சிவராத்திரி

ஐயாவுடன் உரையாடல் (6)

(Read in ENGLISH)


 

இனிய மாலைப் பொழுது, இரவின் போர்வைக்குள் முடங்கிக் கொண்டிருந்த நேரம்.   என் மகள் கீர்த்தி மேஜைக்குள்ளிருந்து  ‘பிளே ஸ்டேஷன்-3’ எனும் விளையாட்டுக் கருவியை எடுக்க முயன்று கொண்டிருந்தாள்.

என் முகத்தில்  ஒரு கேள்வி இருப்பதைப் பார்த்தவள்போலச் சொன்னாள்.

‘அப்பா,  இன்னிக்கு லேட்டாத் தூங்குவோமில்லையா, சிவராத்திரியிலே ரொம்ப நேரம் தூங்காம இருப்போமே… அதான்!..  ஜெயந்த் அண்ணாகிட்ட இந்த கேம்ஸ் எல்லாம் காட்டப் போறேன்’.

சரியென்பதாகத் தலை அசைத்துக் கொண்டே, டைனிங் மேஜைக்குச் சென்றேன். அங்கேதான்  ஜெயந்தும், என் மனைவி உமாவும்  ஐயாவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஜெயந்த் என்னுடைய சகோதரியின் மகன்.  இலண்டனுக்கு, ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றைப் படைக்க வந்திருக்கிறார்.  ஐயாவை எல்லோருக்கும்,ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கிறேன்.  அவர் எங்களுடைய குடும்ப நண்பர் மற்றும் வழிகாட்டி.

அன்று சிவராத்திரி.

இன்னும் சிறிது நேரத்தில் வழக்கமாகச் செய்கின்ற பூஜையினைச் செய்ய வேண்டும்.  இது குடும்ப வழக்கம் என்பதால்,  நாங்கள் இதனை ஒரு கட்டளையாகவே ஏற்று, செய்து கொண்டிருக்கிறோம்.

என் தந்தை ஒவ்வொரு சிவராத்திரியிலும், சிறப்பான பூஜையினைச் செய்வார்.  அம்மா, அப்பா இருவருமே நாள் முழுதும் விரதம் இருந்து, பூஜை முடிந்தவுடன், வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை மட்டும் சாப்பிட்டு இருப்பர்.  அவர்கள் இரவு முழுதும் சிவநாமங்களைச் சொன்னார்களா என்பது தெரியாது, ஆனால்,  நான் என்னுடைய உடன்பிறப்புக்களுடன், இரவு வெகு நேரத்திற்கு  விளையாடியது இன்னும் நினைவில் இருக்கிறது.

இப்போதெல்லாம், உமாவும் நானும் சிவராத்திரி பூஜை முதலான கடமைகளைக் கூடியவரையில் செய்து வருகிறோம்.  எங்கள் குழந்தைகளுக்கும் சிவராத்திரி என்றால்  சிவ  பூஜை என்பதும், அதை விட முக்கியமாக, இரவு அதிக நேரம் கண்விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைக்கும் என்பதும் தெரியும்.

‘ஆமாம்,  அந்தக் காலத்திலே எல்லாம், பரம பத சக்கரம் அப்படிங்கிற பாம்பும் ஏணியும்கிற விளையாட்டிலே இருப்போம். இப்போ 24 மணி நேரமும் டெலிவிஷன், இண்டர்நெட் அப்படினு பொழுதைப் போக்க நிறைய இருக்கே’ – இப்படிச் சொல்லிக் கொண்டே ஜெயந்தின் பக்கத்தில் அமர்ந்தேன்.

‘இதனால் என்ன பயன் மாமா!   இந்த மாதிரி சடங்கினால் நமக்கு என்ன கிடைக்கிறது?  காலா காலத்துல படுத்துக்கப் போறதே நல்லது.  ஏன்னா, இதோ இதோனு, அடுத்த நாள் வேலைகள் எல்லாம் பக்கதிலேயே வந்திருக்கு’ என்றார் ஜெயந்த்.

