41. ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்

முதலும், முடிவும் இல்லாதது பரம்பொருள்.

காரண-காரியம் எனும் செயல்-விளைவு வாதத்தால், உலகில் எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணத்தைத் தேடுதல் அறிவியல். எனினும் அவ்வாதம், முற்றுப் பெறாதாது என்பது அறிவியலிலும் உறுதிப்படுத்தப்பட்டது. காரண-காரிய வாதங்களுக்கும் உட்படாத முதற்காரணம் ஒன்று இருக்க வேண்டும் என்பதும் அறிவியல் கண்ட பாடம்.

தோற்றத்தைத் துருவி ஆராய்ந்து, முதலில்லா ஒன்று இருப்பது அனுமானிக்கப்படுவது போலவே, விளைவுகளைத் தொடர்ந்து ஆய்ந்தாலும், முடியாத ஒன்று இருப்பதும் நிச்சயமாகிறது.  அப்படி முதலும் முடிவும் இல்லாத ஒன்றே இறைவன்.

தோற்றத்தில் தெரியும் உலகங்கள் எல்லாம் அழிவினை அடைவதால், தோற்றமற்ற முதலுக்கும், முடிவுக்கும் இடையேதான் எல்லா உலகங்களின் மாற்றங்களும் நடந்து கொண்டே இருக்கின்றன.

உலகங்கள் என்றால் என்ன?

நாம் உலகங்கள் யாதெனப் புலனறிவின் வழியே அணுகினால், அவை  பூமியைப் போல, கோடானு கோடியாக அண்டவெளியில் இருக்கின்ற உலகங்கள்.

ஆனால் அந்தகரணமாகிய நம்முடைய மனதின் வழியே அணுகினால், ‘உலகம்’ என்பது, ‘நம்முடைய அனுபவச் சூழ்நிலை’ என்பதாகும்.

ஒவ்வொருவருக்கும் அனுபவங்கள், வேறுபட்டிருப்பதால், ஒவ்வொருவருடைய உலகங்களும் வேறுபட்டனவே. அதனாலேதான்,  ஒரே பொருள், அல்லது ஒரே விளைவு, ஒருவருக்குத் துன்பமாயும், மற்றொருவருக்கு இன்பமாயும், வேறொருவருக்கு எவ்விதப் பாதிப்புமற்றதாய் இருக்கிறது.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலகமும்,   விழிப்பு,  கனவு,   ஆழ்துயில் என மூன்று வகையான அனுபவங்களினாலேயே அமைகின்றன. இவ்வாறு அனுபவிக்கப்படும்  உலகங்களும், ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கின்றன.

எவ்வகையில் நாம் நமது உலகங்களை ஆராய்ந்தாலும்,   அவ்வுலகங்களுக்கு எல்லாம்  இறைவனே  ஆதாரம். அந்த ஆதாரசக்தியினாலேயே, உலகங்கள் மாற்றங்களால், முதலுக்கும் முடிவுக்கும் மாறி மாறிப் பாதிப்பினை அடைகின்றன.  இவற்றை மாணிக்கவாசகப் பெருமான் அடுத்த வரிகளில்  காட்டுகின்றார்.

42. ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

இறைவனின் ஐந்தொழில் (படைத்தல், வளர்த்தல், அழித்தல், அருளல், மறைத்தல்)  இவ்வரியிலும், அடுத்த வரியிலும் சுட்டிக் காட்டப்படுகிறது.

உலகம் யாதெனப் போன பாடலில் கண்டபடி, நாம் எப்பொருளில் உலகத்தை எடுத்துக் கொண்டாலும், அவ்வுலகத்தை விளைத்தும், வளர்த்தும், அழித்தும் நாடகம் நடத்துவது ஆத்மாவே.  அந்த நாடகத்தைச் சரியாக நாம் உணர்ந்து கொள்ள, நமக்கு அருள் தருவதும் அந்த ஆத்மாவே என இவ்வரியில் உணர்த்தப்படுகிறது.

43. போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

ஞானத்தை அடைந்தாலும், அந்த ஞானத்திலேயே நிலைத்தல் என்பதே ‘ஞானநிஷ்டை’ என்பதாகும்.  பர ஞானியான மாணிக்கவாசகர், அத்தகைய ஞான நிஷ்டையை இறைவன் அளிக்க வேண்டும் என வேண்டுகின்றார்.   அதுவே இறைவனுள் புகுந்து நிலைக்கின்ற பெருநிலை என்பதாலும்,  அதுவே முக்தி என்பதாலும்,   அதை விடுத்து, மாயையுள் போய் ஆழ்கின்ற நிலையைத் தாம் விட்டொழிக்க வேண்டும் என ஆசிரியர் வேண்டுகின்றார்.

பர ஞானம் அடைந்தவர்களுக்கு, ஞான நிஷ்டையில் இருப்பதே, இறைவனுக்குச் செய்யும் சேவையாகும்.  அந்த நிஷ்டை கலைந்து உலகில் அவர்கள் மற்ற மனிதர்களைப் போல வாழ்ந்தாலும், இறைச்சிந்தனையே இறைச்சேவையாகச் செய்து கொண்டிருப்பார்கள்.

அப்பேற்றினையே இவ்வரியில் மாணிக்கவாசகர் இறைவனிடம் கேட்கிறார்.

40. அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

44. நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*