Pages: 1 2 3 4 5 6 7 8
Pages: 1 2 3 4 5 6 7 8

கடமை

Read at ELAB , Poetry Evening on 1 Nov 2006

தருமம், கருமம், பணி, சேவை – எனும்
மருமம் இதையறிந்து மதித்தல் நம்தேவை!

கடமை இயல்பானால் தருமம் என்றாகும்!
கதிரவனும் மதிவலமும் கடலலையும் நதிவளமும்
கனிமரமும் கரிமுகிலும் காட்டுகின்ற உவமானம்
இயற்கையிலே ஈதிதிற்கு இயல்பிதென்று வைத்தநெறி
உயற்சி இதுஉண்மை உருமனிதர் அடையாளம்
மற்றதற்கு அன்புஎனும் “மன் ஹிதன்” எனும்பதமே
சொற்றமிழில் மனிதனெனச் சோபித்த ததனாலே
அன்பொன்றே இயல்பென்று அருங்கடமை நம்தர்மம்!

கடமை உணர்வானால் கருமம் என்றாகும்!
பெற்றோர்க்கு உதவல்,
பெரியோரடி பணிதல்,
கற்றோர் வழிநடத்தல்,
கவினுலகு பயன்விளைத்தல்,
உற்ற நாட்டுக்கு
உயிர்கொடுத்தல், உறவளித்தல்,
சற்றும் சளைக்காமல்
சாதித்தல், வேதித்தல்,
எண்ணித் துணிதல்,
எடுத்தவழி முடித்துயர்தல்,
தன்னை அறிதல்,
தனக்குகந்த தகையாலே
எண்ணம் விரித்தல்,
எதிர்பலனைப் பாராது
திண்ணம் நிறைத்தல்,
தீர்மானம் உணர்கருமம்!

கடமை கடனானால் பணிஎன அதுஆகும்!
எய்தும் ஊதியத்தால்
எடுத்த செயல்முடித்தல்,
செய்நன்றி காட்டுதற்குச்
செய்யும் பயன்கொடுத்தல்,
புகலளித்த நாட்டைப்
புனிதமென நேசித்தல்,
பூவுலகு தரும்கொடையை
புரிகடனாய் விடுத்தல்,
உழைத்தல், உருபயனால்
ஊதியமும் உயர்நிலையும்
பிழைக்கும் வழிதேடல்,
பிழையின்றி வாழ்வித்தல்,
மரம்நடுதல், உரமிடுதல்,
மாசுதவிர் சூழ்நிலைக்கு
கரம்தருதல், இயற்கைவழி
கலந்துதவல், உலகத்தில்
பெறுவதை விடவும்
பெரிதாய் உலகுக்குத்
தருகின்ற கடமையிது
தவிர்க்காத கடனாகும்.

கடமை அன்பானால் சேவை என்றாகும்!
தொலைநோக்கல், பயன்கருதாத்
தூய்மை மனமாக்கல்,
வாடியது கண்டு வாடல்,
வாட்டம் போக்கல்,
இரத்தல், இருப்பதனை
இல்லையெனா தளித்தல்,
சிரித்தல், சீர்மையினால்
சிரிப்புவிதை பதித்தல்,
கொடுமை நடந்தால்
கொதித்தல், அறிவார்ந்து
அருமை செய்தல்,
அமைதி பரிமாறல்,
தனக்கென்ன பயனென்று
கணக்கென்றும் பார்க்காத
அன்பார்ந்து கடமை
ஆற்றல்நற் சேவையாகும்

பணி – பெற்ற, உற்ற கடனின் பொறுப்பு
சேவை – மற்ற, சுற்ற நலனில் விருப்பு
கருமம் – மனிதப் புனித உணர்வுத் தொகுப்பு
தருமம் – மானுட நேய இயல்பின் படைப்பு

Pages: 1 2 3 4 5 6 7 8

Related Posts

Share this Post