Adiguru Dhakshinamurthy – Foreword

ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு

பல வடிவங்களில் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி

ஸ்ரீமதி ஜெயா சந்திரசேகரன்

ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாளின் பாதகமலங்களையே குருபோதனையாய் ஏற்று வாழ்ந்து வரும் எங்களுக்கு, அவரது ஆக்ஞையால் நாம் செய்யத் துணியும் நற்காரியங்களை நல்லோரிடம் நவின்றால் மேலும் நன்மார்க்கம் தழைக்குமே எனும் உறுதியால், இச்சிறு கைங்கரியத்தின் அனுபவத்தை எழுதுகிறேன்.

1990 அக்டோபரில் நான் சித்திரங்கள் முலம் பணம் ஈட்டிச் செய்து வந்த திருமாங்கல்யக் கைங்கர்யம் 108 நிறைவு பெற்று ஸ்ரீ பெரியவாளின் ப்ரஸாதமாக அவரின் சந்தனப் பாதுகை கிடைக்கப் பெற்றேன். பாரத தேசம் முழுக்கத் தன் பாதம் நோக நடந்து தர்ம பரிபாலனம் செய்து வந்த நடமாடும் தெய்வத்தின் பாதுகை கிடைக்க நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்? 1992 பிப்ரவரி 29ம் தேதி நானும் என் கணவரும் 2வது சுற்று திருமாங்கல்யக் கைங்கரியம் ஆரம்பிக்க ஸ்ரீமஹா பெரியவாளின் தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தோம். அன்று ஏகாதசி. ஏகக்கூட்டம். எங்கள் முறை வந்த பொழுது, திருமாங்கல்யங்கள் இரண்டை, ஒருஜோடி மெட்டியுடன் சமர்ப்பித்தோம். ஸ்ரீமஹா பெரியவாள் ஸந்நிதியில் இருந்த இரண்டு ஏழைப் பெண்களுக்கு, உடனே அதனைத் தானம் செய்தார். இதைவிட உயர்ந்த பாக்கியம் வேறு என்ன வேண்டும்? “யார் எது செய்தாலும் அது தன்னுடைய சொந்த சக்தியைக் கொண்டு அல்ல. ப்ரஹமத்தின் சக்தியைக் கொண்டுதான் எவரும் எதையும் செய்ய முடியும்” என்று அம்பாள் உபநிஷத்தில் உபதேஸித்த மாதிரி, ஜகத்குருவான தக்ஷிணாமூர்த்தி பகவானின் பல்வேறு வடிவங்களை வரைய வேண்டும் என்ற எண்ணத்தையும் அதற்கான ஆற்றலையும் அந்த அம்பாளே தான் குருஸ்வருபமாய் எனக்குத் தந்து அருளியிருக்கிறார் என்று திடமாக நம்பி இந்தப் பணிவுரையை ஆரம்பிக்கிறேன்.

நடமாடும் தெய்வமான ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவாளை அவருடைய ஜீவிய காலத்தில் நிரம்ப தரிசித்துள்ளேன். மனம் விட்டுப் பேசியும் இருக்கிறேன். ஆதிசங்கரருக்குப் பிறகு, வேதம் இரக்ஷிக்கப்பட வேண்டும் என்று தன் சொல்லாலும் செயலாலும் உணர்த்தி வந்தவர் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவாள். அவர் சொல்லியிருக்கிற எத்தனையோ கருத்துக்களில் உலகமே நன்மை அடைய, ஷேமம் பெருக அவர் வலியுறுத்தி வந்த ஒரு முக்கியமான கருத்து என் மனதில் ஆழப் பதிந்து விட்டது. அதைச் செயல்படுத்த ஆர்வம் கொண்டேன். அதன் விளைவே இச்சிறு முயற்சி . வேதமும், வேத தர்மமும் அழிந்து விடாமல் இரக்ஷிக்கப்பட குரு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் அவதாரமாக ஆதிசங்கரர் அவதரித்தார். ஜகத்குரு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் வடிவங்களை வரையும் எண்ணம் ஆதிசங்கரரின் சரித்திரத்தை (ஸ்ரீமடத்தில் உள்ளது) வரைந்த பிறகே தோன்றியதன் பொருள் பின்னரே எனக்குத் தெளிவாயிற்று. ஸ்ரீகாஞ்சி முனிவர் தனது ஜீவிய காலத்தின் கடைசி கட்டத்தில் மெளனமாய், சாந்த மூர்த்தியாய் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியாய் எனக்குக் காட்சியளித்தார். கடைசியாக அவர் என்னிடம் பேசிய பொழுது, Sir John Woodroffe’s ‘Garland of Letters’ எனும் புத்தகத்தைப் படி என்று சொன்னதுதான். ஏற்கனவே ஒருமுறை அவர் ‘நீ சித்திரம் வரையும் பொழுது அந்நிகழ்ச்சிகளைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு வரை’; என்றும் அன்போடு சொல்லியிருக்கிறார். வெறும் பொழுது போக்குக்காகச் சித்திரங்கள் வரைவதும், புத்தகங்கள் படிப்பதுமாக இருந்த என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது ஸ்ரீமஹா பெரியவாளின் தரிசனமும், அருள் வாக்குமே. அதுவே பல கோயில்களுக்கும் நேரில் சென்று ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் பல்வேறு விதமான வடிவங்களை வரையும் ஆர்வத்தைத் தூண்டியது.

