(Read in ENGLISH)

எம்மெஸ் அம்மா, எங்கே நீ போய்விட்டாய்!

பக்தியை, பரவசத்தை, பாரத சுதந்திரத்தை
சக்தியை, ஸ்வரலயத்தால், சங்கீத சாஹசத்தால்
கொட்டி எம்மை வளர்த்துவிட்டு கோதின்றி வாழ்ந்துவிட்டு
சட்டென்று சரஸ்வதியின் சந்நிதிக்கோ போய்விட்டாய்?

அம்மா எனும் அரிய சொல்லுக்கு உரிய பொருளே உன் பிறவி!

ஒருவருக்கு இறையவனே உரியவகைத் திறமைகளைக்
கருவினிலே வைக்கின்றான்; கண்டுஅதைக் கற்றுணர்ந்து
திருவெனவே விளக்கேற்றித் திசைபடவே செய்தல்கடன்,
குருவருளே இதற்கு வரம், குறிப்பிட்டுக் காண்பித்தாய்!

காட்டுக்குயிலாக கண்கொள்ளா வானத்தின்
விண்மீனின் துளியாக
வீட்டுக்குடமாக விளக்காக, திரைப்படத்தின்
விமரிசனப் பொருளாக
கூட்டுக்கிளியாக குவிந்திருப்பாய்! நல்விதியின்
பிரதிபதியாய் சதாசிவனார்
பாட்டுப்புயலாக பாரதத்து மணியாக,
பவித்திரத்து அணியாக – உனைக்
காட்டிக்கொடுத்தாரே, கைகூப்பி இன்றுலகம்
கனிந்துன்னை வணங்குதம்மா!

குங்குமமும் பூவும் கூர்விழியில் கரிசனமும்
மங்களப் புன்னகையும் மாதரசி உன்னழகு!
தங்குதடை இல்லாமல் தாளலயம் மிஞ்சாமல்
பொங்கிவரும் சங்கீதப் பொக்கிஷமே உன்வரவு!

நாதஸ்வரம் கேட்டாலே நல்லவிழா உள்ளம் வரும் – உன்
நாதத்தைக் கேட்டாலே உள்ளமெல்லாம் தெய்வீகம்!

“கௌஸல்யா சுப்ரஜா” என்றுனது
வாத்ஸல்ய வரவேற்பால்
எத்தனை கோடி இல்லங்கள், உள்ளங்கள்
நித்தமும் உன் குரலால், உன்னருளால், உன்னிசையால்
மெத்தை எழும், சுத்தம் பெறும், பக்தி எனும் முத்தம் மிகும்!
புத்தகமே! இசைவிளக்கத் தத்துவமே
பூமகளே, நீஎங்கே புறப்பட்டுச் சென்று விட்டாய்?

பிறப்பால் வருவதல்ல பெருமை. பின்னுலகில் நாம் எடுத்த
பொறுப்பால், போதனையால், சாதனையால், சத்தியத்தால்
சிறப்பால் வாழ்கின்ற சீரமைப்பால்! கவினுலகு
தன்னாலே பணிந்து, தாயென்று நீயென்று
முன்னாலே குனிகின்ற முதிர்ச்சியினால் – வாழ்க்கையிசை
எவ்வாறு இசைப்பதென எங்களுக்குக் காட்டிவிட்டாய்?
எங்கேயோ இப்போது, ஏனோநீ போய்விட்டாய்?

இசையாலே சுருட்டி, இழைத்தளித்த கல்யாணி!
வசந்தத்தால் எழுந்தோடி வரவேற்கும் மனோஹரி!
கீதமென்றாலும், கீர்த்தனை என்றாலும்
வேதமென்றாலும் வேதியரின் மந்திரத்து
நாதமென்றாலும் நன்குணர்ந்து நீதந்த
உச்சரிப்பு உன்னுடைய உபசரிப்பை அனுபவித்து
நிச்சயமாய் சரஸ்வதியை நிலைப்பித்து விட்டதம்மா!

ஓரளவு இசையறிந்தால், குரலிருந்தால், வழியறிந்து
பேரளவு கண்டதெனப் பெருமுழக்கமிட்டுப் பலர்
மேடையிலே பாடகராய் ஆடுகிறார்; அதிவிரைவில்
கூடுதலாய்ப் புகழ்வரவு குவிக்கத் துடிக்கின்றார்.
இயந்திரமாய்ப் பாடுகின்ற இளையோர்க்கு நற்பாடம்
உயர்தருவே, கற்பகமே, உன்பணியே உவமானம்!

இசை என்பதே வரம் என்றும், இசைப்பதே தவம் என்றும்
அசைப்பதை, அசையாது அசைவதை, ஆண்டவனை
விசையினால், உள்ளத்து வித்தின் வெளிப்பாட்டால்
காட்டுவது பாட்டுஎனக் காட்டிவிட்டுப் போய்விட்டாய்!

நாதத்தின் மூலத்தை நான்கிடத்தில் நயப்பார்கள் –
“பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ” –
ஆழ்நிலை, அடிவயிறு, மலரிதயம், மணிக்கழுத்து!
வாய்வாசல் வருகின்ற வாக்கைத்தான் நாம் அறிவோம்!
நீள்கழுத்தில் அது உண்மை! இருதயத்தில் அது அன்பு!
அடிவயிற்றில் அது உணர்வு! ஆழ்நிலையில் ஆனந்தம்!
நாலும் அறிதலென நல்லோரிதைச் சொல்வதுண்டு! – நீ

மேலுக்குப் பாடாமல், மெய்யாகச் சங்கீதம்
நூலைப் பிடித்தாற்போல்! நுண்வித்து சிரத்தையிலே,
ஆனந்த வேரில், அனுபவத்தண்டில்,அன்பெனும் இதழில்
அருள்மலராய் உண்மை அம்மா!

எம்மெஸ் அம்மா, எத்தனை தவயோகி! நீ
பாடப் பாடப் பணிந்தாய் – புகழ்
கூடக் கூடக் குனிந்தாய் – அருள்
தேடத் தேடக் கனிந்தாய் – புவி
வாழப் பேரிசை இசைத்தாய்!

இசைத் தாயே, இசைத்தாயே!
இது போதும் என்று இளைப்பாறச் சென்றாயோ?
பாவம் அம்மா, நீ வெகுளி, பவித்திரத்தால் நீ அடைந்த
வாணி சரஸ்வதியின் வாசத்தில் உனக்கெங்கே
ஓய்வு கிடைக்கும்! ஓங்காரி ஞானமணி
ஆயகலையும் ஆக்கிவைத்த கலைவாணி
பாடவைப்பாள், உன்பாட்டில் பரிமளிப்பாள், சுகமளிப்பாள்!
ஆதலினால் காதலினால் அனந்தமும் உன்சங்கீதம்!

நேற்றையரும், இன்றையரும், நாளைவரும் யாவருக்கும்
காற்றினிலே வரும்கீதம், கற்பகமே, உன் நாதம்!
காதலினால் செய்தகவிக் கற்பூர ஒளிக்காந்தம்!
ஆதலினால் உன்னான்மா அடையுமினி நற்சாந்தம்!

மீ. ராஜகோபாலன்

Related Posts

Share this Post