39 – புதிய தொடக்கம்
புதிய தொடக்கம்
ஐயாவுடன் உரையாடல் (39)
“நமஸ்காரம் அய்யா! இந்த விஜய தசமி நன்நாளில் உங்களுக்கு நமஸ்காரம் பண்ற பாக்யம் இருக்கே!”
அய்யாவை நமஸ்கரித்தேன்.
“நன்றாக இருங்கள். என்ன பிளான் இன்னிக்கு?”.
“இதோ, இன்னும் அரை மணியிலே ஸ்காட்லாந்துக்குப் புறப்படறோம். எடின்பரோவில் நாளைக்கு முதல் உஞ்சவிருத்தி! இந்த வருஷம் இலண்டன் ராதா மாதவ கல்யாண உற்சவம் நவம்பரில் இருக்கே! அதுக்கு!”
“சந்தோஷம். நல்லபடியாப் போய்ட்டு வாங்கோ!”
“நிச்சயமா அய்யா! அதுக்குத்தானே உங்க ஆசீர்வாதம், விஜயதசமியில தொடங்கினா நல்லதுங்கிறதுதானே நமது சம்ப்ரதாயம்!”
அய்யா சிரித்தார்.
“நல்ல காரியத்தை ஒருவர் எப்ப வேண்டுமானாலும் தொடங்கலாம்! நல்லது செய்வதற்குக் கால தேசம் என்று எதற்குக் கட்டுப்பாடு!”
அவர் சொல்வதில் எப்படி உடன்படாமல் இருக்க முடியும்?
எனினும் கேட்டேன்.
“இருந்தாலும், விஜயதசமி அன்று தொடங்கினால் நல்லது. அன்னிக்கு நமக்கு வழிகாட்டுகிற ஆசிரியர்களை வணங்குதல் நல்லது – இப்படி எல்லாம் நமக்குக் கடமைகள் இருக்கே!”
அய்யா மீண்டும் சிரித்தார்.
“உண்மைதான்! இந்த விஜயதசமி என்பது என்ன?”
“அய்யா, ஒன்பது நாள் நவராத்திரி பூஜைகள் செய்துவிட்டு, அம்பாளை வெற்றி அளிக்கும் விஜயலட்சுமியாக, அன்னை ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாக வணங்கும் நாள்தான் விஜயதசமி. அப்படித்தானே?”
“அது சரிதான். ஒன்பது இரவுகள் இறைவனை மகாசக்தியாக வழிபட்டு, பத்தாவது நாளில், அவளது அருளால் நாம் செய்கின்ற எல்லாக் காரியங்களும் வெற்றியாக வேண்டும் எனப் பிரார்த்திப்பதுதான் அதன் இலட்சியம். !”
அய்யா மீண்டும் தொடர்ந்தார்.
“ஏன் ஒன்பது இரவு பூஜை? ஏன் நம்முடைய புத்தகங்கள், கருவிகள், ஆயுதங்கள் எல்லாவற்றுக்கும் கூட விஜயதசமிக்கு முதல் நாள், ஆயுதபூஜை எனப் பூஜை செய்கிறோம்?”
அய்யா நிச்சயம் தெளிவுபடுத்துவார் என்பதால் மௌனமாக இருந்தேன்.
“மஹா சக்தி என நாம் வழிபடுகின்ற பரம்பிரம்மம், தனது உண்மையை, எல்லாவற்றுக்குள்ளும் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த மறை ஒளியின் பிரகாசத்தால்தான், நமக்கு வெளியில் எல்லா உலகங்களும் தோன்றுகின்றன. அந்த வெளி உலகங்களில்தான் நாம் ஈடுபட்டு, நமது வாழ்க்கை வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எனவே நமக்குத் தேவை, முக்கியமாக இரண்டு விஷயங்கள்!”
“அவை என்ன அய்யா? ”
“ஒன்று, நாம் ஈடுபாடு கொண்டு நடத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கை வியாபரம் – அது நல்லபடியாக நடக்க வேண்டும், அதன் மூலமாக நமக்கு நல்ல இன்பமும், நல்ல அறிவும் கிடைக்க வேண்டும் என்பது.”
