57. கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

58. நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

இறைவன் தமக்கு எத்தகைய அருள்  செய்தார் என அடுத்த வரிகளில் காட்டுகின்றார் மாணிக்க வாசகர்.
‘கலந்த அன்பாகி’ என்றதால், அன்புடன் கலந்த அறிவு குறிக்கப்பட்டது. அந்த அறிவு இறைவனை எண்ணி உருகி இருக்கும் நல்லறிவு.  அவ்வறிவினை உடையவரே நலம் அடைபவர்.  அத்தகைய நலம் தனக்குப் போதுமான அளவுக்கு இல்லையோ எனப் பணிவால் தம்மை கீழ்மைப்படுத்திக் கொள்கிறார் மணிவாசகர்.

59. நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,

60. நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

61. தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

என இவ்வாறு, இறைவனின் அருளை அனுபவித்து, நன்றிப் பெருக்கால் கரைகிறார் ஆசிரியர்.

நிலம் என்பதற்கு ‘சித்தம்’ எனவும் பொருளுண்டு.  ‘சிற்றம்பலம்’ என்பது சித்தம் ஆகிய அம்பலம், அதாவது மனமாகிய மேடை ஆகும். எனவே ‘நிலம் தன்மேல் வந்து அருளி’ என்பதன் மூலம், மாணிக்கவாசகர், திருப்பெருந்துறையில் குருமணியாகவும், நரியைப் பரியாக்கியும், பிட்டுக்கு மண் சுமந்து திருவிளையாடல் புரிபவராகவும் உலகில் வந்து அருளிய பெருமான், சிவபிரானே எனத் தன் மனதினால் தெளிந்தார் என்பதும் பொருந்தும்.

ஒருமித்த மனத்தினராய் இருந்து காட்டிய மாணிக்கவாசகரின் ‘சிற்றம்பலம்’ ஆகிய நிலத்தில், இறைவனின் திருவடிகள் எப்போதும் அருள் தந்து கொண்டிருந்தன. இறைவனை உணர்ந்தவராக, அருள் அனுபூதி பெற்றவராக மாணிக்கவாசகர், இனி வரும் வரிகளில், இறைவனைப் புகழ்ந்து துதிக்கிறார்.

62. மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

63. தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே

64. பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

‘ஆரியன்’ எனும் சொல்லுக்கு ‘வடக்கிலிருந்து வந்தவன்’ என்றும் அவன்,  ‘திராவிடன்’ என்பானுக்கு எதிரானவன் என்றும், தவறான கருத்து நம்மிற் சிலரிடம் இருக்கிறது. உண்மையில்,  இவ்விரு சொற்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

‘ஆரிய’ என்பது, ‘புனிதமான’ என்பதாகும்.  ஒழுக்கத்தால் உயர்ந்தோரே ஆரியர் ஆவார்.  ‘திராவிட’  என்பது, மூன்று பக்கமும் கடலினால் சூழப்பட்ட இடம் என்பது ஆகும். எனவே ‘திராவிடன்’ என்பதற்கு, முப்புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியைச் சேர்ந்தவன் என்பது பொருள்.

பகவான் ஆதி சங்கரர், தமது குருவிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுகையில்,  தான் ஒரு  ‘திராவிட சிசு’ , அதாவது, முப்புரமும் நீரால் சூழப்பட்ட, தென்னிந்தியக் குழந்தை என்றே கூறுகின்றார்.

மேலும் பாசமாகிய கயிற்றினை அறுத்து நம்மைப் பாதுகாக்கும் வலிமை, தூயவனான சிவபிரானிடமே இருக்கிறது என்றும் மாணிக்கவாசகர் காட்டுகின்றார்.

65. நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

புலனும், மனமும் செய்யும் வஞ்சனைகளை முன்பு சுட்டிக் காட்டிய மாணிக்கவாசகர், வஞ்சனைகளைக் கெடுத்து அழிப்பவன் இறைவன் என்று இங்கு கூறுவதன் மூலம்,   மனதைச் சீர் செய்பவனும்,   மனத்தெளிவையும், கூர்மையான புத்தியையும் தருபவனுமான  இறைவனது அருளை,  நாம் அன்னாரின் திருவடிகளில் செலுத்தும் மாறாத அன்பினால் மட்டுமே பெற முடியும் என்று காட்டுகிறார். அப்படித் தன்னை அடையும் மெய்யடியார்களுக்கு, அருளை  ஏராளமாக அள்ளி வழங்கும் வள்ளல் சிவபெருமான் ஆவார்.

66. பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

‘பேராது’ என்றால், மாற்றம் இல்லாமல் நிலைத்தது ஆகும்.  நம்முள்ளேயே, எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பது எது என ஆய்ந்தால்,  அதுவே ஆத்மாவாகிய இறையுணர்வு எனத் தெளியலாம். அவ்வுணர்வு, சுகப்பெருவெள்ளமாக,  நம்முள்ளே மாறாத இன்பத்தை எப்போதும் அளிப்பது.

56. விலங்கு மனத்தால், விமலா உனக்கு

67. ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

Related Posts

Share this Post