‘ஸர்வ ஷேமாபி குரு’ – ஈஸ்வரனே எல்லா குருக்களுக்கும் முந்தைய குரு. உபதேஸ குருவாகக் காட்சி தந்த தக்ஷிணாமூர்த்தியே ஸகல வித்யைகளுக்கும் அதிபதி. வேதத்திலுள்ள தந்த்ர, மந்த்ர உபாக்யானங்களையும், சாஸத்திரங்களையும் அம்பாளை முன்னிலைப்படுத்தி பரமேஸவரன்தான் உபதேசித்தார். அதனால்தான் பரமேஸ்வர அம்சமான ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியே ஜகத்குருவான ஆதிஸங்கரராகத் தோன்றினார். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் கோலத்தை திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவர் பின்வருமாறு அழகாகச் சித்தரிக்கின்றார்.

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறு அங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிருந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லமாய் அல்லதுமாய் இரந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

ஆதிகுருவாய் சக்தியை உள்ளடக்கிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியாய் காட்சி அளித்தது, ஜனங்களைச் சும்மாயிருக்கப் பண்ணுவதற்கே என்றார் ஸ்ரீமஹா பெரியவாள். உடலாலும், உள்ளத்தாலும், உயிர்களுக்குத் துன்பம் நேரிடாமல் காக்கவே ஊழியின்போது பரமேஸவரன் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியாய்த் தோன்றினார். கல்லால மரநிழலில் அமர்ந்து தரிசனம் கொடுக்கும் குருநாதர் இளையவராகவும், சிஷயர்களோ மிகவும் வயதானவர்களாகவும், குருவோ யாதொரு வார்த்தையும் பேசாமல் வாய் மூடி மெளனமாய் தன் சின் முத்திரையால் ஜீவாத்மா – பரமாத்மா ஐக்யநிலையை உணர்த்தும் விதமாய் ஒவ்வொரு சிவன் கோயில் ப்ரஹாரத்திலும் தெற்குமுகமாய்க் காட்சியளிப்பதைக் காணலாம். வேதஸ்வரூபியான ஸ்ரீபரமேஸ்வரனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்திலிருந்து தோன்றிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்கும் பல்வேறு வடிவங்கள் உண்டு என்பதைத் தெரிந்து கொண்டதும், என் மனம் அதில் ஈடுபட்டது. சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு ஆர்வம் அதிகரிக்க அதுவே காரணமாயிற்று.

ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்குப் பல வடிவங்கள் உள்ளன என்கிறது திருவாவடுதுறை ஆதீனம் 1991 வெளியீடான “தக்ஷிணாமூர்த்தி (ஆகமம் + சில்பம் – பிற்பகுதி)” எனும் புத்தகம். இவற்றில் எல்லாமே அழகுமயமானவைதான். ஆனால் சித்திரம் வரைய எனக்கு உந்துதலைத் தந்தவை ஞான, வீணாதர, யோக, வியாக்யான, மேதா, சக்தி, உத்குடிசான, வீராசன, ஜடாபர தக்ஷிணாமூர்த்தி வடிவங்கள். அவைகளில் சில வடிவங்களே இச்சிறு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இவைகள் வழக்கமான தோற்றத்திலிருந்து வேறுபட்ட வடிவங்கள். சிவனின் அறுபத்தி நான்கு உருவங்களில் மூன்றுவித வடிவங்களே யோக, போக, வேக வடிவங்கள். அவற்றில் குரு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் வடிவமோ யோக வடிவமானது. தக்ஷீணம் என்பது ஞானம் எனப்படுவது. “த”, “க்ஷி”, “ணம்” எனும் மூன்றும் பீஜாட்சரங்களாகும். சனகாதி முனிவர் நால்வருக்கும் ஞானநிலையினை உணர்த்தவே குரு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியாய் காட்சி தந்தார். எல்லாம் அடங்கியிருக்கும் ஊழியின்போது, எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி, ஆனந்தமாயிருக்கும் தத்துவமே ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தத்துவம். அழிவிலே அமைதியைக்காட்டி, சிவசக்தி ஐக்கியத்தின் போது, “அஹம் ப்ரஹமாஸமி” – நானே இறைவன் என்று உணர்த்துகிறார். இந்நிலை நாம் அடைய குரு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் அனுக்ரஹம் அவசியம் ஆகிறது. வேதம், ஆகமம், தேவாரப் பனுவல்கள் இதனையே உணர்த்துகின்றன. சிருக்ஷ்டியின் ஆரம்பத்தில் பிரம்மதேவர் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியை வழிபட்டுத்தான் சிருக்ஷ்டிக்கான ஆற்றலையே பெற்றாராம். ஒரே பரமாத்ம ஸ்வரூபம் தான் சிவனாகவும், விஷ்ணுவாகவும், பிரம்மாவாகவும் ரூபம் எடுக்கிறார்கள். ஞானத்திற்கு சிவனே என்றும், ஞானத்தினால் பெறும் மோக்ஷமே ஸாச்வதமானது என்றும் ஸ்ரீ விஷ்ணுவே கூறுகின்றார். வேததர்மம் பல்வேறு கால கட்டங்களில் விளங்கவே விஷ்ணுவும், பரமேஸ்வரனும், பல்வேறு வடிவங்களையும் எடுக்க நேரிட்டது. மஹாவிஷ்ணு வேததர்மம் விளங்க எடுத்த பல அவதாரங்களில், க்ஷத்திரிய தர்மப்படி யுத்தம் செய்தாலும், ஞானோபதேசமும் செய்திருக்கிறார் என்பதை க்ருஷணாவதாரம் விளக்குகின்றது. ஆனால் கலியுகத்திலோ, அதர்ம எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. அப்பொழுது ஸாத்கமான ஞான உபதேஸமே பயன்படும் என்பதால், பிராமண தர்மத்தை மேற்கொண்ட ஸாத்க குணமுடைய ஞானியாக, ஜகத்குருவாக, ஆதிசங்கரராக, குரு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோன்றினார். “க்ருஷணம் வந்தே ஜகத் குரும்” என்று ஸ்ரீகிருஷ்ணனையும், “கோஹி ஜகத் குரு ருக்த” என்று சிவனையும் நாம் சொல்வதிலிருந்து இவை தெளிவாகின்றன.

ஒருநாள் ஸ்ரீஜெயேந்திரரை தரிசிக்க காஞ்சி மடம் சென்று, பல கோயில்களுக்கும் பயணம் செய்து ஆங்குள்ள ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் உருவங்களைச் சித்திரமாக வரையும் விருப்பத்தை ஸ்ரீபெரியவாளிடம் தெரிவித்தேன். ஸ்ரீபெரியவாளும் அனுக்ரஹித்து, மேலும் ஆந்திராவில், நாகாலாபுரம் என்ற ஊர் இருப்பதாயும், அவ்வூர்க் கோயிலின் வீணாதக்ஷிணாமூர்த்தியின் கலைநயம் பற்றியும் உற்சாகமாகச் சொல்லி, அதை வரையும்படி பணித்தார். மிவும் உற்சாகமாகச் சென்னை திரும்பிய எனக்கு, உடனே இப்பயணத்தை ஏற்கொள்ள இயலவில்லை. அதற்கான நேரம் வந்த பொழுது, ஸ்ரீஜெயேந்திரர் குறிப்பிட்ட நாகாலாபுரம் என்ற ஊரின் பெயரே முற்றிலும் மறந்து விட்டது. எல்லாமே ஒரு காரண காரியத்தோடுதான் நடக்கிறது என்பது எனக்கு பின்னொரு காலத்திலேயே தெளிவாயிற்று. ஸ்ரீபெரியவாளின் இருப்பிடமாகிய காஞ்சிபுரத்தையே முதல் ஸ்தலமாக ஏற்று, ஸ்ரீஏகாம்பரேஸவர் கோயில் கல்தூண்களில் பலவேறு நிலைகளை இருந்த தக்ஷிணாமூர்த்தியின் உருவங்களை வரைந்தேன். படம் 1 – யோனி தக்ஷிணாமூர்த்தி, படம் 2 – யோக தக்ஷிணாமூர்த்தி மற்றும் படம் 3 – வீணா தக்ஷிணாமூர்த்தி உருவங்களை வரைந்து கொண்டேன்.