“நிச்சயமாக அய்யா! அதனால்தான் பக்தியுடன் விஜயதசமியில் நாம் எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்கின்றோம்.”
அய்யா என்னை ஆழ்ந்து பார்த்தார்.
“உலக வியாபார ஈடுபாடு நன்றாக நடக்க வேண்டும் என்றால், நமது இரண்டாவது தேவையும் உணரப்பட வேண்டும். அது, மறைந்து நம்முள்ளேயும், எல்லாவற்றிலும் இருக்கின்ற இறைச் சக்தி என்பதும், அதனைத் தெளிந்து கொள்வது அவசியம் என்பதும் ஆகும். அந்த ஒளியை உணர்ந்தால், அதன் கருணையால், படிப்படியாக, அந்த ஒளியாகவே நாம் இருக்கிறோம் எனவும் தெளிந்தால், நமது உலக வியாபரமும் நன்றாக நடக்கும்ம் அத்துடன் நமக்கு
ஆன்மீக உயர்வும் கிடைக்கும்.”
“எது அப்படியான தெளிவை நமக்குத் தெரியாமல் மறைத்து வைத்துள்ளது?”
“வேறு எது, இறைச்சக்திதான்! அதன் திருவிளையாடல்தானே படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் உலகை நடத்துகின்றது. ”
“படைத்தல், காத்தல், அழித்தல் என்பது புரிகிறது. எல்லாமும் தோன்றி, வளர்ந்து, மறைகின்றது. அந்த மூன்றுக்கும் ஆளுமை கொண்ட இறைச்சக்தியாக பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்றெல்லாம் நமக்குச் சொல்லி இருக்கிறார்களே! ஆனால் மறைத்தல், அருளல் என்பன என்ன?”
“படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் நடத்துகின்ற சக்திகளுக்கும், அந்த மூன்று தொழிலும் நடக்க வேண்டும் என்பதற்காக, மாறாத பிரம்மமாகிய உண்மையை, `மறைத்தல்` எனும் திரை விரித்தலால், பராசக்தி நடத்துகின்றாள். அதற்கு `மாயா சக்தி` எனப் பெயர். அதனால்தான், நாம், மறைந்து உள்ளே இருப்பதை அறியாமல், அந்த அறியாமைத் திரையை விலக்காமல், வெளி உலகத்தை நிரந்தரம் என நம்பிக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கை வியாபாரத்தை ஒரு விளையாட்டாக நடத்தி இன்பம் அடையாமல், அதுவே நிஜம் என நடத்தித் துயரம் அடைகின்றோம்.”
“அப்படியானால், மறைக்கின்ற அந்தத் திரையை எப்படி விலக்குவது?”
“முயற்சியால்தான்! `பக்தி`, `சிரத்தை`, `சேவை` எனச் செய்து, அதனால் கிடைக்கின்ற `ஞானம்` என்ற கத்தியால், அந்தத் திரையை விலக்கவேண்டும். அதற்குப் பல வழிகள் இருக்கின்றன.”
“சொல்லுங்கள் அய்யா!”
“இப்போ நீங்கள் செய்த நவராத்திரி பூஜை அதற்கான எளிய வழி! சக்தி வழிபாட்டில், மாயா சக்தியானவள், தன்னை ஒன்பது விதமான திரைகளால் மறைத்துக் கொண்டுள்ளாள் என்பார்கள். `நவாரணம்` எனும் `நவ ஆவரணங்கள்` அந்தத் திரைகள். அவை ஒவ்வொன்றாக விலக்கப்பட வேண்டும்.”
“அந்தத் திரைகள் எங்கே இருக்கின்றன அய்யா!”
“உங்களுக்குள்ளே தான்! உங்கள் பார்வையில்தான்! உங்கள் அறிவில் தான்! ஏனென்றால், நீங்கள் உலகம் என எதைப் பார்க்கிறீர்களோ, அது உங்களுடைய புலனறிவாலும், மனதாலும் வடிவமைக்கப்பட்ட ஒரு மனக்கோட்டை!”
