ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம​:

அதை₂காத₃ஶோ(அ)த்₄யாய​: . விஶ்வரூபத₃ர்ஶனயோக₃​:

பாகம் 11 – அனைத்துருவக் காட்சி நெறி

அர்ஜுன உவாச .

மத₃னுக்₃ரஹாய பரமம் கு₃ஹ்யமத்₄யாத்மஸஞ்ஜ்ஞிதம் .
யத்த்வயோக்தம் வசஸ்தேன மோஹோ(அ)யம் விக₃தோ மம (11-1)

விசயன் வணக்கம்

1 (1) என் மீது கொண்ட கருணையால், ஆத்மாவைப் பற்றி நீ சொன்ன பெரிய உண்மைகளை நான் கற்றுக் கொண்டேன். அதனால், எனது மனமும் அறிவும் தெளிவு பெற்றன.

தனஞ்சயா தயவாய்ச் சொல்க தாரகா முகுந்தா அண்டம்
இனஞ்செயல் குணமாம் ஆக்கம் இயல்பா லியக்கம் உந்தன்
குணஞ்செயல் வைத்த தேகம் கூறிடக் கேட்டேன் மாயம்
மனஞ்செயல் தெளித லாகும் மந்திரம் கற்றுக் கொண்டேன்
ப₄வாப்யயௌ ஹி பூ₄தானாம் ஶ்ருதௌ விஸ்தரஶோ மயா .
த்வத்த​: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் (11-2)

2 (2) சீவராசிகளின் தோற்றத்தையும், அழிவைப்பற்றியும் இவற்றுக்கெல்லாம் காரணமான உனது கருணையினையும் உனது உரையால் அறிந்து கொண்டேன். அந்த உண்மையே பரம ரகஸியம் எனவும், நிலையில்லா உலகில் நிலையான தத்துவம் எனவும் அறிந்து கொண்டேன்.

உலகிலே சீவ ராசி உயிர்ப்பதும் அயர்ப்ப தான
கலையினை ஈச னாகும் கண்ணனே பயிர்ப்ப தாகும்
விலையிலா ரஹ சியத்தை விவரமாய்க் கேட்ட தாலே
நிலையிலாப் புவ னமீது நிலைத்திடும் அறிவு பெற்றேன்
ஏவமேதத்₃யதா₂த்த₂ த்வமாத்மானம் பரமேஶ்வர .
த்₃ரஷ்டுமிச்சா₂மி தே ரூபமைஶ்வரம் புருஷோத்தம (11-3)

3 (3) எல்லாவற்றுக்கும் வித்தான உனது விஸவருபத்தை, உலகளாவிய ஓவியத்தைக் காண விரும்புகிறேன். அத்தகைய தரிசனத்தால், எனது மயக்கம் முற்றிலும் அழியும். எனது ஞான தாகம் அடங்கும். எனவே கருணை செய்து திருவுருவக் காட்சி தந்து, என்னை உந்தன் காலடி சேர்க்க வேண்டும்

பரந்தாமா நீயே எங்கும் பரந்திடும் அருளைச் சொன்ன
விருந்தாக அமையும் உந்தன் விஸ்வருப தரிச னத்தை
மருந்தாகக் காணும் பேற்றை மயக்கத்தை நீக்கும் ஊற்றைத்
தருந்தாக மடக்கி எந்தன் தலையடி சேர்க்க வேண்டும்
மன்யஸே யதி₃ தச்ச₂க்யம் மயா த்₃ரஷ்டுமிதி ப்ரபோ₄ .
யோகே₃ஶ்வர ததோ மே த்வம் த₃ர்ஶயாத்மானமவ்யயம் (11-4)

4 (4) உலகினால் அளக்க முடியாததும், விளக்க முடியாததுமான உன்னுடைய பரமானந்தப் பேருருவத்தை நான் பார்க்கத் தகுதி பெற்றவன் தானா? அத்தகுதி எனக்கிருந்தால், இறைவா, அதனை எனக்குக் காட்டு.

விரியுமோ ருலகம் எல்லாம் விளைத்தநின் விஸவ ருபம்
அறியுமோ பார்க்கும் பேறு அமையுமோ அனந்த ருபம்
தெரியுமோ கண்ணில் காணத் தெளியுமோ தகுமோ தக்கின்
ஹரியுமோங் கார ருபம் காட்டிடக் கேட்ட டைந்தான்

ஶ்ரீப₄க₃வானுவாச .

பஶ்ய மே பார்த₂ ரூபாணி ஶதஶோ(அ)த₂ ஸஹஸ்ரஶ​: .
நானாவிதா₄னி தி₃வ்யானி நானாவர்ணாக்ருதீனி ச (11-5)

ஸ்ரீகிருஷ்ணர் உரை

5 (5) கருணையால், விசயா, உனக்கு என்னுடைய பல நுாறாகவும், ஆயிரமாகவும் விதங்களாக, வண்ணங்களாக விளங்கும் விஸவருப தரிசனத்தைத் தருகிறேன்.

