Manisha Panchakam – Introduction (Tamil)

(Read in ENGLISH)

மனீஷா பஞ்சகம் – முகவுரை

மனீஷா பஞ்சகம் ஜகத்குரு ஆதி சங்கரர் ஐந்து பாடல்களிலே அளித்த நிச்சயித்த அறிவு.
தமிழில் மீ. ராஜகோபாலன்

சம்ஸ்கிருத மொழியில் ‘மனீஷா’ என்றால் நிச்சயிக்கப்பட்ட அறிவு என்பது பொருள். ஐயமின்றி, முற்றிலும் ஆய்ந்து, முழுதாய் உணர்ந்து வரையப்பட்ட தீர்மானமே மனீஷா எனப்படும். அவ்விதமான அறிவு, வெறும் நம்பிக்கையினாலோ, ஏதேனும் கொள்கைப் பிடிப்பினாலோ, அல்லது எந்தவிதமான உணர்ச்சி நிர்ப்பந்தங்களுக்காகவோ ஏற்றுக் கொண்ட முடிவு அல்ல.

‘பஞ்சகம்’ என்ற சொல் ஐந்து பொருட்களின் அடக்கம் என்பதைக் குறிக்கிறது. இங்கே ஐந்து என்பது, பகவான் ஆதிசங்கரர் இயற்றிய ஐந்து மந்திரங்களைக் குறிப்பதால், ‘மனீஷா பஞ்சகம்’ என்பதற்கு ஐந்து மந்திரத்தில் அறுதியிட்ட உறுதி மொழி எனப் பொருள் கொள்ளலாம்.

அது என்ன அறுதியிட்ட உறுதி மொழி! எது சங்கரரது தீர்மானமான, நிச்சயிக்கப்பட்ட அறிவு ?

‘ஒவ்வொரு உயிர்களுக்குள்ளும் இருக்கும் ஜீவாத்மாவும், அகில உலக சாட்சியாக இருக்கும் பரமாத்மாவும் அடிப்படையில் ஒன்றே. இந்த அத்வைத அருஞ்ஞானத்தை அடைந்து அதில் எப்போதும் நிலைத்தவர், உலக வழக்கில் புலையனாகவோ, மறை ஓதும் அந்தணனாகவோ எவராக இருந்தாலும், அவரே எனது குரு, எனது ஒளி, தேவர்களாலும் வணங்கப்படும் ஆசான்’ என்பதே ஜகத்குரு ஆதி சங்கரரின் மனீஷா. இதுவே இம்மந்திரங்களின் மூலக்கரு.

இம்மந்திரங்களை அவர் படைத்த காரணம் என்ன? காலக் கட்டாயம் என்ன? இதனை ஆய்ந்துணர்வதன் மூலம் நாம் அடையும் பலன் என்ன? இக்கேள்விகளுக்கான விடையினை அடையும் முயற்சியே, மனீஷா பஞ்சகம் எனும் நூலைப் பயிலும் பயிற்சி; அதில் புதைந்துள்ள ஒப்பற்ற உபநிடதப் பேருண்மைகளை அடையும் வளர்ச்சி.

உபநிடதங்கள் வேதங்களின் முடிவான வேதாந்த சாரத்தில் அடங்கும். அவை ஆத்மவித்யா எனப்படும் தன்னுணர் ஞானம். தைத்திரிய உபநிடதம் ‘ஸத்யம் ஞானம் அனந்தம் பிரம்மம்’ என்பதன் மூலம், நிலையான பொருளாய், முழுதான அறிவாய், முடிவில்லா ஆனந்தமாய் தன்னுள்ளே ஆத்மவடிவாக, பிரம்மம் இருக்கின்றது. இவ்வாறாக ஞானிகள் தாங்கள் அனுபவித்து உணர்ந்த அரிய உண்மைகளை, அங்கேயே ‘வெட்டொன்று துண்டு இரண்டு’ என்பது போல நேரடியாக அறிவிப்பதும், அல்லது மறைத்துக் கொடுத்த மாணிக்கமாய் புதைத்துக் கொடுப்பதும், உபநிடதங்களின் பெருமை.

தன்னை உணர்ந்த தவசிகளால் அளிக்கப்பட்ட தத்துவப் பாடங்கள் இந்த உபநிடதங்கள். அவை தன்னை அறிய முயலும் மாணவர்களுக்கு மட்டுமே படைக்கப்பட்ட விருந்து. அவற்றைப் பயிலும் தகுதியும், கிடைக்கும் உண்மைகளை உணர்ந்து கொள்ளும் பக்குவமும் உள்ள மாணவர்களுக்கே அவை பொருந்தும். மேலும், உபநிடதங்கள், எளிமையாகவும், முறையாகவும் வடிவைக்கப்பட்டு, தானாகப் புத்தகத்தை வைத்துப்படித்து அறிவதற்காக அமைந்தன அல்ல. அவை தக்க குருவின் மூலமே கற்று, உணர்ந்து விளங்கிக் கொள்ள வேண்டிய உண்மைகள்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் உண்மை அறிவினை நோக்கியே, உணர்ந்தும், உணராமலும் தமது வாழ்வில் எல்லாச் செயல்களையும் செய்கின்றனர். இதனாலேயே மனிதப் பிறவி மற்ற பிறவிகளை விட உயர்ந்தது என்பது ஹிதோபதேசம் எனும் நூலில் சான்றோர் வாக்கு.

