Pages: 1 2 3 4 5 6 7 8
Pages: 1 2 3 4 5 6 7 8

சந்திப்பூ

நண்பர்களே

ஒன்றாய் இருக்கிறோம் – கவிதை
என்றாய் இனிக்கிறோம் – அன்பு
நின்றால் நிலைக்கிறோம் – இதை
நித்தம் துதிக்கிறோம்!

அடுத்த அரைமணி – நாம் எடுத்த பெரும்பணி
இனித்த தமிழ்மலர் – தேன் தொடுத்த கவிப்பணி

சாயங்காலம் – கதிர் சாயுங்காலம்
சந்திநேரம் – சாந்தி மேவும்நேரம்
சந்திப்பதால், சந்தியிது என்பதால்
சந்திப் பூ எனும் கவிதை சந்திக்கப் போகின்றோம்.

கவிதையிதன் நோக்கம் என்ன?
உங்கள் காது கடன், சிந்தை யுடன்.
தமிழன்னை மடிதேடும் தாகம் பிரதி பலன்.

சந்திப்பு என்றால்
மாறுபட்ட இரண்டும்
மறுபடியும் சேருவது;
மாறுதலைக் காட்டுவது;
பகலை இரவு மாலையிடுவது;
இருளைக் காலை கோலமிடுவது;

சந்திப்பு செயல் என்றால், சந்திப்பூ பலன்!
சந்திப்பு விதை என்றால், சந்திப்பூ மலர்!

சந்திப்பூவின்
மணமென்ன? நிறமென்ன?
குணமென்ன? குறிப்பென்ன?
அது
சந்திக்கும் சக்திகளின் சங்கமத்தைப் பொறுத்தது
சந்திக்கும் காலத்தின் பங்கினைப் பொறுத்தது

சந்திப்பூக்கள்
நாம் சாதித்திருப்பவை
நம்மைச் சோதித்திருப்பவை

இரண்டானவையின் ஒருமைதான் – சந்திப்பு.
இதனால் பெறும் அருமைதான் – சந்திப்பூ.

இரண்டுபட்ட தாலேதான்
எல்லாமே பலவாகும்!
ஒன்றுபட்ட போதுதான்
உண்மை தெளிவாகும்!

நீரும் நீரும் சந்தித்தால்
ஒன்றாய்ப் போவது – சந்திப்பூ
நீரும் பாலும் சந்தித்தால்
ஒன்றிப் போவது – சந்திப்பூ
நீரும் நெய்யும் சந்தித்தால்
ஒட்டாதொட்டல் – சந்திப்பூ
நீரும் நெருப்பும் சந்தித்தால்
ஒன்றில் மறைவது – சந்திப்பூ

எழுத்தும் பொருளும் சந்தித்தால்
எண்ணம் அங்கே – சந்திப்பூ
எண்ணம் வாக்கில் சந்தித்தால்
உண்மை அங்கே – சந்திப்பூ

வாக்கும் செயலும் சந்தித்தால்
வாழ்க்கைப் பயணம் – சந்திப்பூ
வாழ்வும் சாவும் சந்தித்தால்
வாழாச் சாவு – சந்திப்பூ

திட்டமும் வாய்ப்பும் சந்தித்தால்
தீரா நலமே – சந்திப்பூ
பட்டமும் காற்றும் சந்தித்தால்
பறக்கும் சுகமே – சந்திப்பூ

தமிழர் இருவர் சந்தித்தால்
தவறா ஆங்கில உரையாடல்
தமிழர் தமிழைச் சிந்தித்தால்
தமிழால் இனிமை – சந்திப்பூ

வறுமையை உறுதி சந்தித்தால்
வலிமையும் நலமும் – சந்திப்பூ
வறுமையைக் கவலை சந்தித்தால்
வலியும் துயரும் – சந்திப்பூ

பதவியைப் பணிவு சந்தித்தால்
பலமும் புகழும் – சந்திப்பூ
உதவியை நன்றி சந்தித்தால்
உயர்வும் சாந்தம் – சந்திப்பூ
காதலர் கண்கள் சந்தித்தால்
கவிதை உணர்வு – சந்திப்பூ
காதலைக் காலமும் சிந்தித்தால்
காண்பவை அன்பு – சந்திப்பூ

அன்புதானே வானும் நிலமும் நிறைப்பது.
சந்திகால வானத்தைப் பாருங்கள்!
இறைந்து கிடக்கும் இருளும் ஒளியும்
கலந்து கிடக்கும் கவிதை படைக்கும்;

வட்டநிலா வானிலுலா வந்தது;
கிட்டவரத் தொட்டணையச் சொன்னது;
உற்றதனைப் பார்க்கையிலே பெண்ணது;
சட்டெனவே முகில்போர்த்திக் கொண்டது;
மின்மினியாய் விண்வெளியில் சொட்டுது;
விண்மீன்கள் கண்சிமிட்டிக் கொட்டுது;
இயற்கையதன் இயைவு அன்பால் ஆனது
இயல்பான சந்திப்புத் தானது !

