37 – திருவோணம்
திருவோணம்
ஐயாவுடன் உரையாடல் (37)
“வரும் ஞாயிறு அன்று, நாங்கள் ஓணம் பண்டிகை கொண்டாடுகிறோம் அய்யா! வழக்கம்போல மித்ரசேவா நடத்தும் சத்சங்கம்! நீங்க வரமுடியுமா?”
அய்யாவிடம் கேட்டேன்.
இப்பொழுதெல்லாம், அவரைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது.
“அப்படியா, மகிழ்ச்சி! பொதுநலச் சேவையில் சத்சங்கம் முக்கியமான பங்கு வகிக்கிறது. வாழ்த்துகள். அன்னிக்கு என்ன நிகழ்ச்சி?”
“சின்னதா பூஜை, அப்புறம் பாட்டு, நடனம், ரங்கோலி கோலம் அப்படினு, எல்லோருக்கும்பிடித்த சில விஷயங்கள். அப்புறம் இலை போட்டு சாப்பாடு! “
“ரொம்ப நல்லது! இலண்டனில் இப்படியெல்லாம் செய்வது நமது தர்மங்களைப் பரப்புவதற்கும் காரணமாகிறது. திருவோணம் அப்படிங்கிற பண்டிகைக்கு என்ன காரணம் என்பதையும் கொஞ்சம் தெளிந்து கொண்டால் நல்லது!”
“ஆமாம் அய்யா! வாமன ஜயந்தி அப்படினு, பரம்பொருளான மஹாவிஷ்ணுவோட அவதார நாள் கொண்டாடுறோம். அவர்தானே குள்ள மனிதனா வந்து மஹாபலி அப்படிங்கிற அசுரனை அழிச்சார்!”
அய்யா சிரித்தார்.
“அப்படி மேலோட்டமா புரிஞ்சுண்டா, உண்மை எப்படித் தெளியும்? குழந்தைகள் கேட்டா எப்படி அறிவு பூர்வமா பதில் சொல்வது?”
நான் பேசாமல் இருந்தேன்.
அய்யா தொடர்ந்தார்.
“வாமனன் என்றால் ‘dwarf’ அல்லது வளர்ச்சி பெறாத வடிவம் எனப் பொருள்கொள்வது சரியல்ல! சம்ஸ்கிருத மொழியில், ‘வாம’ என்றால் ‘மனதைக் கவருபவர்’ அப்படினு ஒரு பொருள் உண்டு. ‘க்ருஷ்ண’ என்றாலும் அதுதான் பொருள். எனவே வாமனன் மனதைக் கவரும் வடிவம் கொண்டவன். ஐந்து வயதுக் குழந்தையாக வாமன அவதாரம் இருந்ததால், சிறிய வடிவம் என்பதும் உணரப்பட்டது.”
“அய்யா, சம்ஸ்கிருத மொழியில் ‘வாம’ என்றால் ‘இடப்புறம்’ எனவும் பொருள் உண்டே!”
“ஆமாம். பரம்பொருளான ஈஸ்வரின் இடதுபக்கத்தில்தானே ஈஸ்வர சக்தியின் வெளிப்பாடு! சக்திவடிவமாகத்தானே திருமாலும் பார்க்கப்படுகிறார்! அதனால் அவர்தான் மாயாவி, வாமனர்.”
“அவரது அவதாரம், மஹாபலி என்ற அசுரனை அழிக்கத்தானே!”
“மஹாபலியை அழிக்க அல்ல! மாறாக, மஹாபலிக்கு அருள் கொடுத்து ஆட்கொள்ள! அவருக்குப் பெரிய பதவிகளைக் கொடுக்க!”
“எப்படி அய்யா! அசுரனை அழிக்கத்தானே பெரும்பாலும் அவதாரங்கள் வருகின்றன!”
“அவதாரம் என்பது இறைச்சக்தி ஏதோஒரு வடிவில் பெரும் திரளாக வந்து, தர்மத்தை நிலைநாட்டவும், ஞானத்தை வளர்க்கவும் செய்வது ஆகும். அசுரவதம் என்பது அதற்கு ஒரு சாதனமே தவிர, அது இலட்சியம் அல்ல!”
