக் காட்டப்பட்ட இறைவா, விரிந்த உலகத்தின் உயிர்களுக்குள் உறைந்திருக்கின்ற உயிரே, ஏற்பட்ட உடல் இறந்தவுடன், உயிர் பிரிந்து மீண்டும் பிறவிகள் எடுப்பதான துயரத்தை அழிக்கின்ற முறையைத் தருபவனே, (ஆட்கொள்வதற்காக) எரிக்கின்ற கண்களை உடைய அரனாகிய சிவனது (ஞான) விழியில் பிறந்த குமரனே, எனக்கு ஞானம் கற்பிக்கவும் அதனால் அஞ்ஞானம் எனும் மூடிய திரை விலகவும், (நிலையில்லா) எண்ணங்களை மனம் மறக்கவும், வினைப்பயன்கள் எல்லாம் நன்மையாகவே அமையவும் எனக்கு நீயே கதி அருள்கின்ற கருணாநிதி.

36. Revealed by the Vedas as the Omnipresent O God, O Ens Entium, O One that provides the way to snap once for all the cycle of transmigration, O Kumara that emerged from Sivaӳ fiery Eye of Wisdom, You should teach me the Wisdom that does away with the screen of Nescience, and make me immune to Karmic consequences generative of ever-during weal.

நிதியினையே கருணா நிலையினையே சரணா
கதியினையே அருளா கமநிலையே தருவா
யதிபதியே அருகா யமருருவே குறமா
வதிபதியே வருவா யதிசயமே தகுகுமரா

கருணாநிதியும், என்றும் நிரந்தரமான நிலையுமான குமரனையே சரணாகதியாகவும், என்னுடைய புனித ஆகமத் தவமாகவும் தருக! நீயே என் எஜமானன், அருமையானவன். என் அருகில் (உள்ளத்தில்) அமர்ந்துள்ள உருவம் நீ. குறமகளாகிய வள்ளி மணாளன். வருவாயே, அதிசயமான மேன்மையான குமரா.

37. Weal eternal is You. You abide forever. I seek refuge in You. Confer on me the holy beatitude of Aagamic askesis. You are my Ruler, the Guru close to me. You are the lofty Marvel. O Consort of cynegetic Valli, be pleased to bless me, Kumara.

குமரனே குழகன் குகனே குன்றக் கிழனே சண்முகனே
அமரிட மழிக்கும் யுவனே அண்டந் துழவும் நுண்ணியனே
தமருள மிருத்திய கலையே தவமென நிறுத்திய நிலையே
நமனுல கழுத்திய பயத்தை நசித்திட விருத்திய மழையே

குமரா, பெரியோனே, இதயமாகிய குகையில் இருப்போனே, மலைகளில் நிற்கும் மூத்தவனே, ஆறுமுகனே, தேவர்களது துன்பத்தை அழிக்கும் இளையவனே, அண்டங்கள் எல்லாவற்றிலும் அணுவாய் இருக்கும் நுண்ணிய பொருளே, எம்முடைய உள்ளத்துள் நிலையாக இருக்கின்ற கலைவாணனே, உன்னைப் போற்றுகின்ற தவமாகிய நிலைதான், எமனுலகத்துக்குள் அழுத்துகின்ற (மரணம் என மிரட்டும்) அச்சத்தை முற்றும் அழிக்கப் பெய்கின்ற அருள் மழை.

38. Kumara, O One young and handsome! O! Dweller in the cave of heart! O Lord with six visages! O eternal Youth that annuls the troubles of the celestials! O subtle One indwelling each and every atom of the cosmos! O divine Art ensouled by devotees! O Downpour that washes away dread that sinks men in Hell, within!

மழைவீடு செந்தூர் மலைவீடு ஐந்தூர்
மதிக்கும் படைவீடென
குழைவோடு சிந்தை அலையோடு மெந்தை
குதிக்கும் நடைபோடவே
இழையோடு கந்தன் இலையோ டகந்தை
இழக்கும் விடைதேடவே
கழையோடு பழனி கலைமேவு குகனைக்
கட்டிப் பிடித்தாடுவேன்

மழை தரும் கடல் சார்ந்த திருச்செந்தூர் மற்றும் மலை சார்ந்த ஐந்து ஊர்களுமான உனது அறுபடை வீடுதோறும், அன்போடு, என் மனஅலைகள் தலைவனான உன்னையே நினைத்து மகிழ்ச்சியால் குதி நடை போடுகிறது. மிகவும் கனிவோடு கந்தனைத் துதித்து, அகந்தை இழக்கும் வழி தேடுவதற்காக, கையில் தண்டம் ஏந்தி, பழனிமலையில் இருக்கும் உன்னை, மனக்குகையில் கலையாக இருக்கும் குகனாக, (எனது எண்ணங்களால்) கட்டிப்பிடித்து, ஆனந்தத்தால் ஆடுவேன்.