அச்சுதன் அனந்தன் மாலன் ஹரிஹரன் இரக்கங் கொண்டு
மெச்சினன் விசயா பார்க்க மேதினி பார்க்க என்னுள்
சச்சிதா னந்தம் பார்க்க சராசர வண்ணம் பார்க்க
உச்சிதா னேகத் தேகம் உலகள வாகப் பார்க்க
பஶ்யாதி₃த்யான்வஸூன்ருத்₃ரானஶ்வினௌ மருதஸ்ததா₂ .
ப₃ஹூன்யத்₃ருஷ்டபூர்வாணி பஶ்யாஶ்சர்யாணி பா₄ரத (11-6)

6 (6) பார். நான் முன்னே சொன்ன ஆதித்யர்கள், வசுக்கள் (அதாவது எல்லா இயற்கை சக்திகளையும்) என்னுள்ளே பார். நீ முன்பு பார்த்திராத விந்தைகளைப் பார்.

ஆதித்யர் வசுக்கள் பார்க்க அச்வினி குமரர் பார்க்க
வேதியர் வினைகள் பார்க்க விழிகளா லறியாக் காட்சி
பூதலம் நேற்றின் றொருநாள் புலர்ந்திடும் உயிர்கள் பார்க்கக்
காதலால் காட்டிக் கண்ணன் கருணையா லருள் பரந்தான்
இஹைகஸ்த₂ம் ஜக₃த்க்ருத்ஸ்னம் பஶ்யாத்₃ய ஸசராசரம் .
மம தே₃ஹே கு₃டா₃கேஶ யச்சான்யத்₃ த்₃ரஷ்டுமிச்ச₂ஸி (11-7)
ந து மாம் ஶக்யஸே த்₃ரஷ்டுமனேனைவ ஸ்வசக்ஷுஷா .
தி₃வ்யம் த₃தா₃மி தே சக்ஷு​: பஶ்ய மே யோக₃மைஶ்வரம் (11-8)

7 (7-8) உன்னுடைய இயற்கைக் கண்களால் என்னுடைய உலகளாவிய உருவத்தைக் காணமுடியாது. எனவே ஞானக் கண்களைப் பெற்று என் யோக சக்தியைப் பார்.

வானும் மண்ணும் காலம் வையம் பொருளும் எந்தன்
மோன வடிவத் துள்ளே முனையும் தரிச னத்தை
ஊனக் கண்க ளாலே உய்ப்ப தரிது என்றே
ஞானக் கண்க ளாலே நலம்பட அருள்வித் தானே

ஸஞ்ஜய உவாச .

ஏவமுக்த்வா ததோ ராஜன்மஹாயோகே₃ஶ்வரோ ஹரி​: .
த₃ர்ஶயாமாஸ பார்தா₂ய பரமம் ரூபமைஶ்வரம் (11-9)

சஞ்சயன் மகிழ்ச்சி

8 (9) குருடரான திருதராட்டிரனுக்கு, நடப்பதை எடுத்துச் சொல்லும் சஞ்சயன் ஞானி அல்லவா? அதனால், இறையருளால், வியாஸர் சஞ்சயனுக்கும் ஞானக் கண்களை அளித்து, ஆங்கே அர்ச்சுனனுக்கு இறைவன் காட்டிய உலகளாவிய வடிவத்தைக் காணும் பாக்கியம் அளித்தார். சஞ்சயன், மகிழ்ச்சியால் கண்டு, கண்ட காட்சியை வார்த்தைகளில் வடிக்க முயலுகின்றான்.

அந்தகன் திருதராட் டினனுக்கு அடுத்துரை எடுத்துச் சொல்லும்
சஞ்சயன் ஞானன் அன்றோ சத்தியம் அறிவன் அன்றோ
நந்தனன் பிருந்தா வனசஞ் சாரணன் நயக்குங் காட்சி
வந்தனம் மிகவே பார்த்தான் வடிவத்தை நவிலப் பார்த்தான்
அனேகவக்த்ரனயனமனேகாத்₃பு₄தத₃ர்ஶனம் .
அனேகதி₃வ்யாப₄ரணம் தி₃வ்யானேகோத்₃யதாயுத₄ம் (11-10)

9 (10) பல வகையான நகைகள் அணிந்து, பல விழிகளும், வாய்களும் கொண்டு, பேரழகாய் நிற்கும் இறைவனின் திருவடிவம் கண்டான்.

அற்புதம் அற்புதக் காட்சி ஆனந்தத் தரிசனங் காட்டி
பொற்புதப் புகலின் மாட்சி பூதலப் புகழினைக் கூட்டிப்
பற்பலா பரணஞ் சூடிப் பலவிதக் கலனுங் கூடி
நிற்பதை நித்யா னந்த நிர்மல அழகைக் கண்டான்
தி₃வ்யமால்யாம்ப₃ரத₄ரம் தி₃வ்யக₃ந்தா₄னுலேபனம் .
ஸர்வாஶ்சர்யமயம் தே₃வமனந்தம் விஶ்வதோமுக₂ம் (11-11)

10 (11) மாலை சூடிய மார்பு. புத்தாடை மூடிய மேனி. மணிகளும், மலர்களும், ஆபரணங்களும், சந்தன குங்குமப் பொலிவும் உடைய உருவம். மகத்தான வடிவம். பார்வைக்குள் அடங்காத மிகப் பெரிய வடிவம்.

