முகவுரை

ஜகத்குரு ஆதிசங்கரர் தாள் வாழ்க!

சத்குருவாய் வந்துதித்த சங்கரரின் தாள் வாழ்க
அற்புதமாய் அத்துவித அறிவாய்ந்தார் தாள் வாழ்க
காலடியில் பூத்தசிவக் காலடியார் தாள் வாழ்க
வாலறிவால் மேலுணர்வை வாதித்தார் தாள் வாழ்க
துதிமாலை தொடுத்தருளும் தூயர் தாள் வாழ்க
மதிமாலை சூடிமனம் மாற்றுவார் தாள் வாழ்க
சிவானந்த வெள்ளச் சீரமைத்தார் தாள் வாழ்க
அவாவுந்த உள்ளத்துள் ஆள்வார் தாள் வாழ்க
மறைமொட்டு மலரவைத்த மறையோர் தாள் வாழ்க
திரையிட்ட மறைச்சாரம் தெளிவித்தார் தாள் வாழ்க
மூலப் பொருள்விளக்க முன்நின்றார் தாள் வாழ்க
காலங் கடந்தறிவு காட்டுவார் தாள் வாழ்க

ஆசியுரை

ஸத்தாயும், சித்தாயும் ஆனந்தமாயுமிருக்கும் இரண்டற்ற பரமாத்ம தத்துவமே வேதநெறி போதிக்கும் ஆன்ம நெறி என்று ஸ்தாபித்த ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் உத்தமாதிகாரிகளின் உவகைக்கும், மந்த மத்யம அதிகாரிகளின் கிரம வளர்ச்சியின் பொருட்டும் அனேக பிரகரண கிரந்தங்களையும் ஸ்துதிகளையும் எழுதியுள்ளார். பிரகரண கிரந்தங்களுள் ‘விவேக சூடாமணி’ முதலிடம் வகிப்பது போல், ஸ்துதி கிரந்தங்களுள், ‘சிவானந்த லஹரீ’ முதலிடம் வகிக்கிறது.

உபநிஷத்துக்களில், ஸச்சிதானந்த கணமாகப் பேசப்படும் ப்ரஹ்மமே சிவானந்த லஹரியில் ஸத்யம், சிவம், சுந்தரமாக மிளிர்கிறது. இந்நூலை ஒரு காவ்யமாக நோக்கும்போது நவரஸங்களும் ஒருங்கே விகஸிக்கக் காணலாம். ஈச்வரனின் கருணா ரஸமும் பக்தனின் பக்திச் சுவையும் கரும்புச் சாற்றுடன் தேன் கலந்தாற்போல், ஒவ்வொரு சுலோகத்திலும் இனிக்கக் காணலாம்.

சொற்களின் கோர்வை, பொருளின் ஆழம், ஓசை நயம், உவமைகளின் அழகு, கருத்துக்களின் வீச்சு இவை யோக நிலையில், மோனத்தின் ஞானப் பெருக்காய் இந்நூல் சிவானந்த வெள்ளமாகப் பெருகிய ‘ஸமாதி பாஷா’ என்று புலனாகிறது. இதனாலேயே இதன் அதிர்வலைகள் கற்போரின் நெஞ்சில் இன்றும் ஒரு ஆன்மிக தாக்கத்தையும், தாகத்தையும் உண்டு பண்ணுகின்றன. ஞான, பக்தி வைராக்யங்களின் முப்பரிமாணமாக இந்நூல் திகழ்கிறது. ஈச்வரனிடமிருந்து பிரிக்கப்பட முடியாதவாறு அநன்யமாக இருக்கும் அம்பிகையுடன் இணைத்தே சிவனைத் துதிக்கிறார்.

‘மாமக் மனோ துர்க்கே நிவாஸம் குரு’ – ‘எனது மனமாகிற கோட்டையில் குடி கொள்வீராக’ என்று 42-ஆவது சுலோகத்தில் பிரார்த்திக்கிறார். ஈச்வரன் குடியமர வேண்டுமென்றால், மனம் சுத்தமாக வேண்டுமில்லையா, இதன் பொருட்டு 36-ஆவது சுலோகத்தில் ஈச்வரன் வந்து தங்க புண்யாஹவாசனம் செய்து ஸ்தல சுத்தி, பாத்ர சுத்தி, த்ரவ்ய சுத்தி செய்வதைக் கூறுகிறார்.