आहार-निद्रा-भय-मैथुनानि सामान्यमेतत् पशुभिर्नराणाम्। |
ज्ञानं नराणामधिको विशेषो ज्ञानेन हीनाः पशुभिः समानाः ॥
ஆஹார நித்ரா பயம் மைதுனானிஞ்
சாமன்ய மேதத் பசுபிர் நராணாம் |
ஞானம் நராணாம் அதிகோ விசேஷோ
ஞாநேந ஹீந: பசுபிஸ் ஸ்மான:||

முதல் வரி:

ஆஹாரம் = உணவு; நித்ரா= உறக்கம்; பயம் = அச்சம்; மைதுனானிம் = காமம்; அன்ய மே = ஆகியனவே; தத் = இப்படியான பழக்கமாக; பசு பிர் நராணாம் = விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும்;

இரண்டாம் வரி:

ஞானம் நராணாம் = மனிதர்களுடைய அறிவு; அதிகோ = அதிகமானது; விசேஷா = உயர்வாக வேறுபட்டது; ஞாநேந = அத்தகைய ஞானத்தை; ஹீந: = வீணாக்கினால்; பசுபிஸ் ஸ்மான: = மனிதன் விலங்கைனைப் போலவே ஆவான்.

எல்லா உயிர்களுக்கும், உணவு, உறக்கம், பயம், காமம் முதலிய தருமங்கள் பொதுவாக இருப்பினும், மனிதன் மட்டுமே தன்னை அறியும் ஞானத்தினைப் பெறுவதற்கு வலிமை பெற்றவன். அந்த உயர்ந்த அறியைப் பயன்படுத்தாவிடில், மனிதனும் விலங்கினைப் போலவே ஆகிறான் என்பது இதன் பொருள்.

ஆத்ம வித்யா எனும் தன்னுணர்வறிவே, மனிதர்கள் அடையவேண்டிய உயர்வான அறிவு. ஞானம் எனும் சொல் அந்த உயர்ந்த அறிவினை மட்டுமே குறிக்கின்றது.அமரகோஸம் எனும் வடமொழிக் காவியம் ‘ரமாக்ஷே தீர் ஞானம் அன்யத்ர விஞ்ஞானம்’ அதாவது, தன்னை அறிவதே ஞானம் என்றும், உலக விவகாரங்களை அறிவது விஞ்ஞானம் என்று கூறுகிறது. அத்தகைய ஞானத்தை அளிப்பவரே குரு. அந்த ஞானத்தினை உணர்ந்து அதன்படியே உலகிற்குத் தம் வாழ்க்கை முறையால் வழிகாட்டியாய் இருப்பவரே ஆச்சார்யர் எனப்படுவார்.

‘ஆச்சார்யா’ என்ற சொல், சம்ஸ்கிருதத்தில் ‘ஆச்சாரம்’ எனப்படுகின்ற வேத தருமம் சார்ந்த வழியினை, எவர் தமது நடத்தையாலும், உபதேசத்தாலும் பிறருக்கு வழிகாட்டியாக இருக்கின்ற பணியைச் செய்கின்றாரோ அவரையே குறிக்கும். அத்தகைய ஆசான், எப்போதும் விழிப்புடன் இருந்து, அதாவது தனது ஞானத்திலிருந்து சிறிதும் வழுவாத வாழ்க்கையை நடத்திக் கொண்டு, கிடைக்கும் வாய்ப்புக்களை எல்லாம் தமது சீடர்களுக்கு வழிகாட்டும் வகையாகப் பயன்படுத்திப் பணியைச் செய்வது கடன். அப்படி ஒரு வாய்ப்பில் வாய்த்ததே ஆதி சங்கரரின் ‘மனீஷா பஞ்சகம்’ எனும் இந்த அரிய ஐந்து ஸ்லோகங்கள் என்று பெரியோர்கள் கூறுவர்.

ஆதி சங்கரர் அவர்களது வாழ்க்கையில், மனீஷா பஞ்சகம் புனைவதற்குக் காரணமான ஒரு சம்பவம் நடந்ததாகக் கருதுவதும் உண்டு. ஓர் நாள் சங்கரர் தமது சீடர்கள் முன்னும் பின்னும் சூழ்ந்து வர, தமது கங்கைக் குளியலை முடித்து, வட இந்தியாவில் உள்ள காசி நகரத்தின் ஒரு குறுகலான விதியிலே நடந்து கொண்டிருக்கிறார். அப்போது, எதிரே, கலைந்த ஆடையும், அழுக்கான தோற்றமும் கொண்டு, கையிலே நாய்களைக் கோர்த்து இழுத்துக் கொண்டு, நாயினைப் புசித்து வாழும் புலையன் ஒருவன் வருகின்றான். முன்னே செல்கின்ற சங்கரரின் சீடர்கள் புலையனிடம் ‘விலகிப் போ, விலகிப் போ’ எனப் பதட்டமும், வெறுப்புமாய்க் கூறுகின்றனர்.