அய்யா தொடர்ந்தார்.
“அசுரன், சுரன், நரன் என்பதெல்லாம் எதனைக் குறிக்கிறது தெரியுமா?”
“அய்யா, நரன் என்றால் மனிதன். சுரன் என்றால் தேவன், அசுரன் என்றால் கொடியவன். அப்படித்தானே?”
“ஆம். ஆனால் இந்தப் பாகுபாடு எல்லாம் எப்படி ஆறறிவுள்ள மனிதனான ஜீவன், தனக்குள் இருக்கும் ஒப்பற்ற சக்தியை உணர்ந்து அதனை எவ்விதம் பயன்படுத்துகிறான் என்பதைப் பொருத்ததே ஆகும். அனைவருமே தங்களுடைய வலிமையைப் பலவிதமான தவத்தாலும், யோகத்தாலும், தானத்தாலும் பலவகையிலும் வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்று அறிந்து, அப்படியோ செய்து ஒருவன் சுரனாகவோ, அசுரனாகவோ, நரனாகவோ தகுதி பெற முடியும். இதில் வேறுபாடு எப்படி வருகின்றது என்றால், அவர்கள் அப்படிப் பெறுகின்ற தமது வலிமையை எதற்காக, எவ்விதம் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான்.”
நான் ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
“சுரன் எனும் தேவன், தருமத்தைக் காப்பதற்கும், தர்மவழியிலேயே வாழ்வதற்கும், தர்மத்தின் ஊழியனாக இருந்து, அதன் பயனாக சொர்க்கம் முதலான எல்லாச் சுகங்களையும் பதவிகளையும் அனுபவித்து வருபவர்கள் ஆவார்கள்.”
“அசுரன் என்பவன்?” – நான் கேட்டேன்.
“அசுரன் தான் பெற்ற வலிமையை எல்லாம், தர்மத்திற்கு எதிரான வழியில் பயன்படுத்தி, அதில் இன்பமும், ஈடுபாடும் கொண்டு விளங்குபவன்.”
“அதனால்தான் அசுரனும் சுரனும் எப்போதும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், இல்லையா!” – நான் சொன்னேன்.
“ஆம்! சுரரும், அசுரரும், அடிப்படையில் தங்கள் தனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்பவர்களாக, அவரவர்க்கான பாதையில் போகிறார்கள். அவர்களுக்கு இடையே வரும் சண்டைகளைப் புராணங்கள் விவரித்து, அப்படியான சண்டையில் தர்மத்திற்குக் கேடுவருமாயின், தேவர்களின் துணைக்கு இறைவன் வந்து, சரி செய்வதாகச் சொல்கின்றன.”
“அய்யா, நரன் என்ன செய்கிறான்.”
“நரன் என்றால் மனிதன் என நாம் பொதுவாகப் பொருள் சொல்கிறோம். ஆனால் நரன் என்பவன், மனிதர்களில் புனிதனானவன். தர்ம, அதர்மங்களைக் கடந்த ஒரு அருட்சக்தி இருக்கிறது, அந்த அருட்சக்தியாகவே தன்னை உணர என்ற வேட்கையில், தமது வாழ்க்கை தர்மப்படி நடத்துபவன். அதனால்தான், ‘நரஜன்மம் துர்லபம்’ – என, அறிவும் சீலமும் கொண்ட மனிதராகப் பிறப்பது அரிது எனச் சொல்லி இருக்கிறது.”
“மஹாபலி ஒரு அசுரன்தானே!”
“ஆம்! அவனது தந்தை விரோசனன் ஒரு அசுரன். விரோசனனின் தந்தை ப்ரஹ்லாதன் ஒரு அசுரன். ப்ரஹ்லாதனின் தந்தை ஹிரண்யகசிபு ஒரு அசுரன். அது ஒரு அசுர பரம்பரை!”
“அய்யா! அப்புறம் எப்படி ப்ரஹ்லாதர் பெரிய பக்தராக, தர்மவானாக விளங்கினார்?”