39. In Tirucchendur on the rain-producing sea and Your other five hill-shrines, I walk in delight whilst the waves of my loving mind-heart romp and dance. In devotion I hail Kandan; to lose my ego, I envision Him as Guha in the cave of my heart. I hail the Lord of Pazhani who is armed with a staff and embrace Him with my thoughts and dance ecstatically.

ஆடுவேன் அணிவேன் மாலை அருட்திருப் புகழ்ப் பாநூலைப்
பாடுவேன் பணிவேன் வேலை பன்னிரு கையான் தாளை
நாடுவேன் நகைப்பேன் நாளை நடப்பன நடந்தன வாகத்
தேடுவேன் திகைப்பேன் உன்னைத் தெரிவதில் அறிவேன் நானே

மகிழ்ச்சியால் ஆடுவேன். (உன் நினைவையே) மாலையாக அணிந்து, திருப்புகழ் முதலான அருட்பாடல்களைப் பாடுவேன். உன்னையே பணிந்து வணங்குவேன். பன்னிருகைளை உடைய ஆறுமுகனின் திருவடிகளையே விரும்புவேன். (அதனைக் கண்ட மகிழ்ச்சியால்) சிரிப்பேன். எதிர்காலத்தில் நடப்பன எல்லாம் என்றோ நடந்த நிகழ்ச்சிகளாகக் காணமுடிவதைக்கண்டு, திகைப்பேன், உன்னை தேடிப்பார்த்து, பிறகு தெரிகின்ற எல்லாவற்றுள்ளும் (என்னுள்ளும்) உன்னைத் தெரிந்து கொள்வேன்.

40. Ecstatically I dance, wearing the garland of Your grace, I sing the songs of the Tiruppukazh and other hymnody and adore You. I will seek after the Spear and the feet of the twelve-armed Lord and laugh in joyance. I will witness the future occurrences as the past ones and stand amazed. I will quest after You, behold You in everything and remain poised in true Knowledge that is You.

நான்முகனார் எண்கண்ணால் நயப்படவும்
நற்சிவனார் எண்குடியில் வயப்படவும்
காண்பதனால் கழுகுமலை களிப்புறவும்
கற்றபுகழ் வயலூரில் செழிப்புறவும்
வேலுமையாள் மயிலையிலே வெளிப்படவும்
வெற்றிதரச் சிக்கலிலே விடுபடவும்
ஆளுமையா யாவுமுன தானதினால்
ஆலயமா யென்னுள்ளங் கூடுமய்யா

நான்குமுகமும் (எட்டுக்கண்களும்) கொண்ட பிரம்மா வணங்கிய “எண்கண்” எனும் தலம் சிறக்கவும், எட்டுத்திசைகளிலும் பரசிவனார் ஆலயம் இருக்க மத்தியில் “எட்டுக்குடி” எனும் தலம் கவரப்பட்டிருக்கவும், பார்த்தாலே மகிழ்ச்சிதரும் “கழுகுமலை” சிறக்கவும்,, திருப்புகழைக் கொடுத்த “வயலூரில்” செழிப்படையவும், “திருமயிலை” தலத்திலே உமை அருள்வேல் கொடுக்கவும், “சிக்கல்” தலத்திலே வெற்றிவேல் எடுக்கவும், ஆள்கின்ற தன்மை எல்லாம் நீயாக இருப்பதினால், முருகா, என் உள்ளத்தை உனது ஆலயமாகக் கொண்டு என்னுள் கூடு.

41. You are adored at Ennkann by Brahma- the four-armed Lord endowed with eight eyes. Around this glorious shrine in all eight directions are the temples of Siva in the midst of which is situated Ettukudi. Lo, there is also Kazhukumalai, pleasant to behold. Vayalur is the holy place where Arunagiri was blessed with the words with which his Tiruppukazh opus. At Mayilai, Murugan received the gracious Spear from Uma and at Sikkal, He brandished it in triumph. O Muruga, Yours is the ubiquitous rulership. Be pleased to own my heart also as Your temple, the divine body.