ஜெயந்த், இப்படிப் பொதுவான விஷயங்களில் எல்லம் அவ்வளவாக அக்கறை காட்டாமல் இப்போதெல்லாம் இருப்பதைக் காண, எனக்குச் சற்றே ஆச்சரியமாய் இருந்தது.  ஏனெனில், எல்லா விஷயத்திலும், அதிலும்  சமய, தத்துவ விஷயங்களிலும், நம்பிக்கைகளிலும், அதிக உற்சாகத்துடன் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது ஜெயந்தின் வழக்கம்.   ‘கேள்வி நாயகன்’ என்றே ஜெயந்துக்கு ஒரு பெயர் வைத்திருக்க முடியும்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.  சிவனின் பரம ரசிகனான ஜெயந்துக்கு, சிவபெருமான் கதைகளைக் கேட்க மிகவும் பிடிக்கும்.  பலமுறை, நான் மாட்டிக் கொண்டு, சொன்ன கதையையே, உடைந்த கிராமபோன் கருவி மாதிரி, சொல்லிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.  ஏனென்றால், சிறுவனான ஜெயந்துக்கு ஒரே கதையாய் இருந்தாலும் அதைப் பலவிதமாகக் கேட்பதிலும் அலாதி பிரியம்.   இப்பொழுது,  மருத்துவராக இருக்கும் ஜெயந்துக்கு, மற்ற உலக விஷயங்களின் முக்கியத்துவம் பெரிதாய் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லையே!

கீர்த்தி சொன்னாள் – ‘அண்ணா, சிவராத்திரினா, 10 மணிக்கே படுத்துக்கப் போகணும்கிற கட்டளை எல்லாம் இல்லை… அதனால், நாம ரொம்ப நேரம் டிவி பாக்கலாம், விளையாடலாம்’.

சொல்லிக் கொண்டே, இன்னும் விளையாட்டுக் கருவியை வெளியே எடுப்பதில் முனைந்திருந்தாள்.

நான் ஐயாவைப் பார்த்தேன்.  ஜெயந்தின் கேள்விக்கு வேறு ஒரு மாற்றத்தைத் தருகின்ற பதிலை ஐயாவால் தர முடியும். தருவார் எனப் பார்த்தேன்.

‘ஆமாம் ஜெயந்த்.  சிவராத்திரி ஒரு சடங்கு அப்படிங்கிறதுக்காக, கண் விழிச்சு, தூங்காம இருக்கிறதில ஒரு பிரயோஜனமும் இல்லை! அதனால தூங்கப் போறதே நல்லது’.

ஒரு சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் சொன்னார்.

‘அதிலும், சிவராத்திரினா ராத்திரி தூங்காம இருக்க எதையாவது செய்து கொண்டே இருக்கணும் அப்படினு இருந்தா, அதனாலே எந்தப் பயனும் இல்லைதான்.’

‘ஐயா, சிவராத்திரிக்கு சிவனுடைய நடனம் அப்படிங்கிற முக்கியத்துவம் உள்ளது இல்லையா’ –  நான் அக்கறையுடன் கேட்டேன்.

‘தெரியாது!  ஏன், சிவன் மற்ற நாட்களில் ஆடுவது இல்லையோ!’

சில சமயம், ஐயா இப்படியெல்லாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது.

‘ஐயா, நான் சொல்ல வந்தது, சிவராத்திரி என்பது கடவுளை நாமெல்லாம் சிந்திக்க வேண்டும் அப்படிங்கிறதுக்காகத்தானே…’

‘ஆம்!  கடவுளோட ரகசியமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், நம்ம ஸநாதன தர்மத்திலே, இந்த மாதிரி மாசம் ஒரு பண்டிகையாவது இருப்பதன் காரணமே, படிப்படியா கடவுளைப் பற்றிய சிந்தனையை நமக்குள்ள விதைக்கத்தான்.  இது எல்லோருக்கும் தெரியும்’ என்றார் ஐயா.

