Thiru Murugan Ponnusal

திருமுருகன் பொன்னூசல்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

நம் அருள்மிகு லண்டன் முருகப் பெருமான் மேலும் திருவிழாக்காலங்களில் ஊஞ்சல் ஆட்டிப் பாடிப் பரவசமடைவதற்கு ஒரு பொன்னூசல் பதிகம் தேவை என்ற அடியேனது அவாவை, கோயில் தலைவர் திரு சம்பத்குமார் அவர்களிடம் தெரிவித்தேன். அவரும் அவ்வெண்ணத்தை ஊக்குவித்தார். ஆவன செய்ய அடியேனைப் பணித்தார்.

எங்கள் நண்பர் திரு மீ. ராஜகோபாலனிடம் இப்பாடல் எழுதித்தர மிகவும் தயக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தேன். பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தாற்போல் உடனேயே பாடல்களை உதிர்க்கத் தொடங்கினார். இரண்டே நாட்களில் எழுதி அதைக் கணிணிக்கு ஏற்றாற்போல் வடிவம் அமைத்து எனக்கு மின் அஞ்சலில் அனுப்பிவிட்டார். இதுபோதாது என்று விண்ணப்பித்த எனக்கும் நன்றி தெரிவித்தார் அப்பண்பாளர்.திரு மீ.ரா அவர்களுக்கு அளவுக்கு மீறியே அருள எம் இறைவனை இறைஞ்சுகிறேன்.

வேதநாராயணன், நவம்பர், 2010

காப்பு

மாமுகனே மால்மருகன் தான்மணக்க வேண்டி
மாதங்க மாகவரும் வேழமுகன் காக்க!
வேல்முருகன் பாலகுரு வேஎனவே காட்ட
வேண்டுமென மாங்கனியை ஈண்டகஜன் காக்க!
பார்த்திருக்கும் பரசிவமும் பைந்தொழிலன் சிவனும்
பரகுருவை முருகழகைப் பாடுவதைக் காக்க!
கோர்த்தியக்கும் அகிலாண்ட கோமளமே அம்மா
கொற்றவையே குமரனருட் கோவையினைக் காக்க!
சங்கரனின் அங்கமெனத் தங்கிநிலம் தாங்கும்
தருமநெறி குருவடிவம் தாளிதயம் காக்க!
மங்களமே பொன்னூசல் மனமேடை முருகா
மகிழ்வோடு ஆடிடுக, மாதவமே காக்க!

(1)

மெய்யே சிவஞான மேலே பொருளார்க்கும்
துய்ய பரிபூரணத் தூரியமே சிவனார்க்கும்
ஐயம் அடக்கி அயனறியாப் பிரணவத்தை
நெய்யப் படைத்த நெடுவேலே குறவள்ளி
தெய்வக் களிற்றின் திருவேளே கருணையினால்
பையப் புகுந்தகலாப் பரசுகமே இருவினையால்
செய்யப் பிறவாழி செய்வோனே மாய்மாலப்
பொய்யைப் புரிந்தே பொன்னூசல் ஆடாமோ (1)

(2)

நந்நீர் நதிமுடிந்த நாதன்வா னவர்வாழ
கண்ணீல் கரவுதீக் கனலாலே காமனுரு
வெண்ணீ றாக விரிபுவனம் பரிதவிக்க
மன்னுமைம் பூதங்கள் மடியேற்றிச் சரவணத்துத்
தண்ணீர் நனைக்கத் தழைத்தாறு முகத்தோடு
விண்ணே ழுலகாள விளைந்திட்ட சிவக்கனியே
என்னே நின்கருணை எமக்கிரங்கி அருள்கூட்ட
பொன்னே எனவிளித்துப் பொன்னூசல் ஆடாமோ (2)

(3)

அரனார் விதையே அருமீன் வளர்கலையே
சுரனார் துயரறுத்த சுடரே சுவாமிமலைத்
திறனாய் நின்ற திருவுருவே குருபரனே
மரமேல் வந்துதிர்த்த மன்றத் தமிழ்க்கனியே
வரமே வரவுசீர் வண்ணமயில் வாகனனே
சிரமே தினைவள்ளிச் சித்திரத்தின் அற்புதமே
கரமே தலைமேவக் கந்தனே முருகனுயிர்ப்
புரமே எனப்புரிந்து பொன்னூசல் ஆடாமோ (3)

(4)

கிடாயமர்ந்து கிரவுஞ்ச கிரிமுதலாய்த் தீயசுரர்
அடாவடி எலாமழித்த அருட்கனலே ஆறுமுகச்
சடாட்சர மானசிவ சம்பத்தே சேவற்
பதாகை பிடித்த பரம்பொருளே அன்பர்மனத்
தடாகம் பூத்த தாமரையே நின்கழல்கள்
விடாமற் பிடிக்கின் விடமழிக்கும் சூரணமே
நடாதும் நடத்தும் நாயகனே நின்னருளைப்
புடாமிட்ட தெனப் பொன்னூசல் ஆடாமோ (4)

