Manisha Panchakam – Context (Tamil)
காசி நகரத்தில் காட்சி
முகவுரையில் கூறியபடி, தம்மை விலகிப்போ எனக் கூறிய துறவிகளையும், அவர்களது தலைவரான ஆதி சங்கரரையும் நோக்கிப் புலையன் கேட்ட கேள்விகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன. இவையே மனீஷா பஞ்சகம் எனும் மாபெரும் ஞானப் பொக்கிஷத்தை வெளிக் கொணர்ந்த, ஆழத் தோண்டும் கேள்விக் கோடரிகள். இக்கேள்விகளில் ஆத்ம ஞானம் நிரம்பி வழிகின்றது.
यतिवर दूरीकर्तुम् वांछसि किम् ब्रूहि गच्छ गच्छेति
யதிவர தூரே கர்தும் வான்சஸி கிம் ப்ரூஹி கச்ச கச்சதி ?
விலக்கியே வைக்க வேண்டி விழைந்தனை துறவர் ஏரே!
கலமிது உடலோ சடலம் காயமாம் அன்னப் பிண்டம்!
உளமொளி ஆன்ம ரூபம் உன்னுள்ளும் விரிந்த தாகும்!
பொருள்:
துறவிகளில் சிறந்தவனே! எதனை விலகிப்போ, விலகிப்போ எனக்கூறி வேற்றுமையால் தள்ளி வைக்க விழைகிறாய்? உன்னிடமும் என்னிடமும் இருக்கிற உணவாலான இந்த உடலையா? அல்லது ஒருவேளை உள்ளே இருக்கின்ற, அதே சமயம் எங்கும் விரிந்த ஆத்மாவையா?
முதல் வரி:
அன்னமயாத் = உணவாலாகிய (என்னுடல்); அன்னமயம் = உணவாலானது (உன்னுடையதைப் போல); அத வா = அல்லது ஒருவேளை; சைதன்யம் = அறிவுரூபம் (ஆத்மா); ய மேவ = அதுவும் கூட; சைதன்யாத் = (எங்கும் உள்ள) அறிவுரூபம்;
இரண்டாம் வரி :
யதிவர = துறவரில் சிறந்தோனே; தூரே கர்தும் = தள்ளி வைத்தல்; வான்சஸி = மிகவும் விரும்புகின்றாயே; கிம் = யாரை?; ப்ரூஹி = (வெறுப்பில்) சப்தமிடுகிறாயே; கச்ச கச்ச இதி = விலகு, விலகு என;
விளக்கம் :
உடல் சடமானது. அதனால் அதற்குச் செயலறிவு ஏதும் கிடையாது. அப்படியானால், அவ்வுடலைத் தள்ளிப்போ எனச் சொல்லி என்ன பயன்? மற்றும் எல்லா உடல்களும் உணவாலாகியது என்பதால் அவைகளின் ஆதார காரணம் ஒன்றுதானே? மண்ணாலான பாண்டங்கள் பலவாகினும், மண் ஒன்றல்லவா?
‘தேகம் அன்ன மய கோசம்’ என்பது, தேகமாகிய தூல உடல்கள் எல்லாம், அன்னம் எனும் உணவால் ஆன மாற்றமே என்பதைக் குறிப்பது.
‘மயம்’ என்றால், ஒன்றிலிருந்து மாறுபாட்டுத் தோன்றுவது என்று பொருள். உணவு என்பது, எதனால் ஒன்று சமைக்கப்பட்டதோ அதனைக் குறிப்பது ஆகும். பஞ்சபூதங்கள் ஆகிய ஆகாயம், காற்று, தீ, நீர், மண் இவற்றின் கலப்பாலேயே அகிலத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் சமைக்கப்பட்டுள்ளது. இது விஞ்ஞானத்தாலும் நிரூபணமான உண்மை.