ஜாதி பேதங்களால், தீண்டாமை எனும் தீய நோய் பரவி இருந்த காலம் அது. புலையனோ, சீடர்களின் செயலுக்குக் குருவே காரணமாக வேண்டும் எனத் துணிந்து, சங்கரரிடம் கேட்கிறான்.
‘ஏ, துறவிகளின் மேலோனே? எதனை விலகச்சொல்கிறாய்? இந்த உடலையா? இது சோற்றாலான பிண்டம் அல்லவா? சடப் பொருள் அல்லவா? அது எப்படி விலகும்? அல்லது உள்ளிருக்கும் சைதன்யமான அறிவினை விலகச் சொல்கிறாயா? அதுவும், உன்னுள்ளும், என்னுள்ளும், எங்கும் பரவி இருக்கும் ஆன்மா அல்லவா? இதனை நீ அறியாயோ? ஆகாய விளக்கான சூரியனின் பிரதி, கங்கையில் வீழ்ந்தால் என்ன, புலையன் வசிக்கும் வீதியில் தேங்கிய சாக்கடை நீரில் வீழ்ந்தால் என்ன? சூரியனுக்கா இழுக்கு? பரவிய ஆகாயம், மண் பானைக்குள் இருந்தாலும் பொன் பானைக்குள் இருந்தாலும் வேறுபட்டது அல்லவே? இத்தகைய ஞானத்தை அறிந்திருக்க வேண்டிய உமக்கு, இவன் புலையன், இவன் பிராமணன் எனும் பேதம் எவ்வாறு வந்தது?’ என்று கேட்கிறான்.

இதை விட வேறு என்ன அரிய வாய்ப்பு வேண்டும்? ஆதிசங்கரர் ஜகத்குரு அல்லவா? தமது மொழியாலும், செயலாலும் உலகிற்கு வழிகாட்ட வந்த மஹான் அல்லவா? உடனேயே, கல்விச் செருக்கு எனும்’வித்யா கர்வம்’ எதுவும் இல்லாமல், அப்புலையனை, அவ்விடத்திலேயே, அப்பொழுதிலேயே பணிந்து, ‘அத்வைத ஞான நிஷ்டையில் இருக்கும் தாங்களே எனது குருவாய் வந்த ஒளி’ என நமஸ்கரித்து, இந்த மனீஷா பஞ்சகம் எனும் அற்புதப் படைப்பை அளிக்கிறார்.

செல்வச் செருக்கு என்னும் நோய், செல்வங்களை இழக்கும்போது போய்விடும். ஆணவம் பொருட்களால் என்றால், அப்பொருட்கள் கைவிட்டுப் போகும்போது, ஆணவமும் தொலைந்து போவது இயற்கையே. ஆனால் கல்விச் செருக்கு அப்படி அன்று! கல்வி அறிவு என்பது ‘ வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது’, கொடுத்தால் குறையாது. அள்ளித்தர, அள்ளித்தர அதிகம் வளர்கின்றதல்லவா அறிவு! அதனால் கல்வியால் கர்வம் ஏற்பட்டால், அந்தக் கர்வம் இழப்பது என்பது மிகவும் கடினம். அதனாலேயே கற்போருக்குக் கர்வம் என்பது வாராது காப்பது என்பது மிகவும் முக்கியம். உண்மையான அறிவின் அடையாளம், ஆணவமற்ற பணிவு. ஞானத்தின் அடையாளம் அடக்கம்.

இந்தச் சம்பவத்தினைப் பலரும் பலவிதமாய்க் கூறுவர். இது ஒரு கற்பனைக் கதை என்பர் சிலர். சிலர், இது உண்மையே என்றும், ஆதி சங்கரர் அப்போது முற்றும் ஞான நிஷ்டையில் பயிற்சி பெறவில்லை என்றும், அவர்தான் விலகிப்போ என்று அறியாமல் சொல்லி விட்டார், தெரியாமல் தவறி விட்டார், யானைக்கும் அடி சறுக்கும் என்றெல்லாம் கூறுவர். வேறுசிலர், இது உண்மையே, ஆனால், அங்கே புலையனாக வந்தது கடவுளாகிய பரமசிவனே என்பர்.

எனது அறிவு மிகச் சிறிதென்றாலும், ஆதி சங்கரரிடம் எனதன்பு மிகப் பெரிதென்பதாலும், பகவான் சங்கரர் இளவயதிலேயே ஞானநிஷ்டை அடைந்தவர் என்பதற்குப் பல சான்றுகள் இருப்பதாலும், சங்கரர் தமக்குக் குருவாக வந்த எவரையும் இறைவனாகவே பார்த்தார் என்பதாலும், உண்மையான ஆச்சாரியக் கடமையைச் செய்தவரான பகவான் சங்கரர் தமது சீடர்களுக்கும் அதன் மூலம் உலகுக்கும் பாடம் கற்பிக்கவே, தாமே சீடர்களின் தவற்றுக்குப் பொறுப்பேற்று, புலையனை அவனது தோற்றத்திலேயே குருவாக, அவ்விடத்திலேயே ஏற்று வணங்கி, இவ்வரிய ஞானப் புதையலை அளித்தார் என்று சமர்ப்பிக்கின்றேன்.