கூடுஉடல் உயிர்க்குஉடை குடுவைகடன் என்றாலும்
வீடுஉன தானதனால் விளங்குமுடன் பாடதனால்
கேடுதவிர் நோய்களறு கேளாமற் சுகங்கள் கொடு
நாடுமுயிர் நாடகத்து மேடையிதை மெய்ப் படுத்து

கூடாகிய உடல், உயிருக்குத் தற்காலிகமாகப் போர்த்திய உடை. இந்த உடலாகிய பானை கடனாகப் பெற்றது.(அதனால் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்கவேண்டியது அவசியம்). இவை எனக்குத் தெரிந்த போதிலும், இந்த உடல் நீ இருக்கும் வீடு என்பதாலும், உன் சம்மதத்துடனேயே இவ்வுடல் எனக்குக் கிடைத்தது என்பதாலும், இவ்வுடலுக்கு கேடு எதுவும் வாராது நீயே தவிர்க்க வேண்டும். நோய்கள் எதுவும் இல்லாது நான் கேட்காமலேயே உண்மையான சுகங்களை நீ கொடுக்க வேண்டும். உயிரானது நடிக்கின்ற நாடக மேடையான உடலை, இறைவா, நீயே உண்மையாக்கு.

42. Body is a shell, simply dressing the soul; It is a pot on a loan, so a due, not to own – I am aware of this. Yet, as this body is Your tabernacle and as it is a gracious gift from You, You should keep it protected from ills. You should confer on me comfort, unsolicited. Do demonstrate the truth that the body is a theatre where life enacts its play at Your will.

படுத்தவை விழிக்குமோ பதித்தவை முளைக்குமோ
எடுத்தவை இருக்குமோ எதிர்க்கணம் பிறக்குமோ
விடுத்தவை இழக்குமோ விட்டவை மறக்குமோ
கொடுத்தவை அருள்மலைக் குமராஉன் நாடகம்

உறக்கத்திற்காகப் படுத்தவைகள் மீண்டும் விழிப்பது நிச்சயமில்லை. நிலத்தில் விதைத்தவை முளைத்துப் பயன் தரும் என்பதும் நிச்சயமில்லை. நமதென்று கைக்கொண்ட பொருட்கள் நம்முடன் நிலைக்குமா என்பதும் நிச்சயமில்லை. எதிர்காலம் உண்டா, என்பதும் தெரியாது. வேண்டாம் என விட்டவை நம்மைவிட்டுப் போகுமா என்பதும் உறுதியில்லை. முடிந்த கருமங்களின் விளைவுகள் நம்மை மறக்குமா எனத் தெரியாது. ஏனெனில், இவ்வுலகில் அளித்தவை எல்லாம், அருள்தரும் மலையாள்கின்ற குமரா, நீ நடத்தும் நாடகமே அல்லவா?.

43. Will they that slumber wake up? Will seeds sown germinate? Will possessions last? Is future a certainty? Are abandoned things truly lost? Will Karmic consequences forget to get attached? O Kumara, reigning from the Hill of Grace, You are indeed the Provider. It is You who stage the play!

நாடக மானது உலகம் நாயக னாவது குமரன்
ஊடக மானது உயிர்கள் உருவக மாய்வினைத் துயரம்
வீடக மானது ஞானம் விளங்கிடில் சுபமுடி வதனை
வேடக மாமுரு கேசன் வெளியிடத் தருமுப தேசம்

உலகம் ஒரு நாடகம். அதன் நாயகன் குமரனாகிய கடவுள். இந்நாடகத்தின் ஊடுருவும் பாத்திரங்கள் உயிர்களும், பொருள்களும். இவற்றின் உருவகங்கள் (அதாவது, உயிர்கள் ஏற்கும் உடல்கள், பயன்கள்) முன்வினைத் தொடர்பால் வந்த துயரம். இந்நாடகத்தின் முக்கியக்கரு ஞானம். இந்த உண்மையை உணர்ந்தால், நாடக முடிவு நன்மையாகவே முடிவது புரியும். இதுவே எல்லா வேடங்களுக்கும் மூலமான முருகேசன், தருகின்ற தத்துவ உபதேச வெளிப்பாடு (இப்பாடல்).

44. Play is this enacted world! O Kumara, You are the Lord of the cosmos. Beings are the characters of the play. Tragedy is the outcome of Karma. The message is: ԗisdom liberatesԮ Understanding culminates in the salvific end. This indeed is the spiritual message of Murugan- the divine Playwright and Enactor- that is the essence, this Antaati transcends.

தேச காலபரி மாண தானவிதி
தூச மாகபரி பால மோனமதி
பேச லாதஅரி தான ஞானஒளி
வீச லானவடி வேல வாதவம்நீ

தூரம், காலம் எனும் அளவுகளான விதியைத் தூசியாய் விட்டு (அதாவது அவைகளுக்கு அப்பாற்பட்டு), உலகை நிர்வாகிக்கும், அமைதியான, அறிவான, சொல்லால் சொல்ல முடியாத, மிகவும் அற்புதமான ஞான ஒளியை எங்கும் வீசுகின்ற அழகான வேலை ஏந்திய முருகா, நீயே தவம்.