பிறகு சென்னையிலிருந்து ஆந்திரா போகும் வழியில் உள்ள ஒரு ஊரின் பெயர் சுரட்டுப்பள்ளி எனக் கேள்விப்பட்டு, அதுதான் ஸ்ரீஜெயேந்திரர் குறிப்பிட்ட வீணா தக்ஷிணாமூர்த்தி கோயிலுள்ள ஊர் என நினைத்து அங்கு பயணமானேன். தெய்வ சித்தம் பல விசித்திரங்களைப் புரிவதைப் பிறகே தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே எங்கள் கார் நின்றது. அங்கு ஒரு கோயில். தயக்கத்தடன் உள்ளே நுழைந்த என் கண்கள் வியப்பால் விரிந்தன. அங்கு எதிரில் உள்ள சுவரில் ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகளின் பெரிய திருஉருவம். அதன் அருகில் எழுதியிருந்ததைப் படித்தால் எனக்கு மேலும் வியப்பான சந்தோஷம். சுரட்டுப்பள்ளியில் உள்ள கோவிலின் பெயர் ஸ்ரீபள்ளிகொண்டேஸ்வரர் எனவும், அங்குள்ள ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மிகவும் விசேஷமானது என்றும், ஸ்ரீமஹாஸ்வாமிகள் ஓரிருமுறை அங்கு தங்கிச் சென்றுள்ளார்கள் எனவும் அறிந்த பொழுது, மிகவும் பரவசமடைந்தேன். சுரட்டுப்பள்ளி கோவிலுக்குச் சென்ற பொழுது, பவர் கட் ஆகியிருந்ததால், அகல் விளக்கின் ஒளியில் மட்டுமே தெரிந்த, சயனித்திருக்கும் சிவனின் திருக்கோலத்தைக் கண்டு சொல்லொணாக் களிப்படைந்தேன். அங்குள்ள சிறிய பிராகாரத்தில் உள்ள படம் 4 – குரு தக்ஷிணாமூர்த்தி , அவரது தோளின் அருகே, பின்புறமிருந்து அம்பாள் எட்டிப் பார்ப்பது போலிருந்த அழகிய உருவத்தை, எனது மனதால் நிறுத்தி, ஏட்டில் வரைந்து கொண்டேன். சாந்தி தேவியுடனும், நந்தி தேவர் மற்றும் ரிஷிகள் சூழ, யோக பட்டையுடன் இருக்கும் அமைப்பை, அகல் விளக்கின் வெளிச்சத்தில் வரைவது கடினமாயிருந்தாலும், மிகவும் ஆனந்தமாயிருந்தது.

ஸ்ரீஜெயேந்திரர் குறிப்பிட்ட நாகாலாபுரம் கோயில், சுரட்டுப்பள்ளி தாண்டி திருப்பதி செல்லும் வழியில் தான் இருக்கிறது என்பதை அறிந்து, மீண்டும் அங்கு பயணித்தேன். இங்க எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் சுயம்பு மூர்த்தியாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சியளித்து வருகிறார். சாமகானப் பிரியரான சிவன் வேதஸ்வரூபியான விஷ்ணுவின் கோவிலில், படம் 5 – வீணா தக்ஷிணாமூர்த்தியாய், ஸமபாத ஸ்தானத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் கோலம் கண்களை விட்டு அகலாது. கல்லாலமரமோ, ஜடாமண்டலத்தைப் போல விளங்குகிறது. பரிபாலனக் கடவுளான விஷ்ணுவும் ஞான பகவானான சிவனும் ஒன்றே எனும் தத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீமஹாஸ்வாமிகளும், ஸ்ரீஜெயேந்திரரும் அடுத்தடுத்து சுரட்டுப் பள்ளிக்கும், நாகாலாபுரத்திற்கும் எனனை அனுப்பி இருக்கிறார்கள் என நினைத்து மகிழ்ந்தேன். இந்த அனுபவத்தை, பிறிதொரு நாள் ஸ்ரீபரணீதரன் அவர்களிடம் கூறிய பொழுது, அவரும், நாகாலாபுரம் சென்று அங்குள்ள ஸ்ரீவேதநாராயணப் பெருமாளை தரிசித்துப் பிறது கருவறை விமானத்தில் தெற்கு கோஷ்டத்தில் உள்ள வீணா தக்ஷிணாமூர்த்தியை மறக்காமல் பார்க்கும்படி ஸ்ரீமஹாஸவாமிகள் தனக்குப் பணித்தார் என்றும், தான் தரிசித்து எழுதிய முதல் ஆலயமும் இதுதான் எனவும் கூறினார். என்னே எனது பாக்கியம்.

