40 – நாஸ்திகரா நான்?

Log in to download as PDF

(Read in ENGLISH)

நாஸ்திகரா நான்?

ஐயாவுடன் உரையாடல் (40)

வெகு நாட்களுக்குப் பிறகு பாஸ்கரும் வசுமதியும் வந்திருந்தார்கள். பாஸ்கரும் நானும் பல வருடங்களுக்கு முன்பு ஒன்றாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தோம்.  கிட்டத்தட்ட பதினைந்து வருடம் கழித்து அவர்கள் இருவரையும் சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  அவர்கள் வந்து எங்களுடன் இருக்கும் அந்த மாலை வேளையில், ஏதேச்சையாக,  அய்யாவும் வீட்டுக்கு வந்தது, எமக்கு இன்னும் சந்தோஷமாக இருந்தது.

அய்யாவுக்கும் அவர்களுக்கும் பரஸ்பரம் அறிமுகப் படுத்திவிட்டு, சமையல் அறைக்குச் சென்று, உமாவிடம் அனைவரின் காபிக்காகபவும் ஒரு பணிவான விண்ணப்பம் வைத்துவிட்டு, ஹாலுக்கு வந்தேன்.

அதற்குள் அங்கே சுவாரசியமான உரையாடல் அப்பொழுது நடந்து கொண்டிருந்தது.

“நான் மட்டும்தான் போவேன் அய்யா! இவர் ஹோட்டலில் இருந்துவிடுவார்” – வசு சொல்லிக் கொண்டிருந்தார்.

“எங்கே போவதைப் பற்றிச் சொல்கிறாய் வசு!” – நான் கேட்டேன்.

“அண்ணா, இப்போத்தான் அய்யா, கோவிலுக்கெல்லாம் போனீர்களா என எங்களோட இந்தியா பயணத்தைப் பற்றிக் கேட்டார். அதுக்குத்தான்  சொன்னேன்.  உங்களுக்குத் தான் தெரியுமே, பாஸ்கருக்குக்கும் கோவிலுக்கும் சம்பந்தமே இல்லை என்று.  அதான் சொன்னேன்.  அவரை ஹோட்டல் அறையில் வைச்சுட்டு, நான் மட்டும்தான் போய்ட்டுவருவேன்!”

வசு என்னைப் பார்த்து, எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் சொன்னார்.

வசுவும், பாஸ்கரும் ஒவ்வொருவரை ஒருவர் விரும்பிக் கல்யாணம் செய்து கொண்டதும், கல்யாணத்தின்போதே அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்ததும், ஆனால் அதைப் பொருட்படுத்தாத ஒரு மேலான அன்பு இருவரிடமும் இருப்பதும் வெளிப்பட்டது. அந்த இடைவெளி என்னவென்றால் அவர்களுக்குள் இருக்கும் கொள்கை வேறுபாடு!

வசு தீவிரமான கடவுள் நம்பிக்கையும், பூஜை, ஆசாரம் எனவும் இருப்பவர்.  பாஸ்கர், அவருடைய மொழியில்  அவரைப்பற்றிச் சொல்வது  என்றால் “ப்ரொவ்ட் நாஸ்திகன்”.

நான் சிரித்துவிட்டு அய்யாவின் அருகில் அமர்ந்தேன்.

பாஸ்கர் சொன்னார்.

“எனக்கு இந்த கோவில் விஷயங்கள் எல்லாம் அவசியமில்லை. ஐ டோண்ட் பிலீவ் இன் சச் திங்க்ஸ்!”.

அய்யா சொன்னார்.

“அதனால் என்ன! இவருக்குத் துணையாய்க் கூடவே போறீங்களே, அதுதானே முக்கியம்!”

“ஆம் அய்யா! பாஸ்கர் எப்பவுமே இப்படித்தான்! நாஸ்திக வாதம்தான் அவருக்குப் பிடித்த விஷயம்.” – வசு சொன்னர்.

பாஸ்கர் குறுக்கிட்டார்.

“நாஸ்திக வாதம் இல்லை! நாஸ்திக உண்மை!”

அப்பொழுது அங்கே தொடர்ந்த சிறிய அமைதியை நிறுத்துபவளாக, உமா வந்தார்.

