இருளும் ஒளிரும்

ஐயாவுடன் உரையாடல் (9)

Read in ENGLISH

அது ஒரு இலையுதிர் கால முன்னிரவு நேரம். குளிர் கொட்டிக் கொண்டிருந்தது. ஐயாவும் நானும் அந்தப் பூங்காவைச் சுற்றி நடந்து கொண்டிருந்தோம். அப்போது இடியாகப் பெருத்த ஓசையுடன் வானில் ஒளிச்சிதறல். வான வெடிகள்!  அதன் கணநேர மினுமினுப்பில் இருள் வானப் போர்வையில் பல ஓட்டைகள் வந்தாற்போல வெளிச்சம் பூமியைக் காட்டி மறைந்தன. தீபாவளி அடுத்த வாரம் வருகிறது.  அதோடு கைஃபாக்ஸ் (Guy Fawkes) எனும் வான வெடிகளால் கொண்டாடப்படும் இரவும் வருகிறது.  இவ்விரண்டு பண்டிகைகளையும் பட்டாசுகளும் வான வேடிக்கைகளுமாய்க் கொண்டாடுவது UK  வழக்கம்.  எனக்குத் தெரிந்து மேலைநாடுகளில், தீபாவளியை இந்தியாவைப் போலவே பட்டாசு சகிதமாகக் கொண்டாடும் நாடு UK தான்.

‘ஒளியின் விழா’, என்றேன் நான்.

‘இருளை வெல்லும் ஒளி;  பொய்மையை வெல்லும் உண்மை’ – ஐயாவைப் பார்த்துக் கொண்டே தொடர்ந்தேன்.

‘இதுவும் ஒரு உலகளாவிய நம்பிக்கைதானே ஐயா? கடைசில தர்மமே அதர்மத்தை ஜெயிக்குங்கிறது!’

‘இருக்கலாம்’ என்று சொன்ன ஐயா, எனக்கு ஒரிரு அடிகள்  முன்னேதான் நடந்து கொண்டிருந்தார். கால்களில் நொறுங்கிடும் உலர்ந்த இலைச் சருகுகளின் “சரக் சரக்” எனும் சப்தத்தைத் தவிர அங்கே அமைதிதான் இருந்தது.  ஒரு சில கணங்கள் கழிந்து வானில் மீண்டும் ஒரு பட்டாசுச் சிதறல்.

‘ஐயா, ஒளி இருளை விரட்டும் அல்லது தர்மமே இறுதியில்  வெல்லும் எனும் தத்துவம் எல்லாம்  முடிவில் சரியென நிருபீக்கப்பட்டாலும், நாமெல்லாம்,  வாழ்க்கையில், ஒளி எங்கேடா கிடைக்கும் எனத் தவிக்கும் தருணங்களைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறோம், இல்லையா’,  ஒருவிதமான  ஆதங்கத்துடன் நான் கேட்டதாக ஞாபகம்.

‘நிச்சயமாக!’ என்றார் ஐயா.

‘ஆனால் அதெல்லாம் ஒவ்வொருவரோட நோக்கத்தையும் நம்பிக்கையையும் பொறுத்தது. ஏன்னா, உண்மையில் ஒளி, இருள் அப்படினு எந்த வேறுபாடும் கிடையாது’

‘என்ன’, அதிர்ந்து கேட்டேன்.

‘நாமெல்லாம் இருளையும், ஒளியையும் நன்னாப் பார்க்கிறோமே! இருளை அறியாமை அல்லது தீமைக்கும், ஒளியை அறிவுக்கும், நன்மைக்கும் உதாரணமாயும் சொல்றோமே! அது இருளும் ஒளியும் ஒண்ணுக்கொண்ணு எதிரானது அப்படிங்கிறதுனாலதானே?’

‘ஆமாம். நாம அப்படித்தான் எடுத்துக்கறோம். நமக்கு ஒளிதான் பிடிச்சிருக்கு.  ஒளியை அறிவுக்கும், இருளை அறியாமைக்கும் ஒப்பிடறது…. பொதுவா… சரிதான்’ என்றார் ஐயா.

‘பொதுவா அப்படினா….  விசேஷமா வேற அர்த்தம் இருக்கா?’ –  கேட்டேன் நான்.

‘இல்லையில்லை.  நான் சும்மாத்தான், உங்களை இருளைப் பற்றி இன்னும் கொஞ்சம் யோசிக்க வைக்கணும்னு சொன்னேன்.  தீபாவளியை ஒளியின் விழாவா ஜாலியா கொண்டாடும்போது, பாவம், இருளுக்கு மட்டும் எப்பவுமே கெட்ட பெயர்தான் இருக்கு இல்லையா!  இருள் மட்டும் இல்லைனா, ஒளிக்கு என்ன பெருமை வந்துடும்?’

