49. நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
விடுதலை தரவல்ல அப்பரமாத்மா எப்படிப் பட்டவன்? ஐந்து வண்ணங்களுடன் (நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்), வானவர்கள் போற்ற (விண்ணோர்கள் ஏத்த) விளங்குபவன் இறைவன்.
நிறங்கள் எனும் சொற்பயன், ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்ட உதவுதலே.
ஒன்றேயான பரம்பொருளே, தனது சக்தியால் பல்லுலகமாயும், உயிர்களாயும் தோன்றுகின்றது. இப்படி வேறுபட்ட தோற்றங்களுக்கு, இறைவனின் திருவிளையாடலாக, பரம்பொருளுக்கு ஐந்து தொழில்கள் இருப்பதாக மறைகள் காட்டுகின்றன. அவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்பன.
மேலும் பரம்பொருளே, சிவம், சக்தி, சதாசிவம், மஹேஸ்வரம், சுத்த வித்யா என விரிவதாக, சைவ சித்தாந்தமும் காட்டும்.
இவ்வாறுபல வகையாகவும் இறைவனின் தன்மையைப் புரிந்து கொள்ளவே, ‘ஐந்து நிறங்கள்’ என இறைவனது பெருமை நமக்குக் காட்டப்பட்டது.
50. மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
>படைக்கப்பட்ட உலகங்களினை வியக்கையில் அவற்றில் வித்தாக இறைவா, நீ மறை பொருளாய் இருக்கிறாய் (மறைந்திருந்தாய்). என் பெரியோனே (எம்பெருமான்), கொடிய வினைகளைச் செய்தவனான யான் (வல்வினையேன்) ‘நான் யார் எனும் உண்மை அறியாமல்’
51. மறைந்திட மூடிய மாய இருளை
(தன்னை மறைந்திட மூடிய) அறியாமை எனும் இருட் போர்வையினால் மூடப்பட்டு (மாய இருளை),
52. அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புண்ணியம், பாவம் என மாறி மாறி பந்தப்படுத்துகின்ற வினைப் பயனில் இறுகக் கட்டப்பட்டு (அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி),
53. புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
வெளியிலே போர்த்திய தோலினால் (புறத்தோல் போர்த்து), உள்ளே புழுவும், அழுக்கும் மிகுந்திருப்பதை மூடி (எங்கும் புழு அழுக்கு மூடி),
54. மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலத்தினை விளைக்கும் ஒன்பது துளைகளை உடைய உடலைப் (மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை) பெற்றவனானேனே!
மாணிக்கவாசகர் வைராக்கியத்தை அடைந்ததன் விளைவாக, இதுவரை உலகில் வாழ்வதற்கு ஒரு கருவியாக இருந்த உடலிலும் பற்றின்மையை அடைகிறார். வினையின் வசத்தால், களங்கமுடைய உடலில் புகுந்து, அவ்வுடலே நான் என எண்ணி, அவ்வுடலின் சுக துக்கங்களே பெரிதெனச் செயல் புரிந்து, அதன் விளைவாய், புண்ணியம், பாவம் என்பதான பாதிப்புக்களைத் தொடர்ந்து பெற்று வருகிறேன் என நொந்து கொள்கிறார்.
இதற்குக் காரணம், ‘தன்னை மறைந்திட மூடிய மாய இருள்’. இங்கே ‘தான்’ என்பது ஆத்மா. ‘தான்’ எனும் ஆத்மாவை மறந்து ‘நான்’ என உடலையும் மனதையும் உரிமை கொள்ளும் அறியாமை. ‘தன்னை’ மறைத்தது மாயை. இந்த இருளை விலக்குவதானாலேயே, ‘தான்’ உணரப்படும். அப்போதுதான் ‘சிவனே சீவன்’ என்னும் வேத உண்மை புலப்படும்.
ஆனால், அப்படி ஒருமைப்பட முடியாமல் போவதற்கு மனமும், புலனுமே காரணம் என அடுத்த வரியில் காட்டப்பட்டது.
55. மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
மலங்கள் நிறைந்ததும், தெளிவில்லாமல் ஆக்குவதுமான ஐந்து புலன் அறிவுகளும் (மலங்கப்புலன் ஐந்தும்), மேன்மேலும் இறைச்சிந்தனை அல்லாத மாயத் தோற்றங்களிலேயே என்னை இழுத்துச் செல்ல (வஞ்சனையைச் செய்ய)
56. விலங்கு மனத்தால், விமலா உனக்கு
அவற்றின் வஞ்சத்தால், உயர்வற்ற எண்ணங்களினால் அலைக்கழிக்கப்பட்ட விலங்காகிய மனதினால் அல்லது அத்தைகைய கீழ்மையான எண்ணங்களிலே விலங்கிடப்பட்ட மனத்தால் (விலங்கு மனத்தால்), குறைகள் ஏதுமற்ற உனக்கு (விமலா உனக்கு)
புலனறிவுகள், வெளியிலே நாட்டம் கொண்டவை. வெளியுலகமோ, மாற்றம் எனும் மாறாத பாதிப்பினால், நிலையின்றிப் போய்க் கொண்டிருப்பன. எனவே, புலனறிவு கொணரும் செய்திகளைப் புத்தி சரியாக ஆராயா விட்டால், மனம் பேதலித்துவிடும். அதனால் மனம் சீர் கெடும். சீர்கெட்ட மனதினால், சம்சாரத் துயர் வருகிறது என்பதால், புலனும், மனமுமே நம்முடைய விடுதலையைத் தடுக்கின்ற வஞ்சகச் செயலைச் செய்கின்றன.
அவ்வஞ்சகத்தால், மனம் ‘விலங்கிடப்பட்டிருக்கிறது’. அது ‘விலங்கினைப் போல’, பகுத்தறியாமல், தொகுத்துணராமல், கீழ் நிலையை அடைகிறது.
48. பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
57. கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்