“அது அவரது நற்கருமம். சுர, அசுர, நர, ஜந்து பாகுபாடுகள் எல்லாம், கர்மப்பயனால் வருவதுதானே! ப்ரஹ்லாதரின் பக்திக்கு இரங்கித்தானே, திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து, ஹிரண்யகசிபுவை அழித்தார்.”
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
“அப்போது, திருமால் ப்ரஹ்லாதரிடம், அவருடைய ஏழு சந்ததிக்கும் தான் பாதுகாவலனாக இருப்பேன் என்று உறுதி கொடுத்திருந்தார்!”
“அய்யா! அப்படியானால், ப்ரஹ்லாதரின் பேரரான மஹாபலியை ஏன் திருமால் அழித்தார்?”
“அழிக்கவில்லை! அவருக்கு என ஒரு உலகம் ‘சுதல’ எனும் பெயருடன் பூமிக்குக் கீழே ஏற்படுத்தி, அவரை அதில் சக்கரவர்த்தியாக்கித் தான், அவரது பாதுகாவலராக இருக்கிறார்.”
“அப்படியானால் பலிச்சக்கரவத்தி அழியவில்லை!”
“இல்லை! அவர் வருடாவருடம் திருவோணத்தின்போது, தான் ஆண்ட பூமியைக் காணவருகின்றார். அதற்கான வரத்தைத் திருமால் அவருக்கு அருளி உள்ளார்.”
“எப்படி அய்யா?”
“மஹாபலி என்றால் பெரும் வலிமை உடையவர் என்பது ஒருபொருள். அந்த வலிமையால், அவர் மனிதர்கள், தேவர்கள் என எல்லோரையும் தன் வசம் அடக்கி ஆண்டுவந்தார். மஹாபலியினால், தேவர்கள் தங்கள் தருமங்களைச் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். அதனால் தேவர்களின் தாயான அதிதி, திருமாலை வேண்டித் தனது புதல்வனாக வந்து அருள்பாலிக்கக் கேட்டாள். அதற்காகவே பகவான் ஐந்து வயதுக் குழந்தையாக வாமன அவதாரம் எடுத்தார்.”
“வாமனர் ஒரு குழந்தை, குள்ள மனிதர் அல்ல, சரியா அய்யா!”
“ஆம்! அழகான குழந்தை. மஹாபலியின் மனைவி, அந்தக் குழந்தையை அப்படியே மார்பகத்தில் வாரி அணைத்துப் பால் கொடுக்க வேண்டும் எனத் தாய்மையுடன் ஆசைப்பட்டாளாம். அதற்காகவே, அவள் பூதனை எனப் பிறந்து, கிருஷ்ணாவதாரத்தில், தனது விருப்பத்தை அடைந்தாள்.”
“அருமை அய்யா! மஹாபலியிடம் தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் எனக் கேட்டு, அதனால், மஹாபலியை, வாமனர் பாதாளத்தில் தள்ளினார் என்பதுதானே புராணம்?”
“கிட்டத்தட்ட! இறைவனே அவதாரம் எடுத்து ஒருவரைச் சந்திக்க வருகின்றார் என்றால், அந்த ஒருவர் பெரும் புண்ணியமும், தகுதியும் கொண்டிருக்க வேண்டும் அல்லவா? சம்ஸ்கிருத மொழியில் ‘பலி’ என்பதற்கு ‘அர்ப்பணிப்பு’, ‘தியாகம்’ எனவும் பொருள் உண்டு. எனவே மஹாபலி என்பது பெரும் தியாகசீலரைக் குறிக்கும். பலிச் சக்கரவர்த்தி அப்படியான தியாகி.”
“அய்யா, ஆலயங்களில் பலி பீடம் என்பதும், அர்ப்பணிக்கும் இடம் என்பதுதானோ?”