45. Transcending the dusty region of Time and Space and their mutations, You abide as the Cosmic Governor, O Muruga who wields the beauteous Spear, diffusing radiance that is tranquil, wisdom-conferring, rare and ineffable. You indeed are tapas-incarnate.

நீசனாய் வெறியெரி சூரனை நின்றெதிர் அரிகரி மூர்க்கனை
ஈசனாய் எரிநெறி வேல்பட ஈன்றறருள் அரசிவ பாலனை
நேசனாய் நெறிசரி யாகவே நெஞ்சினில் உரியவ ராயினின்
தாசனாய் சரிசம னாகவே தழைந்தருள் வரிந்திட வாய்க்குமே

கொடியவனாகி எரிகின்ற வெறியுடன் எதிர்ப்பட்ட சூரபத்மனையும் அவனுடனிருந்த சிங்கமுகன் மற்றும் கஜமுகன் ஆகிய முரட்டு அரக்கர்களையும், எல்லோரையும் காக்கும் ஈசனாக, ஞானநெறியாகிய வேலை எரிந்து கொன்று, அவர்களுக்கும் அருள் கொடுத்து ஆட்கொண்ட, பரமசிவ பாலகனாகிய முருகப்பெருமானை, அன்புடையவராக, சரியான வழிமுறையால் வாழ்க்கைத் தருமங்களை நடத்தி, உள்ளத்தில் ஏற்றித் தொழுபவர்களுக்கு, அப்பெருமானே உதவிசெய்யும் தாசனாக, அவர்களுக்கு இணையாக (அதாவது, உலக உயிர்களின் வடிவத்தில்) வந்து இனிவான அருள் தருகின்ற வாய்ப்பு கிடைக்கும்.

46. O Incarnation of Hara who is Siva, Confronting Surapanman, Singamukhan and Gajamukhan- the evil and intractable Asuras-, You did away with them, by Your Spear of Gnosis and conferred on them the bliss of release. If Murugan is enshrined with love in oneӳ bosom and adored, and if life be lived righteously, He will, even as a servitor, manifest and lead one as oneӳ companion true, and enable one to thrive in blessed felicity. Embrace this opportunity.

வாய்க்குமோ வாய்மை வகைக்குமோ நின்கருணை
சாய்க்குமோ பாவங்கள் சகிக்குமோ என்பிறவி
காய்க்குமோ மோனவரம் கனியுமோ ஞானமழை
பாய்க்குமோ யாநமனார் பாசவலை வீசும்முன்னே?

(அத்தகைய) வாய்ப்பாக உண்மை அறிவு எனக்குக் கிடைக்குமோ? முருகா, உனது அருள் என் மேல் சாயுமோ? அதன் வலிமையால் என் வினைக் கொடுமைகள் அழியுமோ (அல்லது அவற்றை சகித்துக்கொள்ளும் சமத்துவ நிலை வருமோ)? என் பிறவியின் பலன் விளையுமோ? (அப்பலனாக) எல்லாம் அடங்கிச் சிவமாய் இருக்கும் சுத்த மெளனம் கிடைக்குமோ? அப்பர அறிவு மழை பெய்யுமோ? (இவை எல்லாம்) ஓயாது மரண வலை வீசி எமன் வரும் முன்னே எனக்குச் சேருமோ?

47. Opportunity that is! Will I come by stable truth? Will Your mercy befall me? Will I, with equanimity, endure the onslaught of sins? Will my life fructify? Will I gain the boon of Silence? Will Gnosis rain on me? Will these betide, ere Yama throws on me his ineluctable death curtain?

முன்நிற்கும் வடிவே முத்துக் குமரேசா
விண்நிற்பர் காத்தவடி வேலவனே ஈராறு
கண்ணிற்ப தியேனோ காங்கேயா கதிரேசா
எண்ணிப் பணியுமிவ் வேழைக்குச் சேர்வேது?

எனக்கு முன்னே (எதிலும்) நிற்கின்ற, எல்லா வடிவத்திலும் இருக்கின்ற முத்துக்குமரக் கடவுளே, வானத்தில் நிற்கும் தேவர்களை (அல்லது உயர்ந்த ஒழுக்கத்தில் நிற்கும் உயிர்களை) காத்த வடிவேலனே, உன்னுடைய பன்னிரண்டு கண்களில் நான் பட மாட்டேனோ? காங்கேயா, கதிரேசா, உன்னையே முற்றும் எண்ணிப் பணிகின்ற ஏழையான எனக்கு உன்னைவிட்டால் சேருமிடம் வேறு ஏது?

