90. தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

‘தில்லையில் கூத்தனே’ எனச் சொல்லாமால், ‘தில்லை உள் கூத்தனே’ எனச் சொல்லியிருப்பது, சிவபிரான், தில்லையாகிய சிற்றம்பலத்தின் உள்ளே, நடனமாடுகிறார் என்பதாகும். உள்ளே இருப்பது, மறைக்கப்படுவது ஆகும். இதையே, ‘சிதம்பர ரகசியம்’ எனத் தில்லை ஆலயத்தில் காட்டியிருக்கிறார்கள்.

‘ஆண்டவன் தாண்டவன் ஆடிய தில்லை – அதற்கிணை உலகிலோர் தலமுமே தில்லை’ என எனது தந்தை திருவருட் கவிஞர் மீனாக்ஷிசுந்தரனார் பாடிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. ‘ஆண்டவன் தாண்டவம் ஆடிய தில்லை’ என்பது தில்லையாகிய சிதம்பரத்தைக் குறிக்கின்றது.

‘ஆண்டவன் தாண்டவம் ஆடியது இல்லை’ எனப் பொருள் கொள்ள, அசையாச் சிவம், என்றுமே பரப்பிரம்மமாகவே இருக்கிறது என்றும், ஆடலும், ஆடலால் விளைந்த அகிலங்களும், சுத்த மாயையால் காட்டப்பட்ட தோற்ற மாயை என்றும் ஒரு பொருள் தெளிகிறது.

‘தென்பாண்டி நாட்டான்’ என்பதற்கு பாண்டிய மன்னர்கள் ஆண்ட தென்னிந்திய நாட்டினை உடையவன் என்பது சொற்பொருளாக இருக்கிறது.
இறைவன் எப்படி, ஒரு நாட்டினை மட்டும் சார்ந்தவனாக இருக்க முடியும்?

‘தென்னாடு உடைய சிவனே போற்றி’ எனப் போற்றுவதும் நம்முடைய வழக்கம். ‘எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி’ என முடித்தாலும், ஏன், தென்னாட்டினைக் கொண்டவன் சிவன்?

கட்டித் தங்கத்தைக் கண்டால், அதை வெட்டி எடுத்து நமக்கே நமக்கு எனச் சொந்தம் கொண்டாடுவது மனித இயல்புதான். எனவே, மிக நுண்ணிய இறைத் தத்துவங்களைக் கண்டுணர்ந்து சொல்லிய தமிழர் பேரினம், தத்துவ விளைவான, பரசிவனைத் தமது தென்னாட்டுக்கு உடையவனாகக் கொள்வது அன்பின் மிகையே அன்றி வேறல்ல.

நாம் வேறொரு பொருளையும் காண முடியும்.

மரணமே நமக்கு பெரும் பயத்தினைத் தருவது. மரண தேவன் ஆளுகின்ற பூமிக்குத் ‘தென்னாடு’ என்பது ஒரு பெயர். மரணபயத்தை நீக்க வல்லான் பரசிவன். காலனைக் காலால் உதைத்து, அண்டிய அடியாரைக் காத்தவன் பரசிவன். எனவே ‘தென்னாடுடைய சிவன்’, காலனின் ஆளுமையையும் தன் வசத்தில் வைத்திருப்பவன் என ஆகிறது. அண்டிய மெய்யடியாருக்கோ, தென்னாடு தரக்கூடிய அச்சம் உடைந்து போகிறது. அதாவது மெய்யடியாருக்கு ‘தென்னாடு உடைய’, அதனால் மரண பயம் விலக, அருள் செய்கின்றான் பரசிவன்.

‘எந்நாட்டவர்க்கும்’, அதாவது எவ்வழியில் இறைவனின் மேல் நாட்டம் உடையவர்க்கும், எப்படித் தொழுபவர்க்கும், சிவனே இறைவன்! அதாவது உலகிற்கே இறைவன்.

அவ்வகையிலே, ஒருவேளை, ‘தென்பாண்டி நாட்டான்’ என்பதையும் ‘தென்பு+ ஆண்டின் + ஆட்டான்’ எனக் கொள்ளலாமோ!

தென்பு அல்லது தெம்பு என்பது உறுதி. அது ‘சிவனே சீவன்’ எனும் பரஞான உறுதி. அந்த ஈரற்ற உண்மையில் உறுதி இருந்து, அந்தப் பரஞானமே நம்மை ‘ஆண்டு கொண்டிருந்தால்’, பிறகு பிறவிப் பிணியில் நம்மை அழுத்தி, ஆட்டி வைக்க மாட்டான் இறைவன். அப்படியும் ஒரு பொருளை ஏற்க முடிகிறது.

89. நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

91. அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

Share this Post