முடிவுரை

>

‘நான் யார்’ எனும் அறிவே முக்தி!

அவ்வறிவினைப் பெறுவதற்கு, ‘சித்த சுத்தி’ எனும் தெளிந்த மனதை, முறை தவறாமல் கரும யோகத்தினாலும், ‘திடமனம்’ எனும் உறுதியான மனதினை, பக்தி யோகத்தினாலும், முதலில் பெற வேண்டும். அத்தகைய மனதினை அடைந்த பிறகே, அழியாமல் அல்லல் படுத்தும் ‘நான்’ எனும் ஆணவத்தை அழிக்கும் ஞான யோகத்தினைப் பெற முடியும். அந்த ஞானமாகிய மேலான அறிவே ‘ஆன்மனை’ அடையும் பாதை.

ஆன்மாவை அறிவதால், அதை அடையாலாம் என்பது எப்படி இயலும்? அடைவது என்பது முயற்சியின் பயன் அல்லவா? அறிவதும் அடைவதும் வெவ்வேறாக அல்லவா நமக்குத் தோன்றுகின்றது? வேதாந்தம் என்ன சொல்கிறது?

அடையும் பொருட்கள் இரண்டு வகை – ‘ஸாத்ய வஸ்து’ அதாவது செயலினால் (அது அறிவு, முயற்சி, பிறர் உதவி எனப் பல சக்திகளாலும்), நம்மிடம் இல்லாத ஒன்றானதாக அடைவது ஆகும். உலகில் நாம் தேடி அடைவன எல்லாமே
இத்தகைய பொருட்கள் தான்.

மற்றொரு வகை ‘சித்த வஸ்து’ அல்லது ஏற்கனவே அடைந்த பொருளை மீண்டும் அடைவது. அடைந்த பொருளை மீண்டும் அடைவது என்பது எதற்காக? நாம் அப்பொருளை அடைந்திருந்தாலும், அறியாமையினால், அப்பொருள் நம்மிடம் இல்லை என நினைத்து, அப்பொருளைத் தேடுவதுதான் அதன் பொருள்.

அப்படியானால், அடைந்த பொருளை மீண்டும் அடைய உதவுவது எது? அது அறிவுதானே அன்றி, செயல் அல்ல! ‘நம்மிடம் அது இல்லை’ எனும் அறியமையை விடுதல் அல்லது ‘நாம் ஏற்கனவே அடைந்திருக்கிறோம், அதை அடைய வேறு எந்தப் புறச்செயலும் தேவையில்லை’ என நாம் அறிவதே போதும்.

‘தலைக்கு மேலே இருக்கின்ற’ மூக்குக் கண்ணாடியைச் சில நிமிடங்கள் ‘காணோமே’ எனத் தேடினாலும், அது தலையிலேயே இருக்கிறது எனும் அறிவினாலேயே அப்பொருளை மீண்டும் அடைவது போலத்தான், தன்னுள்ளே இருக்கும் பிரம்மம் ஆகிய ஆன்மாவை, நாம் அறிவதாலேயே, நம்மால் அடைய முடிகிறது.

ஆழச் சிந்தித்தால், அடையப்படுவதும், அறியப்படுவதும் கூட நிலையற்றதல்லவா? நம்மிடம் இல்லாத பொருட்களை, நாம் எப்போதாவது பெற்றாலும், அவை மீண்டும் எப்போதாவது போய்விடும். இது உறுதி. உடல் என்று ஒன்று ஒரு சமயத்தில் நமக்குக் கிடைத்தது. அதனால்தான், ஒரு சமயத்தில் அவ்வுடல் போய்விடுகிறது. உடலால் அடையும் எல்லாப் பொருட்களும் அப்படியே நம்மை விட்டுப் போய்விடும். ஆனால் எப்போதும் இருப்பதை நாம் அடைய வேண்டியதில்லை. அறிய வேண்டியதில்லை. அதை நாம் இழக்கவில்லை எனும் அறியாமையை இழப்பது ஒன்றுதான் தேவை. இதனைத் தருவதே ஞான யோகம். அதனால், நாம் அந்த ‘சித்த வஸ்து’ வாகவே ஆகி, சத்தியமாக இருக்கிறோம்.

இப்பெரிய, இரகசியமான உண்மையினை உணர்த்தும் செயலே, புனித யாத்திரையாகிய காசிப் பயணம். இதனைச் சுட்டிக் காட்டி, நமக்குள் விளங்கும் அறிவாகிய தீபத்தின் திரியினைத் தூண்டி, ‘சித்த வஸ்து’வாகிய ஆன்மனை அடையச் செய்வதே ‘காசி பஞ்சகம்’ எனும் இந்நூலின் குறிக்கோள்.

எண்ணற்ற பெரியோர்கள், காசி பஞ்சகம் எனும் இக்கரும்பின் சாறினைப் பல வகையாகவும் பிழிந்து, புதுப்புதுவிதமான பொருட்சுவையும் அருட்சுவையும் அமையத் தந்துள்ளார்கள், தருவார்கள். அதனால், இவ்வறியானின் உரை, காசி பஞ்சகம் எனும் கதிருக்குக் காட்டிய சிற்றொளி தீபமே என முடிக்கிறேன்.

Related Posts

Share this Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*