89. நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

நள்ளிருளில் இறைவன் ஆடுவது ஏன்?

நள்ளிருள் என்பது உலகங்களாகிய தோற்ற மாயை எதுவும் இல்லாப் பூரண நிலை. எல்லா உலகங்களும் அடங்கிய போது, அங்கே இருக்கின்ற நள்ளிருள். அது நல்லிருள். அதுவே பூரணத்தின் கீழிருக்கும் ‘சுத்தமாயை’ எனும் போர்வை. அதுவே ‘சிதாகாசம்’ அல்லது சிற்றம்பலம் எனும் மேடை. எல்லா உலகங்களும் அடங்கிய அந்த நள்ளிருளிலும் நிலையாக இருப்பது, எப்போதும் இருப்பதான பரம்பொருள் ஒன்றே.
அசையாப் பொருளான, அப்பரம்பொருளின் விருப்பத்தால், அந்த நள்ளிருளில் எழுகின்ற அசைவே, பரம்பொருளின் திருநடனம். அந்நடனத்தின் விசையிலே, ஓசைகள் எழுகின்றன. ‘ஓங்காரம்’ எனும் நாத வடிவாகப் பரவி, அதன் சக்தியால் திசைகள் எழுகின்றன. மிசைகள் எழுகின்றன. அண்டங்களும், பிண்டங்களும் தோன்றி, அவற்றினுள்ளும், ஆத்மாவாகக் கோர்த்து, அப்பரம்பொருளே பலவுமாக உயிர்த்து இருக்கிறது. மீண்டும் உலகத் தோற்றங்கள் எழுந்தும், வளர்ந்தும், மறைந்தும் கிடக்கின்றன.

இவ்வாறு மாறுகின்ற ‘மாற்றச் சங்கிலியை’ அணிந்து ஆடுபவன் என்பதாலோ, அசைகின்ற பாம்பினை அணியாக் கொண்டு சிவபிரான் நடனம் ஆடுவதாக திருமறைகள் காட்டுகின்றன!

‘நட்டம்’ என்பதற்கு நடனம் எனும் பொருளைத் தவிர்த்து, ‘இழப்பு’ எனும் பொருளும் உண்டு. ‘நட்டம் பயின்று’ என்றால், ‘இதனால் இழப்பு வரும் எனத் தெரிந்து கொண்டு’ எனக் கொள்ளலாம். ஈரற்ற பரபிரம்மம், உலகங்களைத் தோற்றுவித்தால், அது ‘தன்னிலும் வேறு இல்லை’ எனும் உண்மைக்கு ஒரு இழப்பாகத் தோன்றும் என்பதைப் பயின்றிருந்தாலும், தோற்ற மாயையை எழுப்பியும், அடக்கியும் ஆனந்த நடனம் புரிகின்றது.
சிவ நடனம், எல்லாத் தோற்றங்களையும் அடக்கியும், அவிழ்த்தும் ஆளுகின்ற பரமாத்மாவின் பெருநடனம். இந்த அனுபவம் ஜீவன் ஒவ்வொன்றுள்ளும் தினமும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

‘விழிப்புநிலை’ நமக்கு ஒரு அனுபவ உலகங்களைத் தருகின்றது. தோற்றப் பொருட்களை அனுபவிக்க, வல்லுடல் என தோல் போர்த்திய உடல் ஒரு கருவியாகவும், மெல்லுடல் எனும் அந்தகரணங்கள் உட்கருவியாகவும் பயன்படுகின்றன.

‘கனவுநிலை’ நமக்கு வேறு பல அனுபவ உலகங்களைத் தருகிறது. அப்போது, மெல்லுடல் மட்டுமே தோற்ற மாயைகளை அனுபவித்து வருகிறது.

ஆழ்துயில் நிலையில், எல்லாத் தோற்ற மாயைகளும் மறைந்து விட்டன. வல்லுடலும் இல்லை. மெல்லுடலும் இல்லை. அப்போது, அறியாமை எனும் போர்வை மட்டுமே இருளாக விரிக்கப்பட்டு இருக்கிறது. ஆழ்துயில், மீண்டும், விழிப்புலகு, கனவுலகு எனப் பலவிதமான தோற்ற மாயைகளைத் தரப்போகின்றது. அதுவரை, ஜீவன் ஒரு சுகமான அமைதியை அனுபவிக்கட்டுமே என்று, ஆத்மா காட்டுகின்ற கருணையே ஆழ்துயில் ஆகும். அதில் ஜீவன், அறியாமையாகிய இருட்போர்வைக்குள் கிடக்கிறது.

இருட்போர்வைக்கு மேல், அருட்பார்வையுடன், ஆத்மா ஆனந்த நடனம் ஆடிக் கொண்டு இருக்கிறது. அதுவே சிற்றம்பலம் எனும் மனமேடையில் தனித்திருக்கும் ஆத்மாவின் களி நடனம்.

‘பிரதோஷம்’ எனும் பகலும், இரவும் கூடும் சந்திப்பொழுது, சிவபிரானைத் தொழுவதற்கு மிகவும் உகந்த காலம் எனக் கொள்வதற்கும் இத்தத்துவமே ஒரு காரணம். சந்திப் பொழுது, தோற்ற மாயைகள் எல்லாம் நம்முள்ளே அடங்குகின்ற சுகநிலைக்கு எடுத்துச் செல்லும் காலம் என்பதால்தான், சிவபிரானின் நடனத்தைக் காணத் தொடங்கும் காலம் எனக் கொள்ளப்பட்டது.

88. கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

90.தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

Related Posts

Share this Post