‘எப்படி?’ – இது ஜெயந்த்.

‘சிவராத்திரி அப்படினா என்ன? யார் சிவா?  அவருடைய நடனத்தில அப்படி என்ன சிறப்பு? ஏன் அவர் ராத்திரியிலே நடனம் ஆடணும்?’    – இப்படி எல்லாம் கேள்விகளை வரிசையாக வைத்தது ஐயா.

உடனேயே தன் பங்குக்கும் ஒன்றைச் சேர்த்தாள் கீர்த்தி.

‘ஏன் நாமெல்லாம் சிவராத்திரியிலே தூங்காம இருக்கணும்?’

இந்த மாதிரி கேள்விகள், எல்லோர் மனதிலும் எழுபவைதான் என்பதால், ஐயா என்ன சொல்லப் போகிறார் என நாங்கள் கூர்ந்து கவனித்தோம்.

‘ராத்திரினா – இருட்டு, நைட் அப்படினு எனக்குத் தெரியும்’ என்றாள் கீர்த்தி.

‘ஆமாம்.  இரவு! பொதுவாய் நாமெல்லாம் ஆழ்ந்து தூங்கும் நேரம். அது இருள்.  அப்படி ஆழ்ந்து தூங்கும்போது, இந்த உலகமெல்லாம் நம்மை விட்டுப் போயிடுது இல்லையா!  நம்முடைய கண், காது அப்படினு எல்லாக் கருவிகளும், இவைக்கெல்லாம் பின்னாடி இருக்கிற மனசும் இல்லாமப் போயிடும்.  அப்போ, அங்கே, நாம இருக்கோம், ஆனாலும் இருக்கோம் அப்படினுகூட தெரிஞ்சுக்க முடியாத அறியாமையாகிய இருட்டுப் போர்வைக்குள்ள கிடக்கிறோம்.’

‘ஆமாம் ஐயா,  ராத்திரி என்பது இருள்தான்.  அது  முழுமையான அறியாமைங்கிற போர்வைதான்’ என்றேன்.

‘சிவராத்திரி அப்படினா,  சிவனுடைய இருள், சிவனுடைய முழுமையான அறியாமை அப்படினு அர்த்தமா?’ –  இது கீர்த்தி.

‘ஆம்!  ஆனால்  அறியாமை சிவனுக்கு இல்லை. சிவனுடைய அடிமையாக, அந்த முழுமையான அறியாமை அல்லது இருள் இருக்கு’ என்றார் ஐயா.

‘சிவன் யார்?  அவருடைய நடனம் என்ன?’ – இப்படிக் கேட்ட ஜெயந்தின் கேள்வியில்,  மேலும் அறிய வேண்டும் எனும் ஆர்வத்தின்  எடை கொட்டிக் கிடந்தது.  நான் நினைத்தேன் – முன்போலவே கேள்வியின் நாயகனாக ஜெயந்த் ஆகிவிட்டார்!

ஐயா ஜெயந்தினைப் பார்த்தார்.

‘ஒளி அப்படினா என்ன?’

‘ம்ம்… அது நமக்கு எதையும் காட்டும் சக்தி.  சூரிய ஒளி இல்லைனா, உலகத்திலே வாழ்க்கையே இல்லை’

‘இருள் அப்படினா என்ன?’

‘எங்கே  ஒளி இல்லையோ அங்கே  இருள் இருக்கு! ஒண்ணும் பார்க்க முடியாது’

‘ஆனால், ஒண்ணும் தெரியாத போது, நீ இருளைப் பார்க்கிறாய் அல்லவோ’

‘ஆமாம், நான் இருளைப் பார்க்கிறேன்’ என்றார் ஜெயந்த்.

‘ஆனால் ஒளி இல்லை. அப்படியும் உன்னால் இருளைப் பார்க்க முடிகிறது. அது எப்படி?’