எனவே

அன்பினை அள்ளிப்பூசி, ஆடையாய் அணிகலனாய்
தெம்புறத் தெரிய வைத்து, தெரிந்தவர் தெரியாதவரை,
நண்பராய் நல்லவராக, நயப்பதால் சந்திப்பதனால்,
சினப்பூ தம்விட் டோடும்; சிரிப்பு நம்பிக்கூடும்;
களிப்பு கைப்பலனாகும்; கடவுளைக் காணக்கூடும்.

எண்ணங்களின் இடைவெளியைச் சந்தித்தால்
ஏகாந்தம் புரியும் – சந்திப்பூ
வண்ணங்களின் வழிமுறையைச் சந்தித்தால்
வடிவொன்றே அறியும் – சந்திப்பூ

வரணா என்னும் வளைபுருவம் வடிவாய் நாசி சந்திப்பில்
“வரணாசி” எனும் ஞானவரம் வாய்த்துக் கிடக்கும் – சந்திப்பூ

சுவாசக் கவிதை உணர்வுகளை வாசித்தறியும் பயிற்சியினால்
மோட்சக் கதவைச் சந்தித்தால் முனையும் ஞானம் – சந்திப்பூ

திரைகடல் ஓடினோமே திரவியம் தேடினோமே
குறையிலை என்றா சொல்வோம்? குழப்பத்தில் ஆழுகின்றோம்,

நிறைவெது? பொருளில்லை!
நிலையில்லா உலகில் இல்லை!
நிறைந்தது சந்திப்பவையின்
நிலையதில் பூத்ததாகும் !
துன்பமும் இன்பமும் சந்தித்தால் தானே
சுகம் புரியும்! இடர் அறியும்!

சித்தார்த்தர் பிறந்தாரே? சுகித்தாரா?
கேட்பனவும், கேளாதனவும்
கொட்டிக் கொடுத்து சுகம் ஒன்றே
சுட்டிக் காட்டிக் காத்தார்களே?
சுகம் எங்கே புரிந்தது அவருக்கு?

மற்றொருநாள் வீதியிலே
மரணத்தை, பிணியை, முதுமை மாற்றத்தை அறியும்போது,
சுகமும் துயரும் – சந்திப்பு! சுத்த சந்யாஸம் – சந்திப்பூ!

ஒளிக்கு எப்படித் தெரியும் இருள்?
சூரியனைக் கூப்பிட்டு
‘எங்கே காட்டு எனக்கு இருளை’
என்றால் காட்டுவனா? முடியாதே?

அவன் போகுமிடமெல்லாம் பேரொளியின் பேரிரைச்சல்!
எங்கே அவன் அறிவான் இருட்டு?

பதில் கூற மறந்தவனே கடல் மூடிப் போகையிலே,
இருள்கூடி வருகிறது. இதில் என்ன புரிகிறது?
மாறுபட்ட அனுபவங்கள் மனிதருக்கு வேண்டும்!
மாறுதலில், மறைவினிலே இறையுணர்வு தோன்றும்!

சுகத்தைப் போன்றதே துயர்;
அகத்தைப் போன்றதே புறம்;

வெற்றியைப் போன்றதே தோல்வி;
வேதனை போன்றதே சாதனை;

துருவங்கள் இவற்றின்
உருவங்கள் சந்திக்கையிலே,

உற்றுப் பாருங்கள் ! உண்மை தெரியவரும்;
நன்மைக்கும் தீமைக்கும்
நடுவில் நாம் நிற்கின்றோம்!

சந்திப்போம்! சிந்திப்போம்!
சாவதனைச் சாவிப்போம்!
சாவதனைச் சாவிப்போம்!

Pages: 1 2 3 4 5 6 7 8

Related Posts

Share this Post