(5)

பரிதிபல் கோடி பதித்ததோ கருணைமுகம்
சுருதிகளும் தேடும் சுகப்பொருளோ பாதமலர்
உறுதிகூர் வேல் உண்மையோ ஞானவரம்
வழுதியருள் தருகின்ற வாகனமோ வண்ணமயில்
கருதியறி வார்தெளியும் கருத்தோ கந்தனருள்
மிகுதியெனத் திகட்டாத மெய்ச்சுகமோ முருகாநீ
பகுதியிலாப் பூரணத்தின் பக்குவமோ ஆறுமுகம்
புகுதிமன முருகுமெனப் பொன்னூசல் ஆடாமோ? (5)

(6)

அரிஅயனும் அறியா அரன்ஜோதி என்னும்
தெரிவே தெளிவினருட் தேறலே தெய்வக்
கரியின் கோவே கானக்குற வள்ளிசேர்
பரிவின் பரிசே பரசிவத்துப் பரிமளமே
அறிவின் அறிவே அருணகிரித் தமிழ்த்தேனே
செறிவின் சுவையே சேவற்ப தாகையனே
முறிவின் முடிவே முதலுக்கும் முதலான
பொறியே எனப்பாடிப் பொன்னூசல் ஆடாமோ? (6)

(7)

ஆன்ற மறைமுதலே ஆகமத்தின் முடிவே
ஈன்ற பரசிவத்தின் ஈர்த்தஒளி வடிவே
ஊன்ற விதையாகி உயிர்க்களித்த கருவே
ஒன்றில் ஒன்றாகி ஒளிர்கின்ற குருவே
தோன்று மலையிடத்துத் தூரியமே அழகே
தொன்று முதலாகி நின்றருளும் தவமே
சான்ற தமிழ்ப்புலமை சார்ந்தருண கிரியைப்
போன்ற திறனோடு பொன்னூசல் ஆடாமோ? (7)

(8)

நீலமயில் வாகனமும் நீள்விழியில் அருளும்
கோலவடி வேலும் கோர்த்த மணி மார்பும்
காலநில மாளும் கரங்கள் ஈராறும்
சாலமறிந்த இதழ்ச் சார்ந்த குமிழ்நகையும்
ஞாலம் நிறைத்த ஞாயிறென முகமதியும்
சீலமளிக்கும் சிவ யோகமருள் பதமும்
வேலவனே நீஎதிரில் வேண்டுவரம் அருளாமோ
பூவுலகே மானுடமே பொன்னூசல் ஆடாமோ (8)

(9)

கார்த்திகை தீபனைக் கடம்பணி மார்பனை
நேர்த்தினை வள்ளி நேயப்ர தாபனை
கூர்த்தருள் ஞானக் குமரனைக் கொடுவினை
தூர்த்தருள் வேலனைத் தூயருட் தூலனை
சார்த்திய வேதச் சரவண பவகுரு
சூத்திரம் ஆகிய சுகப்பே ராளனை
பார்த்தருள் கனியப் பதமலர் பணியப்
பூத்தவ ரெனவே பொன்னூசல் ஆடாமோ (9)

(10)

வீராறு முகமோ வினைநோய் தீர்க்கவரும்
ஆரா அமுதோ அடர்வேல் மயிலோடு
நேராய் நின்றருளும் நித்தியமோ பரிதி
நூறா யிரங்கோடி நூற்றமுகப் பொலிவோ
ஈராறு கரமோ ஈர்த்தவிழிக் காருண்யம்
சீராள் திருவடிகள் சிவமயமோ அருளபயம்
மாறா மறையோ மாமுருகா எமையாளும்
பூராச் சுகமெனவே பொன்னூசல் ஆடாமோ (10)

திருக்கடைக்காப்பு

ஆடுமன ஊசலினி ஆன்மசுக வீசலினால்
வீடுபெறத் தானறியும் விதம் – பாடுபவர்
தக்கதனைத் தக்கதரு ணத்திலடை விக்கதமிழ்ப்
பக்கமிருந் தருளும் பரம்

முருகாவெனும் பதத்தை முழுதுணர்ந்து சொல்வார்க்கு
ஒருகாலும் இல்லை உளச்சோர்வு – இருகாலும்
பற்றியருட் பொன்னூசால் பாயிரத்தால் பரவட்டும்
சுற்றிவரும் மனதில் சுகம்

கண்டதால் உருகினேன் லண்டன்மா முருகனே
கதியெனது மதியில் உன்தாள்

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*