பூமணி மாலை சூடிப் புத்தொளிர் ஆடை கூடித்
துாமணி மார்பில் கந்தம் துலங்கிட நகைகள் கோடி
மாமணி வண்ணத் தாலும் மங்களச் சின்னத் தாலும்
பேரணி பிம்பத் தாலும் பெரியதோர் தோற்றங் கண்டான்
தி₃வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப₄வேத்₃யுக₃பது₃த்தி₂தா .
யதி₃ பா₄​: ஸத்₃ருஶீ ஸா ஸ்யாத்₃பா₄ஸஸ்தஸ்ய மஹாத்மன​: (11-12)

11 (12) இந்தத் திவ்விய மஹானின் ஒளி, வானத்தில் ஆயிரம் சூரியர்களைப் போலப் பிரகாசிப்பது. இருண்ட வானத்தின் நடுவே விளைந்த மின்னல் போன்றது. பார்க்க ஆனந்தமும், அதிர்ச்சியும், நடுக்கமும் தருவதாக இருக்கிறது.

கோடி சூர்யப்ர காசமோ கோமகள் ஞானவி லாஸமோ
மூடிக் கிடந்திருள் வானிலே முற்றிக் கிழித்திடு மின்னலோ
தேடிக் கிடைக்கா தேயமோ தெரியத் திகட்டா தீபமோ
நாடி நடுங்கிட வைத்திடும் நாயகன் விஸவ ருபமோ
தத்ரைகஸ்த₂ம் ஜக₃த்க்ருத்ஸ்னம் ப்ரவிப₄க்தமனேகதா₄ .
அபஶ்யத்₃தே₃வதே₃வஸ்ய ஶரீரே பாண்ட₃வஸ்ததா₃ (11-13)

12 (13) பகவானுடைய உடலில், உலகின் எல்லா வடிவமும் ஒருமிக்க அடங்கி இருப்பது தெரிகிறது. ஏழுலக நடப்பும் இறைவனின் வடிவத்தின் உள்ளே நடக்கின்றன.

கடலுந் திரையும் கரை கடந்த உலகி யலும்
நடவுங் குருட் சேத்ரம் நடக்கும் நாட கமும்
தடமும் ஏழ் உலகத் தளமும் உயிர னமும்
உடலில் மாத வனின் உறுப்பில் விளங் கிடுதே
தத​: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா த₄னஞ்ஜய​: .
ப்ரணம்ய ஶிரஸா தே₃வம் க்ருதாஞ்ஜலிரபா₄ஷத (11-14)

13 (14) பிறகு தனஞ்சயன் வியப்பு மிகுந்தவனாய், மெய் சிலிர்த்து, தலை வணங்கி, கைகளை மேலே கூப்பிப் பகவானைப் பார்த்துப் பணிவுடன் சொல்லுவான்.

வியர்த்து உடல் கிளர்த்து விதிர்த்து மனம் பதைத்து
அயர்த்துப் பரம் பொருளை அளிக்கும் உரு நினைத்து
உயர்த்திக் கரம் இரண்டும் உருக விழி யிரண்டும்
செயற் துறவ றத்தால் ஜெபித்து வில் மறவன்

அர்ஜுன உவாச .

பஶ்யாமி தே₃வாம்ஸ்தவ தே₃வ தே₃ஹே
ஸர்வாம்ஸ்ததா₂ பூ₄தவிஶேஷஸங்கா₄ன் .
ப்₃ரஹ்மாணமீஶம் கமலாஸனஸ்த₂-
ம்ருஷீம்ஶ்ச ஸர்வானுரகா₃ம்ஶ்ச தி₃வ்யான் (11-15)

14 (15) நான் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன். எல்லாவித சீவராசிகளையும், தாமரை மலரில் யோகித்திருக்கும் பிரம்மனையும், முனிவர்களையும், தேவ சர்ப்பங்களையும் உனது எல்லையற்ற வடிவத்தில் காணுகின்றேன்.

விசயன் வணக்கம்

வானவர் கண்டேன் பத்மம் வதிந்திடும் பிரமன் கண்டேன்
ஆனவர் கண்டேன் தேவ அரவங்கள் பரவக் கண்டேன்
மோனவர் கண்டேன் ஞான முனிவர்கள் வசிக்கக் கண்டேன்
ஊனவர் கண்டேன் உயிரும் உருவாகி நசிக்கக் கண்டேன்
அனேகபா₃ஹூத₃ரவக்த்ரனேத்ரம்
பஶ்யாமி த்வாம் ஸர்வதோ(அ)நந்தரூபம் .
நாந்தம் ந மத்₄யம் ந புனஸ்தவாதி₃ம்
பஶ்யாமி விஶ்வேஶ்வர விஶ்வரூப (11-16)

15 (16) எல்லாப் பக்கங்களும் பல கைகளும், வயிறுகளும், வாய்களும், கண்களும் காண்கிறேன். உன் வடிவத்தின் தொடக்கமும், நடுவும், இறுதியும் காண்கிறேன்.