ஐயா தொடர்ந்து சொன்னார், ‘புரியறதா?  எந்த ஒரு இடத்திலும், எப்பவும் இருளே இல்லை அப்படினு ஆகிட்டா, ஓளிக்கு வேலையே இல்லையே!’

‘ஐயா… இது ஒரு கடினமான, தேவையில்லாத யூகம். எப்படி முடியும்?  இருள் என்பது இருக்கத்தான் இருக்கிறது’.

‘மிகச் சரி!  இருளுக்கு இருப்பு இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்வதுதான் சரி’

‘ஆமாம்.  அதிலென்ன சந்தேகம்’

‘சிலர் இருள் என்பதை இல்லாமையாக, சூன்யமாக எண்ணுகிறார்கள்.  இருளாகிய வெளியில் ஒன்றுமே இல்லை,  அதனால் இருள் ஒரு வெறுமை, இல்லாமை எனக் கருதுகிறார்கள். இருள் சூன்யம் அன்று. அது  இருப்பது’.

நான் கேட்டேன்.

‘ஐயா, இருளும் ஒளியும் எப்போதும் இருப்பதில்லை. அவை வந்து போய்க் கொண்டே இருக்கும். ஒளி வந்தால் இருள் போயிடுதே!’

‘இருக்கலாம். ஆனா ஒண்ணை புரிஞ்சுக்கணும். வந்தும், போயும் எது இருக்கிறதோ, அதற்கு நிரந்தரமான இருப்பு என ஓரிடமும் இல்லை.’

‘அதனால?’.

‘அதனால, இருளும் ஒளியும் ஒரிடத்தில், ஒரே சமயத்தில் சேர்ந்தே இருக்கவும், சேர்ந்தே இல்லாமலிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது!’.

‘ஐயா, நிச்சயமாக அதை ஏற்பது கஷ்டம்.  இருளும், ஒளியும் இரண்டுமே இல்லாத இடத்தை கற்பனைகூடப் பண்ண முடியாது.  அதே மாதிரி இருளும் ஒளியும் எப்படிச் சேர்ந்து இருக்க முடியும்?’.

ஐயா சில நொடிகள் நின்றார். பிறகு  அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டோம்.

‘ஐயா,  வந்தும் போயும் இருக்கும் ஒளியின் தன்மையை நான் ஏத்துக்கிறேன். ஆனால் எப்படி இருளும் ஒளியும் ஒண்ணா ஒரே இடத்தில இருக்க முடியும்! அவை இரண்டுமே இல்லாத இடமும் இருக்க முடியுமா என்ன!’.

ஐயா யோசனையுடன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மேலும் இரண்டு வான வெடிகள் ஆகாயத்தில் ஒளியை விரித்து மறைந்தன.

‘நம்மோட பார்வையில், ஒளி அப்படினா, நம்ம கண்ணுக்குத் தெரியற வெளிச்சம்தான். அந்த வகையில் கண்ணுக்குத் தெரியாதபோது, அதற்குப் பெயர்  இருள் என வைச்சுக்கறோம்.  சூரியன் வந்தால் இருட்டு ஓடிடும்.  ரூம்ல லைட்ட ஆன் பண்ணினா, அங்க இருந்த இருள் போய்டும்’.

‘எக்ஸாட்லி… அதனாலதான் சொன்னேன், ஒளியும், இருளும் ஒண்ணா இருக்க முடியாதுனு’.

‘ஆனால் இதைப்பார்’ –  ஐயா எங்களுக்கு முன்னால் தரையில் விழுந்து கிடக்கும் தெரு விளக்கின் நிழலைக் காட்டினார்.

‘நிழலாய் இருளும், ஒளியும் இங்கே சேர்ந்தே இருக்கு!  வானத்தில கோடிக்கணக்காய் நட்சத்திரங்களின் ஒளியும் இருக்கு. அதோட இருளும் சூழ்ந்திருக்கு’.

‘ஐயா, லைட் நேர் கோட்டிலேதான் போகும். அதன் வழியிலே இருக்கும் பொருட்களால அதற்குத் தடை வந்தால், அப்போ  இருட்டுத் திட்டுக்கள் நிழலாய் இருக்கிறது உண்மைதான்’.

‘இருக்கலாம்.  நான் என்ன சொல்றேனா, இருளும் ஒளியும் சேர்ந்து இருப்பது ஆச்சரியமில்லை என்பதைத்தான்’.

