Adiguru Dhakshinamurthy – Guru Worship

ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு

sadgurus

குரு வழிபாடு

குருவரம் ஒன்றே தருவது மனிதரின்
புருஷார்த் தமெனும் போதனை நான்கு

தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம்
தத்துவம் நான்மறை தருவது கேட்க

தர்மம் என்பது
தனக்கென இயற்கையும் தன்மன சாட்சியும்
கணக்கென வைத்திடும் கடமையைச் செய்தல்

அர்த்தம் என்பது
அடையும் பொருளில் அறிவில் பலனில்
முடியும் நியதி முற்றும் உணர்தல்

காமம் என்பது
கருத்தில் தர்மம் பொருத்திய ஆசை
வருத்தப் படுத்தா வளத்தின் ஓசை

மோக்ஷம் என்பது
முக்தி விடுதலை முன்னேற் றமெனும்
சக்தியை அறிதல் சாட்சியில் பார்த்தல்

நித்தியம் அடைதல் நிரந்தரம் வேண்டல்
பத்தியில் தந்நிலை பற்றுதல் மீளல்

ஆவன நான்கும் ஆசான் காட்டும்
யோக மாவன உணரத் தெரியும்

அறிவைத் தேடும் அடியார் குருவின்
பரிவைத் தேடும் பண்புடை சீடர்
கொள்வன நான்கு குணமென மேலோர்
நல்குவர் யாதென நவிலக் கேட்க

விவேகம் என்பது
விலக்குதல் விலக்கி விளங்குதல் அறியும்
கலக்கம் இல்லாத கல்லறி வாண்மை

வைராக்யம் என்பது
சிற்றின் பமெனும் சிறுமை விடுதலும்
பற்றிய கடமை பலனை விடுதலும்
முற்றிய கனியின் மூடிய தோலை
அற்றிய நிலையில் அரும்பணி ஆற்றல்

சத்சம் பத்து சத்தியம் ஆறு

சமா என்பது சாந்தம் அமைதி
தமா என்பது தன்னுடல் அடக்கம்
உபரதி என்பது உள்மன ஒடுக்கம்
திதீதை என்பது
தீதோ நலமோ யாதே வரினும்
ஏதும் விலக்கா தேற்கும் மாண்பு
சமா தானம் சமநிலை ஒருநிலை
சிரத்தா என்பது முழுநம் பிக்கை

ஆவது ஆறும் சதசம் பத்து
மேவது சீடரின் மெய்க்குணக் கூறு

முமூக்சத்வம்
முற்றிலும் விடுதலை முக்தி என்பதை
சற்றும் மறக்கா சளைக்கா முயற்சி

நான்கென இவையே நல்மா ணாக்கர்
ஆனவர் அணியும் அருங்குண ஆடை
உண்மை உணர்த்தும் உயரிய யோகத்
தன்மை உணரத் தகுதிகள் எட்டு

இயமா என்பது
எவர்க்கும் தீமை எண்ணா திருத்தல்
ஏற்பது இகழல் எடுத்தல் பொய்மை
இல்லா திருத்தல் இருப்பதில் திருப்தி
சொல்லா லினிமை சோபித் திருத்தல்

நியமா என்பது
நித்திய ஒழுக்கம் நிதமும் பயிற்சி
சத்திய வார்த்தை சதாமன மேற்றல்
பத்திய உணவும் பலப்பட தேகம்
முத்திய அறிவும் முயற்சியில் தேடல்

ஆஸனம் என்பது
அமர்வதில் ஒழுக்கம் அனுசரித் திருக்கும்
தமர்மன ஒடுக்கம் தடுப்பதை வகுக்கும்
உடலின் பயிற்சி உள்மன வளர்ச்சி
சடமென நிலைக்க சரிவரும் முதிர்ச்சி

பிராணா யாமம்
பெருமூச் சறியும் பேசறு சித்தை
வருமூச் சளக்கும் வலிமை வித்தை
ஓடித் திரியும் நாடிப் பறவை
பாடிப் பழகப் பக்குவ மாயுடல்
மூடித் திறக்க முயலும் வேகம்
நாடிச் சமநிலை நயக்கும் யோகம்

பிரத்யா கரமோ
பெருஞ்சுவை பார்வை பேச்சு வாசம்
அருஞ்செவி ஓசை அனுபவம் ஒடுங்கி
ஒட்டுதல் அறிந்தும் ஒட்டா திருக்கும்
திட்டம் அறியும் திறமை பெருமை

தாரணா என்பது
தளரா உறுதி தன்னுள் சிறிதும்
வளரா கலக்கம் வாரா திருத்தல்

தியானம் என்பது
தன்மனக் குழவி தாலாட் டத்தில்
மென்மை அடைதல் மெய்மறந் திருத்தல்

சமாதி என்பது
சத்தியம் அறிந்து புத்தியில் உறைந்து
நித்தியம் இதுவே நிர்மலம் இதுவே
பத்தியும் இதுவே பரமும் இதுவென
முத்திய மனதால் மோனித் திருந்து
சிலையா யிருத்தல் சிற்பரன் அற்புதக்
கலையா யிருத்தல் கல்வியின் முதுநிலை

எல்லாக் குணமும் இருந்தால் விருந்தாய்
கல்லால் அமரும் கயிலை நாதன்
குருவாய் வருவான் அருள்வான் அபயம்
தருவான் அகிலம் தழைக்கும் உபயம்

தட்டத் திறக்கும் தங்கக் கதவு
கிட்டத் தெரியும் கிரியா சக்தி
எண்குணம் காட்டும் எழிலோன் திசைகள்
தன்மனங் காட்டுந் தருமன் மாயன்