பிறகு ஸ்ரீகாஞ்சி கைலாஸநாதர் கோவிலின் கோஷ்டத்திலுள்ள இரண்டு அழகிய வடிவங்களை, படம் 6, படம் 7, வரைந்து கொண்டேன். பிறகு சென்னையை அடுத்த வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயிலில் உள்ள மிகவும் வித்தியாசமான படம் 8 – யோக தக்ஷிணாமூர்த்தியை வரைந்தேன். நான் சென்ற நேரம் கோவில் பூட்டப்பட்டிருந்தாலும், அன்புடன் தாள் திறந்து தரிசனம் செய்து வைத்த வயது முதிர்ந்த குருக்களிடமே, கோவிலைப்பற்றிய விவரங்களை அறிந்த கொண்டேன். பிரம்மாவால் அசுரதோஷம் நீங்க பூலோகம் அனுப்பப்பட்ட நான்கு வேதங்களும், பூமியில் பிறந்து நற்கதியடைந்த ஊர் என்பதால் “வேதஸ்ரேணி” எனப் பெயர் பெற்றது. நாளடைவில் இதுவே வேளச்சேரி ஆகிவிட்டதாம். திருக்கடையுரில் யமன் மார்க்கண்டேயனைப் பாசக்கயிற்றால் இழுக்கும் போது, சிவனையும் சேர்த்து இழுத்ததினால், கோபம் கொண்ட சிவன் யமனுடைய தண்டத்தைப் பறிக்க, யமன் அதனை வேதஸ்ரேணி சிவனை வழிபட்டே பெற்றுக் கொண்டாராம். அதனால்தான், சிவனுக்கு தண்டீஸவரர் எனும் பெயர் வந்ததாக வரலாறு. அடுத்ததாக பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள ஸ்ரீதிரிசூலநாதர் கோயில். 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலின் பெயர் தர்மபுரீஸவரர் கோயில். இங்கிருந்த படம் 9 – உத்குடுகாசன தக்ஷிணாமூர்த்தி மிகவும் அழகானவர். பிறிதொருநாள், திருவொற்றியுரிலுள்ள படம் 10 – உபதேச தக்ஷிணாமூர்த்தியை வரைந்து கொன்டேன். ஸ்ரீஆதிபுரீஸவரர் கோவிலின் வெளி மண்டபத்தில் சுமார் ஆறு அடி உயரத்தில், அபய முத்திரையுடன் விளங்கும், கம்பீரமான ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் உருவம், அபூர்வமாக, வடதிசை நோக்கி அமைந்திருக்கிறது.

