Adiguru Dhakshinamurthy – Prelude

ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு

Ganesh

ஆனைமுகன் அடிபணிவோம்

ஆனைமுகத் தைங்கரனே ஞானசிவ சங்கரனின்
மோனமொழித் தந்நிலையை யான்
தேனமுதச் செந்தமிழில் கானமலர்ச் சந்தம்நிறை
வானகவி நாவளரத் தா

மோதகவி நாயகனே மோதும் அகத்தாக மினி
தாகும்படி நீஅருளத் தான்
சாதகத்தை நீதருக தேகமதி தேயமருள்
ஆதவனே ஆதரவு தா

தந்திமுக நாயகனே தொந்திவிரி தாயகனே
மந்திரனே மாதவனே யான்
நந்தியமர் நாயகனை சிந்தனையில் நேயமுடன்
வந்தனையில் வாழும்நெறி தா

கரியவடி வரியுமுனை அறியவழி தெரியவரம்
துரியநிலை அருகிவரத் தான்
ஹரியுந்திரு ஹரனும்சிவ நெறியிலுரை குருவடிவம்
கரிவரதா நானறியத் தா


Ganesh

பணிவுரை

அரிய பிறவியான மானிடப்பிறவியை அடைந்த நாம் தர்மம் (கடமை), அர்த்தம் (பயனிலை), காமம் (தர்மத்தை ஒட்டிய ஆசை), மோக்ஷம் (விடுதலை) எனப்படும் நான்கு நற்பயன்களை (புருஷார்த்தம்) எதிர்பார்த்தே வாழ்க்கைப் பயணத்தை ஏற்கிறோம். இப்பயணத்தில் அன்னையும் தந்தையும் அன்பால் நாம் பெற்ற முதல் வழிகாட்டிகள். பெற்றோரால் பேணி வளர்ந்தாலும், நல்லறிவு கற்றோராய் வளர்வதற்கும், நந்நிலையுற்றோராய் திகழ்வதற்கும், நமக்கு நல்லாசிரியரின் துணை நாளும் அவசியம் அல்லவா? அதிலும், பேருண்மைக் கல்வியான ஆத்மவிவேகத்தைப் கற்பதற்கும், கற்றுணர்ந்து உய்வதற்கும், நல்லாசிரியரின் திருவருள் இருந்தால் மட்டுமே முடியும். அருமறை வேதங்கள் அத்தகைய நற்குருவை நாம் அடையும் வழியைத் தருகின்றன. நல்லாசிரியரை அடைய வேண்டுமென்றால், முதலில் நல்மாணாக்கருக்கான குணங்களையும், கடமைகளையும் நாம் கைக்கொள்ள வேண்டும். நல்ல மாணாக்கருக்கு விவேகம் (அறிவு), வைராக்யம்(உறுதி), சதசம்பத்து (அறுமனநலம்), முமூக்சத்வம் (விடுதலை) என நான்கு குணங்களையும், யமா, நியமா எனப்படும் எட்டு ஒழுக்கங்களையும் அடையாளமாகக் காட்டுகிறது வேதம். இக்குணங்களையும், ஒழுக்கங்களையும், நாம் நற்பண்பாலும், பயிற்சியாலும் வளர்த்துக் கொண்டோமானால், நல்லாசிரியராக, உண்மை விளக்கும் ஞானகுருவாக இறைவனே நம்மிடம் வருவார் என்று உறுதியிட்டுச் சொல்கிறது திருமறை. அத்தகைய நல்லாசிரியரின் அடையாளங் கண்டதும், பண்பட்ட மாணவருக்கு, நல்லறிவொன்றே குறியானதால், பகலிட்ட பனியாக, அனலிட்ட மெழுகாக, உளமிளகி, உறவாடிப் பயிலும் துணிவேற்படும். மேலும் நல்லாசிரியரை ஆண்-பெண் எனவோ, மேற்சாதி-கீழ்ச்சாதி எனவோ, மதம்-வழி எனவோ காரணமற்ற வேறுபாடுகளால் ஆராயாமல், அவரிடம் நற்கல்வி கற்பதே நோக்கமென நிற்பது நல்மாணாக்கரின் கடமை. இதனையே மநுஸம்ருதி

ஸ்ரத்தாந ஸூபாம் வித்யா மாததீதா வராதபி
அந்த்யாதபி பரம்தர்மம் ஸத்ரீரத்நம் துஷ்குலாதபி”

என்கிறது. நாம் உலகில் ஏற்கும் சராசரி வாழ்க்கைக்கே நமக்கு நல்லாசிரியரின் துணை வேண்டுமென்றால், பரஅறிவை, சகல செயலுக்கும்,யனுக்கும் ஆதாரமான தத்துவத்தை, இயற்கையின் ரகசியத்தை அறிவதற்கும், அவ்வறிவின் வழியே, இறவாப்பிறவியில் இணைவதற்கும், நமக்கு எல்லாம் வல்ல இறைவனே குருவாக வரவேண்டுமல்லவா? அப்படியே வருவேன், நல்லறிவு தருவேன் என்பதைக் காட்டவே, ஆதிகுருவாக ஸ்ரீபரமேஸ்வரன், ஸ்ரீதட்சிணாமூர்த்தியாகக் காட்சியளித்து வருகிறார். அப்பரங்கருணைத் தடங்கடலைப் பணிவாய் அடைந்து, நாம் மனமும் அறிவும் ஒடுங்க நிலைத்தால், எதைத்தான் அடைய முடியாது?