“ஆம்! மஹாபலியின் முன்னே, வாமனர் வந்தபோது, அரசனின் ஒழுக்கத்துக்கு ஏற்ப, வந்த வாமனருக்குத் தானம் அளிக்க ஒப்புக்கொண்டார். வாமனரோ, தனது சிறிய கால்களினால் மூன்றடி நிலம் கேட்டார். பலிச்சக்கரவர்த்தி அதைப் பெரிதாக நினைக்காமல் தருவதற்கு உறுதி அளித்தார். அப்போது பக்கத்தில் இருந்த சுக்ராச்சாரியர் எனும் அசுரகுரு, பலவகையில் தடுத்தும் கேளாமல், மஹாபலி தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடிவு செய்கிறார். வந்த வாமனரோ, ‘த்ரிவிக்ரமர்’ எனப் பெரிதாக உருவெடுத்து, ஒரு காலால் பூமி முதலான கீழ் உலகங்கள அத்தனையும் அளந்தார். மறு காலினால் வானுலகம் அத்தனையும் அளந்தார். அதற்கப்புறம், மூன்றாவது அடிக்கு என்ன செய்வது? அதனைப் பலியிடம் கேட்டார்.”
“ஆம் அய்யா!, பலிச்சக்கரவர்த்தி தனது தலையைக் கொடுத்தார். அதில் காலை வைத்துப் பகவான் அழுத்தினார் இல்லையா?”
“ஆம்!”
“அய்யா, பூவுலகு முதலான எல்லாவற்றையும் இறைவன் முதல் அடியிலேயே அளந்தார் என்றால், அதற்குள்ளேயே, மஹாபலியின் தலையும் அடங்கிவிட்டது அல்லவா? அப்புறம் எப்படி, அவர் தனது தலையினை மீண்டும் கொடுக்க முடியும்?”
அய்யா சிரித்துக் கொண்டே சொன்னார்.
“நல்ல கேள்வி! புராணங்கள் பொய் சொல்வதில்லை. ஆனால் அவற்றுள் பொதிந்த உண்மை நமக்குப் புலப்பட்டால், அதன் மகத்துவம் நமக்குப் புரியும். பலியின் தலை என்பது, பலியின் ‘நான்’ எனும் ஆணவம். இந்த ‘நான்’ எனும் உணர்வு, எல்லா உலகங்களையும் கடந்தது. அதனால்தான், இறைவனின் முதல் இரண்டு அடிகளில் அது அகப்படவில்லை!”
“புரியவில்லை அய்யா! நான் இந்த உடலுக்குள் இருக்கிறேன். இந்த உலகத்தில்தான் இருக்கிறேன். அப்படியானால், நான் எப்படி இந்த உலகத்தைத் தாண்டி இருக்க முடியும்?”
“நான் இந்த உடலுக்குள் இருக்கிறேன், இந்த உலகத்துக்குள் இருக்கிறேன் என்பது சாதாரண அறிவு! உண்மையில் அது அறியாமைதான்! நீங்கள்தான் வேதாந்த வகுப்புக்கு எல்லாம் போகிறீர்களே!” – அய்யா சிரித்தார்.
நான் மௌனாமக இருந்தேன்.
“உலகம் என்பது உங்களது அனுபவத்துக்கான மேடை. உங்களது அனுபவச் சங்கிலிதான் உங்களது வாழ்க்கை. ஆனால், அனுபவம், அனுபவிக்கும் பொருள் என்பன எல்லாம், அனுபவிக்கின்ற அறிவு இல்லாமல் இல்லை! அந்த அறிவு என்பதும், உலக அறிவையும், அறியாமையும் அறிகின்ற உணர்வு!”
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
“உங்களது உள்ளார்ந்த உணர்வுதான் எல்லா அறிவிற்கும், அறியப்படும் பொருளுக்கும், அனுபவத்திற்கும் ஆதாரமானது. அந்த உணர்வு – consciousness – எல்லா அனுபவ உலகங்களையும் கடந்து இருப்பது.”
“என்ன நிரூபணம் அய்யா?”
“உங்கள் வாழ்க்கை அனுபவங்கள்தான் நிரூபணம். நன்றாகக் கவனித்தால், உங்கள் அனுபவங்கள் எல்லாம் மூன்று உலகங்களில் நடக்கின்றன. இந்த விழிப்பு உலகம் – நாம் பேசுவது, நடப்பது எல்லாம். அப்புறம் உங்களது கனவு உலகம் – அதில் உங்களுக்குள்ளேயே பலவற்றைப் படைத்து அனுபவிப்பீர்கள்.”
