84. வேற்று விகார விடக்குடம்பின் உள்கிடப்ப

85. ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று

86. போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

தந்நிலை அறியும் இறையுணர்வு, உள்ளே வெள்ளமாய் சுகம் தந்து கொண்டிருக்கையில்,  வேறுபாடுகளையும் மாற்றங்களையும் (வேற்று விகார) கொள்வதான,  நஞ்சாகிய உடலினுள் கிடந்து (விடக்குடம்பின் உள் கிடப்ப), யான் தவித்திட வேண்டுமோ?   முடியாது  (ஆற்றேன்).

மாணிக்கவாசகர் காட்டும் இந்நிலை, வைராக்கியம் எனும் பற்றின்மையில் முற்றியநிலை.

முதலில் உலகப் பொருட்களில், உலக விவாகரங்களில் பற்றின்மையை வளர்த்து வந்த பெரியோர்கள்,  இறையுணர்வினைப் பெற்ற கணமே,   இதுவரை கருவிகளாக உதவிய தமது உடல், புலன், மனம், புத்தி எனும் இவற்றிலும், இவற்றின் தொகுப்பாக விளங்கும் மனிதப் பிறவியிலுமே, பற்றின்மையை வளர்ப்பார்கள்.

எனவேதான்,  மனித உடலைப் பெறுவதும், அதனால் துயரம் அடைவதும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை (ஆற்றேன்) என மாணிக்கவாசகர் கதறுகின்றார்.

உண்மை உணர்ந்தோர் என்ன செய்வார்களாம்?

‘ஓ, சிவனே (அரனே ஓ), என்னுடைய தலைவனே (எம் ஐயா) என்றெல்லாம் பலவாறாக (என்று என்று)

இறைவனைப் பணிந்தும், புகழ்ந்தும் (போற்றிப் பணிந்து) தம்மை இறைச்சிந்தனையிலேயே ஆழ்த்திக் கொள்வர்.

அப்படிச் செய்யும் தவத்தினால்,  அறியாமை எனும் இருள் விலக, சம்சாரம் எனும் துயரம் முடிய, பொய்யான உடலைச் சுமக்கும் கடனைக் கழித்து (பொய் கெட்டு),  இறைத் தன்மையாகிய உண்மையிலே  கலந்து விடுவார் (மெய்யானார்).

பொய் அழிந்தால், மெய் மட்டுமே நிலைக்கும். அம்மெய்நிலையே, தந்நிலை; அதுவே  விடுதலை, முக்தி.

87. மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

தர்மத்தின் பாதையில் வாழ்க்கையை நடத்தி, அறம், பொருள், இன்பம் எனும் மூன்று குறிக்கோளுடனேயே பிறவியினைக் கழிக்கும் நல்லோர்கள்,  புண்ணியம், பாவம் என்னும் கட்டுக்களினால்,  அதற்கேற்ற உலகில், அவ்வுலகில் அனுபவிக்கத்தக்க உடலுடன் சில காலம் இருந்து,  பிறகு வினைப்பயனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்து, அவை தீர்ந்தவுடன் மீண்டும் பூமியில் பிறப்பர்.   இந்திரலோகம், வைகுண்டம் எனப் பதவிகள் பெற்று,  சிலகாலம் சுகத்தில் வாழ்ந்தாலும், பாவ-புண்ணியங்களினால் விடுதலைப் பேற்றினை  அடைவது என்பது முடியாது.

இப்படி மீண்டும் மீண்டும் பிறந்து வருவதையே ‘மீட்டு’ எனும் சொல்லால் காட்டினார் ஆசிரியர்.  எனவே, அறம், பொருள், இன்பம் இவற்றைத் தாண்டி, ‘வீடு பேறு’ எனும் முக்தியை நாடுவதே, விடுதலைக்கு வழி.  அதனாலேயே, சிவபிரானிடம் அத்தகைய பேற்றினைத் தர வேண்டுகின்றார் மாணிக்கவாசகர்.

88. கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

முன்பே அறிந்தபடி,  புலனுடைய வஞ்சகம் நம்மைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, நமது முதற்கடமை.  அதற்கான உறுதியையும், வழியையும் அருள்வது இறைவனாலேயே முடியும்.  அதாவது ‘வைராக்ய சாதகம்’ எனும் பற்றின்மை மிகவும் அரிதானது என்பதால், அப்பேற்றினை இவண், ஆசிரியர் இறைவனிடம் யாசிக்கிறார்.

83. ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

89. நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

Share this Post