உமா சொன்னார் – ‘இது கஷ்டமான கேள்வி.  ஒளியினால் எப்படி இருளைக் காட்ட முடியும்!’

‘ரொம்ப சரி!  எந்த ஒரு வெளி ஒளியும், அது சூரியனுடைய ஒளியாகவே இருந்தாலும், அதனால் இருட்டைக் காட்ட முடியாது.  ஏனென்றால், ஒளி வந்தால், இருட்டே இல்லாமல் போய்விடுகிறதே.  ஆனால், ‘இது ஒளி’, ‘இது இருள்’ என எல்லாவற்றையும் பார்க்கின்ற ஏதோ ஒன்று, பார்க்கின்ற நம்முள்ளேயே இருக்கிறதே! அதுதான் ஒளிகளுக்கு எல்லாம் ஒளி’ என்றார் ஐயா.

‘இதன் பொருள்?’, ஜெயந்த் சந்தேகத்துடன் கேட்டார்.

‘இதன் பொருள், எல்லாவற்றையும் அறிகின்ற ஒளி, நம்முள்ளேயே இருக்கிறது.  அதுவே வெளியில் இருப்பதையும், இல்லாததையும் காட்டுவது.    நமக்குள்ளே இருக்கும் அந்த ‘ஒளியின் ஒளிதான்’ ஆத்மா.  எல்லா உயிர்களையும், உலகங்களையும் வைத்துப் பார்த்தால்,  அந்த ஒளியின் ஒளிக்குப் பெயர் பரமாத்மா. அதுதான் சிவம்.  வேறு எதுவுமற்றதாய், தனித் தன்மையுடையதாய் எப்போதும் இருப்பது’.    இப்படிச் சொல்லிவிட்டு ஐயா சிரித்தார்.

‘ஏன் சிவன் இருளில் நடனம் ஆடுகின்றார்?  அவர்தான்  ‘ஒளியின் ஒளி’  அப்படினா, அவர் இருக்கும் இடத்தில் இருள் எப்படி வந்தது?’ என்றார் ஜெயந்த்.

ஒரு சில நொடிகளுக்குப் பிறகு ஐயா சொன்னார்.

‘சிவம் என்பதே முடிவற்ற ஒளி.  அதுவே பேரான உண்மை, வேறுபாடு எதுவும் இல்லாதது.   தனது உண்மை நிலையில் இருக்கும்போது, சிவத்தைத் தவிர வேறு எதுவுமே, எங்குமே இல்லை. அப்படி என்றால், அங்கே பார்ப்பதற்கு எதுவுமே இல்லை.  எதுவுமே பார்ப்பதற்கு இல்லை என்றால், அங்கே ஒரு முழுமையான இருள்மட்டுமே இருக்கிறது என்றும் பொருள் உண்டு அல்லவா!   புரிகிறதா….. இது கொஞ்சம் நுணுக்கமான விஷயம்…’

இப்படிச் சொல்லி ஐயா நிறுத்தினார்.

‘ஒரு மாதிரி புரிகிறது….. எதுக்கும், நீங்க நம்மளோட நிலையில சொல்லுங்கோ!  முழு உலகம், பரமாத்மா, முழுமையான இருள் இதெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியலை.’

நானும் அப்படியே நினைத்திருந்தேன்.

‘சரி,  ஆழ்ந்து தூங்கும்போது, நீ இருக்கிறாயா’ – ஐயா ஜெயந்தைப் பார்த்துக் கேட்டார்.

‘நிச்சயமாக  ஐயா! என்ன, நான் தூங்கும்போது, என்னோட அறிவு, மனமெல்லாம் வேலை செய்வதில்லை’.

‘ஆனால், நீ தூங்கும்போது,  நான் இருக்கேன் அப்படிங்கிற உணர்வும் உனக்கு இல்லையே!’