இப்படிச் சொல்லிக்கொண்டே, ஐயா தனது இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, ஒருவிதப் பணிவுடன் சுழற்றினார்.

‘பாருங்கள், விரிஞ்சு கொண்டே போவது என்றெல்லாம்  நாம் படித்திருக்கிற அண்டம், ஒரு முடிவில்லாத கருமைப் போர்வையாய் இருக்கு. முடிவில்லாத வான வேடிக்கையாக கோடானு கோடி நட்சந்திரங்களின் பட்டாசு வெடிப்பையும், ஒளிச் சிதறலையும் அந்தப் போர்வை தனக்குள்ளேயே  வைச்சிருக்கு! கண்ணுக்கு முன்னாலேயே இருளும் ஒளியும் ஒண்ணாக் கொட்டிக் கிடக்கிறதைப் பாருங்களேன்!   நாம காண்ற எல்லா வெளிச்சமும்,  இந்த அண்டமாகிய இருட்போர்வைக்குள்ள தானே இருக்கு!’.

என்னை ஆழமாகப் பார்த்து கேட்டார், ‘உங்களுக்குப் புரிகிறதா?’.

தலையை மெதுவாக ஆட்டிக் கொண்டே சொன்னேன், ‘ஒரு மாதிரி….’

‘நான் உங்களை, இருளைப் பத்தின குறுகலான பார்வையிலேர்ந்து  வெளியே கொண்டு வரத்தான் இப்படிச் சொல்லிண்டிருக்கேன்.  இருள் வேற, ஒளி வேற அப்படிங்கிறதை மாத்தணும். ஏன்னா, அது இரண்டும் ஒண்ணு’.

ஐயா இப்படிச் சொல்லிச் சிரித்தார்.

‘ஒளிதான் இருள் அப்படிங்கிறீங்களா!’

‘ஆமாம்.   இருள்தான் ஒளி அப்படினும் சொல்றேன்’.

‘எப்படி?’.

‘பாருங்கோ, நாமெல்லாம் லைட் அப்படினு சொல்றது,  மனிதர்கள் கண்ணுக்குப் பிரகாசமாகத் தெரியும் வரையிலான ஒளிக் கற்றையைத்தான்.  எலக்ட்ரோ-மாக்னடிக் (EM) அல்லது  மின்-காந்தக் கதிர்கள்தான் எங்கும் பரவி இருக்கு.  அதில் ஒரு சிறிய பகுதியில் வரும் அதிர்வலைகளைத்தான் மனிதர்களின் கண்களால் பார்க்க முடியறது.  அந்த குறுகின எல்லைக்குள் இருக்கும் அதிர்வலைகளை மட்டுமே நாம் ஒளி அப்படினு வைச்சுக்கறோம்’

‘அப்படினா, ஒவ்வொரு உயிரனங்களுக்கும் ஒளியின் விளக்கம் மாறுமா?’

‘நிச்சயமாய்.  அதனால்தான் நமக்கு இருள் அப்படிங்கிறபோது, சில மிருகங்களுக்கு அதுவே ஒளியாகி, அதிலே பார்க்கும் திறமை இருக்கு.  அதாவது, அது அவைகளுக்கு ஒளிமயமான காலம்தான்.’

‘ஐயா,  அது கண்களோட அமைப்பு, திறமை இவற்றைச் சார்ந்ததுதானே?’

‘ஆமாம். உடலறிவாகப் பார்த்தால், ஒளி கண்ணின் அமைப்பைச் சார்ந்ததுதான்.  ஆனால், கண்  அறிவுக் கருவிகளில் ஒன்று.  புழுவுக்கு கண் கிடையாது. ஆனால் மணம் அப்படிங்கிற அறிவை வைச்சுண்டே, அதனால பார்க்க முடிகிறது. மணத்தை வேறொரு அதிர்வலை அளவின் மூலம் உணர்வதால், அதனாலயும் பார்க்க முடிகிறது.  அதனால், நமக்கு இருளாய் இருப்பதே மற்றவைகளுக்கு ஒளியாயும் இருக்கு அப்படிங்கிறதுதான் உண்மை’.

‘அப்படினா ….’

‘மின் காந்த அலைகளை வெளியிடும் எல்லாப் பொருட்களையும், அந்த அலைகளை உணர்வதாலேயே பார்க்க முடிகிறது’.

‘அதனால் ஒளியே எல்லா இடத்திலும்..’

‘ஆமாம்.  நீங்கள் படித்திருப்பீர்களே. எல்லாப் பொருட்களும் ஒருவிதமான அதிர்வு அலைகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அது எங்கும் பரவி இருக்கும் மின்-காந்த அலைகளில் விரிந்து கொண்டு இருக்கிறது. அவ்வலைக்கற்றைப் பார்க்க முடிந்தால், உணர முடிந்தால்,  அவையே, அப்பொருளைக் காட்டும் ஒளி’.

