Kasi Panchakam

பணிவுரை

பகவான் ஆதிசங்கரர் இயற்றியதாகப் பெரியோர்களால் கருதப்பட்டுப் போற்றிப் பாதுகாத்துப் பூஜித்து வருகின்ற நூல்களில் ஒன்று, ‘காசி பஞ்சகம்’ எனும் இந்த அரிய நூல். ஸ்மஸ்கிருத மொழியிலே, ஐந்தே பாடல்களில், வேதாந்த உண்மைகளைத் திரட்டி, தீர்த்த யாத்திரை எனும் புனிதப் பயணங்களிலே தலை சிறந்ததாகக் கருதப்படும் காசி நகரச் சிறப்பையும், அங்கே அடையும் அளவிலா பெருநிதியமாகிய ஆன்ம அறிவையும் உணர்த்தும் விதமாக, பகவான் ஆதிசங்கரர் உயரறிவை அள்ளித் தருகின்ற அரிய நூல் இது. புனிதத்தில் புனிதமான மணிகர்ணிகா படித்துறையின் வழியே, மாசறுக்கும் மாசிலாக் கங்கையிலே மூழ்கி எழுந்து, அந்த அறிவுச் சுழலின் ஆனந்தத்தினால், ‘நான் யார்’ எனும் வினாவை விளைத்து, அவ்வினாவின் விடையாகத் தானே திகழ்ந்து, ‘ஆன்மாவாகிய நானே ஒளி பொருந்திய காசி நகரம்’ எனும் மிகப் பெரிய தத்துவப் பேரறிவை முழங்கும் இப்பாடல்கள், நமக்குக் கிடைத்த பேரமுதம்.

நிலையற்ற உலகின், மாறி மாறிவருவன சுக துக்கங்கள் என்பதை உணர்ந்து, அதனால் கர்ம பலனை எதிர்பார்த்து மட்டுமே காசிப் பயணத்தைச் செய்யாமல், முழுமையான ஆன்ம உணர்வை அடையும் பொருட்டுச் செய்யும் தீர்த்த யாத்திரைகளே நிலையான செல்வம் அடையும் வழி என்பதைத்தான் காசி பஞ்சகம் அருள்கின்றது. அத்தகைய அரிய உண்மை புலப்பட்டு விட்டது என்பதாலேயே, ஜீவன் முக்தரான ஆதி சங்கரர், காசி தன்னுள்ளேயே இருப்பதாக உணர்ந்து, காசி எனும் நகரத்தை வெளியிலே தேடி அலைகின்ற பயணங்கள் கூட எதற்கு என்று கேட்டு, உயர்வு நவிற்சி அணியாலே, காசியின் புகழை வலியுறுத்துகின்றார்.

இந்த ஐந்து பாடல்களும் ‘அத்வைதம்’ அல்லது இரண்டற்ற ஒருநிலையே உண்மை எனும் வேதாந்த சாரத்தை, காசி நகரப் பெருமைகளைத் துதிப்பதன் மூலம், நமக்கு எடுத்துரைக்கின்றன. இப்பாடலின் கருத்துக்களை, முற்றும் தன்னை உணர்ந்து, முக்தி எனும் விடுதலையினை இவ்வுடல் இருக்கும்போதே அடைந்து விட்ட நிலையில் இருக்கின்ற ஜீவன் முக்தர்களுடைய கருத்தாக மட்டுமே நாம் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். ‘என்னுள்ளேயே காசியும், கயையும், பிரயாகையும், கங்கையும், காசி விஸ்வநாதரும், பவானி அன்னையும் இருப்பதனால், எதற்காக வேறு புண்ணிய யாத்திரைகள் செய்ய வேண்டும்’ என்று ஆதி சங்கரர் இறுதியில் கேட்கிறாரே என்று வாதித்து, என்னைப்போன்ற எளிய மக்கள், புனித யாத்திரைகளையும், பெரியோர்கள் காட்டிய தர்மப் பணிகளையும், முறைகளையும் விட்டு விடலாம் என எண்ணினால் அது பேதமை.