“உலகம் கற்பனை என்று சொல்கிறீர்களா? ”
“ஆம்! ஒவ்வொரு லெவலில் ஒவ்வொரு கற்பனை! உங்கள் கனவில் நீங்கள் படைத்து அனுபவிக்கும் உலகம், உங்கள் கனவுக்குள் நிஜம். விழித்தால், அது வெறும் கற்பனை. அதுபோல்தான், வாழ்க்கை வியாபாரம். ஒரு திரைக்குள் நிஜம். அத்திரை அவிழ்ந்து வெளிச்சம் வந்தால், இந்த உலகமும் ஒரு கற்பனை! இறைவனின் கற்பனை!”
“இது ஆராயப்பட வேண்டியது அல்லவா? எப்படிப் பூஜை செய்வதால் புரியும்?”
அய்யா கேட்டார்.
“டாக்டர் கொடுத்த மருந்தைச் சாப்பிட்டால் போதாதா குணமாவதற்கு! மருந்தை ஆராய அவசியம் என்ன! ஆராயும் அறிவு முக்கியம்தான். அப்படி ஆராய, நமது கருவிகளான, புலன், மனம், புத்தி முதலியன முதலில் சுத்தப்பட வேண்டும். இவைதான் நமது ஆயுதங்கள்.”
அய்யா தொடர்ந்தார்.
“மனதைச் சுத்தப்படுத்தல் என்பது, தன்னலமற்ற சேவையினாலும், தெய்வ வழிபாட்டினாலும் கிடைக்கும். அதனால்தான், `நவ ஆவரணங்கள்` எனும் திரைகளைப் பற்றி எல்லாம் கூறி, நமது உடல், மனம், புத்தி என எல்லாவற்றையும் ஸ்ரீசக்க்ரம் எனும் ஒரு நகரமாக வருணனை செய்து, அந்த நகரத்தின் ஒவ்வொரு வாசலையும், மூடியுள்ள அந்த ஆவரணத் திரைகளை மெள்ளத் திறந்து, படிப்படியாக உட்சென்று, `பிந்து` எனும் இதய மத்தியில் உள்ள ஆத்ம ஒளியைத் தரிசிக்கச் செய்கிறது `ஸ்ரீ வித்யா` எனும் உயரிய சக்தி வழிபாடு. இதெல்லாம் ஒரு `பாவனை` என உங்களுக்குத் தோன்றுகிறதோ?”
என் சந்தேகத்தை உணர்ந்தவராக அய்யா கேட்டார்.
“ஆம் அய்யா!”
“அது சரியே! பாவனை என மனதில் நீங்கள் மேற்கொள்ளும் எண்ணத்தின் தீவிரம்தான், உங்களுக்கு அனுபவ உலகத்தைப் படைக்கிறது. வாழ்க்கை என்பது அனுபவங்களின் சங்கிலிதானே! எனவே இவற்றைக் கற்பனை எனத் தள்ளாமல், ஒரு கருவியாக உதவுகின்ற ஆயுதம்தான் `பாவனை` எனப் புரிந்து கொண்டு, நீங்கள் செய்கிற பூஜைகளைப் பாவனையுடன் செய்யுங்கள்.”
“சரி அய்யா!”
அய்யா தொடர்ந்தார்.
“பூஜைகளினாலும், செய்கின்ற நல்ல தியாகங்களினாலும், பிறருக்குச் செய்கின்ற சேவைகளினாலும் நீங்கள் உங்கள் மனதையும் அறிவையும் சுத்தமான கருவிகளாக மாற்றுகின்றீர்கள். அத்துடன், புத்தகம், பேனா, மற்றும் உங்கள் தொழிலுக்கான கருவிகள் எல்லாவற்றையும் கூட `ஆயுத பூஜை` எனச் செய்து சுத்தப்படுத்துகிறீர்கள்.”
“ஆம் அய்யா! ஆயுத பூஜையில் எல்லாவற்றையும் படைத்து அன்னை சரஸ்வதிக்குப் பூஜை செய்கிறோம். அன்று குழந்தைகள் `ஜாலி, இன்னிக்குப் படிக்க வேண்டாம்` எனக் கொண்டாடுகின்றன!”
சிரித்தபடி அய்யா சொன்னார்.