திசையெலாம் முகங்கள் ஆகும் திரையெலாம் கூந்தல் உந்தன்
அசைவெலாம் நடனம் ஆடும் ஆயிரம் கரங்கள் உதரம்
தசையெலாம் தரணி வாயில் தரிசனங் காட்டும் வாயில்
மிசையெலாம் பரவும் கோயில் மிகுந்திடும் வடிவம் கண்டேன்
கிரீடினம் க₃தி₃னம் சக்ரிணம் ச
தேஜோராஶிம் ஸர்வதோ தீ₃ப்திமந்தம் .
பஶ்யாமி த்வாம் து₃ர்னிரீக்ஷ்யம் ஸமந்தாத்₃
தீ₃ப்தானலார்கத்₃யுதிமப்ரமேயம் (11-17)

16 (17) உன்னை நான் கிரீடமும், தண்டும், சக்கரமும் ஏந்தியவனாய்க் காண்கிறேன். உன்னுடைய பிரகாசத்தால், உன்னை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை.

சங்கு சக்கர கதாதரா சர்வா பரண பூரணா
கங்கு உக்கிர கலாதரா கர்மா கரண காரணா
எங்கு நிற்கிற ஏகாம்பரா எரியுங் கதிரோ ருதாரணா
பொங்கு மித்திர தாம்பரா பொலியும் அருளே நாராயணா
த்வமக்ஷரம் பரமம் வேதி₃தவ்யம்
த்வமஸ்ய விஶ்வஸ்ய பரம் நிதா₄னம் .
த்வமவ்யய​: ஶாஶ்வதத₄ர்மகோ₃ப்தா
ஸனாதனஸ்த்வம் புருஷோ மதோ மே (11-18)

17 (18) நீயே ஆதாரம். அழிவற்றவன். மேலானவன். அறிவதற்கேற்றவன். அறிய முடியாதவன். என்னுடைய எண்ணத்தில் மேலான ஸநாதன புருஷன்.

அனந்த சயனா ஜனார்த்தனா ஆனந்த நயனா பிரபாகரா
ஸனந்த குருவே சடாட்சரா சத்ய நாரண ஸநாதனா
தனந்த ரும்சிவ தயாபரா தாமோ தரமுகுந் தாமாதவா
குணந்த ரும்பவ குணாதீதா கூர்த்த நெடுமால் முராஹரே
அனாதி₃மத்₄யாந்தமனந்தவீர்ய-
மனந்தபா₃ஹும் ஶஶிஸூர்யனேத்ரம் .
பஶ்யாமி த்வாம் தீ₃ப்தஹுதாஶவக்த்ரம்
ஸ்வதேஜஸா விஶ்வமித₃ம் தபந்தம் (11-19)

18 (19) எல்லையற்ற ஆள்வினை உடையவனாக, வாயில் எரியும் தணலால் எல்லாவற்றையும் அழிப்பவனாக, உனது பெரிய தோள்களால், அகிலத்தை ஈர்ப்பவனாக, ஹரியும் சிவனும் உனது பாதங்களின் தாளத்திற்கேற்ப யோகம் இயற்றச் செய்பவனாக, உனது உலகளாவிய உருவத்தைக் கண்டேன்.

எரியும் வாயில் அகிலம் எல்லாம் இருக்கக் கண்டேன்
சரியும் பெரிய தோள்கள் சகலம் இழுக்கக் கணடேன்
ஹரியும் சிவமும் உந்தன் ஜதியில் கலக்கக் கண்டேன்
விரியும் விழியின் அருளில் வினைகள் மறையக் கண்டேன்
த்₃யாவாப்ருதி₂வ்யோரித₃மந்தரம் ஹி
வ்யாப்தம் த்வயைகேன தி₃ஶஶ்ச ஸர்வா​: .
த்₃ருஷ்ட்வாத்₃பு₄தம் ரூபமுக்₃ரம் தவேத₃ம்
லோகத்ரயம் ப்ரவ்யதி₂தம் மஹாத்மன் (11-20)

19 (20) வானமும், பூமியும் தொட்டு, அவற்றுக்கு இடையிலான எல்லா வெளியும் உனது பரந்த உருவத்தால் நிறைந்து உள்ளது. இந்தப் பெரிய உருவத்தை நிமிரந்து பார்க்க எனது மனதில் அச்சமும் நடுக்கமும் வருகின்றன.