‘அப்படினா,  எல்லா இடத்திலும் ஒளிதான் இருக்கு’.

இப்படிச் சொல்லும்போதே நினைத்தேன்.  படித்த ஞாபகம் இருக்கிறது.  பிளாக் பாடி ரேடியேஷன் என உலகில் எல்லாப் பொருட்களும் அதிர்வலைகளை வீசிக் கொண்டுதான் இருக்கின்றன.   மேலும் வெவ்வேறு ஒளிக்கதிர்களைக் கூட்டியும், கழித்தும் நம்மால் இருட்பிரதேசத்தையும்  உருவாக்க முடியும். இதெல்லாம் கல்லூரிப் பாடங்களில் பயின்றது ஞாபகம் வந்தது.

‘ஐயா,  அப்படினா இருளும் ஒளிதானோ!’.

‘அப்படினு ஏத்துக்க வேண்டியிருக்கே.  நம்ம கண்ணுக்குத் தெரியற ஒளிக் கதிர்களுக்கு ஒரு பிரகாச அளவு (luminous flux) அப்படிங்கிற  அளவுகோல் ஒண்ணு  வைச்சுருக்கோம்.  இது ஒளியின் பிரகாச நிலையைக் காட்டறது.  இது குறையக் குறைய, அதாவது பூஜ்யத்துக்குப் போய்ட்டா, அது இருள்.  ஆனால், மற்ற உயிரனங்களுக்கு அது பொருந்தாது’.

‘அப்படினா முழுமையான இருள் அப்படினு இல்லவே இல்லையா? ’.

‘மின்-காந்த அலைகளை வெளியே விடாமல் ஒரு பொருளோ, இடமோ இருக்குமானால்,  அதன் இருப்பை நம்மால் உணரவே முடியாது.  அதுதான் முழுமையான இருளாக இருக்க முடியும்’.

‘ஆமாம் ஐயா,  அறிவியலும் அப்படியான பொருட்கள் இருந்தே ஆக வேண்டும் எனும் சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது.  பிளாக் ஹோல், பிளாக் எனர்ஜி அப்படினு எல்லாம் நிரூபிக்க ரொம்ப முயற்சிகள் எல்லாம் நடந்துண்டிருக்கே.  அந்த மாதிரி இடத்திலே எல்லா அலைவீச்சுக்களும் உள்வாங்கப்பட்டு, எந்த கதிர்ச் சலனமும் இல்லாம இருக்குமாம்’.

‘இருக்கட்டும்.  அதுதான் முழுமை இருளாய் இருக்க முடியும்.  ஆனால்,  அதன் definition படியே, நம்மால் அதைக் காணவே முடியாது’.

‘ஐயா,  அப்படி முழுமையா இருள் இருக்கும்னா, ஒளியும் இருளும் ஒண்ணுங்கிறது தப்புத்தானே?’.

‘இல்லை.  பிளாக் ஹோல் அப்படிங்கிற முழுமையான இருளுக்குள் எல்லா ஒளியுமே அடங்கிப் போயிடும்.  அதனால அது, நம்ம பார்க்கிற அண்டமாகிய இருட்போர்வை மாதிரி, மற்றொரு அண்டம் உருவாகப் போகும் ஒரு விதைனு வேணும்னா வைச்சுக்கலாம்.   அதனால் முழுமை இருளும் ஒளிதான்.  ஆனால் நம்மால் பார்க்க முடியாத ஒளி!’.

‘ஒளி, ஆனால் பார்க்க முடியாது’ – என் குரலில் என்னை அறியாமல், சிறு ஏளனம்.

‘பாருங்கள்… வானைத்தைப் பாருங்கள்.  கோடி கோடியாய் நட்சந்திரன் இருந்தும் ஏன் இப்படி இருள்?  சூரியன் பிரகாசிச்சாலும், பகலில் கூட அண்ட வெளி இருளாகத்தான் இருக்கும்.  இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமே?’.

‘இதப் பத்தி எல்லாம் படிச்சிருக்கேன் ஐயா, எளிமையாச் சொல்லனும்னா, ஏதேனும்  பிரதிபலிக்கிற பொருட்கள் இருந்தால்தான்,  ஒளியை நம்மால் பார்க்க முடியும்.  அண்ட வெளியில் அப்படிப் பிரதிபலிக்கிற பொருட்கள் இல்லாததால் இருளாய் இருக்கு’.