48. In all things I behold before me, You are present, O margaritaceous Lord Kumara! O Spear-holding Lord who is the Protector of the supernals, will I not fall within the ken of Your twelve eyes? O Gaangkeya, O Kadiresa, I enshrine You in my thought and adore You. Who else is my refuge?

ஏதது என்பதை மாமதம் ஆயிரம்
ஓதுவ தென்பது ஒன்றது புரியும்
மாதவ மாமது மால்மரு கன்முரு
காவெனு சரவண பவாதிரு வருளே

(பரம்பொருளாகிய அது) எது என்பதைச் சொல்ல ஆயிரம் மதங்களும் வழிகளும் உள்ளன. (உண்மை உணர்ந்தவர்களுக்கு) அவைகள் சொல்வன எல்லாம் ஒன்றேயான ஒன்றைக் குறிப்பது புரியும். அத்தகைய பெரிய தவம் எது என்றால், திருமாலின் மருகனான முருகனை, “சரவணபவ” எனும் மந்திரத்தால் உணர்த்திய திருவருளே ஆகும்.

49. (Refuge is THAT.) What indeed is THAT, proclaimed by a thousand faiths and their ways? True understanding affirms that the only ONE is to be comprehended and apprehended. What indeed is puissant and true tapas? O Muruga, is it not that which is revealed by the mantra Saravanabhava, with Your grace?

அருளே உலகமென அன்பே உயிர்களென இதனாலே
பொருளே கலயமெனப் புலனே கருவியென இனியானே
வருநாள் வருகவென வாழ்வே இனிமையென இனிநித்தம்
முருகா உனதருளால் திருநாள் எனத்தெளியும் என்சித்தம்

(அத்தகைய திருவருளின் கருணையால்) உலகமெல்லாம் அருளாகவும், உலகில் உள்ள உயிர்களெல்லாம் அன்பாகவும் இருப்பதை நான் உணருவேன். அதனால் எடுத்த கலயமான உடலை இறைவன் கொடுத்த பொருளாகவும், அவ்வுடலின் புலனறிவினையே தொண்டு செய்யக் கொடுத்த கருவிகளாகவும் நான் பயன்படுத்துவேன். ஆகையால், இனிமேல் வரும் காலத்தை “வருக” என உறுதியுடன் வரவேற்று, வாழ்க்கை இனியது என மகிழ்ந்து, தினம்தோறும், முருகா, உன் அருளால், ஒவ்வொரு நாளையும் திருநாளாய் ஏற்பது என் மனதில் நிச்சயித்து விளங்கும்.

50. With Your grace, I will gain the conviction that it is Grace that pervades the entire cosmos, and all lives are love-incarnate. This body is a God-gifted vessel and I will denude my organs of sense, to serve Him. Vogue la galore! Life is sweet. Thus assured, I stand clarified, O Muruga, to celebrate each day as a holy day of radiance.

சித்தர் நிலைவித்த மலைப் பித்தனருள் முத்தே
நித்தம் உளயுத்த விளைச் சத்தமழிச் சத்தே
தத்தங் கலையொத்த நிலைத் தத்வமறி வித்தே
முத்தமதி கத்தைச் சுக மொத்தமளி சூரா

சித்தர்கள் பலரையும் அருள்வித்து, மலைகளில் சித்தளிக்க அமர்ந்து, பித்தன் என (சுந்தரரால்) அழைக்கப்பட்ட பரமசிவனின் முத்தாக விளைந்த முருகா, தினம்தோறும் என் உள்ளத்தின் யுத்தத்தில் ஏற்படுகின்ற சலனங்களான சத்தத்தை அழித்த சத்தாக இருக்கும் இறைவா, ஒவ்வொருவரது உள்ள நிலைக்குள்ளே உயர்ந்திருக்கின்ற (கடந்து உள்ளே கடவுள் என்று இருக்கின்ற அல்லது “தத்வமசி” எனும் தானே அதான ) தத்துவத்தை என் அறிவில் விதைத்த விதையே, மொத்தமான சுகத்தை (உண்மையான ஆனந்தத்தை) தருகின்ற கருணை முத்தத்தை எனக்குத் தருக சூரா.

51. O Radiant Pearl graced by the Mad One of Himavant that blesses adepts with occult power! O Eternal One that quells the din of battle that is daily waged in the heart! O Seed that informs each according to his merit, the truth of Tat Tvam Asi! Impress on me the kiss of Your absolute and eternal bliss, O One supremely valiant!