புலையன் பரசிவனார் என்பதாலேயே ஆதி சங்கரர் வணங்கினார் என்பது, இங்கே அவரது நிச்சயித்த அறிவாகக் கூறப்பட்ட கருத்துக்குப் பாதகமாகவே முடியும். கதையோ, வரலாறோ, இதன் ஆராய்ச்சி நமக்கு முக்கியமல்ல. மாறாக, என்ன பாடங்களை இந்த மனீஷா பஞ்சகம் நமக்குத் தெளிவிக்கிறது, அதன்மூலம் நாம் அடையும் பலன் என்ன என்பதே நமது வேட்கையாக இருக்க வேண்டும்.

பாரத பூமியெங்கும் பாகுபாட்டால் சமுதாயம் பிளவுபட்டிருந்த காலம் அது. பிறப்பால் பேதம் காணுகின்ற ஜாதிப் பாகுபாட்டின் தீவிர ஆக்கிரமிப்பினால், தீண்டாமை, உயர்வு-தாழ்வு பேதங்கள் சமுதாயத்தைத் துண்டுபோட்டுக் கொண்டிருந்த காலம். அன்றும், இன்றும் சமுதாயத்தில் பிரிவுகளும் வேறுபாடுகளும் இருப்பத்தைக் காண முடிகிறது. இவற்றில், மிகவும் முக்கியமாகத் தவிர்க்கப் பட வேண்டியது ‘ஜாதித்வேஷம்’ அதாவது பிறப்பினால் ஜாதி எனும் ஆதாரமில்லாத பாகுபாடும் அதனால் கற்பனையாய் ஏற்படுகின்ற வேற்றுமையும், வெறுப்பும் ஆகும்.

‘ஜாதி’ என்ற சொல்லுக்குப் பிரிவு என்பது பொருள். உலகில் உள்ள எல்லாப் பொருட்களிலும் இயற்கையில் வேற்றுமை இருப்பதும், இவ்வகையான வேற்றுமைகளை நாம் நமது வாழ்வில் கையாளவேண்டிய அவசியம் இருப்பதும் உண்மைதான். இத்தகைய வேற்றுமைகளுக்கு சம்ஸ்கிருத மொழியில் ‘வ்யவஹாரிஹம்’ என்று பெயர். உதாரணமாக, மாங்கனி என்றால், அதிலே பல ஜாதி மாம்பழங்கள் இருக்கின்றன. தானியங்களிலே பல பிரிவுகள் உள்ளன. நமது உடலில் ஓடும் உதிரத்திலும், பலவிதப் பிரிவுகள் உள்ளன. இதுபோன்ற பிரிவுகளை உலக வாழ்க்கையில் நாம் ஏற்றுக் கொள்ளவேண்டியது அத்தியாவசியமே.

எந்த ஒரு பொருளையும், செயலையும், பகுத்தறியும் போது அவற்றிலே பிரிவுகள் ஏற்படுவதும், அவற்றைத் தொகுத்துணரும் போது, அவ்வேற்றுமைகளெல்லாம் ஒற்றுமையில் மறைவதையும் பார்க்கலாம். உதாரணமாக, விரல்கள் மாறுபட்டிருந்தாலும், அவ்வேறுபாடுகள், கை எனப் பார்க்கையில் மறைவது போல, தமிழர், தெலுங்கர் எனும் பிரிவு, இந்தியர் எனப்பார்க்கையில் மறைவதுபோல, எல்லாமே பஞ்ச பூதங்களான உணவால் ஆக்கப்பட்ட உடல்களால் ஆனதென்னும் தொகுத்துணர்வுப் பண்பால், எல்லா உடல்களின் வேற்றுமையிலும் ஒற்றுமை தெளிவது நிஜம். ஆகையால், ‘வ்யவஹாரிஹம்’ எனும் இத்தகைய வேறுபாட்டை நாம் அனுமதித்து, அனுசரித்து வாழ்க்கையில் நடப்பது முக்கியமே.

மற்றொரு வகை வேறுபாடு, சம்ஸ்கிருதத்தில் ‘ப்ரதிபாஸிகம்’ என்று சொல்லப்படுகிறது. இது, வியவஹாரிகம் ஏதுமற்ற நிலையில், மனதுக்குள்ளேயே வேற்றுமை எனும் கற்பனையைச் செய்து கொண்டு, அதனால் பிரிவு காண்பது ஆகும். பிறப்பினால் உயர்ந்த ஜாதி என்கிற அறியாமை ப்ரதிபாஸிகம் ஆகும். அதாவது பிறப்பால் ஜாதிபேதம் என்பது கற்பனையில் வளர்த்துக் கொண்ட பாகுபாடு. அதனால், தான் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் எனும் மாறுபட்ட மனப்பான்மை நோயுடையவர்களாகச் சில மனிதர்கள் இருந்திருக்கிறார்கள், இன்னும் இருக்கிறார்கள். இந்தப் ப்ரதிபாஸிகப் பாவம், உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், ஏதேனும் ஒருவகையில் மனிதர்களிடையே பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாகப் பாரத நாட்டில், பிறப்பால் உயர்வு, தாழ்வென்ற ஜாதி பேதம், வேதங்களின் உண்மையறியாதவர்களால் பரப்பப்பட்டு, நோயாக் கிடக்கிறது. இத்தகைய பேதங்களைக் களையவும், மனித உலகுக்கெல்லாம் மருந்தாக இருக்கும் பொதுவான உபநிடத உண்மைகளை விளக்கி, வரும் காலம் தழைக்க, தம் செயலாலும், மொழியாலும் ஒரு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டவும் அல்லவோ ஜகத்குரு ஆதி சங்கரர் தமது குறுகிய கால வாழ்க்கையில் பெருகிய நற்பணிகளைச் செய்தார்!

