Pages: 1 2 3 4 5 6 7 8
Pages: 1 2 3 4 5 6 7 8

வாலியார் வலியார் அதனால்…….

வாலியார் வலியார் அதனால்…….

பாதிவெந்த சோறுஎனப் பாரதத்துச் சுதந்திரத்தை
வீதியிலே விசுகின்ற வேதனையைக் கவிதைவழி
வாரம்வரும் வாலிதரும் வாக்கில் பெரும்பாரம்!
வளர்ந்த வலி, வளரும் வழி தந்தால் உபகாரம்!

விடுதலைப் பசியடைந்தார் விருந்தெங்கே எதிர்பார்த்தார்?
சுயமரியாதைச் சோறுண்ண முடியாமல்
பயமரியாது பரங்கியரின் துப்பாக்கி
சுடுதலைச் சுகித்தன்றோ சுதந்திரம் சமைத்தார்!
ஆற அமர ஆள்கின்ற அந்நியனே,
அறுசுவை அரசாக ஆக்கித் தரட்டும் என
சோறுண்ணச் சோர்வதுவோ, சுய மரியாதை?
அவமரியாதை!!

வெந்தாலும், சரியாக வேகாமற்போனாலும்
சிந்தாமல், மானம் சிதையாமல் நம்வீட்டை
மீட்போம் முதலில்! தாய்ப்பால் குடித்து
காப்போம் நாடு! கவனமாய்ப் பின்சமையல்என
அவசரத்தில், ஆத்திரத்தில், ஆன்மபல வேகத்தில்
பெற்றதல்லவோ பேசரிய நம்நாடு!

எத்தனையோ சாதனைகள் படைத்து விட்டோம்!
எவ்வளவோ சோதனைகள் துடைத்து விட்டோம்!
இத்தினத்தில், சுதந்திரம் ஏற்ற திருநாளில்,
நித்தம் உழைக்கின்ற நியமம் ஏற்கின்றோம்!
தடியேந்தி மீண்டும் தாத்தா வரவேண்டி
மடியேந்தி நாம் எதற்கு, மன்றாட வேண்டுமினி?

வாலியார் போன்ற வரம்பெற்ற கவியாளர்
போலியாய் பக்கங்கள் போக்கடிக்க எழுதாமல்
உறுதிக்கு வித்திட்டு, உள்ளத்தில் சத்திட்டு
எழுதட்டும், ஏனென்றால், என்போன்ற சாமான்யர்
இலக்கியமாய் அவரெழுத்தில் இலக்கு இயம்ப ஏங்குகின்றார்.
விளக்கு அவர்கவிதை, விடுதலைக்குத் துணை வரட்டும்.

மீ. ராஜகோபாலன்

Pages: 1 2 3 4 5 6 7 8

Related Posts

Share this Post