சூரன் மாற்றித் தடை கீரன் ஆற்றுப் படை சுரநேசா
வீரன் போற்று மதி காரன் ஏற்கும் சிவ உபதேசா
சாரன் கோட்டுவடி வேலன் காட்டு வதி மணவாளா
நேரங் காட்டு வழி நேயங் கூட்டு முனை மறவேனே

சூரபதுமனாகிய அரக்கனது கொடுமைகளுக்குத் தடையிட்டு அவனை அருளால் மாற்றியவன், நக்கீரருடைய திருமுருகாற்றுப்படை எனும் காவியத்தால் போற்றப்பட்டவன், நல்லோர்களின் நண்பன், உண்மை வீரன், அனைவரும் போற்றும் தலைவன், ஆதிசிவனே ஏற்கக்கூடிய உபதேசங்களைத் தரும் குரு, உண்மைப் பொருளானவன், “திருச்செங்கோடு” எனும் புண்ணியத்தலத்திலே செங்கோட்டு வேலன் என்றானவன், காட்டில் வசித்த பெண்ணாகிய ஸ்ரீவள்ளியின் மணவாளன் ஆகிய முருகா, எனக்கு (நல்ல) நேரத்தைக் காட்டி, அன்பு வழியைக்காட்டி, அருள் கூட்டு. நான் உன்னை என்றும் மறவேன்.

52. O Valiant, You transformed Sura; You- the Darling of the Devas-, are hailed in Nakkirarӳ TiruMurugaatruppadai; You are the Hero; You are the Instructor approved by Siva Himself; You are the Consort of the sylvan Valli. O Muruga, reveal to me the opportune hour and grace me with the way. I will forget You no more.

ஏனே யெனயினி யானே யுனைவினை வழிகேளேன்
தானே யவையறு காணா தகைமிகை விழிவேளே
தேனே யினிமனந் தானே முனையுமெய் வடிவேலா
ஊனே உருகுணர் கோனே முருகெனும் உயிர்த்தோழா

ஏன் என்று இனிமேல் நான் உன்னிடத்தில் என்னுடைய கஷ்டங்களுக்கான காரணங்களையோ வழிகளையோ கேட்க மாட்டேன். ஏனென்றால், எனக்குள்ளேயே வினைக்கருமங்கள் அனைத்தையும் அறுத்துக் காணாமற் செய்வதற்கு, அருள்மிகுந்த விழிகளை உடைய தலைவனாகிய உன்னைக் கொண்டுள்ளேன். தேன் போன்று இனிப்பவனே, இனிமேல் என் மனம் தானாகவே ஒருமுனைப்பட்டு உண்மை உணரும். அழகான வடிவேலா, உடலே உருக, என் உணர்வின் தலைவனே, முருகா என அழைக்கப்படும் நீ, என்னுடைய உயிருக்கும் உயிரான தோழனே.

53. No more will I ply You with questions relating to the cause for my troubles and the way leading to their annulment as I hold You as my Lord whose eyes will gut with fire my Karma. O Honey, my mind-heart will henceforth comprehend and apprehend Truth with single-minded concentration. O Wielder of the Spear, You are the Captain of my consciousness who melts my embodiment; O my Sovereign, O Muruga, You are the Life of my life and its constant companion and eternal friend.

தோழா செங்கோட்டு வேலா தோகைமலை சூரா மால்மருகனே
வேளா வெண்ணைமலை காலா வெள்ளிமலை வீரா வேல்முருகனே
பாலா சுவாமிமலை சீலா சோலைமலை மாறா சூலழகனே
மூலா தாரநிலை யாளா ஏழையெனைப் பாரா யோவுருகினேன்

நண்பா, செங்கோட்டில் அருளும் வேலனே, சூரபதுமனை வென்று, தோகைமலையாள்கின்றவனே, திருமால் மருகனே, தலைவனே, வெண்ணைமலையில் இருக்கும் காலங்கடந்தவனே, வெள்ளிமலை வீரா, வேல்முருகனே, (சிவனுமையார்) பாலனே, சுவாமிமலையில் அருளும் புண்ணியனே, பழமுதிர்ச்சோலை ஆண்டவா, (உமை அருளிய) சூலம் பிடித்த அழகனே, (எல்லாவற்றிற்கும்) ஆதாரமே, ஏழையாகிய என்னை நீ ஏன் இன்னும் பார்க்காமால் இருக்கிறாய்? இதனால் நான் உருகினேன்.

54. O Friend, O Wielder of the Spear enshrined in Chengkotu! O Vanquisher of Surapanma and Ruler of Thokaimalai! O Nephew of Vishnu! O Sovereign-Lord of Vennaimalai- transcending time! O Hero of Vallimalai! O Spear-wielding Muruga! O Filial Godhead! O Holy One of Swamimalai! O beauteous Holder of the Trident never parting from Solaimalai! O Source Original of all entia! Do cast Your looks on me, the impoverished one. Thinking on You, I melt and melt at Your will.