ப₄க்தோ ப₄க்திகு₃ணாவ்ருதே முத₃ம்ருதாபூர்ணே ப்ரஸன்னே மன:
கும்பே₄ ஸாம்ப₃ தவாங்க்₄ரிபல்லவயுக₃ம் ஸம்ஸ்தா₂ப்ய ஸம்வித்ப₂லம் |
ஸத்வம் மந்த்ரமுதீ₃ரயன்னிஜஶரீராகா₃ரஶுத்₃தி₄ம் வஹன்
புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத₃யன் ||

அம்பிகையுடன் கூடி அருள் பொழியும் ஈச்வரனைப் பிரார்த்திக்கிறார். நான் உனது பக்தன், நீ என் நெஞ்சில் வந்து குடி கொள்ள வேண்டும். ஊனுடம்பு நின் ஆலயமாக வேண்டும். உள்ளம் நின் திருக்கோயிலாக (கருவறை) வேண்டும். இதன் பொருட்டு, தூய்மையான மனமாகிற கலசத்தை பக்தி எனும் நூலால் சுற்றி, மன நிறைவாகிற நீரால் நிரப்பி, தங்களது திருவடிகளாகிற இரு துளிர்களை மேலே வைத்து, ஞானமாகிற தேங்காயை ஸ்தாபித்து, ஸத்வகுணப் பிரதானமான மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு, உன் வருகையின் பொருட்டு ‘புண்யஹவாசனம்’ செய்கிறேன். நீ பிரியத்துடன் வந்து நெஞ்சில் உறைவாயாக – ‘ஹ்ருத்யந்தஸ்தோஹி அப்த்ராணி விதுநோதி ஸுஹ்ருத்ஸதாம்’ என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க என் நெஞ்சிலுள்ள எல்லா ரஜோகுண தமோகுண அழுக்குகளை நீக்கித் தூய்மைப் படுத்துவாயாக.

சிவானந்த லஹரியின் ஒவ்வொரு சுலோகமும் ஒரு ரத்னமாகப் பிராகாசிக்க, ஸ்ரீ ஆசார்யாள் ஈஸ்வரனுக்கு வாக்கினால் செய்யப்பட்ட ஒரு ரத்னஹாரத்தை ஸமர்ப்பிக்கிறார். ஈஸ்வர ஸம்பந்தியான இந்த ஹாரத்தின் அப்ராகிருதமான திவ்ய ஒளி ஸேவிக்கும் நம் மேல் விழும்போது நம்மைப் புனிதமாக்குகிறது.

இவ்வாறு பல பெருமைகள் வாய்ந்ததும், ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரின் அமுத வாக்காகப் பிரவஹித்தும், ச்ரவண, படன மாத்திரத்தால் வரண்ட நெஞ்சில் கூட பக்தி துளிர்விடச் செய்யும் பெருமை பெற்றதுமான ‘ஸ்ரீ சிவானந்த லஹரீ’ எனும் நூலை, எளிய தமிழில் இனிதே மொழி பெயர்த்துக் கற்றோரும், மற்றோரும் ரஸிக்கும் வண்ணம் வெளியிட்டுள்ள ஸ்ரீ மீ. ராஜகோபாலன் அவர்களின் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.

ஸ்ரீ மஹா த்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வர ஸ்வாமி கிருபையால் இவர் இது போன்ற அரிய நூல்களை, பாமரரும் அறியும் வண்ணம் எழுதி வெளியிட உற்சாகத்தையும், ஊக்கத்தையும் பெற வேண்டி அனுக்ரஹிக்கிறோம்.

ஸ்ரீ ஜய பாத்ரபத சுக்ல சதுர்த்தி நாராயணஸ்ம்ருதி
ஸ்ரீ காஞ்சி ஸம்வத்ஸரம் 2523,
காஞ்சீபுரம் – 631 502

Share this Post

Related Posts