தஞ்சை மாவட்டத்து ஆலயங்களில் எனக்கு வரைவதற்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைத்தன. வடக்கு வாசல் எனும் இடத்தில், அம்பாள் அருகில் அமர்ந்திருக்க, சிவகணங்கள் பவ்யமாக நின்றிருக்க சாந்தஸவருபியான படம் 11 – தக்ஷிணாமூர்த்தி உருவம் கண்களுக்குப் பெருவிருந்து, மனதுக்கு அருமருந்து. படம் 12 – ஸ்ரீ சக்தி தக்ஷிணாமூர்த்தி , கீழவீதி புதுக்கோயில் சந்திர பாலதண்டாயுதபாணி கோயிலில் தரிசனம் தருகிறார். தஞ்சையிலும், சுற்றியுள்ள ஊர்களிலும், பல கோயில்களில் பல தக்ஷிணாமூர்த்தி வடிவங்கள், சிதிலமாக இருக்கின்றன. படம் 13 – வீராஸன தக்ஷிணாமூர்த்தி, கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் உள்ள முவறூர் ஸ்ரீமார்க்க சகாயேஸவரர் எனப்படும் வழித்துணைநாதர் ஆலயத்தின் கொடிமரத்தில் உள்ளது. திருவிடைமருதூருக்கருகில் திருக்குடித்திட்டை என்ற ஊரின் கோயிலில் உள்ள படம் 14 – ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மிகவும் அழகான வடிவம். இக்கோயிலைப் புனருத்தாரணம் செய்யச் சொல்லி ஸ்ரீமஹாபெரியவாள் கூறியிருக்கிறாராம். புதிய கோயில்களைக் கட்டுதல் சிறப்பாயினும், சிதிலமடையும் வரலாற்றுச் சிறப்பான கோயில்களைப் பழுதுபார்த்தல் எவ்வளவு முக்கியம்?. தஞ்சை மாவட்டத்தில் கொல்லுமாங்குடி இரயில்வே கிராஸிங் அருகில் ஸ்ரீமஹா காளநாதர் குடி கொண்டுள்ளார். இங்கே சாந்த மூர்த்தியாக நந்தியுடன் விளங்கும் படம் 15 – தக்ஷிணாமூர்த்தியின் வடிவம் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கிறது. படம் 16 – மேதா தக்ஷிணாமூர்த்தி திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் இருக்கிறார். கூட்டமில்லாத அமைதியான சூழ்நிலையில், கல்லாலமரமும், வேலைப்பாடுகளுடைய பீடமும், நுணுக்கமான சிற்பக்கலையுடனும், வீராஸனத்தில் அமர்ந்திருக்கும் ஜகத்குருவை, நிதானமாய் கவனித்து வரைந்து கொள்ள முடிந்தது. படம் 17 – மிருதங்க தக்ஷிணாமூர்த்தியின் அழகிய திருக்கோலம், திருநெல்வேலி மாவட்டத்தில், கோவில்பட்டி போகும் வழியில், கழுகுமலை முருகன் கோயிலின் பின்னால், மலைஉச்சியில் கற்கோயிலாக அமைக்கப்பட்டிருக்கும் வெட்டுவான் கோயிலில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றேன். பொதுவாக யோக தக்ஷிணாமூர்த்தி, ஞான தக்ஷிணாமூர்த்தி, வீணாதர தக்ஷிணாமூர்த்தி அல்லத ு வியாக்யானதக்ஷிணாமூர்த்தி என நான்கு வகையிலேயே ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் வடிவம் இருப்பதாகச் சொல்வார்கள். இங்கேயோ, மிருதங்கத்துடன் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி விளங்குவது அபூர்வமானது என்பதால், கடும் வெயிலில், கரடுமுரடான பாதை கடந்து அங்கு சென்றால், அங்கு தக்ஷிணாமூர்த்தியின் உருவம் ஏதுமில்லை எனத்தெரிந்து உளம் வருந்தினேன். கழுகுமலை முருகன் ஆலயதரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்த குருக்களிடம் மிருதங்க தக்ஷிணாமூர்த்தியின் தரிசனம் கிடைக்காததை வருத்தத்துடன் சொல்ல, அவரோ, “யார் அப்படிச் சொன்னது? குடவரைக் கோயில் வெளியிலிருந்து தெரியாது. நான் அழைத்துச் செல்கிறேன்” என உற்சாகமளித்தார். மீண்டும் மலையேறி, பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அக்கோயிலின் தரிசனத்தைப் பெற்றேன். கோயிலின் மேல் விமானத்தில் மிருதங்கம் வாசித்தபடி தனிச்சிறப்புடன் விளங்கும் ஜகத்குருவைக் கண்டேன். இவைகளைத் தவிர தக்ஷிணாமூர்த்தியைப் பிரதிஷடை செய்ய சில விதிமுறைகள் உள்ளன என்றும், ஆகமத்தில் கூறப்பட்ட இலட்சணங்களைக் கொண்டும் தக்ஷிணாமூர்த்தியின் வடிவங்களை (படம் 19, 20, 21, 22, 23, 24) வரையலாம் என அறிந்து, அதன்படியே சித்திரங்களைச் சேர்த்துள்ளேன்.