“மூன்றாவது?”
“உங்களுடைய ஆழ்ந்த உறக்கம், அங்கே அறியாமை எனும் இருளை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மூன்று உலகத்திற்கும் சாட்சியாக எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டே இருப்பதுதான் ‘நான்’ எனும் ஆத்மா!”
“அப்படியானால், மஹாபலி தனது ஆத்மாவையா தனது தலையாகக் கொடுத்தான்?”
“இல்லை! ஆத்மாவைக் கொடுக்கவோ, வாங்கவோ முடியாது. அது பரிபூரணமாக எங்கும் இருப்பது. ஆனால், நாம் என்ன செய்கிறோம் என்றால், நமது உணர்வை, நமது அடையாளங்களினால் – உதாரணமாக நான் இந்தியன், ஆண், பணக்காரன், படித்தவன் என்றெல்லாம் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். அதனால் அது ‘ஆத்மஞானம்’ என ஆகாமல், ‘அகங்காரம்’ எனும் செருக்கு ஆகிவிடுகிறது.”
“சரி! அதனைக் கொடுப்பது பெரிய தியாகமா?”
“அது மட்டுமே தியாகம்! மற்ற எதுவும் தியாகம் கிடையாது!”
“என்ன அய்யா! நான் தினம் தானம் செய்கிறேனே!”
“எதை? எதை நீங்கள் நீங்களாகவே உற்பத்தி செய்தீர்கள்? எது உங்களது படைப்பு? ஒன்றுமே இல்லையே! இருப்பதை அப்படி, இப்படி மாற்றி, உங்கள் படைப்பாக வைத்துக்கொண்டு, அதனைக் கொடுப்பது எப்படித் தானம் ஆகும்?”
“அப்படியானால் எல்லாத் தானமும் பொய்யா?”
“பொய்தான்! ஆனால் நல்ல பொய்! அப்படிக் கொடுத்துப் பழகினால், உண்மையில் நம்மால் நாம் எதையும் கொடுக்க முடியாது என்ற பணிவு வரும்.”
“புரிகிறது அய்யா! நான் எதைத்தான் கொடுப்பது?”
“நீங்கள் படைத்ததைக் கொடுங்கள்! நீங்கள் படைத்ததுதானே நீங்களே உருவாக்கிக் கொண்டுள்ள அனுபவ உலகம்! அதைக் கொடுங்கள்! ஒருவரைப் பார்த்தவுடனேயே, அவர் கெட்டவர் என ஒரு ஜட்ஜ்மெண்ட் படைக்கிறீர்களே அந்த உங்களது படைப்பினைத் தியாகம் செய்யுங்கள். இவை எல்லாவற்றுக்கும் காரணமான ‘நான்’ எனும் அகந்தையைத் தானம் செய்யுங்கள். அது ஒன்றுதான் இறைவன் படைக்காதது, நீங்களே படைப்பித்துக் கொண்டது! அதைமட்டுமே நாம் தியாகம் செய்ய முடியும்! அந்தத் தியாகமே, சரணாகதி! அதைத்தான் மஹாபலி செய்தார். அதனால்தான் இறைவனே அவரது பாதுகாவலராக இருக்கின்றார்.”
எனது மனம் முழுதும் ஆனந்தத்தால் நிரம்பியிருந்தது.
“அய்யா, ஞாயிறு திருவோண விழாவிற்கு நீங்கள் வரமுடியுமா?”
“இல்லை! மன்னிக்கவும்! இலை சாப்பாட்டைப் பரிமாறி அனைவரையும் மகிழ்த்துங்கள். அத்துடன், மஹாபலியின் தியாகத்தையும் பரிமாறுங்கள்.”
அய்யா செல்கின்ற திசையைப் பார்த்துக் கொண்டு சில நிமிடங்கள் நின்றிருந்தேன்.
Mee. Rajagopalan
08-Sep-2025