“இதோ, சூடா ஃபில்டர் காபி.  அய்யா உங்களுக்கு இதமான வெந்நீர்!”

எல்லோருக்கும் அவற்றைத் தந்து அவரும் அங்கே அமர்ந்தார்.

பாஸ்கர் தொடர்ந்தார்.

“வசுவோட மூட நம்பிக்கைகளை நான் வேண்டாம் எனச் சொல்வதில்லை.  அதனால், எங்களுக்குள் ஒரு பிரச்சனை எதுவும் இல்லை!”

பாஸ்கரிடம் நான் சொன்னேன்.

“வசுவோட நம்பிக்கை மூட நம்பிக்கைனு நீ சொல்லாதே பாஸ்! அதுவேற உன்னோடது வேறனு வேணுமான சொல்லு.”

“அப்படியே வைச்சுக்கோ! நான் நாஸ்திகன் அப்படினு சொல்றதும் நீங்கதான்.  என்னப் பொருத்தவரை, நான் அறிவார்ந்த வழியில் மட்டும்தான் பயணிப்பேன்.”

அய்யா சிரித்தார்.

பாஸ்கரைக் கூர்ந்து பார்த்துக் கேட்டார்.

“நீங்கள் உண்மையிலேயே  நாஸ்திகரா?”

“ஆம், அய்யா! அதிலென்ன சந்தேகம்!”

“நாஸ்திகன் என்றால் யார்?”

“நீங்கள் நம்புகின்ற இறைவன் என்பவன், அது ஆணோ, பெண்ணோ, அலியோ எதுவோ, அப்படி எதுவும் கிடையாது என்பதுதான்!”

“இந்த முடிவு உங்களின் அறிவார்ந்த முடிவா?”

“ஆம்! பகுத்தறிந்த முடிவு!”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“ஏனென்றால், அப்படி ஒரு இறைவனை எவரும் பார்த்தது கிடையாது, அவர் பேசிக் கேட்டது கிடையாது.  இதெல்லாம் ஒரு மூட நம்பிக்கை!”

அய்யா பதிலளித்தார்.

“சரி!  நானுமே என் கண்களால் இறைவன் என தனிப்பட்ட எதையும் பார்த்தது இல்லைதான்.”

“அப்புறம் என்ன சந்தேகம், இறைவன் இல்லை எனச் சொல்வதற்கு!”

நான் ஒரு நல்ல விவாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என உற்சாகமானேன்.

அய்யா கேட்டார்.

“பூனை இங்கே இருக்கிறதா?”

பாஸ்கர் திடுக்கிட்டவராகக் கேட்டார்.

“என்ன…. பூனையா…. இங்கே எங்கே! நிச்சயமாய் இல்லை!”

“பக்கத்து வீட்டில் இருக்கலாமே!”

“அதை அப்படிச் சொல்ல முடியும்,  அய்யா! அங்கே போய்ப் பார்த்தால்தான் இருக்கிறதா, இல்லையா எனச் சொல்ல முடியும்.”

“போய்ப் பாருங்களேன்.”

“எப்படி அய்யா! அப்படி நான் எளிதில் அடுத்தவர் வீட்டுக்குள் போகமுடியுமா? இதென்ன கேள்வி?”

“அப்போ, பூனை இருக்கிறதா என்பதற்கு உங்கள் பதில், இங்கு இல்லை, வேண்டுமானால் அங்கு இருக்கலாம் என்றுதானே இருக்க வேண்டும்? பின் எப்படி, உறுதியாக இல்லை எனச் சொல்வீர்கள்?”

பாஸ்கர் பேசாமல் இருந்தார்.

“உங்கள் வாதப்படியே, இறைவன் இங்கே இல்லை என்றால், வேறு எங்கேயேனும் இருக்கலாம் இல்லையா?  நீங்கள் எல்லா இடங்களையும் பகுத்தறிந்த பிறகுதானே, இறைவன் இல்லை என உறுதியாகச் சொல்லலாம். எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் இறைவன் இல்லை எனக் கண்டறிந்தீர்களா?”

“இல்லை  அய்யா! இறைவன் இருக்கிறார் என உறுதியாக சொல்ல முடியாது என்றுதான் சொல்வேன்.”

நான் சொன்னேன்.