‘ஆமாம்.  இருட்டு ரூம்ல, டார்ச் அடிச்சால், அந்த ஒளி எந்தப் பொருள்மேல பட்டு பிரதிபலிக்கிறதோ, அப்போதான் வெளிச்சம் தெரியும்.  டார்ச்சை இருட்டான வானத்திலே காட்டினா,  வெளிச்சம் தெரியாது. டார்ச்சின் ஒளி இருந்தாலும், அது இருளுக்குள்ள பயணமாயிண்டே இருக்கு. ஆனால் நம்ம கண்ணுக்குத் தெரிவதில்லை’.

‘அப்போ இருள்தான் ஒளி’.

சிரித்துக் கொண்டே தொடர்ந்தேன்.

‘அதனால் தீபாவளியை ஒளியின் விழா அப்படிங்கிறதுக்குப் பதிலா இருளின் விழா அப்படினு சொல்லணும்’.

ஐயா சட்டெனப் பதில் சொன்னார்.

‘இல்லை இல்லை… தீபாவளி ஒளியின் விழாதான். ஆனால் அந்த ஒளி,  வெளியே நாம் தேடுகின்ற உலகங்களை எல்லாம் போர்த்தி இருக்கும் இருட்போர்வைக்குள் இருக்கின்ற ஒளி இல்லை!  அவற்றை எல்லாம் தாண்டி விளங்கும் பேரொளி’.

‘ஐயா, அண்டங்களைத் தாண்டிய ஒளி ஒன்று இருக்கிறதா? எப்படி?  எது அது?’.

‘வெல், இதை அறிவியல் மூலமாத் தேடி உணர முடியாது. ஏன்னா, அறிவியல்  நம்முடைய அறிவுக் கருவிகளால் நிரூபணம் செய்யக் கூடியனவை எவைகளோ, அவைகளை மட்டுமே சார்ந்தவை.  மின்-காந்த அலைகளால் அளக்கப்பட முடியாத பௌதிகம் தாண்டிய பொருட்களை உலக அறிவியல் அறிய முடியாது’.

ஐயா தொடர்ந்து பேசினார்.

‘ இன்னொரு காரணம், உலக அறிவியலோட அப்ரோச்.  அதற்கு, ஏன், எப்படிங்கிற கேள்விகள்தான் குறிக்கோள்.  அப்படி ஆராய்வதனால், அறிவியலால் நமக்கு நிறைய நன்மைகள். அதுல சந்தேகமே இல்லை.  ஆனால், இப்படி வெளியே பார்க்கப்படுகின்ற பொருட்களை மட்டுமே  ஆராய்வது முழுமையான அறிவியல் ஆகாது’.

‘அப்போ, என்ன வழி?’.

‘வேதாந்தம் ஓர் மிக உயர்ந்த அறிவுணர் முறை. இதன் கேள்வியே, “இதெல்லாம் யாருக்கு” அப்படிங்கிறதுதான்.  அதாவது, பார்க்கப்படும் பொருட்களை விட்டுப்  பார்ப்பவன் யார் என ஆராய்வதுதான் அதன் நோக்கம்.  அதனால், அதை விட்டால்,  பேரொளி என்ன என்பதைப்  புரிஞ்சுக்க, உணர வேற வழியில்லை.    புரியறதா?’.

ஐயா உரையாடலை எங்கே எடுத்துச் செல்கிறார் என எனக்குப் புரிந்தது.  ஆழமான உந்தல் என்னுள் உதித்துக் கொண்டிருந்தது.

‘ஐயா, ஒரு மாதிரி புரிஞ்சுது!  இருள், ஓளி அப்படிங்கிறதெல்லாம், நாம கொடுத்த டெபனேஷனைப் பொறுத்தது அப்படினு சொன்னது புரிந்தது. அதனால், இருளும், ஒளியும் ஒன்றில் ஒன்று இருப்பது அப்படிங்கிறதும் புரிஞ்சுது. ஆனால், இப்போ பேரொளி,  அது எல்லாவற்றையும் தாண்டினது அப்படிங்கிறது சரியாப் புரியலை? அது என்ன?’.

ஐயா சொல்லப் போவதை ஆழப் பதித்துக் கொள்ள வேண்டும் என நான் நினைத்தேன்.

பெரிதாகச் சிரித்தார் ஐயா.

‘வெல், தீபாவளி வருவதே, அந்தப் பேரொளியைப்பற்றிய  நினைவை நமக்குள்  ஏற்படுத்தத்தான்!  நினைச்சுப் பாருங்ககோ, தீபாவளியின்போது, வீட்டில்  முதலில் ஒரு புனித்தீபத்தை ஏற்றி வைப்போம். அதை வணங்கிவிட்டு, பிறகு அதன் ஒளியிலேயே  மற்ற விளக்குகளையும்,  மத்தாப்பூ, வெடிகளை ஏற்றுவோம்’.

