Shivanandalahari – Verse 63
63 – எவ்வழியும் செவ்வழியாய் ஏற்பான் அடி போற்றி!
गण्डूषांबुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते |
किंचिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते
भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ||६३ ||
ரங்க₃ஸ்ய கூர்சாயதே
க₃ண்டூ₃ஷாம்பு₃னிஷேசனம் புரரிபோர்
தி₃வ்யாபி₄ஷேகாயதே |
கிஞ்சித்₃ப₄க்ஷிதமாம்ஸஶேஷகப₃லம்
நவ்யோபஹாராயதே
ப₄க்தி: கிம் ந கரோத்யஹோ வனசரோ
ப₄க்தாவதம் ஸாயதே || 63 ||
பூவுமுடிப் பேஎனவே – புணைந்தேக
வாயுமுமிழ்த் தேறலபி ஷேகவடி நீரும்புர
வூருமழித் தானினுடல் – நனைந்தோடும்
வாயுந்தரிந் தேகடித்து ஆயுந்திறைச் சீபடைத்த
தாயுமிக வேவிந்தை – ஆஹாஹோ
வேயுவன வேடனுநல் லாகுவனா யாகவெது
ஆகுமுயர் பக்தியினா – லாகாதோ?
(63)
வழி நடந்து தேய்ந்த மிதியடிகள், உயிர்நாதா, உனது சிரத்தில் கூர்ச்சமாக வைக்கப்பட்டதே, வாயினால் உமிழ்ந்த எச்சில், முப்புரங்களை அழித்த உனக்கு அபிடேக நீரானதே, சிறிது கடித்துப் பார்த்து மீந்த இறைச்சியின் எச்சம், உனக்குப் படைக்கப்பட்ட உணவானதே, என்ன விந்தை! காட்டில் உழலும் வேடன் மிகச்சிறந்த அடியாராக ஆகிறானே! பக்தி எதைத்தான் சாதிக்காது!
குறிப்பு:
இப்பாடலில் பக்தியின் அளப்பறிய ஆதாயத்தைக் காட்டுவதற்காக, மறையறிவோ, தர்மம், யோகம் எனும் பெரு நெறிகளோ கற்றறியாதவரான கண்ணப்ப நாயனாரின் உயர்வினை எடுத்துக் காட்டுகின்றார், பகவான் ஆதிசங்கரர்.
வேடுவனான திண்ணன் என்பார், வனம் ஒன்றில் இருக்கும் சிறு ஆலயத்தில் விளங்கிய சிவலிங்கத்தின்பால் மட்டற்ற தூய அன்பு கொண்டவராக இருந்தார். அவ்வுருவத்திற்கு தினசரித் தொழுகை செய்து வந்தார். ஆகம முறைகள் ஏதும் அறியாதவர் அல்லவா! அன்பு ஒன்றே அவரிடம் இருந்ததால், தனது செருப்பினை லிங்கத்தின் தலையில் கூர்ச்சமாக வைத்தும், வாயில் கொணர்ந்த நீரை உமிழ்ந்து அபிடேகம் செய்தும், கடித்துப் பார்த்து வேட்டையாடிய இறைச்சியைப் படைத்தும், மனதால் பெரிதும் உருகி, ஒரு பொழுதும் தவறாமல் வணங்கி வந்தார்.
ஓர் நாள், சோதனையாக, சிவபிரான் தமது லிங்க உருவத்தின் கண்களில் உதிரம் வருவதாய்க் காட்ட, மனம் பதைபதைத்த திண்ணன், தனது விழிகளில் ஒன்றைத் தோண்டி சிவலிங்கத்தில் அப்ப, இறைவன் மற்றொரு விழியிலும் உதிரம் காட்ட, சற்றும் தளராமல், தன் காலினை லிங்கத்தின் முகத்தில் அடையாளத்திற்காகப் பதித்து, மற்றொரு கண்ணையும் தோண்ட முயன்றார் திண்ணன். பக்தியால், கண்ணினை அப்பிய திண்ணனை வியந்து, ‘கண்ணப்பா’ என அன்பினால் அழைத்து அருள் காட்டியது பரப்பிரம்மம். இவ்வரலாற்றினைக் காட்டி, அன்பு ஒன்றே போதும், இறைவன்பால் வைக்கும் அன்பாகிய பக்தி, அளப்பறிய வாழ்வையும் வழியையும் தரும் என்று பகவான் இப்பாடலில் காட்டுகின்றார். (63)