ஜீவன் முக்தராக ஆதி சங்கரர் சொல்லிய கருத்துக்களின் சாரத்தை நாம் உணர்ந்து கொண்டால், நாம் அடைய வேண்டிய உயரமும், தூரமும் மிக அதிகம் என்பதுபுரியும். அப்பயணத்திற்குப் பல படிகளும் ஏற வேண்டும் என்ற முக்கியமும் புரியும். அன்பு, பக்தி, தியாகம், உண்மை தேடுதல், தீர்த்த யாத்திரை செய்தல், தவம் எனப் பலவிதப் பண்புகளும், கடமைகளும் ஏற்று முடிக்க வேண்டியதன் முக்கியத்துவமும் நமக்கு விளங்கும். அந்த அறிவோடு, நாம் என்றேனும் ஒரு நாள் காசி நகருக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெறுவோமேயானால், காசி பஞ்சகம் உணர்த்திய கருத்துக்களை எல்லாம் மனதில் விளக்காக ஏற்றி வைத்து, அதன் வெளிச்சத்திலேயே, அங்கே நல்லுண்மையை, நல்லருளை நாம் எல்லோரும் தேடிட முடியும். அந்தக் குறிக்கோளே, இந்நூலைப் படிப்பதன் நோக்கமாக வேண்டும்.

கடனுக்குக் கருமங்கள் செய்து, கங்கையிலும் ஒரு முழுக்கைப் போட்டுவிட்டு, எதையாவது காசியில் விட்டு விட்டு வரவேண்டும் என்ற சொல்லப்படும் நியதியை நினைத்து, ‘இனிமேல் பாகற்காய் உண்ணேன்’ என ஒரு பயனுமில்லாத உறுதி ஒன்றையும் எடுத்துக் கொண்டு, ஊருக்குத் திரும்புகின்ற அலட்சியப் போக்கு இல்லாமல், காசிப் பயணத்தின் ஒவ்வொரு கணத்தையும், சுகத்தை நோக்கி நடத்துகின்ற வழியாக எண்ணி, நம்முடைய புற, மன அழுக்குகளைக் கங்கையிலே கொட்டும்போது, ‘அன்னையே, என் அழுக்கை அகற்றிய சுத்தப் பெருவெளியே’ எனவெல்லாம் நெகிழ்ந்து, காசியைத் தானாகவே நினைத்து, அங்கே, சுத்தமும், புனிதமும் நிறைவதற்கான சேவையையும், பிரார்த்தனைகளையும் திரும்பத் திரும்ப அளித்து, நாம் திருந்தியவர்களாகத் திரும்பி வருவோம். அதற்காகவே, காசி பஞ்சகம் எனும் இவ்வரிய பாடல்களின் பொருளையும், தத்துவ விளக்கங்களையும் நாம் அறிந்து உணர்வது அவசியம். அந்த ஏக்கத்தினாலயே, அரிய அமுதான இப்பாடல்களை, சம்ஸ்கிருதம் அறியாதவர்களும், தமிழ் (ஆங்கில) மொழி வாயிலாகப் பயிலவேண்டும் எனும் நன் முனைப்பால், குருவருளின் காப்பினால், திருவருளின் சேர்ப்பினால், இங்கே, இவ்வாறு மொழி பெயர்க்கப்பட்டது.

காசி பஞ்சகம் என்றால், காசி பற்றிய ஐந்து பாடல்கள் எனக் கொள்ளலாம். ஐந்து பாடல்களும், நம் உள்ளே உண்மையை விதைப்பன. ‘உள்ளே’ இருக்கும் உண்மையை விளைப்பன. அகத்தின் மெய்ப் பொருளாக விளங்கும் ஐந்து பாடல்கள் என்பதால், ‘பஞ்சகம்’ எனும் சொல்லுக்கு ‘ஐயகமெய்’ என மாற்றும் உரிமை பணிந்து கோரப்பட்டது. ஐயம் அகற்றும் மெய் என்றும் இதனைப் பொருள் படுத்திக் கொண்டாலும் பொருத்தமே. இம்முயற்சி, ஆத்ம திருப்திக்காகவும், நாம் இதனை நன்கு பயில வேண்டும் எனும் ஆவலினாலும், ஆக்கப்பட்டது. இதில் தவறுகள் இருப்பின் அவை யாதும் என் பொறுப்பே. அவற்றைக் குருவருளால் தீர்ப்பதும் என் கடனே. இதில் ஏதேனும் குணம் இருப்பின், அதுவும் என் குருவடிகள் தரும் அருளே.

மீ. ராஜகோபாலன்
லண்டன்
27 – 02 – 2014

Share this Post