‘ஆமாம்’ .

இப்படிச் சொன்ன நொடியிலேயே, என் இளமைக் கால நினைவுகளும், வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி, அதன் ஒளிமுனையில், மத்தாப்பினை வைத்துக் கொளுத்திக் கொளுத்திக் கொடுத்த பெற்றோர்களைப் பற்றிய மகிழ்ச்சியும்  மனதில் கோலமிட்டன.

‘நாம் தேடும் பேரொளியும் அந்தப் புனிதத்தீபத்தைப் போன்றதுதான்.  எல்லா ஒளிகளுக்கும் ஒளிதருகின்ற மணிதீபம் அது!’.

‘அது எங்கிருக்கிறது ஐயா?’

‘தேடுவோம்’.

ஐயா அப்படி சொல்லிவிட்டு, உடனேயே கேட்டார்.

‘ உலகை எந்த ஒளி காட்டுகிறது?’.

‘பகலில்?  சூரியனின் ஒளி!’.

‘இரவில்?’.

‘விளக்கின் ஒளி!’.

‘ஒருவேளை விளக்கு வெளிச்சமும் இல்லாது போனால்?’.

‘பார்க்க முடியாது ஐயா.  கண்கள் இருளில் எதையும் பார்க்க முடியாதே?’.

‘ஆனால், கண்கள் இல்லாமல் கனவில் பற்பல உலகங்களையும் உங்களால் பார்க்க முடிகிறதே?’.

‘முடியும். ஆனால் அவை எல்லாம் மனதில்’.

‘அப்படியானால், மனதிலும் ஒரு ஒளி இருக்க வேண்டும் இல்லையா?’.

‘ஆமாம். அறிவினை ஒரு ஒளி என வைச்சுண்டா, அப்படியே சொல்லலாம். ஏன்னா, கனவுகள் எல்லாம் மனசில் பதிஞ்சிருக்கிற பல எண்ணங்களோட ஒருவிதமான ரீ-ப்ளேதான்’.

‘கனவும் இல்லாமல் நீங்கள் ஆழ்ந்து தூங்கும்போது?’.

‘அப்போ ஒண்ணும் தெரியாது ஐயா.’

‘ஏன்?’.

‘ஏன்னா, அப்போதான் எல்லாப் புலனறிவும் அடங்கி இருக்கே,  மனசும் அறிவும் வேலை செய்றதில்லையே’.

‘ஆழ்ந்து உறங்கும்போது, அங்கே இருப்பது இருளா, அல்லது ஒளியா?’.

‘தெரியாது ஐயா….  இருள்தான்… இல்லைனா ஒளியாக் கூட இருக்கலாம்.  யாராலும் சொல்ல முடியாதே! அப்போதான் ஒண்ணுமே இல்லையே!’.

இப்படிச் சொல்லும்போது யோசித்தேன். ஐயா முன்னே சொன்ன மாதிரி, ஆழ்துயிலில் இருள், ஒளி இவை இரண்டுமே இல்லாமல் இருக்குமோ?  அப்படிப்பட்ட நிலையை ஒருவர் அனுபவித்தாலும், அதை எவ்வாறு வார்த்தைகளால் விளக்க முடியும்!

‘போகட்டும்…. தூங்கி எழுந்தால், நன்னாத் தூங்கினேன் அப்படினு சொல்றீங்களே… எப்படித் தெரியும் அது? உங்களோட அறிவுதான் அப்போ வேலை செய்யலையே?’.

நான் சும்மா இருந்தேன்.

‘ஆழ்ந்து தூங்கும்போது நமக்குள் கவலைகள் எதுவும் இல்லை. ஆசைகள் எதுவும்  இல்லை. வேற்றுமைகள் எதுவும் இல்லை. தேவைகள் இல்லை.  அது ஒரு மாதிரியான நிறைவு. பூரணத்துவம், இல்லையா? அதனால்,  ஆழ்ந்த தூக்கத்தில் ஒண்ணுமே இல்லை எனும் அனுமானத்தை விட, எல்லாமும் இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாமே?’

‘ஆம் ஐயா….  அப்படியொரு நிறைவான அனுபவம் இருக்கிறது’.

‘யார் அனுபவிப்பவர்?’

‘நான்தான்’ – சட்டெனச் சொன்னேன்.

ஐயா என் தோள்களைத் தொட்டார்.