“பாஸ்கர், அப்படியானால் இறைவன் இல்லை என்றும் உறுதியாகச் சொல்ல முடியாதுதானே!”

பாஸ்கர் கூறினார்.

“ஒப்புக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இறைவன் இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. அதனால் இல்லை எனச் சொல்கிறேன்.”

அய்யா திருத்தினார்.

“அதாவது பகுத்தறிந்து இறைவன் இல்லை எனச் சொல்ல முடியாததால், இறைவன் இல்லை என ஒருவித  நம்பிக்கையின் அடிப்படையில் அப்படிச் சொல்கிறீர்கள், அப்படித்தானே!”

“அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். எனது அந்த நம்பிக்கைக்கு எனக்கு உரிமை இருக்கிறது அய்யா!”

“கண்டிப்பாக! அதுபோல் வசுவுக்கும் இறைவன் இருக்கிறார் என நம்பிக்கை கொள்ளவும் உரிமை இருக்கிறது அல்லவா!  சரி, நாம் உரிமைகளைப் பற்றிப் பேசவில்லை. அதன் அறிவார்ந்த அடிப்படையைப் பற்றிப் பேசுகிறோம்.   அறிவால் தெளியவில்லை என்பதற்காக வைக்கின்ற நம்பிக்கைக்குப் பெயர்தான் மூட நம்பிக்கை.  எனவே நீங்கள் இறைவன் இல்லை என வைக்கும் வாதம்தான்  மூட நம்பிக்கை.”

“இறைவன் இருக்கிறார் எனும் நம்பிக்கையும் மூட நம்பிக்கைதானே?”

“இல்லை! ஏனென்றால் அந்த நம்பிக்கைக்கு அறிவே தேவையில்லை!   இதுதான் அம்மா எனக் குழந்தைக்கு, எந்தப் பகுத்தறிவு வந்து,  நம்பிக்கை தருகிறது?  அது ஒரு உணர்வு!  எனவே இறைவன் இருக்கிறார் என்பது உணர்வு பூர்வமான நம்பிக்கையானால், அது நிச்சயமாக மூட நம்பிக்கை இல்லை!”

நான் வசுவைப் பார்த்தேன். அவரின் முகத்தில் ஒரு சந்தோஷ ஒளி தெரிந்தது.

பாஸ்கர் சொன்னார்.

“சரி அய்யா!  இறைவனை விட்டு விடுங்கள்.  நான் நாஸ்திகன் என்பதற்கு, இறைவன் மட்டுமே காரணம் அல்ல! இறை நம்பிக்கையை வைத்து உங்களுடைய வேதங்களின் கருத்துக்கள் எல்லாம் மூடத்தனத்தை வளர்க்கின்றனவே! அதைத்தானே புத்தர் முதல் பலரும் எதிர்த்தார்கள்!   எனவே நாஸ்திகன் என்றால் வேத மறுப்பாளன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.  அதைத்தான் நான் ஏற்றுக் கொள்கிறேன்.”

“நல்லது, வேதங்களை நீங்கள் முறையாகப் படித்தீர்களா?”

“இல்லை!”

“படித்து அறியாமல், அதை எப்படி விமரிசிப்பீர்கள்?”

“தேவையில்லை அய்யா! வேதங்களின் பெயரால் நடக்கின்ற சடங்குகள், சாதி மத வேறுபாடுகள் – இதெல்லாம் சமூக அநீதி! அதனால் அந்த விளைவுகளைப் பார்த்து, அவற்றுக்குக் காரணமான வேதங்களை எதிர்க்கிறேன்.”

அய்யா சிரித்தார்.

“சமூக அநீதி எங்கிருந்தாலும் நீக்கப்பட வேண்டும். அறம் இல்லை என்றால் உலகம் இல்லை. அதனால் நீங்கள் சொல்வதன் தாக்கம் எனக்கும் புரிகிறது. ஆனால் மேலான உண்மையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.”

“என்ன அய்யா?”

“ஒரு சர்ஜனின் கூர்மையான கத்தி நலம் தரும் மருத்துவ சிகிச்சைக்கானது, அவசியமானது! ஆனால் அதனை எடுத்து ஒரு முட்டாள், மற்றவர்களுக்கு இடர் கொடுத்தால், யாருக்குத் தண்டனை அளிப்பது? சிகிச்சைக் கருவிக்கா, அல்லது அதனைச் சரியாகப் பாதுகாக்க முடியாதவனுக்கா! அதை முறையற்ற செயலில் பயன்படுத்துபவனுக்கா?”