கலியுகந் தழைக்க வந்த கற்பகத்தரு, ஸ்ரீகாஞ்சி காமகோடிடாதிபதி ஸ்ரீபராமச்சாரியப் பெருமானாரின் ஆணையின்படி, பாரதமெங்கும் பரந்த ஆலயங்களில் விளக்கும், ஆதிகுரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அற்புத வடிவங்கள் இருபத்து நான்கினை, இதயத்தில் நிறுத்தி, ஏட்டிலே திருத்தி நல்லெண்ணத்தால் படைத்தார் ஓவியர் ஸ்ரீமதி ஜெயா சந்திரசேகரன். அன்னாரின் அரிய பணிக்கு உரிய சேவை ஏதென்று தெரியாத காரணத்தால், என் சிறுமதி விளைத்த அருந்தமிழ்ப் பாமாலையினையே அலங்காரமாக அணிவிக்கின்றேன்.

இயற்கையின் ஐந்து சக்திகளை ஆதாரமாகக் கொண்டும், காரியமாற்றும் கர்மேந்திரியங்கள் ஐந்தும், அறிவறியும் ஞானேந்திரியங்கள் ஐந்தும், உயிர் மூச்சு முதலான பிராணவாயுக்கள் ஐந்தும், மனம், நினைவு, புத்தி, நானெனும் அகங்காரம் என நான்கும் ஆகிய 24 தத்துவங்களே ஜீவாத்மாவின் உறைகலனாக விளங்கும் உடலுக்கும், மனதிற்கும், அறிவிற்கும் அடிப்படை. பூவுலகில் பிறந்த உயிர்களுக்கெல்லாம், மண்ணுடல் (ஸதூல சரீரம்), மென்னுடல் (சூட்சும சரீரம்), பயனுடல் (காரண சரீரம்) எனும் முவ்வகைக் கலயங்கள் மேற்சொன்ன 24 தத்துவங்களாலேயே அமையப்பெற்றன. எனவே மனிதப்பிறவியை அடைந்த நாம், முதலில் நம்மில் விளங்கும் இத்தத்துவங்களை அறிந்து, அவற்றால் விளையும் செயலை, பயனை, அறிவைத் துாய்மையாகவும், நேர்மையாகவும் சீரமைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய ஒழுக்கத்தால், நாம் தீயிலிட்ட பொன்னாய், தினகரனாய், தெளிந்த நீராய், மாசிலா மகாத்மாக்காளாய் மாறமுடியும். மனிதரும் தெய்வமாகலாம் என்ற மந்திரத்தின் உண்மையை உணர்த்த முடியும்.

இப்பேருண்மையை நிலைநிறுத்த, மனிதனாய் உலகில் அவதரித்து, படித்துப் படித்துப் பணிவும், கொடுத்துக் கொடுத்து இனித்தும், மண்ணுடலால் இளைத்தும், மதியறிவால் தழைத்தும், கருணையும், எளிமையும், ஏதெனச் சொல்லாவொண்ணா சக்தியையும் காட்டி மறையால் மறையாத் தவமுனியாய் நிலைக்கும் ஸ்ரீகாஞ்சி பரமாச்சாரியாரின் திருவுருவம் இருபத்தைந்தாவது தத்துவமாக அமைந்துள்ளது. இவற்றை விளக்கவே இவ்வேடு.

முதற்பாடல் மாணவர்களாகிய நமக்கு உரித்தான கடமைகளையும், ஜகத்குருவாகிய ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் திருவுருவ அழகையும் விளக்குகிறது. அடுத்த இருபத்து நான்கு பாடல்களும், மண்ணுலகில் உயிர்களுக்கு ஆதாரமான தத்துவங்களை விளக்கி, அத்தத்துவங்களில் ஞானசுத்தி அடையக்கோரி, ஜகத்குருவிடம் வேண்டுகின்றன. இத்தத்துவநெறிகளில், பூரணசுத்தம் அடைந்து, இவற்றுக்கும் அப்பால் பரந்த ஆத்மஸ்வரூபத்தை முற்றும் உணர்ந்து மனிதருள் தெய்வமான மஹாபெரியவர் ஸ்ரீகாஞ்சி பரமாச்சாரியரின் பாதகமலங்களுக்கு, இருபத்தைந்தாம் பாடல் சமர்ப்பணமாகிறது. ஞானகுருவைத் தேடும் மாணவர்களுக்கு, கண்கவரும் நல்லோவியத்தின் அழகும், கருத்தறியும் சொல்லோவியத்தின் உணர்வும் அமைதியையும், ஆனந்தத்தையும் அளித்து எல்லாம்வல்ல இறைவன் திருவருள் புரியட்டும்.

ஓவியர் முகவுரை

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*