‘யார் அந்த நான்?  அதுதான் திறவுகோளான கேள்வி. நம் எல்லாருக்குள்ளேயும் இருக்கும் அந்த நான்தான் அனுபவிக்கிறது.  அனுபவம் என்பது நிகழ்காலத்தில் மட்டுமே நடப்பது.  கடந்த கால அனுபவம் என்பது வெறும் நினைவு.  எதிர்கால அனுபவம் என்பது வெறும் கனவு.  அதனால், அனுபவம் என்பது நிகழ்வது, அதுதான் வாழ்க்கை.  அதுதான் இருப்பு. இதை முக்கியமாய்ப் புரிஞ்சுக்கணும்.   அனுபவம் ஏற்படும்போதுதான் நீங்கள் வாழ்கிறீர்கள். அதாவது, அனுபவமே இருத்தல் – experience is existence!  புரிகிறதா?’.

தலையை ஆட்டினேன்.

‘அனுபவத்திற்க்குச் சாட்சியான நான் எனும் அந்த உணர்வுதான் முதன் முதலாய் நம்முள் எழுவது. அதன் எழுச்சியே நம் உலகங்களுக்கு எல்லாம் விதை.  அந்த உணர்வுதான் நாம் தேடும் பேரொளி.  அதுவே உடல், புலன், மனம், மதி என எல்லாச் சடப்பொருட்களுக்கும் ஒளியைத் தருவது’.

‘ஆனால் ஐயா, உலக அறிவியல் மூளையின் சக்தியே உடலையும் அறிவுக் கருவிகளையும் இயக்குவது எனவும், அதனால் consciousness எனும் உணர்வுக்கே அவசியமில்லை எனச் சொல்கிறதே!’.

இதைச் சொல்லும்போது, எனக்குள் அறிவியலின் இந்தக் கோட்பாட்டில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பது தெரிந்தது.

‘இருக்கட்டும். அதனாலேதான் நான் முன்னேயே வேதாந்தம் எனும் பேரறிவுப் பாதையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன்.   ஓளியைப் பற்றிய நம் பேச்சுக்கே மீண்டும் போவோம்.  ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமானால், அப்பொருள் ஒளி அலையை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் எனப் பார்த்தோம் அல்லவா?’.

‘ஆம்’.

‘அப்படியானால், ஒரு பொருளின் இருப்பினை நாம் ஏற்றுக் கொண்டால், அதற்கு ஒளியினைத் தரக்கூடிய ஒரு சக்தியும்  இருந்தாக வேண்டும் என்பதும் நமக்கு நிச்சயமாகிறது.’

‘ஆம் ஐயா. அது நியாயமே’

‘ஆனால், அந்த நியாயத்தை, நம்மைப் பற்றிய ஆராய்ச்சிக்கு ஏற்றுக் கொள்வதற்கு, உலக அறிவியல் தடுமாறுகிறது.’

‘புரியவில்லை ஐயா’

‘பார்க்கப்படும் பொருட்களிலிருந்து, பார்ப்பவன் யாரெனும் ஆராய்ச்சிக்கு நாம் சென்றால், நான் யார் எனும் கேள்வியே முதன்மையாகிறது.  உடல், பொறிகள், புலன், மனம், அறிவு என இவை எல்லாம், வேறொரு சக்தியால் மட்டுமே ஒளியைப் பெறுகின்றன என்பதும் புரிகிறது.   ஏனென்றால் உடல் ஒளியற்றது என்பதைத் தூக்கத்திலும் இறப்பிலும் பார்க்கிறோமே! அதேபோல மனமும் அறிவும் ஒளியற்றவை என்பதும் துயிலில் நமக்குத் தெரிகிறது.  எல்லாவற்றையும் அனுபவ சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வே, இவற்றுக்கு எல்லாம் ஒளியினைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதுவே ஆத்மா. அது சுயவொளியால் ஆனது’.

‘ஐயா, அப்படியானால், நாம் எல்லாம் ஒளிரும் பேரொளியாகத்தான் இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியாமலேயே இருக்கிறது’.

நான் வியந்தேன்.

‘ஆமாம்,  அதுதான் துயரம்.  தமிழில் “ஒளி” எனும் பெயர்ச் சொல்லுக்கு வெளிச்சம் என்பது பொருள் ஆனால் “ஒளி” எனும் வினைச் சொல்லுக்கு மறைத்துவை என்பது பொருள். அதனாலேயே என்னவோ, ஒளிர்ந்திருக்கும்  ஒளியை, ஒளிந்திருக்கும் ஒளியாய், இருளாய் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.’