“அய்யா! இந்த வாதத்திற்கு நான் போக விரும்பவில்லை! வேதங்களை நான் படிக்க முடியாது! அது எனக்குத் தேவையில்லை!”

“படிக்கவும் படிக்காதீர்கள்.  புரிந்தும் கொள்ளாதீர்கள்! அது உங்கள் விருப்பம். அப்படிப் புரிந்து முயலாத விஷயத்தை நீங்கள் எப்படித் தீயது எனச் சொல்லாம்?  அதனால் வேத மறுப்பு என்பதும் நாஸ்திகம் ஆக முடியாது!”

பாஸ்கர் சிரித்தார்.

“அய்யா! இந்த நாஸ்திகன் எனும் சொல்லே வேதம் படித்தவர்கள் கொடுத்ததுதான்.  புத்தமதத்துக்கு நாஸ்திக மதம் எனப் பெயர் கொடுத்ததும் வேதியர்கள்தானே!”

“ஆம்! புத்தபிரானின் உண்மையைப் புரிந்து  கொள்ளாது, வேத மறுப்பு மதமாக மாற்றிய அவரது சீடர்களைத்தான் ‘நாஸ்திகர்’ என அழைத்தார்கள்.  அப்படியான ‘நாஸ்திகர்’ என நீங்கள் இருக்கின்றீர்கள் என்றால், நீங்கள் புத்தபிரானின் உண்மையையும், அவரது வழியில் வந்தவர்கள் செய்த தவறுகளையும் சரியாகப் புரிந்து கொண்டு, பிறகு உங்களை நாஸ்திகர் எனச் சொல்லிக் கொள்ளலாம்.”

“புத்தர் வேதச் சடங்குகளை மறுத்தார்.  வேதங்களை மறுத்து, அன்பு, சேவை என சமூகத்தின் நலனுக்காக மட்டுமே வாழ்ச் சொன்னார்.”

பாஸ்கர் ஆவேசமாகச் சொன்னார்.

அய்யா மீண்டும் சிரித்தார்.

“நிச்சயமாக! நாம் அனைவருமே  புத்தபிரானின் நல்ல போதனைகளை மனப்பூர்வமாக ஏற்க வேண்டும். அதனால்தான் அவரையும் இறைவனின் ஒரு திருஅவதாரமாக வேதங்களின்படி வாழ்பவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.  பிரச்சனை அதுவல்ல!”

“எது?” – நான் ஆவலால் குறுக்கிட்டுக் கேட்டேன்.

“புத்தபிரானுக்கும் முன்பு ‘புத்தமதம்’ என எதுவும் இல்லை. அப்பொழுது இருந்த எல்லா மதங்களும் வேதக் கருத்துக்களை ஒட்டியே, ஆனால் நடைமுறையில் வேறுபட்டும்  இருந்தன.  வேதங்களைக் கற்ற வேதியர்களில் பலரும், வேதத்தின் உண்மையைச் சரியாக உணராமல், வேதச் சடங்குகளையும், அதனால் கிடைக்கின்ற பயன்களையும் மட்டுமே பெரிதுபடுத்தினர்.  சர்ஜனின் கத்தியை ஒரு குடிகாரன் எடுத்துச் சென்றதுபோல, வேதச் சடங்குகளை மிகைப்படுத்தி, உயிர்ப்பலி முதலான இழிவான கொடுமைகளையும் ஒரு சிலர் செய்தனர்.  அப்போதுதான், மூப்பு, பிணி, சாக்காடு என ஒவ்வொருவருக்கும் நிச்சயமான முடிவினை ஆய்ந்துணர்ந்த புத்தபிரான், கனிவால், பிரிவுபட்டிருந்த சமூகத்தை அன்பினால் இணைக்க, ஒரு சில நெறிமுறைகளைக் காட்டினார்.”

“ஆம் அய்யா! அதைத்தானே நாம் ஏற்க வேண்டும்!”

“ஆம்! அதற்காக, அவர் சொல்லாததை எல்லாமும் ஏற்க வேண்டுமா என்ன?”