விண்ணும் மண்ணும் இணைகிறதே விரிந்த விஸவ ருபத்தைக்
கண்ணும் புலனும் கவர்ந்திடவே காணும் திருமால் பேரழகை
இன்னும் இன்னும் காணத்தான் இணக்க மிருந்தும் பேரச்சம்
மின்னும் உனது பொன்மேனி மிளிரல் மருட்சி தருகிறதே
அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா₄ விஶந்தி
கேசித்₃பீ₄தா​: ப்ராஞ்ஜலயோ க்₃ருணந்தி .
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்₃த₄ஸங்கா₄​:
ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி₄​: புஷ்கலாபி₄​: (11-21)

20 (21) தேவர்களின் கூட்டம் உன்னுள்ளே புகுந்து பணிந்துள்ளது. சிலர் கை கூப்பித் தொழவும், சிலர் உன் புகழ் பாடிப் பணியவும் முயல்வதைப் பார்க்கிறேன்.

கும்பிட் டுள்ளே சீலர்களும் குணத்தை நலத்தைப் பாடுகிறார்
நம்பிக் கையால் நல்லோரும் நாரா யணனென நாடுகிறார்
வெம்பிக் கிடக்கும் அறியாமை வெல்லக் கிடைக்கு மறிவானை
தும்பிக் கையினால் புகழாரம் துாக்கிப் பிடிக்கும் நற்காட்சி

ருத்₃ராதி₃த்யா வஸவோ யே ச ஸாத்₄யா
விஶ்வே(அ)ஶ்வினௌ மருதஶ்சோஷ்மபாஶ்ச .
க₃ந்த₄ர்வயக்ஷாஸுரஸித்₃த₄ஸங்கா₄
வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஶ்சைவ ஸர்வே (11-22)

21 (22) ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்தியர், விச்வ தேவர்கள், அச்வினி தேவர்கள், மருத்துக்கள், மறைந்த பித்ருக்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள் அனைவரும் உன்னையே வியப்பாலும், பணிவாலும் பார்த்து நிற்பதைக் காண்கிறேன். (அதாவது, உலகின் சகல சக்திகளும், இறைவனையே ஆதாரமாகக் கொண்டு இயங்குவது புரிகிறது.)

ஆதித்யர் வசுக்கள் ருத்ரர் அஸவினித் தேவர் யக்ஷர்
சாதித்யர் சாத்யர் விச்வர் சங்கரன் பித்ரு ஆன்மா
வாதித்யர் அசுவர் முனிவர் வல்லவர் மருத்து எல்லாம்
பாதித்த மனதால் பக்தி பயத்ததால் பார்த்து நிற்பார்

ரூபம் மஹத்தே ப₃ஹுவக்த்ரனேத்ரம்
மஹாபா₃ஹோ ப₃ஹுபா₃ஹூருபாத₃ம் .
ப₃ஹூத₃ரம் ப₃ஹுத₃ம்ஷ்ட்ராகராலம்
த்₃ருஷ்ட்வா லோகா​: ப்ரவ்யதி₂தாஸ்ததா₂ஹம் (11-23)

22 (23) உன்னைப் பல வாய்களும், கை கால்களும், தந்தங்களும், பெருத்த பல வயிறுகளுடன் காண்பதால், என்னுடைய மனம் பத்ைதது அச்சத்தால் நடுங்குகிறது.

பலவாயும் படர் விழியும் பல்லா யிரம் கரமும்
வளவாயும் வருந் தந்தம் வஜரா யுதப் புறமும்
களமாயும் வளி யாயும் கனகமணி மலை யாயும்
நிலமாயும் நெருப் பாயும் நிலைப்ப தெனை மயக்கும்

23 (24) வானைத் தொடும் நீண்ட உருவத்தினனான உன்னை, பல வர்ணங்களிலும், தீ உமிழும் கண்களும், திறந்த வாயும் கொண்டவனாகப் பார்த்து, என் நெஞ்சு பதறுகிறது. தைரியம், அமைதி இரண்டும் இழந்தவனானேன். என்னைக் காத்தருள்வாயாக.

விண்ணைத் தொட்ட மேனி விழியில் சுட்ட தீபம்
மண்ணை விட்ட காயம் மலையில் பட்ட ருபம்
கண்ணைத் திறந்து காணக் கலக்கம் வந்த தாகும்
என்னை இரந்து காத்து ஏக்கம் அவிக்க வேண்டும்
த₃ம்ஷ்ட்ராகராலானி ச தே முகா₂னி
த்₃ருஷ்ட்வைவ காலானலஸன்னிபா₄னி .
தி₃ஶோ ந ஜானே ந லபே₄ ச ஶர்ம
ப்ரஸீத₃ தே₃வேஶ ஜக₃ன்னிவாஸ (11-25)

24 (25) பெருத்த தந்தங்களுடைய பெரிய வாயில் பிரளயம் வந்தாற் போலத் தீ வளர்வதால், திசைகளைக் காண முடியவில்லை. என்னுடைய புத்தி பேதலித்தது. என் சித்தம் கலங்கி, மனம் வருத்தமடைகிறது. என்னைக் காத்தருள்க கண்ணா.

