03. கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

‘கோகழி’ எனும் சொல் குறுந்த மரத்தைக் குறிப்பது.   குறுந்த மரத்தின் அடியில், அமர்ந்திருந்த ஒரு நல்லாசிரியரைப் பரசிவனாய்க் கண்டு, மாணிக்கவாசகர் நல்லறிவு பெற்ற இடம் தமிழகத்தில் உள்ள திருப்பெருந்துறை எனும் ஊர்.  நல்லாசிரியராக வந்து அறிவு புகட்டி, பிறகு மறைந்த அக்குரு மனிதர்,  எல்லாம் வல்ல பரம்பொருளே என்றும், திருப்பெருந்துறை ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலிக்கும் பரசிவனே என்றும் உறுதிபட்ட மனதால், அத்தலத்தையே தமது இருப்பிடமாகக் கொண்டு, சிவப்பணி செய்த செம்மல் மாணிக்கவாசகப் பெருந்தகை.

ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியாய், கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, மௌனத்தால் பெருவிளக்கம் கொடுத்துக் காத்த பரசிவமே, கோகழியின் கீழ் அமர்ந்து, நம் ஆசிரியருக்கும்,  ஆசிரியராய் அருள் பாலித்திருக்கிறார்.

04. ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஆதிகுருவாகிய பரசிவன், எல்லா ஆகமங்களினாலும் போற்றப்படுகின்ற பேரான பொருள்.

‘ஆகமம்’ எனும் சம்ஸ்கிருதச் சொல், வேதங்களையும், வேத நியமங்களையும் குறிப்பது. ‘அண்ணுதல்’ என்றால் ‘ஏற்றுக் கொள்ளல்’ என்பது பொருள். எனவே, வேதங்களாக விளங்குபவனும், நம்மை ஏற்று அருள்பவனுமாகிய இறைவனது திருவடிகளைப் பணிவோம்.

எல்லா உயிர்களுக்கும், தரும நெறிகளையும், நற்பண்புகளையும் கொடுத்து,  அவ்வுயிர்கள் பிறக்கும் உலகங்களில் எல்லாம்,  அல்லன விலக்கி, நல்லன பெறுகின்ற வழிகளைக் காட்டும் திருமறைகளே ஆகமம் ஆகும்.

செயலாற்றவும், அனுபவிக்கவும் பிறந்த உயிர்களுக்கு, ‘ஜீவன்’ என்பது பெயர்.  எனவே ஒவ்வொரு ஜீவனும், செயலாற்றுவதால் ‘கர்த்தா’ எனவும், அதன் பலனை அனுபவிப்பதால் ‘போக்தா’ எனவும் உலகில் இருக்கிறான்.  எனவே வாழ்வாதாரத்திற்கான பொருளும் (அர்த்த:),  அனுபவத்திற்கான சுகமும் (காம:), அவற்றை அறவழியிலே பெருகின்ற நெறியும் (தர்ம:) ஒவ்வொரு மனிதரின் குறிக்கோள்.  இவையே அறம், பொருள், இன்பம் என மனிதருக்கு வாழ்க்கைக் குறிக்கோள்கள் எனத் தமிழ்மறை காட்டுகின்றது.   இவற்றை எல்லாம் விளக்கி, தர்மத்தைப் புகட்டுவதனால்,  ஆகமங்கள்  ‘தர்ம சாஸ்திரம்’ எனப்படுகிறது.

அதன்படி, அறமொழுகிய வாழ்வினை ஏற்பவர்கள், அதன் பயனால், தூய மனமும், தெளிந்த அறிவும் கொண்டவர்களாகி, ஓர் காலத்தில் அறிவின் முதிர்ச்சியால், உலகம் அல்லது ‘ஜகத்’ என்பது என்ன, உலகங்களை அனுபவிக்கும் ‘ஜீவன்’ என்பவன் யார், இவற்றுக்கெல்லாம் காரணமாகிய ‘ஈஸ்வரன்’ யார், ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் வினவி, பிறகு விடாமல், விடையினைத் தேடும் பயணத்தில் ஆழ்வர்.

அவர்களே தர்மப் பாதையிலே நடந்து, ஞானப் படிகளிலே ஏறுபவர்கள்.  அவர்களுக்குப் படிப்படியாக உண்மையைக் காட்டி, இறுதியில் ‘இறைந்து’ கிடக்கும் ‘இறைவனையும்’, கடந்து உள்ளிருக்கும் ‘கடவுளையும்’ தன்னுள்ளே காண வைக்கின்ற அறிவையும், வேதங்களே தருகின்றன. அதனால் ஆகமங்கள், ‘ஞான சாஸ்திரம்’ எனவும் ஆகின்றன.

இவ்வாறு, ‘தர்ம சாஸ்திரம்’, ‘ஞான சாஸ்திரம்’ என உலகியல் வாழ்வுக்கும், உளசிவ ஆய்வுக்கும் காரண அறிவாக ‘ஆகி’, ஆனாலும் மாற்றமில்லா உண்மையாக மட்டுமே ‘நிற்கின்ற’ இறைவன் என்பதைத்தான் ‘ஆகமம் ஆகி நின்ற’ எனும் சொற்கள் காட்டுகின்றன.

இவ்வரிகளின் மூலம்,  உள்ளதும், உணர்வதுமாய் இருக்கும் ஆத்மா, ‘சத்சித்’ எனும் மாறாத ஞானவடிவம் என்பதும் காட்டப்பட்டது.

05.ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

`ஏகம்’ எனும் சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ‘ஒன்றானது’ எனப் பொருள். அனைத் தழுவியே, தமிழில் ‘ஏகன்’ எனும் சொல்லினால், ‘ஒன்றேயானவன்’ எனப் பொருள் கொள்ளப்பட்டது. அதைப் போலவே ‘அனேகம்’ எனும் ‘ஒன்றல்லாத பல’ எனும் சொல், தமிழில் ‘அனேகன்’ அல்லது ‘பலவுமாய் இருப்பவன்’ என்று கொள்ளப்பட்டது.

ஒருவனாகிய இறைவனே, பல வடிவமாயும் விளங்குகின்றான் என்றால், பார்க்கும் எல்லா வடிவங்களிலும் இறைவனே இருக்க வேண்டும். எல்லாமே இறைவடிவம் என்று ஏற்றால், பிறகு தீயது என்றோ, குறையானது என்றோ, எதுவுமே உலகில் இல்லையல்லவா! அதனால் யாவும் புனிதமானது என்றும், யாதையும் தீதற நோக்கி, எவரையும் சமமாய் ஏற்க வேண்டும் எனும் பண்பினையும்  நாம் அடைய விழைகிறோம்.

‘சமநோக்கு’ எனும் அத்தகைய உயர்-பண்புதான் நம்முடைய ஸநாதன தர்மத்தின் மிகப் பெரிய சக்தி. இப்பண்பினை உறுதிப்படுத்தத்தான், உருவிலாக் கடவுளையும் பல உருவங்களாகத் தொழுகின்றோம்.  அப்படிச் செய்வதால்,   எல்லா உருவங்களிலும் இறைவன் இருப்பதாகக் கண்டு ஒழுகவும், அதனால் உலகில் ‘அன்பினாலேயே’   அனைவரையும், அனைத்தையும் ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தையும் நாம் விதைக்கின்றோம். அதனால் உருவ வழிபாடு, நமது முன்னேற்றத்துக்குக் காரணம் என  நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

2. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

6. வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க

Related Posts

Share this Post