“எதைச் சொல்கிறீர்கள்?”

“அவரது பெயரில், அவரது மௌனத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், வேதங்களையே வெறுக்கின்ற பாதையைப் புத்தமதம் எனச் செய்தார்களே, அவரது சீடர்கள் – அதை ஏற்க வேண்டியதில்லையே!”

“நீங்கள்தானே சொன்னீர்கள்! புத்தர் வேதச் சடங்குகளை நிறுத்துங்கள் என்று சொன்னார் என்று!” – பாஸ்கர் கேட்டார்.

“ஒரு வகுப்பில் நுழைந்த பொறுப்புள்ள ஆசிரியர் – அங்கே ஒரே அமளியாக இருக்கின்றது என்றால், மாணவர்கள் எல்லாம் உரக்கக் கத்திக்கொண்டு, அவரவர்களுக்கு விருப்பமான பாடங்களைப் படித்துக் கொண்டோ அல்லது பாழ்படுத்திக் கொண்டோ இருந்தால்  – அப்பொழுது என்ன செய்வார்?”

எல்லோரும் அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தோம்.

“அந்தப் பொறுப்புள்ள ஆசிரியர், எல்லோரையும்  அக்கணமே அவரவர் செய்கின்ற எல்லாச் செயல்களையும் நிறுத்தச் சொல்லுவார்!  புத்தகங்களை எல்லாம் உடனே மூடி வையுங்கள் என்பார்.  எதையும் படிக்க வேன்டாம்.  அமைதியாக உட்காருங்கள்.  யாரும் ஒருவருக்கொருவர் சண்டை போடாமல், அன்புடன் வரிசையாக உட்காருங்கள் என்பார்.  உங்களுக்குள் அமைதியும், ஒழுக்கமும் வரும் வரை, நான் வகுப்பு எடுக்கப் போவதில்லை என்பார். இல்லையா?”

“ஆம் அய்யா!”

“அதைத்தான் உலகிற்காக புத்தபிரான் கருணையுடன் செய்தார்.  சில சமூக ஒழுக்கங்களையும், பண்புகளையும் எளிமையாக நமக்கு வரிசைப்படுத்திக் கொடுத்துவிட்டு, நெடும் தியானத்தில் அமர்ந்துவிட்டார்.  அவரது சீடர்கள் – ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் – புத்தரின் சீடர்களில் பெரும்- பாலானவர்கள் வேதக் கருமங்களை முன்பு ஆர்வத்துடன் செய்து வந்தவர்கள்தான் – புத்தபிரானின் மௌனத்தை வேத மறுப்பாக மாற்றி, அதையே புத்தருக்குப் பின், பௌத்த மதமாக மாற்றினர். எனவே புரிந்து கொள்ளுங்கள்; பொறுப்பான ஆசிரியர் மாணவர்களின் புத்தகங்களை மூடச் சொன்னது,  பாடங்கள் இனிமேல் இருக்கக் கூடாது என்பதற்காகவா, அல்லது அது ஒரு சீர்மைப்படச் செய்த  குறுங்காலத் தடை விதிப்பா?”

“அப்படியானால், வேத மறுப்பாளர்கள் நாஸ்திகர்கள் எனப்படுவது தவறா?”

“இல்லை.  உங்களுக்கு விளக்கம் அளிக்கவே அப்படிச் சொன்னேன்.  சமூக நீதிக்காகச் செய்கின்ற எல்லாமே உயர்வானவை! அதை நாம் எல்லோருமே  செய்ய வேண்டும்.  அதற்கு நாஸ்திகம் மட்டுமே லைசென்ஸ் என்பதுதான்  நான்-சென்ஸ்!”

“அய்யா! அப்புறம் எதற்கு புத்த மதத்திற்கு எதிராக, ஆதிசங்கரர் போன்றவர்கள் வாதிட்டார்கள்?” – நான் கேட்டேன்.