அவ்வகையிலே, இந்த மனீஷா பஞ்சகத்தில் தெளியும் பல பாடங்களில், ஜாதித் துவேஷத்தைக் களையவேண்டும் என்பதொரு முக்கியமான நீதி.

‘ஷூத்ரா’ எனும் சொல்லினால் பிறவியில் கீழ்ப்பட்டவர்களாகவும், ‘பிராமணர்’ எனும் சொல்லினால் பிறவியில் மேம்பட்டவர்களாகவும் மனிதர்களைப் பிரித்துள்ளதாக எண்ணுவது அறியாமை. இப்பாகுபாடு வேதங்களினால் திணிக்கப்பட்டது என்ற உண்மைக்குப் புறம்பான கருத்து அறியாதோரால் பரவப்பட்டு, பலருக்கும் வேதங்கள் உலகப் பொதுவியல் என்பதும், அதிலும் வேத உபநிடதங்கள், மனித சமுதாயம் அனைத்துக்குமே ஆதார அறிவைக் கொடுத்து உய்விக்கும் உண்மைகள் என்பதும் தெரியாமலேயே இருக்கிறது. வேதங்கள் உண்மைக்குப் புறம்பாக எதனையும் கூறுவதில்லை. அரைகுறையாய்ப் பயின்றவர்கள், அறியாதார் அறியாமையை மூலதனமாக்கிக் கற்பித்த கற்பனையே இப்பாகுபாடு.

அப்படி என்றால், எதற்காக ‘ஷூத்ரா’ மற்றும் ‘பிராமணர்’ எனும் பேதமைப்படுத்துகின்ற வார்த்தைகளை வேதங்கள் கொடுக்க வேண்டும்? அந்த வார்த்தைகளின் உண்மையான பொருளும், நோக்கமும் என்ன?

உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் பிறப்பால் சமத்துவமாகவும், பின் அவர்கள் ஏற்கும் வாழ்க்கைப் பாதைக்கு ஏற்ப மூன்று விதமாகவும் அடையாளம் காட்டுவதாக ஒரு மனுஸ்மிருதி மந்திரம் மனிதர்களை நான்கு பிரிவாக அமைக்கிறது.

जन्मना जायते शूद्र: कर्मणा जायते द्विज: |
वेदद्यायि भवेदिप्रो ब्रह्म जानाति ब्रह्मणः||
ஜன்மநா ஜாயதே ஷூத்ர: கர்மணா ஜாயதே த்விஜ:
வேதாத்யாயி பவேதிப்ரோ ப்ரஹ்மா ஜானாதி ப்ராஹ்மண:

முதல் வரி:

ஜன்மநா = பிறவியில்; ஜாயதே ஷூத்ர: = தோன்றுவரெல்லாம் ஷூத்ரன் (எனும் தர்மம் அறியாப் பிரிவு); கர்மணா = (முறையறிந்து செய்யும்) செயலால்; ஜாயதே த்விஜ: = தோன்றுவது இரண்டாம் பிறவியாளன் (அதாவது, புதிய வாழ்க்கையினைத் தொடங்கியவன்);

இரண்டாம் வரி:

வேத அத்யாயி = வேதங்களைப் முறையாகப் படித்து; பவதே விப்ரோ: = அதன்படி நடப்பவன், விப்ரன் எனும் அந்தணன்; ப்ரஹ்மா ஜானாதி ப்ராஹ்மண: = பிரம்மத்தை அறிந்தவன் மட்டுமே பிராமணன்

இதன் கரு என்ன? ஒருவரின் பண்பும் வாழும் முறையுமே அவரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்.
பிறப்பில் எல்லா மனிதர்களும் ஷூத்திரராகவே பிறக்கிறார்கள். ஷூத்திரன் கட்டுப்பாடுகள் இல்லாமல், தக்கது எது, தகாதது எது என்று அறியாமல், உடலும் மனதும் வேண்டுவனவற்றை எல்லாம் வேண்டும் போது செய்து கொண்டு இருப்பவன். பிறந்த குழந்தைகள் எல்லாருமே இவ்வாறு இருப்பதால், நாம் அனைவருமே ஷூத்திரராய்த்தான் பிறக்கிறோம்; ஆதலால் பிறப்பில் எல்லோரும் சமமே என்பதை அறிய வேண்டும். அவ்வாறு இல்லாமல், கற்பதன் மூலம், எது நமது தருமம், எது தக்கது, எது தகாதது, எது நமது கடமை என வாழும் வகையினை அறிந்து கொள்வதால், ஷூத்திரனாகக் கருதப்பட்டவன், தமது வாழ்க்கையில் மாற்றத்தைக் காண்கிறான். இம்மாற்றம் மிக முக்கியம் என்பதால், இதனை மறு பிறப்பாகவே கருதுவர் நம் சான்றோர்.