பெருத்த தந்தத் தாலே பிரளயம் வகுத்த தாலே
நிறுத்த திசையுங் காணா நிறைய மறைப்ப தாலே
வருத்த முடைய னானேன் வசத்தை இழக்க லானேன்
கருத்த மேக நாதா கருணை வேண்ட லானேன்
அமீ ச த்வாம் த்₄ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா​:
ஸர்வே ஸஹைவாவனிபாலஸங்கை₄​: .
பீ₄ஷ்மோ த்₃ரோண​: ஸூதபுத்ரஸ்ததா₂ஸௌ
ஸஹாஸ்மதீ₃யைரபி யோத₄முக்₂யை​: (11-26)
வக்த்ராணி தே த்வரமாணா விஶந்தி
த₃ம்ஷ்ட்ராகராலானி ப₄யானகானி .
கேசித்₃விலக்₃னா த₃ஶனாந்தரேஷு
ஸந்த்₃ருஶ்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை₃​: (11-27)

25 (26-27) பகைவர்களான கெளரவர்களும், சேனைகளும், உனது வாயில் சிக்கி, பற்களில் நசுங்கிப் பொடிப் பொடியாகிப் போவதைப் பார்க்கிறேன்.

திருத ராட்டினன் செல்வர் தீரர்கள் ஷமன் துரோணன்
பொருத ஓட்டினன் கர்ணன் போர்முனை புகுந்த ரர்
கருத லாக்கி உந்தன் கடைவாய் சிக்கிக் கொண்டு
சிறுத லாக்கி மேனி சிதையுறுங் காட்சி கண்டேன்
யதா₂ நதீ₃னாம் ப₃ஹவோ(அ)ம்பு₃வேகா₃​:
ஸமுத்₃ரமேவாபி₄முகா₂ த்₃ரவந்தி .
ததா₂ தவாமீ நரலோகவீரா
விஶந்தி வக்த்ராண்யபி₄விஜ்வலந்தி (11-28)

26 (28) பல திசைகளிலிருந்தும் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள், விரைந்து கடலில் கலப்பது போல, எல்லாத் திசைகளிலிருந்தும், புரண்டு வரும் இரத்த ஆற்றில், படைகள் மிதந்து வந்து உனது வாயில் விழுவதைக் கண்டேன்.

ஆறுகள் பலவும் வெள்ளம் ஆர்ப்பரித் தோடிக் கடலில்
சேறுதல் போலே ரர் சேனையுன் திறந்த வாயில்
ழுதல் கண்டேன் அந்தோ விபரீதம் கண்டேன் உலகம்
வாழுதல் யாவும் உந்தன் வயிற்றுளே மறையக் கண்டேன்
யதா₂ ப்ரதீ₃ப்தம் ஜ்வலனம் பதங்கா₃
விஶந்தி நாஶாய ஸம்ருத்₃த₄வேகா₃​: .
ததை₂வ நாஶாய விஶந்தி லோகாஸ்-
தவாபி வக்த்ராணி ஸம்ருத்₃த₄வேகா₃​: (11-29)

27 (29) விளக்கில் தானே வந்து ழ்ந்து மாயும் விட்டில் பூச்சிகளைப் போல, சீவராசிகள் உன்னுள் வந்து கலந்து அழிவதைக் காண்கிறேன்.

விட்டில் பூச்சிக் கூட்டம் விளக்கினைத் தேடிச் சென்ற
மட்டில் மாய்தல் போலே மனிதரும் உயிர்கள் பிறவித்
தொட்டில் பிறந்தி ளைத்துத் துயரத்தில் படுத் திருந்து
வட்டில் அழிய உந்தன் வாயில் புகுந்த தென்ன
லேலிஹ்யஸே க்₃ரஸமான​: ஸமந்தால்-
லோகான்ஸமக்₃ரான்வத₃னைர்ஜ்வலத்₃பி₄​: .
தேஜோபி₄ராபூர்ய ஜக₃த்ஸமக்₃ரம்
பா₄ஸஸ்தவோக்₃ரா​: ப்ரதபந்தி விஷ்ணோ (11-30)

28 (30) உன்னுடைய எரிகின்ற வாய்களால் எல்லாப் பக்கங்களையும் நாசம் செய்து, மகிழ்ச்சியால் நாவால் நக்கினாய். உன்னுடைய கோபத்தீ உலகைத் தகதகத்து எரியச் செய்வதைக் காண்கிறேன்.

நாக்கினால் எரித்தாய் உலகை நக்கினாய் சும் மூச்சுப்
போக்கினால் விளைத்தாய் கடுமைப் புயலினால் நாசம் செய்தாய்
நீக்கினாய் நிலைத்தாய் உண்மை நிவர்த்தினாய் மோசம் பூமி
தாக்கினாய் தகையால் புவனம் தகதகத் தொளிரச் செய்தாய்
ஆக்₂யாஹி மே கோ ப₄வானுக்₃ரரூபோ
நமோ(அ)ஸ்து தே தே₃வவர ப்ரஸீத₃ .
விஜ்ஞாதுமிச்சா₂மி ப₄வந்தமாத்₃யம்
ந ஹி ப்ரஜானாமி தவ ப்ரவ்ருத்திம் (11-31)

29 (31) இவ்வளவு பயங்கரமான உருவம் படைத்த பரம் பொருளே, நீ யார் என எனக்குச் சொல். ஊழிக் காலனோ? பிரம்மமோ? உன்னுடைய தொழில் என்ன? பூர்கம் என்ன? எனக்குச் சொல்க.