உருகாதோ முருகாவென உரைத்தாலே உள்ளம்
பருகாதோ திருவாயருள் பனிக்காதோ கண்கள்
பெருகாதோ அருட்கருணை பேரின்ப வெள்ளம்
நெருகாதோ முருகாமுரு காவென் நெஞ்சே

“முருகா” என்று சொன்னால், உள்ளம் உருகாதோ? சொன்னதால் புனிதமான வாய் அமுதம் பருகாதோ? உருகிச் சொன்ன காரணத்தால், கண்களில் கண்ணீர் தோன்றாதோ? (உடலும் மனமும்) ஆனந்த வெள்ளம் பெருக்கெடுக்க இன்பத்தால் நனையாதோ? என்னுடைய நெஞ்சே, “முருகா”, “முருகா” என எப்போதும் (நெருக்கமாக) நினைக்காயோ?

55. Will not my soul deliquesce when I chant your name Muruga? Will not the holy lips quaff ambrosial grace? Will not my eyes turn tear-bedewed? Will not merciful grace abound? Will not the flood of bliss souse my soul? Lo, my heart, chants thus: Muruga, Muruga forever.

நெஞ்சத் தணைய துஞ்சத் துறவு மிஞ்சப் பயனே யுவனாக
பஞ்சப் புனையு நஞ்சைக் கரவு கஞ்சப் பிறவி துலனாக
கெஞ்சப் பிணையு மஞ்சத் துணையும் அஞ்சப் பிரியு முயிராக
நஞ்சப் பனிளன் அஞ்சற் கவென கொஞ்சிச் சிரிப் பரறிவீரே

உள்ளத்தின் ஆசையாகிய தீ அணைந்தவுடன், செயல் துறவே நடக்க, இறுதியில் அதன் பயனாக வருவது, என்றும் இளமையான முருகன் என்று உணர்த்த, (ஒன்றல்லது மற்றதற்காக) எப்போதும் ஏதேனும் இல்லை என்றே எண்ணுகின்ற வறுமை நிலையைக் கொண்டும், அவற்றைப் பெரும் பொருட்டு விஷமான குணங்களைக் கொண்டும், அவற்றைப் பெற்றாலும் விடமறுக்காத, கஞ்சத்தனமான இந்தப் பிறவியின் பொருளை விளக்க, நம்மைக் கேட்டுப் பெற கூடவே இருக்கும் உறவும், மஞ்சத்தில் இணைகின்ற உறவும் பயத்தாலும் சோகத்தாலும் அழப் பிரிகின்ற நமது உயிராக இருப்பதை உணர்த்த, ஆலகால விஷத்தை ஏற்று உலகைக் காத்த நஞ்சப்பனாகிய பரசிவனின் இளைய மகன் முருகன் “அஞ்சற்க” என் அன்புடன் கொஞ்சத்தக்க முகத்துடன் சிரிக்கின்ற அருட்சிரிப்பை அறிந்து கொள்வீரே!

56. Forever He smiles blandishingly saying: Ԇear not! Learn the message of this divine smile. It is penury which is ever in want, venomous efforts seek; possessions once possessed, miserliness holds fast unto them that are coveted by our kith and kin. Spouses who are partners in the bed wail and lament when life-breath quits. Such indeed is life. For the saviour and the saved, even venom is not mortal. Did not Siva quaff Halaahalaa- the most potent venom-, to save the world? Learn to live.

அறிவா லயமே அன்பே லயமே என
அறீவீ ரதனால் தருவீ ரிதமே பிற
உயிரே இறை உணர்வே துதி கழல்
கதியே கடன் குறியே விதி ஆகும்

அறிவுதான் கோவில். அன்புதான் அதன் இயல்பு. இதனைப் புரிந்து கொண்டதால், பிற உயிர்களுக்கும் இதமான செயல்களையே செய்யுங்கள். அதுவே இறை உணர்வு. அதுவே இறை வணக்கம். எனவே நமது அடைக்கலம் (அறிவும் அன்பும் கொண்ட வாழ்க்கையில்) இறைவடியில் நாம் செய்ய வேண்டிய கடமைகளே. இதனைக் குறிப்பது தான் விதி.

57. To live is to realize that Gnosis is the shrine and Love is God; then you will do nought but work out weal for all. This is indeed God-consciousness as well as worship. The ankleted feet of the Lord are the refuge. The divine ordains the actualization as the will of His.

