பணிவுரை

பகவான் ஆதிசங்கரர் இயற்றியதாகப் பெரியோர்களால் கருதப்பட்டுப் போற்றிப் பாதுகாத்து பூஜித்து வருகின்ற நூல்களில் ஒன்று, சிவானந்தலஹரீ எனும் இந்த அரிய நூல். ஸ்மஸ்கிருத மொழியிலே, நூறு பாடல்களிலே, நுண்ணிய வார்த்தைக் கோர்வைகளும், நூதனப் பொருட்பார்வைகளும், மொழிச்சுவை, கருத்தாழம், பக்தி ரசம், ஞானத் தேறல் எனும் பலவிதச் சுவைகளும் ஊட்டப்பட்டு விளங்கும் இந்நூல் ஒரு ஒப்பிலாப் பொக்கிஷம்.

அத்வைதம் ஆகிய இரண்டல்லாத ஒன்றே சத்தியம் எனும், உலகில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாயும், எல்லா உயிர்களுக்கும் உரிமையானதுமான வேதாந்த சாரத்தினை, அறிவு பூர்வமாக ஆய்ந்து, விளக்கி, அணையாத ஞான விளக்கினை ஏற்றியவர் பகவான் ஆதி சங்கரர். அவரே மற்ற எல்லோரும் படிப்படியாக உய்யும் பொருட்டு, முதல் நிலை, அடுத்த நிலை என ஆன்ம அறிவில் உயரும் பொருட்டு, உருவ வழிபாட்டிற்கும், ஆன்ம வழிபாட்டிற்கும், உரு அருவற்ற பிரம்ம சமாதிக்கும் உதவுகின்ற வழியிலே, பல வகையான தோத்திரங்கள், பாடல்கள், வேதாந்த விளக்கங்கள், அறநெறி நூல்கள் எனப் பல நூறு நூல்களை நமக்காக ஆக்கி அருளியிருக்கிறார்கள்.

“சௌந்தர்ய லஹரீ” எனும் நூலிலே, அன்னை பராசக்தியின் அருளை, அழகு வெள்ளமாக அனுபவித்துப் படைத்தவர் ஆதி சங்கரர். சிவமாகிய ஒன்றான பிரம்மமே, சிவனும் சக்தியுமாக இருவராகி, ஆயினும் ஒன்றில் ஒன்றாகிக் கலந்த சிவசக்தி வடிவமாக இருப்பதாக நிறுவி, அச்சிவசக்தி வடிவினருக்கு, ஆதிசங்கரர் படைத்த அரிய துதியே , ‘சிவானந்த லஹரீ’ எனும் இத்தேனினும் இனிய பாடல்கள்.

சிவசக்தி வடிவத்தினைப் பரம்பொருளாகத் துதித்து, அத்துதியின் இனிய அனுபவத்தினால், உள்ளும், புறமும் , ‘சிவானந்த லஹரீ’ எனப்படும் சிவ சுகப் பெரு வெள்ளம் பரவியிருக்கும் பரவச நிலையினை இப்பாடல்கள் அருள்கின்றன. அப்பரசிவ பரசுகப் பரவச நிலையைத் தூண்டும் இவ்வரிய நூலைத் தமிழ்மொழி வாயிலாகப் பயில வேண்டும் எனும் நன்முனைப்பால், குருவருளின் காப்பினால், திருவருளின் சேர்ப்பினால், இங்கே மொழி பெயர்க்கப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூலம், ‘அண்ணா’ என எல்லோராலும் போற்றப்படும் அமரர் ஸ்ரீ அண்ணா சுப்ரமணியன் அவர்கள் மறைமொழி நூல்களுக்கு ஆக்கி வைத்த தமிழ் மொழி பெயர்ப்புக்கள் எல்லாம் தமிழுலகம் தலையில் சுமந்து காக்க வேண்டிய சொத்துக்கள். அன்னாரைப் போன்றே, பல பெரியோர்களும், தமிழ், ஆங்கிலம் எனப் பல வகையிலே, இவ்வரிய நூலைத் திறம்பட மொழி பெயர்த்திருக்கிறார்கள். ஆயினும் எனது இம்முயற்சி, ஆத்ம திருப்திக்காகவும், யான் இதனை நன்கு பயில வேண்டும் எனும் ஆவலினாலும், ஆக்கப்பட்டது. இதில் தவறுகள் இருப்பின் அவை யாதும் என் பொறுப்பு அவற்றைக் குருவருளால் தீர்ப்பதும் என் கடனே. இதில் ஏதேனும் குணம் இருப்பின், அதுவும் என் குருவடிகள் தரும் அருளே.

‘எழுதுக’ என ஊக்குவித்தும், எழுதியதில் பழுதுவராது சீர் பார்த்தும், லண்டனில், சத்சங்கம் எனக்கூடும்போது, இவை பற்றிப் பேசி, மேலும் உற்சாகமும் தந்த நண்பர் திரு பாலாஜி அவர்களுக்கும், அறிவாய்ந்து அணிந்துரை அளித்த பேராசிரியர் Dr. V.L. சேதுராமன் அவர்களுக்கும், இரண்டாம் பதிப்பாக இந்நூலை வெளியிடும் ஸ்ரீ கிரி டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும் அடியேனின் நன்றிகள்.

இப்பணி பழுதில்லாது, படிப்போருக்குப் பயனளிக்க வேண்டும் என்பதே, எல்லாம் வல்ல இறைவனிடத்தும், நல்லானாக்கும் நற்குருவினடத்தும், யான் பணிந்து தேடும் வரம்.

மீ. ராஜகோபாலன்
லண்டன், 2-4- 2014

அணிந்துரை

1 – சிவ சுகப் பெருவெள்ளச் சீலம் அடி போற்றி!  

Share this Post