“புத்த மதத்திற்கு மட்டுமல்ல, கிட்டத்தட்ட 72க்கும் மேலாகப் பிளவுபட்டிருந்த பல மதங்களுக்கு  எதிராகவும் பகவான் சங்கரர் பாடுபட்டார்.  எதிராக என்பதைவிட, அவற்றைச் சீர்மை செய்ய உழைத்தார்!  அது வேறு விஷயம்.  நீங்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது எதுவென்றால், சமூக அநீதிக்கு எதிராகப் போராடுபவர்தான்  நாஸ்திகர் என்பது பிழையானது.  சமூக நீதிக்காக உழைக்கும் அத்தனைபேரும் – நல்லவர்கள்.  அதுதான் கருத்து.”

“அப்படியானால், பௌத்தமதம்  நாஸ்திகர்களின் மதம் என்பதன் பொருள் என்ன?” – வசு கேட்டார்.

அய்யா பெருமூச்சு விட்டார்.

“நானும் இந்தக் கேள்விக்குத்தான் காத்திருந்தேன். நீங்கள் பொறுமையாகக் கேட்கத் தயாரா?”

பாஸ்கரே குறுக்கிட்டார்.

“நிச்சயமாக!  நான் நாஸ்திகனா  இல்லையா என்பது முக்கியமில்லை.  சமூக நீதி முக்கியம். இறைவன் என்ற பெயரில் சமூக நீதிக்கு எதிரானதைச் செய் என வேதங்கள் சொன்னால், அதை மாற்ற வேண்டும்.  அதுதான் என் ஆசை.”

“அருமை! இதனை இங்கே தீர்க்க முடியாது.  ஏனென்றால், வேதங்கள் எனும் பெரிய வனத்தில், ஒரு இடத்தில் முள் இருக்கிறது எனச் சொல்லி, ரோஜாவை இழப்பது தவறு. எனவே, நாம் சரியாகக் கற்று, ஆராய்ந்து அதனைப் பற்றி முடிவெடுப்போம்.  அந்தப் பயணத்திற்கு நாஸ்திகம் எனும் அடையாளம் தேவையில்லை.”

“அப்படியானால் ‘ஆஸ்திகன்’ என நான் மாற வேண்டுமா?”

“ஏன் இப்படி புரிந்து கொள்ளாத சில சொற்களை மட்டுமே முதன்மைபடுத்தி, அதற்குள் சிக்கிக் கொள்கிறீர்கள்.  இப்போதான் நாஸ்திகன் எனும் சொல்லுக்கு அவசியமில்லை எனப் பார்த்தோம். உடனே ‘ஆஸ்திகன்’ எனும் சொல்லுக்குப் போகிறீர்களே!”

“பின்னே எப்படி! ஆஸ்திகம் என்பதுதானே நாஸ்திகம் என்பதற்கு எதிர்ச்சொல். ஆஸ்திகர்கள்தானே இறைவன், வேதங்கள், சடங்குகள் எனப் போகிறார்கள்!”

“இருக்கலாம்.  அதற்காக, நாஸ்திகத்தை விட்டால், நான் உடனே ஆஸ்திகன் எனச் சொல்லிவிட முடியுமா!”

“ஏன் முடியாது?  இரண்டுக்கும் இடையில் வேறு ஒன்று உள்ளதா?”

“இந்தச் சொற்களின் பொருளைப் புரிந்து கொள்ளாதவரையில், நாம் சாதாரண மனிதர்கள்தான்.  அப்படி எடுத்துக் கொள்வோம். சாதரண மனிதனாக, ஆஸ்திகம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கப்புறம் நாம் ஆஸ்திகனா, அல்லது நாஸ்திகனா எனத் தேர்வு செய்யலாம்.”

“சரி”

ஒரிரு நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தது.

ஐயா தொடர்ந்தார்.

“இறைவனை விட்டுவிடுவோம்.  நாம் அவரை இன்னும் பார்க்கவில்லை. வேதங்களையும் விட்டுவிடுவோம். நாம் அவற்றைப் பயின்று உணர்வில்லை. உலகம்தான் நமக்கு வாழ்க்கையைத் தருகிறது.  எனவே எதை அறியவேண்டும் என்றால், நாம் ஈடுபடும் உலகத்தை, அப்புறம் நம்மைப்பற்றி மட்டுமே!  அது தரிதானே!”

எல்லோரும் ஆம் என்பது போலத் தலை ஆட்டினோம்.