ஆகுமா தண்டன் வீடு அருந்தமிழ் நாட்டி னோடும்
ஏகுமா லண்டன் ஏடு எழுந்துல கெல்லா நாடும்
போகுமா அண்டத் தோடு பூத்தருள் செல்வக் காடு
வேகுமா பிண்டக் கூடு வீட்டுளவ் விளக்கைத் தேடு

எல்லாம் ஆன பெரிய தண்டத்தை உடைய தண்டபாணியாகிய முருகபெருமானின் படைவீடு சிறப்பான தமிழ் நாட்டில் இருப்பதோடு, பெரிதாய் எழுந்த இலண்டன் மாநகரம் முதலாக உலகெங்கும் எழுந்துள்ள நாடுகளிலும், எப்போதும் போய்க்கொண்டே இருக்கும் அண்டங்களிலும் (அணுக்களிலும்), செல்வங்கள் தரும் வளமாகப் பூத்துக்கிடக்கிறது. இறுதியில் வெந்து போகும் உடலாகிய வீட்டிற்குள், இந்த அதி உன்னத ஒளியைத் தருகின்ற விளக்கினைத் தேடு.

58. His hand that holds a staff rules all the worlds. In Tamil Nadu are situated his sextet of shrines. He also abides in London, the city great, as well as in all the spinning spheres. His opulent grace burgeons ubiquitously. Do seek this saving light that shines in the body that perishes in the funeral fire eventually.

தேடும் கடவுளர் எல்லாம் தெரிந்துல மதங்கள் எல்லாம்
ஓடும் நதிகளைப் போலே ஒன்றிட ஒன்றெனும் படியே
ஆடும் அரபர சிவனார் ஐக்கிய மாக்கிய வடிவே
பாடும் சரவண பவனார் பரநிலை தருந்திரு வடியே

கடவுள் பலவாகவும், மதங்கள் மற்றும் வழிகள் பலவாகவும் ஒன்றேயான கடவுளைத் தேடினாலும், எவ்வாறு நதிகள் பலவாறாகப் பிரிந்து சென்றாலும் இறுதியில் ஒரே கடலில் கலக்கிறதோ அதைப்போல, நடனமாடுகின்ற அரனாகிய பரமசிவனது ஆனந்தத் தாண்டவத்தில் அனைத்தும் அடைக்கலமாகின்றன என்பதனை உணர்த்துகின்ற வடிவம்தான், இப்பாடலின் கருவான, “சரவணபவ” எனும் உன்னத நிலையைத்தரும் மந்திரத்தின் தலைவனாகிய முருகனின் திருவடிகள்.

59. Eventually, the one and only God is sought in many divinities, in many faiths and in many ways. The ramiferous rivers run different courses and ultimately merge with the sea. Even so, all entia seek their final refuge in the feet of the Dancing Lord whose filial form is Murugan. His feet are gained through the chanting of His mantra that is Saravanabhava. This indeed is the core message of this Anthati.

அடிமேலடி படுமோவென அறியாமலிமை சரியாமல்
மடிமேல்பய மடுவேகன மரிவாலுமை மறவோனை
பிடிசேவடி எடுகாவடி பிடியாவையு வெனவோதி
வடிவேலடி தொடுமாரடி முடிமேல்வரு வந்தாதியே

(இன்ப துன்பங்கள் எனும்) அடிபட்டு, செய்வதறியாமல், கண்ணிமையை மூடாமல் (வெளியுலகப்பார்வையை உள்மனதின் பக்கம் திருப்பாமல்), மரணபயம் மடியில் கனக்க, அதனால் உனை மறந்தவனாகிய என்னிடம், “பிடித்துக்கொள் என்னுடைய பாதுகாப்பான திருவடிகளை; இன்ப துன்ப மெனும் இருபுறம் இணைந்த வாழ்க்கைக் காவடியை உறுதியாக ஏற்றுக்கொள்; உனக்குத் தகுதியானவை எல்லாம் தந்தேன், எடுத்து கொள்” என்று கருணையால் சொன்னாயே வடிவேலா, அதனால், உன்னுடைய திருவடிகளைத் தொட்டு என் மார்பில் வைத்தேன். அதன் பயனாக, என் அறிவுக்குள் உன் அருளால் அந்தாதி யாகிய இப்பாடல்கள் தானாகவே வருகின்றன. (அல்லது, என் தலைமேல் வரும் உன் திருவடிகளே எல்லாவற்றிற்கும் முன்வந்த ஆதி).

60. I get buffeted again and again; I stand bewildered; I cannot close my eyes in sleep. In my lap, dread of death weighs like a mountain and causes me to forget You. At this You admonish me thus: “hold fast to my salvific feet; firmly fix on your shoulder the sling (kavadi) of your life fringed with good and bad”. I bestow on you, all that you merit.O Wielder of the Spear, I embosom Your Divine feet. No wonder, this Anthaati flows on its own accord for the new beginning!

Pages: 1 2 3 4 5 6

Related Posts

Share this Post