அந்த ஐந்து பூதப்பொருட்களாலேயே உணவாகிச் சமைக்கப்பட்ட உடல்கள், உலகில் பல வேறுபாடுகளுடன் இருந்தாலும், அவற்றின் வெளித் தோற்றத்தின் வேற்றுமையைக் கடந்தால், எல்லாச் சடப்பொருட்களின் மூலமும் இந்தப் பஞ்சபூதங்களாகவே ஆகிறது. ஆகையால் உடலை உடல் விலக்குவது என்பது வெறும் தோற்ற மாயம் அல்லவா?
ஒருவேளை, சடலமான உடல் அறிவற்றது என்பதைப் புரிந்து கொண்டதால், விலகிப்போ, விலகிப்போ எனச் சொன்னது, உள்ளிருக்கும் அறிவினைக் குறித்தா என்றால், அதுவும் தவறல்லவா? ஏனெனில் எல்லா உயிர்க்குள்ளும் உள்ள ஆத்மா என்றும் நிலைத்த, அறிவு மயமான, ஆனந்தம் (ஸத், சித், ஆனந்தம்) ஒன்றே அல்லவா? அந்த ஆத்மா எல்லா இடத்திலும் நிறைந்துள்ளதல்லவா? அதனை விலக்குவது எப்படிச் சாத்தியம்?
வெளிவிவகாரத்தில் மயங்கி, வாழ்ந்தும் மடிந்தும் சுழலுகின்ற சாதாரண மனிதர்களுக்கு வேண்டுமானால், வெளிப்புறமான வேறுபாடுகளை மட்டுமே பார்க்கின்ற அறிவீனம் இருக்கலாம்! ஆன்ம தத்துவ விசாரணையில் ஈடுபட்டிருக்கும் ஞானிகளுக்கு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் பக்குவம் அல்லவா இருக்க வேண்டும்? அதனால்தான் புலையன், ‘துறவர்களில் சிறந்தவரே’ என அழைத்து, இத்தகைய வேறுபாட்டினைச் சாதாரண மனிதர்கள் வேண்டுமானால் காணலாம், எப்படி ஞானியானவர்கள் இப்படியான வெறுப்பைக் காட்டக் கூடும் எனக் கேட்கிறான்.
ஒருவேளை இந்த உண்மை தெரிந்திருந்தாலும், வெளி உடல் தூய்மையற்று இருப்பதால், உள்ளே இருக்கும் அறிவும் தூய்மை இழந்திருக்கும் என்ற ஐயம் வந்ததோ என எண்ணி, அடுத்த கேள்வியினைப் புலையன் கேட்கிறான்.
अयम् श्वपचोयमित्यपि महान् को अयम् विभेद भ्रमः?
ஸஹஜானந்தாவபோதாம்பூதௌ விப்ரோ
அயம் ஷ்வபசோ அயம் இதி அபி
மஹான் கோ அயம் விபேத ப்ரஹம: ?
திவ்யபரி பூரண சுகமாய்
உரைவது உள்ளொளி ஆத்மா!
உயிர்களுக் கெல்லாம் அகமாய்
முறையிதை முனியோய் அறிவீர்!
மூண்டதோர் பேதத் தாலோ
மறையவன் ஒருவன், மற்றோன்
மரித்தநாய்ப் புசிப்போன் என்றீர்?
பொருள்:
அலைகளற்ற ஆனந்தக் கடலாக நமக்குள் நெருக்கமாகத் தெளிவாக இருப்பதல்லவா ஆன்மா? அந்த ஞானம் அல்லவோ சரியான அறிவாகவும் புரிந்து கொண்ட பயனாகவும், ஞானவழியில் செல்பவருக்கு இருக்க வேண்டும்! (அவ்வாறு இல்லாமல்) எதனால் ‘இவன் நாயைப் புசிக்கும் புலையன்’ என்றும் ‘இவன் அந்தணன்’ என்றும் வெறுப்பால் வெளி வேறுபாட்டினை, வேறுபாடு இல்லாத பிரம்மத்திலே உம்மால் காணமுடியும்?
