Adiguru Dhakshinamurthy – Siva Tattvam

ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு

சிவ தத்துவ அறிவு விளக்கம் வேண்டல்

சிவம்,சக்தி,சதாசிவம்,மஹேஸ்வரம், சுத்த வித்யா எனும் சிவ தத்துவ அறிவு விளக்கம் வேண்டல்.

சிவம்

அருவமாய் பிரம்மமாய் அத்துவித முடிவுமாய்
அனாதி யானந்த நிலையாய்
ஆராய முடியாத பேறான ஞானமாய்
அசைவிலாச் சைதன்ய ஒளியாய்

கருவுமாய் இதுஅதெனக் காட்டறிய முடியாதக்
காரணமாய், மூல விதையாய்,
கடவுளாய் உட்கடந் தகலாத படிவமாய்க்
கழித்தெலாம் கண்ட விடையாய்

ஒருமையாய் வேறிலா உண்மையாய்ச் சின்மய
ஓங்காரப் பொருள் விளக்கமாய்
ஒப்பிலாச் சச்சிதா நந்தமாய் சிவசிவ
ஓம்நம சிவாய எனவே

தருமமாய் சிவநாம தாத்பரியம் தந்தென்னை
தனயானாய் ஏற்க வன்றோ
தத்துவம் அளித்தருள இத்தலம் முனித்தெழுவீர்
தக்ஷிணா மூர்த்தி குருவே

சக்தி

சிவமான பிரம்மத்தின் சீலமாய் பிந்துவாய்
ஸ்ரீசக்ர ராஜ பீடமேவும்
சின்மயா நந்தமாய் உண்மையா ளுண்மையாய்
சீர்செயல் முதல் விளக்கமாய்

பரமான சக்தியாய் திறமேவும் யுக்தியாய்
படைத்தல் முத லானஐந்து
பணிகளின் இயக்கமாய்ப் பைந்தொழில் நுணுக்கமாய்
பரசிவ தத்வ நிலையாய்

பிரமாண மூலமாய்ப் பிந்துவெனும் சீலமாய்ப்
பிரம்மபே ரியக்க மெனவே
பிறதத்து வங்களின் பிரகாசமாய் விரிசெயல்
பிறப்பிக்கும் அன்னை எனவே

உவமான மேதுமிலா உயர்திருவே சிவசக்தி
உண்மை யானுணர வேண்டும்!
உன்னத மானதவ தென்னவ னானசிவ
தக்ஷிணா மூர்த்தி குருவே

சதாசிவம்

அருவுருவில் சிவசக்தி அருளுபய நாதமே
அரியசதா சிவதத்து வம்!
அறிவியலும் இயலறிவும் ஆகுமிவை சமனாகி
ஆனந்தம் பெருநித்தி யம்!

திருவுருவம் அருவமென ஒருவிடயம் தெரிவுபட
உருலிங்க வடிவில் ஒவ்வும்!
தெரிபுவனம் முதலாகத் தெரியாத அணுக்கூறும்
தேகவடி வாக ஒப்பும்!

ஒருபொழுதும் அகலாத அருவுருவத் திருஞானம்
உள்ளத்தின் பள்ளத்தில் யான்
ஒளித்தேனே ஒளித்தேனை! ஒளிர்த்தேனோ? உணர்த்தேனோ?
உருஅறிவு பெற அலையுவேன்!

தரவருவீர் அஞ்ஞானத் திரையுருவி மெஞ்ஞானம்
தந்தெனைத் தம்மில் ஏற்க
தக்ககணம் இக்கணமாய்த் தந்தருள வேண்டினேன்
தக்ஷிணா மூர்த்தி குருவே!

மஹேஸ்வரம்

மாறா சதாசிவத்தின் மற்றுமொரு வெளிப்பாடு
மஹேஸ்வர எனும் தத்துவம்
மாற்றிடும் சக்தியின் ஆக்கமிதன் ஆதிக்கம்
மறைத்திடும் பொறை நித்திலம்

வேறான புவனங்கள் வேறிலும் வேராகி
விளைவிக்கும் செயலின் சாட்சி!
விருப்பாலே திரிமூர்த்தி உறுப்பாலே பேராகி
விளைவித்து அருளும் காட்சி!

யாராகப் பார்க்கினும் பார்ப்பதும் பார்த்ததும்
அதுவென்றே இதுவென்று நான்
அறியாமல் சிறுமையால் அவனியில் வெறுமையால்
அவதியுறல் தவிர்க்க லாதோ?

தேறாமல் யானிங்கே தேய்வுறுதல் வேண்டுமோ
திருவருள் கனிய லாதா
தென்னவனே முன்னவனே பின்னவனே மன்னவனே
தக்ஷிணா மூர்த்தி குருவே!

சுத்த வித்யா

தூயறிவு சீலமாய் தூமாயை மூலமாய்
துலங்கிடும் சிவதத் வமாய்
துல்லியமாய் நல்லறிவு வல்லியகா ரணமாகி
தோற்றமுமாய் விரிவு மாகி

தேயுலகு படைத்துமாய் காத்துமாய் அழித்துமாய்
திகழ்மும் மூர்த்தி எனவாய்
தெளியுநல் லறிவுமய செயலான சக்தியாய்
சேதனமாய் சுத்த வித்யா!

ஆயபெரு ஞானமுணர் வானதெனில் மாயமிவை
அத்தனையும் கடக்க லாமே1
அதுவறிய எது உபயம் எதுதருமம் எதுகடமை
அறிந்துணர விரைந்து காண

தாயனவே நின்கருணை சேயனிவன் வேண்டினேன்
தருமமிது அறிய வைப்பாய்!
தட்பரமே மவுனமொழித் தத்துவமே அருள்தருக
தக்ஷிணா மூர்த்தி குருவே!

குரு வழிபாடு

வித்யா தத்துவம் வேண்டல்

Share this Post

Leave a Comment