‘ஆமாம். அது ஏன்னா, அப்போ என்னைச் சுத்தி என்ன இருக்கு அப்படினு தெரிஞ்சுக்கிற அறிவு இல்லை’

‘உன்னைச் சுத்தி மட்டுமில்லை, உன்னையே நீ  உணருவதில்லை…’

‘சரி ஐயா, ஒத்துக்கிறேன்…. ஆழ்ந்து தூங்கும்போது, நான் முழுமையான அறியாமையில்தான் இருக்கேன்’.

இப்படிச் சொன்ன ஜெயந்த், சற்றே நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். அந்த உரையாடலில் அவனுடைய ஆர்வம் உயரத் தொடங்கி விட்டது என்றே எனக்குப் பட்டது.

‘அதுதான் இருள்,  முழுஅறியாமை.  அதுக்கு வேதாந்தம் சொல்ற பெயர் அவித்யா.   எப்படிக் கூப்பிட்டாலும், அதுதான் உன்னை முழுமையாப் போர்த்தி இருளில் அதாவது, அறியாமையில் வைக்கிற போர்வை.   ஒரு சமயம் பார்த்தால், இந்த இருளும், தூக்கமாகிய போர்வையும் நல்லது அப்படினே தோணும். ஏன்னா, நமக்கு அது இயற்கையாய்க் கொடுக்கிற வரம்.  அடுத்த நாள், மேலும் மேலும் உலகில் அலைய வேண்டியிருக்கே அப்படினு இரக்கப்பட்டு, கடவுளே நம்முடைய புலன், மனம், அறிவு எல்லாத்தையும் உள்ளே இழுத்து, இந்த அறியாமைப் போர்வைக்குள்ள வைத்து விடுகிறார். அதுனால, அறியாமையும் ஒரு ஆசீர்வாதம்தான்’  என்றார் ஐயா.

‘அதுமாதிரி கடவுளுக்கும் போர்வை உண்டா?’  என்றால் கீர்த்தி.

‘ஆமாம். உலகங்களையும், அதுமாதிரி ஒரு மிகப் பெரிதான அறியாமைப் போர்வைதான் போர்த்தி இருக்கு.  வேதாந்தம் அதுக்கு வைக்கிற பெயர் மாயா அப்படினு சொல்லலாம்.  என்ன வித்தியாசம்னு கேட்டால்,   அவித்யா அப்படிங்கிற இருட்டு நம்மைக் கட்டுப்படுத்தி இருக்கும்.  மாயா அப்படிங்கிற இருட்டை, இறைவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.’

‘ஐயா, அதன் பொருள் என்ன?’

‘அதாவது இறைவன் எப்பவுமே எல்லா இருளுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார்.   அவருக்கு துயில், மயக்கம் எனும் தன்னுடைய உணர்வினை மறக்கின்ற நிலை எப்போதுமே இல்லை.  அதனால் அவர் தந்நிலை உணர்ந்து, அந்நிலையிலேயே எப்பொழுதும் இருக்கிறார்.’

‘நீங்க சொல்றதுபடி பார்த்தால்,   தூக்கம் என்னைக் கட்டுப்படுத்தி, அதனால், அறியாமைக்குள்ள நான் என்னை மறந்து கிடக்கிறேன்.  ஆனால், சிவன், மாயை எனும் மிகப்பெரிய இருளுக்கு மேல் இருக்கிறதுனால, எப்போதும் தான் யார் அப்படிங்கிற உணர்வோடயே இருக்கார்.   சரிதானா?’ – இப்படிக் கேட்டுத் தன்னுடைய புரிதலைச் சரிபார்த்துக் கொண்டார் ஜெயந்த்.

‘மிகவும் சரி.  ஒருவேளை நாமும், அவித்யா அப்படிங்கிற இருளுக்குள் கட்டுப்படாமல், அதையும் தாண்டி இருக்க முடிந்தால்,  நாம் ஆழ் துயிலில் இருந்தாலும், அப்படி இருக்கும்போதே, அத்துயிலை உணர்ந்திருக்க முடியும்.  இப்போ மாதிரி, அடுத்தா நாள் முழிச்சப்புறமே தூங்கினேன் அப்படினு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.’