அதனாலேயே, கல்வித் தொடக்கம் ஏற்றுக் கற்றுத் தேர்ந்து, தருமப்படி வாழ்பவர்களை, ஷூத்திரரிலிருந்து வேறுபடுத்தி, ‘த்விஜர்’ – அதாவது த்வி என்றால் இரண்டு, ஜ என்றால் ஜன்மம், பிறவி – இருமுறை பிறந்தவர் என்று அழைப்பர். வழக்கத்தில், இக்கல்வி முதலில் பெற்றோரிடம் தொடங்கினாலும், தக்க ஆசிரியரிடம் சேர்ந்து கல்விப் பயிற்சி பெறுவதாலேயே உலகவியலும், தன்னையறியும் ஆன்மவியலும் ஒருவருக்கு அறிவாய் ஆகிறது.

நல்லது எது தீயது எது என அறிந்து, தான் ஏற்ற தொழிலுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ற தருமப்படி வாழுகின்ற ‘த்விஜர்’ களில் சிலர், இதனினும் மேலே உய்யும் பொருட்டு, வேதங்களின் உண்மைகளை ஆய்ந்துணரவும் அதன்படியே தாம் எடுத்துக்கொண்ட தருமத்துக்கேற்ப நடந்து, வேத விதிகளின்படி, ஆன்ம ஞானமே குறிக்கோளாக ஏற்று, தங்கள் வாழ்க்கை வழிமுறைகளை அமைத்துக் கொள்வார்கள். அவர்கள் ‘விப்ரர்’ என்ற சொல்லால் அழைக்கப்படுகின்றார்கள்.

தீர்க்கமான அறிவாலும், யோகத்தாலும் ஆன்ம விசாரணையில் பலனடைந்து, பிரம்மம் எனும் பரமாத்ம ஞானம் அடைந்தவர் எவரோ அவரே ‘பிராமணர்’ என அழைக்கப்படுவர். பிறவியாலோ, வெளி வேடத்தாலோ, முற்றுப் பெறாத கல்வியாலோ, எவரும் தாம் விப்ரன் என்றோ, பிராமணன் என்றோ கருத முடியாது.

குழந்தைகள் அறியாமையினால் ஷூத்ரனாகக் கருதப்படுகிறது. ஆனால், வளர்ந்தபின், கல்வி கற்றிருந்தாலும், பிறகு தரும வழி நடக்காமல், அதர்மச் செயல்களைச் செய்வானேயாகில், அவனும் ஷூத்திரனாகக் கருதப்படுகின்றான். ‘ஷூத்திர’ எனும் சொல்லுக்கு, சோகம் அல்லது துயரமுடையவன் என்பது பொருள். எதனால் துயரமுடையவனாக இருக்கிறான் என்று சொன்னால், குழந்தையாய் இருக்கும் போதுள்ள அறியாமையாலும், வளர்ந்த பின் எது உண்மையான, முழுமையான இன்பம் என்று அறியாமலும், அந்த ஞானம் வருவதற்கான கல்வியோ, தருமங்களோ, கடமைகளோ ஏற்காமலும் இருக்கின்ற காரணத்தாலேயே ஆகும். அதனால் முழுமையான இன்பம் அடைவதற்கான அறிவோ, வாய்ப்போ இல்லாது போகிறது.

நந்நடத்தையினாலும், தான் ஏற்ற கர்ம, தர்ம நியாயங்களினாலும், எல்லாக் குழந்தைகளும், த்விஜன், விப்ரன், பிராமணன் எனும் மாறுதலை விரும்பியே ஏற்று வளர்கின்றன. இந்தப் பிரிவு கற்பனையால் காணும் ப்ரதிபாசிகம் அன்று. இங்கே பிறப்பு எதற்கும் பொறுப்பு அல்ல! தீண்டாமை என்ற தீங்கு ஏதும் இல்லை! ஜாதி எனும் அநீதி இல்லை! ஆனால், வாழ்க்கை என்ற பொறுப்பு இருக்கிறது. தருமம், கருமம் என்ற காரணங்கள் காரியங்களுக்கு ஆதாரமாக இருக்கிறது! எல்லா மனிதர்களும், அவரவர் பாதையில் உய்யும் வகை இருக்கிறது. வாழ்க்கையில் பயணிக்கும் பாதை பலவாக இருப்பினும், அப்பாதைக்கேற்ற பண்பே, ஒருவரை மேலோனாகக் காட்டுகின்றது. இதனால் என்ன நன்மை என்றால், மனித ஒழுக்கமே ஒருவரது உயர்ந்த அல்லது தாழ்ந்த நிலைக்குக் காரணமாகிறது. அதாவது, ஒருவரை மேலோராக்குவது அவரது பண்பும் நடத்தையுமே அன்றி வேறு அல்ல என்பதாகும்.

இப்படி எல்லாவற்றையும் பகுத்தறிதல் எதனில் முடிய வேண்டும் என்றால், அனைத்தையும் தொகுத்துணரும் ஞானத்திலேதான்! அதனால், யாவையும் ஒன்றே, எல்லா உயிர்களும் ஆத்மாவினால் பிரகாசிக்கப்படுவதென்றும், அதனால் ‘யாதும் ஒன்றே, யாவரும் கேளிர்’ எனும் சம நோக்குப் பார்வை வரவேண்டும். இதுவே அத்வைத ஞானத்தின் ஆதார பலன். அ + த்வைதம் என்பது இரண்டற்ற ஒருநிலை என்பதே ஆகும். எதனால் இவ்வாறான இரண்டற்ற நிலை எளிதில் உணரப்பட முடியாமல் இருக்கிறது?