“ஆம், ஒன்பதாம் நாளன்று, படிக்க வேண்டாம், வேலை செய்ய வேண்டாம் என்பதெல்லாம் ஒரு தத்துவ விளக்கத்திற்காகத்தான். ஒந்த ஒன்பது நாட்களில், நீங்கள் உங்கள் மனதைச் சுத்தப்படுத்திக் கொள்வதால், நல்ல நோக்கங்கள் உங்களுக்கு வரும். அதுதான் `இச்சா சக்தி`. அதுதான் அடிப்படைத் தேவை. எதிலும் ஒரு நோக்கம் இருந்தாலேதானே, ஆக்கமும், அறிவும் வரக்கூடும். அதற்காகத்தான் நவராத்திரியின், முதல் மூன்று இரவுகள் நாம் இச்சா சக்திக்குப் பூஜை செய்கிறோம். ”
“பிறகு?”
சிரித்தபடி அய்யா சொன்னார்.
“அந்த நோக்கங்கள் நிறைவேற, என்னென்ன வசதிகள் வேண்டுமோ, அவற்றையும் வேண்டிப் பிராத்திக்கிறோம். அதனை `கிரியா சக்தி` எனச் சொல்வோம். பிரகு, கடைசி மூன்று நாளும், நமது நல்ல நோக்கங்களும், நமது படைப்பாற்றலும், அடிப்படையான செயலாக்க அறிவைப் பெற வேண்டும் என்பதற்காக, `ஞான சக்தி` கிடைக்க வேண்டுகின்றோம். இப்படியாக, ஒன்பது இரவுகளில், நாம் முச்சக்திகளையும் வேண்டிப் பெற்றவர்களாக, குறைந்தபட்சம், அவை வேண்டும் எனத் தெளிந்தவர்களாக, நாம் வாழ்க்கை வியாபாரத்திலும், ஆன்மீக உயர்விலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்தவர்களாக இருக்கிறோம்.”
“ஆம்! அடுத்து பத்தாம் நாள், விஜயதசமி வருகிறது!” – எனது ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்டேன்.
“ஆம்! ஒன்பது நாள் பூஜை முடிந்தது. நமக்கு எல்லா வசதியும் வலிமையும், அறிவும் இருந்தாலும், நமக்கு அவற்றை எல்லாம் பெறுவதற்குக் காரணமான ஆசிரியரை வணங்கி, அவரது வழிகாட்டலிலேயே நமது பயணத்தைத் தொடங்க வேண்டும் எனக் காட்டத்தான் விஜயதசமி! அதனால்தான், எந்த எந்த வாழ்க்கை வியாபாரங்களை நாம் செய்கிறோமோ, அந்த அந்த வழிக்கு நமக்கு ஆசிரியர் எவரோ, அவரை வணங்குகின்றோம். ஆன்மீகப் பயணத்திற்கும் அப்படியே! நமக்கு நல்ல விஷயங்களைப் போதித்து, உறுதுணை தருகின்ற எவராயினும், அவரே நமது குரு என அவர்களை நமஸ்கரித்து, நமது பயணத்தைப் புத்தொளியுடன், புத்துணர்வுடன் தொடங்க வேண்டும். அதுதான் விஜயதசமியின் விஷயம்!”
நான் நன்றியுடன் அவரை மீண்டும் நமஸ்கரித்து எழுந்தேன்.
“அய்யா! இன்னொரு சந்தேகம்.”
அய்யா இடை மறித்தார்.
“தெரியும், நீங்கள் கேட்பீர்கள் என்று! ஆனால், அதற்கு இப்பொழுது நேரமில்லை! உங்களுக்கு நீண்ட பயணம் இருக்கிறது! புறப்படுங்கள்! நல்லபடி நடக்கட்டும்.”
எனக்கு நீண்ட பயணம் இருக்கிறது என அய்யா நினைவுபடுத்தியது, நிச்சயமாக இந்த எடின்பரோ பயணமாக இருக்க முடியாது! ஆனால் என்ன, நல்லபடி நடக்கட்டும் எனச் சொல்லிவிட்டார் அல்லவா! நடக்கும்!
புதிய தொடக்கம் இனி!
மீ. ரா
01-Oct-2025