‘அப்படி எல்லாம் ஆக முடியுமா!’

‘நிச்சயமாய்.  ஆனால், தந்நிலையை இழக்காத பக்குவம் வரணும்னு யார் தீவிரமாய் முயற்சி செய்வார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது முடியும்’

‘அப்படி இருந்தா என்ன பயன்?’

இது கீர்த்தி. அவளுக்கு, பொருளாதரம் படிக்கிறதாலேயோ என்னவோ,  எதைச் செய்தாலும், அதனால் எதாவது பயன் இருந்தே ஆக வேண்டும்.

‘மிக மிக உயர்வான பலன் உண்டு. உன்னையே நீ அடைவாய்.  அதுதான்  சுதந்திரம்.  பூரணமான திருப்தி.  எப்போதுமே சுகம், அமைதி.  அதுக்குப் பெயர்தான் முக்தி.  அப்படித் தன்னையே பார்க்கும் பக்குவத்தை அடைஞ்சவர்களுக்கு, உலகத்திலே எதனாலேயும், எப்பவும், எந்தவிதமான பாதிப்புமே இல்லை!’

‘சிவனின் நடனம் எங்கே நடக்கிறது?’

‘ம்… நடனம் அப்படினு சொல்றது, உலகத்திலே நடக்கிற எல்லா மாற்றங்களுக்கும் ஆதாரமான ஒரு விசையைத்தான்.  சிவம் மட்டுமே எல்லாத்தையும் நிரப்பி, சிவம் மட்டுமே வேறு எதுவுமில்லாமல் இருக்கிறது.  அப்படினா, அசைவு அப்படினே எதுவுமே இருக்க முடியாதே!  ஆனால், சிவத்தின் திருவிளையாடலாய், சிவத்துக்குள் எழும் அதிர்வினாலேயே எல்லா அசைவுகளும் உண்டாகிறது அப்படினு வேதங்கள் சொல்கிறது.  அந்த அசைவில் வந்த விசைதான் எல்லாவற்றுக்கும் மூலம்.  அதுதான் ‘ஓம்’ அப்படிங்கிற நாதம்.  அதோட நுண்விசை பரவி, அதன் அதிர்வின் விளைவால், திசைகள், வெளிகள், பஞ்சபூதங்கள், பொருட்கள், உலகங்கள் அப்படினு எல்லாம் வந்தன.’

‘அப்படினா, உலகத்திலே இருக்கிற எல்லா அசைவுகளும் சிவனின் நடனம், சரியா’.

‘ஆமாம்.  எல்லாத்திலேயும் இருக்கின்ற மாற்றங்களின் விசைதான் சிவனின் நடனம்.  சிவனின் நடனமாகிய ஆதார அதிர்வு இல்லாமல், உலகில் எதுவுமே இல்லை!’

‘அப்போ செத்துப் போன உடல், கல்லு, மண்ணு இதிலெல்லாம் கூட?’

‘ஆமாம். அழுகுவதும்,  அழிவதும் அதிர்வின் விளைவுதான்.  எல்லா விளைவுகளுக்கும் சிவ நடனமே காரணம்.  வேதங்களின்படி, சிவ நடனத்தின் விசையினாலயே, சிவனின் சக்தியாகிய அன்னை, எல்லா உலகங்களையும் மாயையினால் விளைக்கின்றாள்.’

‘ஐயா, எனக்குள்ளே சிவன் எங்கே நடனம் ஆடறார்? சொல்லுங்கோ’ – என்றாள் கீர்த்தி.

‘அருமையான கேள்வி குழந்தை!  இந்தக் கேள்வியைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ, விட்டுடாதே.   ஆனால், இதுக்கான பதிலை நீயாத்தான் தேடித் தெரிஞ்சுக்கணும்.  அதுக்கு உனக்குள்ளேயே நீ தியானம் பண்ணனும்.’

