08. புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

‘சேயோன்’  எனும் சொல்லுக்கு, சிவன், சிறந்தவன், சிவந்தவன், எட்ட முடியாத் தொலைவில் இருப்பவன் என்றெல்லாம் பொருள் உண்டு. இறைச் சிந்தனை ஊறிய உள்ளத்தில் மட்டுமே,  கடவுளாக ஒளிரும் சிவம்,  அவர்தம் அகம் விளங்கும். அதனாலேயே, எண்ணுவோரின் எண்ணத்துள், மிக மிக அருகில் இறைவன் தன்னைக் காட்டுகின்றான்.  இறைச்சிந்தனை இல்லாதோருக்கு, அவருள் இறையுணர்வு ஒளிர்ந்தாலும், அது ஒளிந்தே இருக்கும். அதனால் இறைவன், ஒரு எட்ட முடியாத பொருளாகவே அவர்களுக்குத் தோன்றும்.

09. கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!

இறைச் சிந்தனையால் உந்தப்பட்டு, உள்ளும், வெளியுமாய் நிறைந்திருக்கும் பரம்பொருளை ‘எப்படி ஆராதிப்பேன்’ எனத் தெரியாமல் வியந்து, ‘வேறு வழியில்லை ஐயா’ எனப் பணிந்து, தமது இரு கைகளையும் சேர்த்துத் தலைமேல் உயர்த்திக் குவித்து,  சிவனுருவை உருகிப் பணிகின்ற அடியார்களையே, இங்கே ‘கரம் குவிவார்’  எனும் சொற்றொடர் காட்டுகின்றது.

மெய்யடியார்கள், இறைந்த பரம்பொருளை, தமது இரு விழிகளாலா பார்க்க இயலும் என வியந்து,  தம் விழிகளை மூட, அதுபோது, ‘இதோ’ என அவருள்ளே, கடந்து ஒளிரும் கடவுளெனும் உணர்வைக் கண்டு, அதனால் உள்ளம் மகிழ்ந்து கிடப்பார்கள். அத்தகைய அடியார்களை ஆளுகின்ற தலைவனே இறைவன். அவ்விறைவனின் திருவடியில் மிளிரும் கழல்களாகிய அணிகலனை வணங்குவோம்.

10. சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

கரம் குவித்த மெய்யடியார்களே, பணிவினால் இறைவனைச்  சரணடைந்து பெரும் பயன் பெறுகிறார்கள்.  அடைக்கலம் நாடிப் பணிந்தோரை புகழோங்கச் செய்பவன் இறைவன்.

‘சிரம்’ என்பதற்குத் ‘தலை’ என்பது பொருளாயினும், இங்கே ‘மனம், சித்தம், புத்தி, அகங்காரம்’ எனும் உட்கருவிகள் சுட்டிக் காட்டப்பட்டன. இவை நான்குமே, ஒரே மனதின் நான்கு விதமான தோற்றங்கள்தான்.

தோன்றி மறையும் எண்ணங்களால் அலைக்கழித்திருப்பது முதல் அந்தகரணமாகிய ‘மனம்’. அதன் விளைவால், அனுபவ எண்ணப் பதிவுகளைச் சுமந்து இருப்பது, ஆழ்மனமாகிய ‘சித்தம்’. எண்ணங்களை எல்லாம் ஆராய்ந்து முடிவெடுப்பதே ‘புத்தி’. ‘இது நான், இவையெல்லாம் என்னால் செய்யப்படுவன’ என்று, தவறான அடையாளங்களில் தன்னைப் பொருத்தி ஆணவமாய் இருப்பது ‘அகங்காரம்’.  ‘அந்தகரணம்’ எனப்படும் இந்த நான்கு உட்கருவிகளின் தொகுப்பே, ‘சூக்ஷ்ம சரீரம்’ எனும்,  நமக்குள் விளங்கும் மெல்லுடல் ஆகும்.

இந்த உட்கருவிகளின் குழப்பத்துக்குக் காரணம், மனதில் எண்ணங்கள் சீர்மை இல்லாமல் போவதே. மனமும், சித்தமும் எண்ணங்களைச் சீர்படுத்தாவிட்டால், புத்தியும் பிறழும்.  ‘நான்’ எனும் தவறான செருக்கு பெருக்கும்.

இங்கே ‘சிரம் குவிவார்’ எனும் சொற்களினால், மாணிக்கவாசகர், உட்கரணங்கள் சீர்பட்டதால் மனமும், சித்தமும் தெளிந்து, புத்தியும் உறுதிப்பட, ஆணவம் அழிந்து, இறைவனின் தாளில் பணிகின்ற மெய்யடியார்களைக் குறிக்கின்றார்.

குவிதல் என்பது, ஒருவரின்  மனம்  ஒருமுனைப் படுதல்.  அத்துடன், ஆணவம் இன்றிப் பணிதல்.  அப்படிப் பணிவார் அடையும் பயனாக, அவர்களை, உலகில் எல்லாப் பேறுகளும் பெற்று உயரச் செய்கிறான் இறைவன்.  அவனே  ‘ஓங்குவிப்பவன்’.  அவனே நம்முள் ‘சீர்’ செய்கின்ற ‘சீரோன்’.

இறைவனே நம்மைச் சீர் செய்பவன் என்றால், நம்முடைய  அந்தகரணங்களைச் சீர்படுத்த, இறையருள் மட்டுமே கதி.   இந்த நந்நம்பிக்கையே இவ்வரிகளில் விளையும் முத்து.

7. பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

11. ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

Related Posts

Share this Post