யார்நீ எடுத்துச் சொல்க யட்சனோ ஊழிப் பேரோ
பார்நீ என்று சொன்ன பகவனோ பிரம்மம் தானோ
தார்மீ கத்தால் உந்தன் தகுதியைத் தொழிலை வந்த
பூர்வீ கத்தைச் சொல்க புண்ணிய என்றான் விசயன்

ஶ்ரீப₄க₃வானுவாச .

காலோ(அ)ஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்₃தோ₄
லோகான்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த​: .
ருதே(அ)பி த்வாம் ந ப₄விஷ்யந்தி ஸர்வே
யே(அ)வஸ்தி₂தா​: ப்ரத்யனீகேஷு யோதா₄​: (11-32)

ஸ்ரீகிருஷ்ணர் உரை

30 ( களைத்துக் கண்ணீருடன், பயத்தால் தனது காலடியில் விழுந்த விசயனைக் கருணையால் நோக்கி, உலகளாவிய உத்தமன் கூறுகிறார். )

களைத்துக் கண்ணால் கண்ட காட்சியை நினைத்து நெஞ்சம்
மலைத்து மருட்சி கொண்ட மாவலி விசயன் காலில்
இளைத்து விழுந்த காட்சி ஏற்றவன் இரட்சிக் கத்தான்
அழைத்துச் சொன்ன சேதி அடுத்தது வருவ தாகும்

31 (32) உலகத்தை அழிக்க முற்பட்ட காலமே நான். இப்போது உலகை அழிக்கத் தலைப்பட்டேன். நீ இல்லாவிட்டாலும் கூட, இங்கே கூடியுள்ள அரசர்களில் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள்.

அழியும் காலம் இன்றே அமைந்தது உலகில் அதர்மப்
பழியும் பாவம் இங்கே படர்ந்தது அதனால் எல்லாம்
கழியும் என்னால் உலகம் கரையும் உன்னால் ஆகா
வழியும் என்னால் ஆகும் வழக்கினைத் தீர்ப்ப தாகும்

தஸ்மாத்த்வமுத்திஷ்ட₂ யஶோ லப₄ஸ்வ
ஜித்வா ஶத்ரூன் பு₄ங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்₃த₄ம் .
மயைவைதே நிஹதா​: பூர்வமேவ
நிமித்தமாத்ரம் ப₄வ ஸவ்யஸாசின் (11-33)

32 (33) இடதுகை ரனே, இங்கு நடத்திடும் நாடகத்தில் நானே நாயகன். நீ வெறுமனே கடமையைச் செய்து புகழைத் தேடிக் கொள்.

இடக்கர வீரா கேட்டாய் ஈங்குனக் கான தர்மம்
நடத்திடு நடப்ப தெல்லாம் நாடகம் நாயகன் நானே
படத்திடைப் பதுமை நீதான் பயன்படு கருவி நீதான்
தடத்திடைப் பகைவர் எந்தன் தகிப்பிலே மாண்டார் முன்னே
த்₃ரோணம் ச பீ₄ஷ்மம் ச ஜயத்₃ரத₂ம் ச
கர்ணம் ததா₂ன்யானபி யோத₄வீரான் .
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதி₂ஷ்டா₂
யுத்₄யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்னான் (11-34)

33 (34) எதிரிகளும், தீயசெயலுக்கு உடந்தையாய் நின்ற கர்ணன், ஷமன், துரோணன், ஜயத்ரதன் ஆகிய பலரும் என்னால் முன்னமேயே கொல்லப் பட்டனர். நீ கடமைக்காய் இவர்களின் உடலைச் சாய்த்துப் பெருமை தேடிக் கொள். (தீய செயலாலும், உள்ளத்தாலும் கெளரவர்கள், பெயருக்குப் போரிட்டாலும், மனதுள், மயக்கமும், குழப்பமும் கொண்டவர்களாக, ஆன்ம பலம் இழந்து, ஏற்கனவே மனதால் மரணம் அடைந்தவர்களாயினர். )

கொன்றதை அறிவாய் முன்பே கொடுமைக்கு உடமை யாகி
நின்றதால் கர்ணன் துரோணன் நிட்கலன் ஷமன் சயத்ரன்
என்றவர் எல்லாம் இங்கே எதிர்ப்பவர் செத்தார் நீயும்
வென்றதாய் பெருமை கொள்ள வெறுமனே கருவி யாகு

Sanjaya Uvaacha:

ஸஞ்ஜய உவாச .