‘ப்ளீஸ்….. ஒரு க்ளூ கொடுங்களேன்’

‘ஒருவர் பகவான் ரமணரிடம், தியானம் எப்படிச் செய்வதுனு கேட்டபோது, உனக்குள்ளேயே, இப்படியெல்லாம் தியானம் பண்ணனும் கேட்கிறவன் யாருனு பார்.  அதுதான் தியானம் – அப்படினு சொன்னார்.   அதாவது,  உனக்குள்ளேயே, இந்தக் கேள்வியை எல்லாம் கேட்கிறது யார் அப்படினு ஆராய்ந்து கொண்டே இருந்தால், அந்த ஆராய்ச்சியே, படிப்படியாக, உனக்குள்ளேயே சிவம் இருக்கின்ற அந்த சுகமான இடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.’

‘சிவன் எனக்குள்ள இப்போ நடனம் ஆடிண்டிருக்காரா?’

‘ஆமாம்.  நம் ஒவ்வொருவருரின் உள்ளத்திலும், சிவ நடனம்,  எப்போதும் நிற்காத ஒரு துடிப்பு.   அது ‘நான்’, ‘நான்’ அப்படினு எப்பவுமே நமக்குள்ள இருக்கிற உணர்வு.  அப்படி இடைவிடாமால், ‘நான், நான்’ என்று துடிக்கிறதே, அதுக்கு அஜபா-ஜபம் என்று வேதாந்தம்  பெயர் வைத்துள்ளது.  அதாவது,  முயற்சி இல்லாமலேயே நடக்கும் தியானம்.  அதுதான் சிவ நடனம்.’

‘அப்போ சிவராத்திரியிலே தூங்கக் கூடாது அப்படினு சொன்னது?’ –  இது கீர்த்தியின் வினா.

‘இல்லை குழந்தை,  நீ எப்ப வேண்டுமானாலும் தூங்கு.  ஆனால், உண்மையான விழிப்புடன் தூங்கப் போ.   உண்மையான விழிப்பு அப்படினா, தந்நிலையில் எப்பவுமே இருப்பது.  அந்த பக்குவம்  கிடைக்கிற வரைக்கும்,  அந்த உன்னதமான உணர்வை அடைவதுதான் வாழ்க்கையின் நோக்கம் அப்படிங்கிற அறிவோடவாவது தூங்கப் போ.  அப்போதான் உண்மையான விழிப்பு கிடைக்கும்.  இந்த உண்மையை நினைவுபடுத்த, வருஷத்தில் ஒருநாளாவது இதைப் பத்திச் சிந்திக்க, நமக்கு  சிவராத்திரி அப்படினு ஒரு பண்டியகை வழங்கப்பட்டது.  எனவே சிவராத்திரி ஒரு நாட்டுக்கோ, இனத்துக்கோ, சமயத்துக்கோ மட்டும் சொந்தமில்லை,  எல்லா மனிதர்களுக்கும் உரியது.’

இப்படிச் சொல்லி நிறுத்தினார் ஐயா.

ஜெயந்த் தனது கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார். கீர்த்தி விளையாட்டுக் கருவியை மேஜைக்குள்ளேயே வைத்து விட்டாள்.  அவளுடைய அன்றைய திட்டத்திலும்,  ஏதோ மாற்றம் போலிருந்தது.  உமாவும் நானும், பூஜை அறைக்குப் புறப்பட்டோம்.  நான் சிவராத்திரி பூஜையினைச் செய்ய வேண்டும்.  ‘அதற்குப் பதிலாக, அஜபா ஜபம் என்ன என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கலாமோ’ என மெல்லிய தாகம் மனதுக்குள் வந்து கொண்டிருந்தது.

ஒன்றுமே நடக்காததுபோல், ஐயா புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார்.

17 February 2015

Related Posts

Share this Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*