வேதங்கள், நமது பார்வையை இரண்டுவிதமாகக் காட்டுகிறது. ஒன்று ‘காரண திருஷ்டி’, அதாவது ஆதார அறிவில் நோக்கம். எது விளைவுக்குக் காரணமோ அதை அறிவது காரணப் பார்வை. மற்றது ‘காரிய திருஷ்டி’ அல்லது விளைவினை அறியும் நோக்கம். இது வெளிவிகார அறிவு. எடுத்துக்காட்டாக, பொன் நகைகளுக்கு ஆதாரப் பொருள் தங்கம் என்பதும், ஆதார கர்த்தாவின் திறனே அதனை வேறுபாடான நகையாக்கிறது என்பதும் ஆதார அறிவு. பலவிதமான அமைப்புக்களில் இருக்கும் நகைகளைப் பார்ப்பதும், அதன் வேறுபாடுகளை ரசிப்பதும், ஏற்பதும் வெளிவிவகார அறிவு. இது விளைவினை அறியும் நோக்கம்.

ஆதார அறிவு இருந்தால், வெளிவிவகாரங்களின் வேறுபாட்டைச் சரியான வகையில் கையாளும் திறமை இருக்கும். அதைத்தான் அத்வைத ஞானம் போதிக்கிறது. ஆதார அறிவைப் புரிந்து கொண்டு, விவகார வேறுபாட்டினைக் கையாள வேண்டும். வேறுபாடுகள் உண்மையில்லை என்ற ஆதார அறிவு இருந்து விட்டால், வேறுபாடுகளைக் கையாள்வது, ஒரு நாடகமான, விளையாட்டாக அமைந்து விடுகிறது. அதனால், இந்த ஞானத்துடன் உலக வாழ்க்கையில் ஈடுபடும்போது துன்பம் இல்லை.

இந்த ஞானத்தின் ஒரு அடையாளம், எல்லோரையும் சமமாகப் பார்க்கும் பக்குவம். மனதில் ப்ரதிபாஸிக துவேஷங்கள் ஏதும் இல்லாமல், வ்யவஹாரிக விகாரங்களைக் கையாளும் பொழுதும், ஒன்றேயான ஆத்மாவே எங்கும் விரவி இருப்பதாகவும், அதனால் தானே எல்லாமுமாய், எல்லாமுமே தானாய்க் கருதிகின்ற இயற்கைக் குணம் இந்த சம நோக்கின் அடையாளம். அதுவே உயரிய பிரம்ம ஞானம் வருவதற்கும், அதிலேயே நிலைப்பதற்கும், அவசியமான பண்பு என்றும் மனீஷா பஞ்சகம் போதிக்கிறது.

மேலும், இத்தகைய உயர்ந்த அறிவினைக் கற்றால் மட்டும் போதாது. ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற வள்ளுவனின் குறளின்படி, அவ்வறிவின் வழியிலேயே நிரந்தரமாக நிலைக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் ‘ஞான நிஷ்டை’. நிஷ்டை என்பதற்கு வழுவாமல் நிற்றல் எனப் பொருள். கற்றபடி நிற்காவிடில், தருமம் தவறியவராகிறோம். அப்படி ஒரு தவறு ஏற்பட்டால், அதனைத் திருத்திக் கொண்டு மீண்டும் முன்னேற்றப் பாதையிலே போகின்ற பணிவும், விடா முயற்சியும் நமக்கு அவசியம். இதற்கு கல்விச் செருக்கு எனப்படும் ‘வித்யா கர்வம்’ ஒரு பெரிய தடைக்கல். இதனையும் உடைத்தெறிதல் அவசியம் என்பதையும் மனீஷா பஞ்சகம் தெளிவுறக் காட்டுகிறது.

இந்தப் பயன்மட்டும் இன்றி, ஆதிசங்கரர் தமது நிச்சயித்த அறிவினைத் தெரிவிக்கும் மந்திரங்களில், உபநிடதங்களின் உயரிய கருத்துக்களை, ‘மஹா வாக்கியங்கள்’ எனும் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற மந்திரங்களின் சாரத்தை எல்லாம், இந்த ஐந்தே பாடல்களினால், நமக்கு விளக்கி இருக்கிறார். இவை யாவும் ஒப்பற்ற கருத்துக்கள்.
அத்வைத விசாரனை என்பது நம்மை நாமே ஆய்வது. இது ஒரு சுய அறிவியல்! நமது மனவியல்! ‘தத்துவம்’ எனப்படும் சம்ஸ்க்ருதச் சொல்லே ‘தத்’ + ‘த்வம்’ என்றாகி ‘அது நீ’ எனும் ஒரு மஹா வாக்கியமாகிறது.