“உலகத்தைப் புரிந்து கொள்ளத்தான் நாம் தினசரி பாடுபடுகிறோம்.  ஆனால் அதை முற்றிலும் புரிந்து கொள்ள முடியவில்லை! முடியாது. ஏனென்றால் அது எப்போதும் மாறிக் கொண்டே இருக்கிறது.  நாம் அதை அனுசரித்துப் போகவேண்டியதுதான். இல்லையா!”

யாரும் எதுவும் பேசவில்லை.

“அப்படியானால், நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிச்சம் ஒன்றே ஒன்று! அது  நாம் யார் என்பதைத்தான்.”

“அய்யா! இதில் என்ன புதுமை! எல்லோருக்கும் தான் அவரவர்களைப் பற்றித் தெரியுமே?”

“ஆம்! ஆயினும் புத்தபிரானைப் பின் தொடர்ந்து சென்றவர்கள் எவருக்கும்  அது சரியாகத் தெரியவில்லையே?”

“என்ன சொல்கிறீர்கள்?”

“நேரடியாகக் கேட்கிறேன்.  நீங்கள் இருக்கிறீர்களா?”

“இதென்ன கேள்வி! உங்கள் கண்ணுக்கு முன்னாடி இருக்கேனே!”

“தனியா ஒரு இருட்டான அறையில் நீங்கள் இருந்தால், அப்பொழுது என்னால் பார்க்க முடியாது என்றால், நான் நீங்கள் இல்லை என்று சொல்லக்கூடுமே!”

“உங்களுக்குத் தெரியலாம், தெரியாமல் போகலாம், ஆனால், அந்த இருட்டிலும், எனக்கு நன்றாகத் தெரியும், நான் இருக்கின்றேன் என்று.”

“நிச்சயமாகவா?”

“என்ன கேள்வி அய்யா! நான் இருக்கேன் அப்படினு எல்லோருக்கும் தெரியுமே!”

“ஏன்! உங்களால, உங்களோட உடலைப் பார்க்க முடியும் அப்படிங்கிறதாலயா?”

“இல்லை! உடலைப் பார்க்காமலே, மனசுக்குள்ள நான் இருக்கேனு தெரியுமே!  சின்னக் குழந்தை, பெரியவன்னு என் உடல் மாறிண்டே வந்தாலும், எல்லாமும் நான்தான் அப்படினு தெரியுமே! இதுக்கு எங்க போய்ப் படிக்கணும்?”

“நல்லது! ஆழ்ந்து தூங்கும்போது தெரியுமா?”

“தெரியாது! அப்போதான் எனக்கு மனசுனு ஒண்ணு இல்லையே! ஆனால் தூங்கி எழுந்தபிறகு, நான் தூங்கினேன் அப்படினு தெரியும்.”

“அப்போ, நான் எனத் தெரிவது உங்க உடல், மனம் பற்றிய விஷயம் இல்லை, அதைத் தாண்டினது அப்படிங்கிறது சரிதானே!”

“சரிதான் அய்யா! நான் இதுவரை அப்படி யோசித்ததில்லை.”

“இப்போ யோசியுங்கள்! உங்களுடைய விழிப்பு, கனவு, துயில் இதெல்லாம் தாண்டி, நீங்கள், ‘நான்’ என இருப்பதாக உணருங்கள்.”

“யோசிக்கிறேன் அய்யா!”

சிரித்தார் அய்யா.

“இதை மிகவும் யோசித்த புத்த பிரானின் சீடர்கள் என்ன முடிவு செய்தார்கள் தெரியுமா?”

“தெரியாது!”

“அவர்கள் எடுத்த முடிவு, முடிவில் ஒண்ணுமே இல்லை அப்படினு!  ‘நான்’ அப்படினு ஒண்ணுமே இல்லைனு முடிவெடுத்து ‘சூன்ய வாதம்’ என்று ஒன்றை வைத்தார்கள்.  –  நல்லபடியாக வாழ், ஏனென்றால்,  அப்புறம் நீ ஒண்ணுமே இல்லாமல் போய்விடுவாய் –  என்பதுதான் அந்த சூன்யவாதம். அது எப்படி ஏற்கக்கூடியது ஆகும்!  சமூக நீதிக்காக அன்போடு, அறத்தோடு வாழ் என நல்வழி சொல்லிவிட்டு, முடிவில் ஒண்ணுமில்லாமற் போவாய் என்றால், அதில் என்ன இலட்சியம் இருக்கிறது!”