தென்முகத் தெய்வம் தேவன் நீலன்
இன்முகத் தாயன் ஈசன் ஞானன்
சாதித் தருளும் சங்கரன் சம்பு
ஆதித் தருகுரு அனந்தன் திருவுரு

குனித்த புருவம் கூறும் குவலயம்
பனித்த புன்னகை பார்வை சிவமயம்
நீள்செவி நாதம் நிலைத்திடும் வேதம்
வாழ்புவி வளர வைத்தசங் கீதம்

விரியப் பரந்த விழியெனும் மலரும்
தெரியப் பிறந்த தினகரன் நிலவு
குவியப் பிணைந்த அதரம் மதுரம்
புவியப் பிறந்து பூசிய மெளனம்

சீரிய நாசி ஓடிய நாடி
காரிய மாற்றும் காற்றெனும் ஆவி
ஆலா கலத்தை அமுதெனக் கறுத்து
காலா தேசங் காத்திடுங் கழுத்து

நேரே நிமிர்த்தி நிலைதரும் மகுடம்
தூரே பார்த்த துாமணி விளக்கம்
ஸத்துவ ராஜஸ தாமஸ மென்னும்
தத்துவங் கடந்த தாரக மந்திரம்

காட்டச் சிறந்த கரமுத் திரையே
மீட்டப் பிறந்த மெய்மந் திரமே
சித்தம் புத்தி மனமெனும் மாயம்
மெத்த மடக்கி மேலகங் காரம்

தத்வம் அஸிஎன தானே அதுவென
நித்யம் உணர்த்த நீட்டிய கரமே
அய மாத்மா பிரம்மா என்பது
சுய ஆத்மா சுடர்பரஞ் ஜோதி

என்கிற உண்மை ஏற்றிய கரமே
அன்பிது அறிக அஹம்பிரம் அஸி
என்பது இதுவென எடுத்தது கரமே
பிரக் ஞானம் பிரமம் என்பது
மெஞ் ஞானம் மேவிடத் தன்னுள்
தானே தனித்த தருமனச் சாட்சி
காணே னறியக் காட்டிய கரமே
தத்துவம் அஸிஎனும் தானே பரம
வித்தெனும் விளக்கம் வினய இணைந்த
கரமுத் திரையே காலவி ளக்கம்
தரநித் தியமே தாமெனும் ஆத்மா

போதம் காட்டப் புகட்டும் நான்கு
வேதம் காட்டி விளக்கும் இடக்கரம்
தூக்கிய இடக்கரத் துரியம் என்னும்
யாக்கை விளக்கும் நோக்கில் நெருப்பு

பிரமம் சூட்சும ஸ்தூலம் எனவே
கிரமம் வைத்து கிளைபல நாடி
மூன்றெனக் குறித்த முப்புரி நூலைச்
சான்றென விரித்துச் சரியும் உதரம்

திருத்தா ளடியார் கருத்தொரு மித்து
நிறுத்தா யோகம் நிலையில் நிறுத்தும்
உருத்ராட் சிதமே உசிதம் எனும்படி
கருத்தா ழத்தைக் கழுத்தில் கரத்தில்

காலடி மார்பில் காட்டும் விதத்தில்
மேலணி மார்பன் மெய்யா மெய்யன்
சத்து சித்து ஆனந்தம் எனும்
முத்தினை உணர்த்தும் மூவெண் ணீறு

நெத்தியில் அழகாய் நெஞ்சில் புயத்தில்
புத்தியில் யாவும் பூரணம் அடையப்
பிறந்தது என்னும் பிரமமந் திரத்தை
சிறந்திட விளக்கும் சிவமயப் பூச்சு

அன்னப் பிராண அருமனங் கடந்த
பின்னும் விஞ்ஞான பேரா னந்தக்
கலயம் ஐந்தைக் காட்டும் தந்திரம்
புலரும் நமசி வாயெனும் மந்திரம்

போதித் தருளும் பாதிப்பிறை யணி
ஆதித் தன்நிலை ஆனந் தித்தவன்
ஆதி குருவே அரியே பரனே
பாதி மதியணி பரனே சிவனே

முதலா சானாய் முனியாய்த் தனியாய்
விதமா ஞான விளக்கங் காட்டி
கல்லா லமர்ந்து கல்லா வுலகம்
சொல்லா லறியாச் சொல்லை மவுனம்

மூடிய மொழியில் முக்கிய வழியில்
நாடிய அடியார் நயம்படக் காட்டும்
தென்னவா என்னைத் தேர்ந்தெடு உந்தன்
சந்நிதி மீட்டிச் சத்தியம் காட்டு

அருளே பொருளே அகண்டா னந்தத்
தருவே மறையே தட்க்ஷிணா மூர்த்தி
சரணம் சரணம் ஹரஹர சங்கரா
சரணம் சரணம் நமசிவ மந்திரா

காலடி தோன்றிக் காத்தவ நின்மலர்த்
தாளடி வேண்டித் தவத்தா லுறைவேன்
சத்தியா நீபுகல் சமரச மாய் மனம்
பத்திய மாயம் பனியெனக் காய

உடலும் மனமும் உருபொரு ளறிவும்
திடமும் நலமும் தீதறு வாழ்வும்
தருவாய் எனவே தாளடி சரணம்
குருவாய் அருளுந் திருவே சரணம்.

ஓவியரின் முகவுரை

சிவ தத்துவம் வேண்டல்

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*