முதல் வரி:
பிரத்யக் = தெளிவாக அருகில் உள்ள; வஸ்துனி = பொருள்; நிஸ்தரங்க = அலைகள் அற்ற (அமைதியான); ஸஹஜ ஆனந்த = இயற்கையிலேயே மாறாத ஆனந்தமான; அவபோத = சரியான அறிவு, புரிந்து கொண்டமை; அம்புதௌ = கடலாகிய; விப்ரோ = (வாழ்வின் குறிக்கோளை ஆன்ம தத்துவத்தால் அறிய முயலும்) அந்தணனே;
இரண்டாம் வரி:
அயம் = இது (இவ்விடத்தில் இந்த வெறுப்பு); ஷ்வ பசோ = நாயைப் புசிப்பவன் (புலையன்); அயம் இதி அபி = என்றும், மற்றும்; மஹான் = உயர்ந்தவன் ; கோ அயம் = எதனால் இவ்விதமான; விபேத ப்ரஹம: = வேறுபாடு ப்ரஹ்மத்தில் (காணமுடியும்?)
விளக்கம் :
புலையனின் வினா, முதல்வரியில் ஆத்மாவின் தன்மையைக் குறிப்பிடுகிறது. அதனாலேயே, புலையன் ஓர் ஆத்ம ஞானி என்பது தெரிகிறது. நமக்கு மிக அருகில் யார்? நாமே அல்லவா? அப்படி என்றால் அந்த ஆத்மா நாமே. அந்த ஆத்மா எப்படிப்பட்டது? ஆனந்தமயமான, எந்த விதமான அலைகளும் இல்லாத கடலைப்போல நிறைந்து இருக்கிறது.
புலையனின் கேள்வி அத்வைத ஞானத்தையும், அந்த ஞானத்தின் முடிவு என்பது அளவிலா, முடிவிலா ஆனந்தம் என்பதையும் காட்டுவதாக இருக்கிறது. ஆனந்தம் அல்லது முற்றிலும் நிறைவுற்று இருப்பது ஒன்றே, எல்லா உயிர்களின் குறிக்கோள். அவ்வானந்தம் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாததன் காரணத்தாலேயே, பலவிதமான முயற்சிகளால் ஒவ்வொரு உயிர்களும், உடல், மனம், மதி என்னும் உபகரணங்களைத் துணைக் கொண்டு, உலகில் செயலாற்றுகிறது. ஆனால் அந்தப் பரமானந்தம், என்றும் உள்ளதாக (ஸத்), அறிவு மயமாக (சித்) முழுமையான நிறைவாக (ஆனந்தம்) நமக்குள்ளேயே, ஆன்ம ரூபமாக விளங்குகிறது. அது ஒரு அலைகளற்ற ஆனந்தக்கடலாக , நமக்குள் பரிபூரணமாக, எல்லாவற்றையும் விட மிக மிக அருகில் இருக்கிறது. எனினும், அதனை உணராமல், திக்குத் தெரியாமல், எதனைத் தேடுகிறோம் எனப் புரியாமல், நாம் வெளியே தேடி அலைகின்றோம்.
ஆத்மா பரிபூர்ணமாக, தெளிவாக இருந்தாலும், அது இருக்கும் உடல்களின் அழுக்கினால் அந்த ஆத்மாவும் களங்கப்படுமோ என்ற ஐயம் வருவது சாதாரண மனிதர்களுக்கு வேண்டுமானால் வரலாம். அப்பரிபூரண ஆனந்த ரூபமான ஆத்மா, எந்த உடலில் பிரதிபலித்தாலும் அது ஒன்றே அல்லவா? ஞான மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இவ்வுண்மை தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட ஞானிக்கு இவன் புலையன், அவன் அந்தணன், இவன் மேலோன், அவன் கீழோன் என்றெல்லாம் எப்படி வேறுபாடு காண இயலும்?
அந்த ஐயத்தினை விலக்க, புலையன் அடுத்த கேள்வியையும் கேட்கின்றான்.