“அய்யா, இறந்தபிறகு ஒன்றும் இல்லை என்பதற்கான பொருளாக இருக்குமோ!”

“அந்த மாதிரியான  மூடத்தனம் இல்லை!  ஏனெனில் புத்தமதம் மிக ஆழமாக, பிறவித் தொடரை ‘ஸம்ஸாரம்’ என ஆராய்ந்து, அதற்கான காரணம் ஆசை எனச் சரியாகச் சொல்லி, அதனால், ஆசைப்படாம்ல் வாழ்வாயாக என நல்ல கருத்துக்களை நமக்கு அளிக்கிறது. ஆனாலும், பிறகு மனித வாழ்க்கை முடிவவில் சூன்யமாகிய நிர்வாணம் என்றால், அது எப்படிச் சரியாகும்?  பின்பு வந்த புத்தமதத்தினர், அதைச் சற்றே மாற்றி, சூனியம் இல்லை, ஆனால் ஒவ்வொரு  நொடியிலும் பிறந்து இறந்து வாழ்வதுதான் ‘நான்’ என, ‘க்ஷணிக வாதம்’ என்பதையும் வைத்தனர்.  இதுவும் ஒரு பயனும் இல்லாதது!”

ஐயா தொடர்ந்தார்.

“வேதங்களின் உண்மை இதுதான். ‘ஆன்மா’ என மாறாத, அழியாத ஒளியாக, உணர்வாகத்தான் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம்.  அந்த ஆன்மா இருக்கிறது என்பது தான் வேதவாக்கு.  சம்ஸ்கிருத மொழியில் ‘இருக்கிறது’ என்பதற்கு ‘அஸ்தி’ எனப்படும் சொல் உள்ளது.   நான் ஆன்மாவாக எப்பொதும் இருக்கிறேன் எனும் உண்மைதான் ‘ஆஸ்திகம்’.  எனவே  ‘நான் இருக்கிறேன்’ என நீங்கள் நம்பினால் – அறிந்தால் – நீங்கள் ஆஸ்திகம் எனும் உண்மையை ஏற்றவர் ஆகின்றீர்.  இல்லை எனில் நாஸ்திகர்.”

“அப்போ பௌத்தர்களின் சூன்ய வாதம் பொய்யா?”

“சூன்யம் என்றால் ஒன்றும் இல்லை எனப் பொருள். ஒன்றும் இல்லை என யாரால் உணரப்படுகிறது?  ஒன்றும் இல்லை எனப் பார்ப்பவர் ஒருவர் இருந்தால்தானே சூன்யம் என்பதும் தெரியும்?”

“ஆம்!”

“அப்படியானால் முடிவு சூன்யம் அல்ல! ஆன்மா! அது பூரணம்! பரிபூரணம். அந்த ஆன்மாதான் நீங்கள்! அதுதான் நான்.  அதனை உணரச் செய்கின்ற பயணம்தான்….”

“ஆஸ்திகம்” – நான் இடைமறித்துச்  சொன்னேன்!

“இருக்கலாம். நான் சொல்ல நினைத்தது, ‘நான் ஆன்மா’ என உணரச் செய்கின்ற பயணம்தான் நம் ஒவ்வொரின் வாழ்க்கைப் பயணம்.”

பாஸ்கரை நான் பார்த்தேன்.

அவர் மனதில் ஏராளமன கேள்விகள் இருந்தன.

நிச்சயமாக ‘நான் நாஸ்திகனா’ எனும் கேள்விக்கு அவர் ஒரு விடையைக் கண்டு பிடித்திருப்பார்.

எனக்குள் மற்றொரு கேள்வி எழுந்தது – ஆஸ்திகனா நான்! – அய்யாவிடம் இதைக் கேட்க வேண்டும்.

மெதுவாக எழுந்து வசுவும் பாஸ்கரும் அய்யாவுக்கு நமஸ்காரம் செய்தார்க்ள்.

உடனே உமாவும் நானும்தான்! பெரியோர்களைப் பணிதல் பெரும் பேறல்லவோ!

 

மீ. ரா

02-ஜனவை-2026

 

Related Posts

Share this Post

Leave a Comment