நான் திகைத்து. அவரின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

‘நிலவைப் பாருங்கள்.  பாலாய் ஒளி வீசும் நிலாவுக்கு நாம் சென்றால், அங்கே பகல், இரவு என எல்லா நேரமும் இருள்தான் இருக்கும். பூமியைப்போல அங்கே அட்மாஸ்பியர் இல்லை.  எனவே அதனுள் எப்பவுமே இருள்தான்.  ஆனால், நிலவு சூரிய ஒளியை பிரதிபலிப்பதை, அதன் பட்டொளியை தரிசிக்கும்  நம்மால் பூமியில் இருந்து காண முடிகிறது.  நிலவிற்குத் “தான்” ஒளி வீசுகின்ற  மதி என்பது ஏனோ தெரிந்திருக்கவில்லை.  அப்படித்தான் நாமும் இருக்கிறோம்.  நம் மனசுக்கும், அறிவுக்கும் கூட “மதி”  என நிலவின் பெயர்தான் தமிழில் இருக்கிறது.  சூரியனாக நம்முள் ஆத்மா எனும் பேரொளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதன் பிரதிபலிப்பால்தான், மதியாகிய மனமும் அறிவும் சுடர் விட்டுக் கொண்டிருக்கின்றன.  ஆனால் இந்த உண்மையை உணராத முழுமையான இருளில்தான் மதியைப் போல நம்மில் பெரும்பாலும் மூழ்கிக் கிடக்கின்றோம்’.

ஐயா பெஞ்சில் இருந்து எழுந்தார்.  இருவரும் நடக்கத் தொடங்கினோம்.

‘ஆத்மா என்பது  உடல், புலன், மனம், மதி என எல்லாப் போர்வைகளையும் தாண்டிய பேரொளி.  அதனுடைய ஒளியாலேதான், நாம் உலக அறிவியலும் வெளிச்சம் அடைகிறது. அந்த ஒளியில்தான்   வெளியில் விரித்திருக்கும் அண்டம் எனும் இருட் போர்வைக்குள், மற்ற உலகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். நம் பார்வையைப் பொறுத்தே இந்த வெளியுலகங்கள் எல்லாம் விளைகின்றன. அதனாலேதான், அவற்றை ‘மித்யா’ எனும் தோற்றப்பிழையாக வேதாந்தம் கருதுகிறது.`

ஐயா மீண்டும் சொன்னார்.

‘ஆத்மாவாகிய பேரொளி ஒன்றே எல்லா உயிர்களிலும் விளங்குகிறது என்பதைப் புரிந்து கொண்ட அந்த  நொடியிலேயே, நமக்கு இருளும் ஒளியும் ஒன்றென்பது புரியும். உலகில் உள்ள எல்லாமும், இரண்டற்ற  ஒன்றே என்பதும் தெளியும்’.

‘ஐயா, அதனால்தானோ இருள் கிழியாத காலைப் பொழுதை ஒளிக் கதிரை நிரப்பி, தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்?`.

‘ஆம்.  அப்பேரொளியை நம்முள்ளேயே நாம் காணவேண்டும் என்பதே தீபாவளிப் பண்டிகையின் நோக்கம்.  அப்பேரொளியை விழையத் தொடங்கினாலே, எல்லாப் புனித யாத்திரைகளும் செய்தாற்போன்ற புகல் கிடைக்கும். ஆத்மா எனும் பேரொளியினை நாடும் பொழுதே நம்முள் அன்பும், மகிழ்ச்சியும், பூரணமான நல்லமைதியும் கிடைக்கும்.  அதை உறுதிப்படுத்தவே, படபடக்கும் வெடிகளினாலும்,   ஒளிச் சிதறலான மத்தாப்பூக்களாலும், இருளை ஒளியால் நனைத்து,  நாம் உலகிற்கு தீபாவளியன்று மீண்டும் நினைவில் ஊட்டுகின்றோம்’.

என் மனம் முழுதுமாய்  நிறைந்திருந்தது.

‘நீங்கள் கொடுத்த்து, மிகச் சிறந்த  தீபாவளிப் பரிசு ஐயா’.

இப்படிச் சொல்லிக் கொண்டே நான் ஐயாவைப் பின் தொடர்ந்து  நடந்தேன்.

என் உள்ளத்துள் மகிழ்ச்சியால் மத்தாப்பூக்கள் மினுமினுத்துத் தெரித்துக் கொண்டிருந்தன.  அந்த மகிழ்ச்சியை முற்றிலும் ஆமோதிப்பதுபோல இருண்ட  வானத்தில் மேலும் மேலும் பட்டாசுகளின் பேரொலியும், பேரொளியும் விளைந்து கொண்டிருந்தன.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Mee. Rajagopalan
11-Nov-2015

Related Posts

Share this Post