பல கோயில்களுக்கும், மீண்டும் மீண்டும் சென்று, சித்திரங்களை வரைவது கண்டு, நண்பர்கள் ஏன் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு வரையக்கூடாது என நல்லெண்ணத்தால் யோசனை கூறினர். கண்களால் மீண்டும் மீண்டும் தரிசித்து, மனதில் தியானத்தால் யூகித்து, மதியால் தீவிர யோசித்து சித்திரங்களை வரையும் வாய்ப்பைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்? பக்தர்கள் தாம் பெற்ற நல்லனுபவத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற ஆசைியினாலேயே, இனது அனுபவத்தை, இச்சித்திரங்களின் முலம், அவைகளுக்கு அணி சேர்க்கும் ஏற்புடைய பிரார்த்தனைகளுடன், எல்லோர் உய்வையும் உண்மையில் வேண்டிச் சமர்ப்பிக்கிறோம்.

இச்சுகானுபவத்தைப் பெறவும், எல்லோருக்கும் தரவும், வாய்ப்பைத் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், கல்லாலமர்ந்த கடவுளுக்கும், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட குருராஜருக்கும் பக்தியால் பணிவுடன் அர்ப்பணிக்கிறோம். வேத இரக்ஷணைக்காக அவதரித்து, சங்கரரைப் போலவே நம் ஜீவிய காலத்தில் நம்மிடையே வாழ்ந்து இன்னும் தன் அமுத வாக்குகளினால் வழிகாட்டி, அனுக்ரஹம் பண்ணிக் கொண்டிருக்கும் ஸ்ரீகாஞ்சி மஹா பெரியாவளும், வேத இரக்ஷணைக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார். அந்தத் தெய்வத்தின் குரலை, அருள் வாக்கைச் சிறிது கேட்போமா?

‘வேத சப்தத்தினாலும், யக்ஞாதி கர்மாக்களாலும், ஏற்படும் நன்மை எல்லா தேஸத்தவருக்குமே போய்ச்சேரும். வேத இரக்ஷணமே ஜீவியப் பணியாக இருந்த கூட்டம் அழிந்து வருகின்றது. மிச்சம் இருக்கும் வேத பரம்பரையைத் தொட்ந்து இரக்ஷிக்க வேண்டுயது இப்போதைய தலைமுறையின் பெரிய பொறுப்பு.’ ‘என் காரியம் உங்கள் காரியம் தான். வேதத்தை ரக்ஷித்து விட்டால், ஷேமம் எல்லோருக்குமே. என் கனகாபிக்ஷேகத்தில் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணைக்காகக் காட்டினால், அதுதான் எனக்கு வாஸத்தவமான கனாகாபிக்ஷேகம். ‘

‘மனிதகுலம் உய்வடைய நமக்குக் கிடைத்திருக்கும் சொத்தான வேதமே நம் ஹிந்து மதத்தின் சட்ட நூல். உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் மூலமே வேதம்தான். இதைக் காதால் கேட்டே சொல்லி வரவேண்டும். புத்தகமாக எழுதிப் படிக்கக்கூடாது என்பது நியதி. ‘

உலகெங்கும் உள்ள ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாளின் பக்தர்கள் அனைவரும் நம் வேதத்தைக் காக்கும் இத்தெய்கத் தொண்டில் பங்கெடுக்கத் தூண்ட வேண்டும் எனும் எண்ணமே இப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துள்ளது. இப்புத்தகத்தைப் பெறும் ஒவ்வொருவரும் உலக க்ஷேமத்திற்கு வழி வகுத்து ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாளின் அனுக்ரஹத்திற்குப் பாத்திரமாகிறார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஏனெனில் இப்புத்தகத்திலிருந்து கிடைக்கும் நிதி வேத ரக்ஷணைக்கே பயன்படப் போகின்றது. வேதமே உருவான நடமாடும் தெய்வத்தின் அருட்கட்டளையை சிரமேற் கொண்டு, லகெங்கும் வேத சப்தம் கேட்கும்படியாகச் செய்யும் பாக்கியம் எங்களோடு சேர்ந்து உங்களுக்கும் ஏற்படுமானால், அதுவே எம்நோக்கம் நிறைவேறிய புண்ய நாளாகும். ‘வேதா நித்யம் சுதியதாம்’ என்ற சங்கரரின் வாக்கும், ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்ற ஓளவையாரின் வாக்கும் இதனையே வலியுறுத்திகின்றன.

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

ஸ்ரீமதி ஜெயா சந்திரசேகரன்

பணிவுரை

குரு வழிபாடு

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*