Pages: 1 2
Pages: 1 2

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி புஷ்பமாலிகா

பிரசன்ன விநாயகர் துணை

பேருருவாய் தாயுருவின் பிள்ளையார் எனப்பிரசித்த
நேருருவி நாயகனே நெஞ்சத்தில் – தூறுருவி
நல்லனவாய் எல்லாம் நடக்கச்செய் வாயதனால்
வல்லவனே வைப்பாய் வளம்

நீர்த்திவலை ஆர்ப்பரிக்க நெடுநாவல் பூவிறைக்க
காத்தருளும் மூர்த்திசிவம் காருண்யம் – போர்த்தசிவ
ஜம்புகேஸ் வராஹரா அம்பிகே தொழும்பரா
நம்பினேன் நின்நாமம் சிவம்.

காஞ்சிப்பெரியவர்கள் ஆசியுரை

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி துதிப்பூமாலை என்னும் நூலை எழுதி, அதனை வெளியிட இருக்கும் எமது சிஷ்யன் லண்டன் ராஜகோபாலன் விஷயமாய் நாராயண ஸ்மரணம் செய்யப்படுகிறது.ஸர்வலோக ஜகன்மாதாவான பராசக்தி ஸமஸ்த லோகங்களையும் உண்டாக்கி, ரக்ஷித்து அனுக்ரஹ திரோதானங்களையும் செய்து கொண்டு திகழ்கிறார், பரப்பிரம்ம மஹரிஷியான அவள் படைப்புக்கு காப்பதற்குப் பலப்பல அவதாரங்களை எடுத்து துஷ்டசிக்ஷணமும் இஷ்டரக்ஷணமும் செய்கிறார். ஆகவேதான் ஆதிசங்கர பகவத்பாதாள் சாக்த தத்வத்தை ஸ்தோத்ர ராஜாவான ‘சௌந்தர்யலஹரீ’ என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பாளின் தத்வத்தை விசேஷமாக உபதேசித்திருக்கிறார். அப்படிப்பட்ட அகிலாண்டேஸ்வரி அம்பாளின் துதிமாலையை பாராயணம் செய்து மக்கள் அனைவரும் அம்பாளின் கருணையால் சகல மங்களங்களையும் அடைந்து க்ஷேமமாக வாழட்டும் என்றும், நூலாசிரியரும் இம்மாதிரி பல துதிமாலை எழுதி ச்ரேயஸை அடையட்டும் என்றும் ஆசீர்வதிக்கிறோம்.
நாராயணஸ்மிருதி
காஞ்சிபுரம்,
31-10-2009

பணிவுரை

எல்லாம் வல்ல பரசிவம், அப்புலிங்க வடிவமாக ஜம்புகேஸ்வரர் எனும் திருநாம மூர்த்தியாக கொலுவிருக்கும் திருவானைக்கோவில் எனும் திருத்தலத்தில், பரசிவத்தின் வரப்பிரசித்தமான மகாசக்தி, அன்னை அகிலாண்டேஸ்வரி எனும் திவ்விய தவரூப சிந்தாமணியாக, ஸ்ரீசக்ரம் எனும் அறுபத்து நான்கு கலைவடிவத் தாடங்கங்கள் அணிந்து, மஹாமேரு மேல், மலர்ப்பாதங்கள் பதித்தெழுந்து, சிற்றாடை புனைந்த சீரிளம் பெண்ணாக, கருணை விழியாலும், கவிகாளமேகம் துதிபாடுந்தமிழைத் தந்த தாம்பூலமணிந்த செவ்விதழ்ச் சிரிப்பாலும், தொழுவோர்க்கிரங்கும் தூயமணி விளக்காக, எண்கால் சிலந்திக்கும், ஏற்றுவந்து சிவபூசைசெய்த யானைக்கும் நல்லருள் தந்து நற்கதியளித்த தெள்ளமுதமாக, திருவடி உறைந்தோர்க்கு உண்மை துலக்கும் குருவாக, உண்மை உணர்ந்தோர் உள்ளத்துள் உறையும் உயிர்ச்சக்தியாக, தவத்தால் சிவத்தின் தன்மையளால், அரசாட்சி செய்து வருகின்றாள்.

அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளை வியந்து பலபெரியோர்களும் மந்திரங்களாலும், மணிமொழித் தோத்திரங்களாலும் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அந்தவகையில், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மாத்ருகா புஷ்பமாலா (ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி துதிப்பூமாலை) எனும் ஒப்புயர்வற்ற வடமொழியால் வரைந்த நந்நூலை ஓர் நல்முனிவர் நமக்கு அளித்திருக்கிறார். சில பெரியோர்கள், இத்தோத்திரம், ஸநாதன தர்மம் தழைக்க அவதரித்த பகவான் ஆதிசங்கரர் இயற்றியதாகக் கூறினும், பலசான்றோர்கள், இவ்வரிய பாமாலை ஆதிசங்கரர் அருளியதல்ல எனவும், பெயர் அறியாத வேறொரு பெருஞாநி படைத்த பேரமுதாகக் கருத்துரைப்பர்.

யார் அளித்த வரமாயினும், இப்பாடல்கள், பேரின்பம் அளிக்கவல்ல தேனமுது. இதனை, அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளடிக்கு, அருந்தமிழில் பொருந்துரைத்த கவிப்பூக்களாகப் படைத்துத் துதிக்க, குருவருளால் என்னுள் விளைந்த வேட்கையே, விழைந்தமைத்த முயற்சிக்கு வித்து. என்னுடைய சிற்றறிவின் குற்றங்களைக் கருதாமல், குருவருளின் துணையினால், அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளடிகளில் இத்துதிப்பூமாலையினைச் சமர்ப்பிக்கிறேன்.

மறைவழி நடந்து, மறைபொருள் எல்லாம் நிறைமனம் தெளிக்க, மாதவ குருவடிவாக இருந்து வழிகாட்டும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான, குருமுனிவர்களின் ஆசியினை வேண்டி, அன்னாரின் அருளாசியுடன், இந்த “ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி துதிப்பூமாலை” எனும் பாமாலையை எல்லோரும் படித்துணர்ந்து பரம பாக்கியங்களும் அடையப் பிரார்த்திக்கிறேன்.

மீ. ராஜகோபாலன்

Pages: 1 2

Related Posts

Share this Post