மனீஷா பஞ்சகம் என்னும் நூல், அத்தைய அரிய உண்மைகளை அள்ளித் தருகின்ற உயரிய நூல். அதனைப் படித்து, அதன் உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், உண்மையான விருப்பமும், அயராத நோக்கமும், தக்க ஆசிரியரின் துணையும், வழிகாட்டலும் நமக்கு அவசியம். மேலோட்டமாக மட்டுமே படிக்க வேண்டும் என்றாலும் கூட, அதற்கும் நாம் வேதாந்தம் கையாள்கின்ற வார்த்தைகளை, அவ்வார்த்தைகளின் அடிப்படை விளக்கங்களை, அத்வைத தத்துவங்களின் ஆரம்பப் பாடங்களை ஓரளவாவது தெரிந்து கொண்டிருப்பது மிகவும் அவசியம். அவற்றை விளக்குவது, இந்த உரையின் முக்கியக் கரு இல்லை என்றாலும், முக்கியமான ஒரு சில கோட்பாடுகளையும், தத்துவங்களின் சாரங்களையும், இவ்வுரை அறிமுகப்படுத்துகின்றது. இவ்வறிமுகம், ஒருக்காலும் போதுமான அளவிலான வேதாந்த விளக்கமாக இருக்க முடியாது. ஆனாலும், மனீஷா பஞ்சகத்தின் பொருளை அறிவதற்குத் தேவையான, ஒரு சில முக்கியக் கருத்துக்களை சுட்டிக்காட்டுகின்ற அகல் விளக்காக அமைய வேண்டும் என்பதே அவா

புலையன் வினா என்று புலையன் கேட்டதாகக் கருதப்படும் ஸ்லோகங்கள் இரண்டும், பின் ஆதிசங்கரரின் மனீஷா எனும் ஐந்து ஸ்லோகங்களும், இவ்வேட்டில் கோர்க்கப்பட்ட ஞான மலர்கள்.

ஆதி சங்கரர் அறிவுபூர்வமான வினாக்களினாலும், விடைகளினாலும், தெளிவினைத் தருகின்ற ஞானி! மொழிப்புலமையும், கவித்திறமையும் அவரது பாடல்களில், வார்த்தைகளில், எழுத்துக்களில், மறை பொருளை மறைத்தும், படிக்கப் படிக்க மனம் நிறைத்தும் நம்மை உயர்த்துபவை. அவற்றைப் பயின்று அதன்மூலம், மேன்மேலும் உயரிய உபநிடத உண்மைகளைப் புரிந்து உயரவேண்டுமென்றால், மனீஷா பஞ்சகத்தின் ஐந்தாம் பாடலில் வருவது போலத் தெளிந்த அறிவு, குவிந்த மனம், குரு அருள் ஆகிய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

இவற்றில் ஏதுமில்லாத ஏழையாகிய யான், அன்னாரது மனீஷா பஞ்சகம் எனுமிந்த மாணிக்கப்புதையலைத் தோண்டிப் பார்த்து, எல்லோருடனும் ரசித்துப் பயில வேண்டும் என்று நினைத்தது பேதமையாய் இருப்பினும், இறைவன் காட்டும் பிரேமை எனவே துதிக்கிறேன்.

மனீஷா பஞ்சகத்தினை அனைவரும் படிப்பதால், பெரும் பயன் கிடைக்கும் எனும் குறிக்கோளால், அன்னாரது ஸ்லோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும், தமிழிலும், ஆங்கிலத்திலும், சுருக்கமான உரையினைப் பதிக்க முடிந்தது என் பாக்கியம். அறிவாலும், அனுபூதியாலும் பெரியோராய்ப் பலரும், மனீஷா பஞ்சகம் எனும் அருநூலுக்குப் பொருள் நூல் படைத்திருக்கிறார்கள். காஞ்சியின் மஹா பெரியவர் கருணையுடன் இதனை விளக்கியும் இருக்கிறார்கள். அடியேனின் வளரா அறிவின் விளைவால் எழுந்த இந்தச் சிறிய ஏடு, ஓர் சிலரின் பார்வையில் விழுந்து, அதனால், அவர்களுக்கு மனீஷா பஞ்சகத்தின் மூலத்தை மேலும் ஆய்ந்து பயிலவேண்டும், மற்ற பெரியோர்களின் நூல்களையும், விளக்கத்தையும் கேட்க வேண்டும் என்ற உறுதி வருமாயின், என் பணிக்குப் பரிசாக அதுவே அமையும்.

இவ்வுரையின் எல்லாத் தவறுகளுக்கும் என் சிறுமதியைக் கருணையினால் மன்னித்து, சரியான அறிவினைத் தருபவர் எவராயிருந்தாலும் அவருக்கு என் நன்றியால் நனையும் நல்வணக்கங்கள்.

ஆதி சங்கரரது வழித்தோன்றிய குரு பரம்பரையின் கற்பகத்தரு, கலியுகந் தழைக்க வந்த காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவாளின் திருவடிகளுக்கும், அத்திருவடிகளே குருவருளெனத் தாங்கி, அன்னார் வழி வந்து அருளாசி தந்துதவும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் பாதகமலங்களுக்கும், யான் நூலிதனைச் சமர்ப்பிக்கின்றேன்.

மீ. ராஜகோபாலன்
1-1-2012

1 – மணீஷாபஞ்சகம் காசி நகரக் காட்சி

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*