ஏதச்ச்₂ருத்வா வசனம் கேஶவஸ்ய
க்ருதாஞ்ஜலிர்வேபமான​: கிரீடீ .
நமஸ்க்ருத்வா பூ₄ய ஏவாஹ க்ருஷ்ணம்
ஸக₃த்₃க₃த₃ம் பீ₄தபீ₄த​: ப்ரணம்ய (11-35)

சஞ்சயன் உரை

34 (35) கேசவனின் இந்த சொற்களைக் கேட்ட விசயன் (கிரீடி), கூப்பிய கைகளுடன், நடுக்கத்துடன், வணங்கி ஸ்ரீகிருஷணரைப் பணிந்து, மிகவும் கம்மிய குரலில், பயத்துடன் வேண்டலானான்.

நாசமாய் ஆவ தாவும் நன்மையா யாவ தாகும்
நேசமாயக் த சாரம் நெறியினை மொழிவ தாகும்
கேசவன் பாத சரணம் கேட்டவன் ரீடி உள்ளம்
கூச்சமாய் குரல் நடுங்கும் கும்பிடும் மொழி யிரங்கும்

அர்ஜுன உவாச .

ஸ்தா₂னே ஹ்ருஷீகேஶ தவ ப்ரகீர்த்யா
ஜக₃த்ப்ரஹ்ருஷ்யத்யனுரஜ்யதே ச .
ரக்ஷாம்ஸி பீ₄தானி தி₃ஶோ த்₃ரவந்தி
ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்₃த₄ஸங்கா₄​: (11-36)

விசயன் வணக்கம்

35 (36) ரிஷிகேஸா, உன்னுடைய பெருமையில் உலகம் மகிழ்வது பொருந்தும். அசுரரும், துச்சரும் ஓடி ஒளிவதும், அழிவதும் பொருந்தும். சித்தர்கள் உன்னை வணங்குவதும் விளங்கும்.

ரிஷிகேஸன் உன்னால் உலகம் நிலைக்குநல் லமைதி காணும்
வசியாகும் சித்தர் உந்தன் வணக்கத்தில் பெருமை காணும்
நசியாகும் அரக்கர் அச்சம் நயப்பதால் இளைப்ப தாகும்
பசியாகும் தேசம் உந்தன் பற்களில் அழிந்து போகும்
கஸ்மாச்ச தே ந நமேரன்மஹாத்மன்
க₃ரீயஸே ப்₃ரஹ்மணோ(அ)ப்யாதி₃கர்த்ரே .
அனந்த தே₃வேஶ ஜக₃ன்னிவாஸ
த்வமக்ஷரம் ஸத₃ஸத்தத்பரம் யத் (11-37)

36 (37) (இத்துணை சக்தியும் பெருமையும் நிறைந்த பெரியோனாகிய உன்னை ) எங்ஙனம் அவர்கள் வணங்காதிருப்பர்? நீயே மஹாத்மா. நீயே எல்லாவற்றுக்கும் மூலகர்த்தா. நீயே எல்லா உலகங்களின் உறைவிடம். நீயே எல்லாம் அறியும் அறிவு.

துதிக்கத் துாயன் நீயே துாரப் பொருளும் நீயே
கதிக்குக் கரணன் நீயே காரணப் பிரணவம் நீயே
மதிக்குத் தெளிவு நீயே மறையாத் தருவும் நீயே
நதிக்கு மூலம் நீயே நற்றவத் துருவும் நீயே
த்வமாதி₃தே₃வ​: புருஷ​: புராணஸ்-
த்வமஸ்ய விஶ்வஸ்ய பரம் நிதா₄னம் .
வேத்தாஸி வேத்₃யம் ச பரம் ச தா₄ம
த்வயா ததம் விஶ்வமனந்தரூப (11-38)

37 (38) நீயே ஆதி தேவன். நீயே பழையோன். உலகின் பரம நிலையம். நீயே அறிபவன் மற்றும் அறிபொருள். உன்னாலேயே இந்த உலகம் சூழப் பட்டுள்ளது.

ஆதிதேவன் நீயே அகிலம் ஆக்கிய பழையோன் நீயே
ஜோதிஸவ ருபன் நீயே சோடனைப் பொருளும் நீயே
நாதி அநாதி நீயே நாதநற் பிம்பம் நீயே
வேதிய ஞானம் நீயே வெளிப்பரப் பிரம்மம் நீயே
வாயுர்யமோ(அ)க்₃னிர்வருண​: ஶஶாங்க​:
ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஶ்ச .
நமோ நமஸ்தே(அ)ஸ்து ஸஹஸ்ரக்ருத்வ​:
புனஶ்ச பூ₄யோ(அ)பி நமோ நமஸ்தே (11-39)

38 (39) வாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஜாபதி, முப்பாட்டனாகிய பிரம்மன் அனைவரும் நீயே.

வளியும்நீ வருண வடிவம்நீ வழக்கறியும் யமனும் நீயே
ஒளியும்நீ பரிதிமதி படிவம்நீ ஓங்காரப் பொருளும் நீயே
களியும்நீ பிரஜா பதியும்நீ கருப்பிரம்ம உருவும் நீயே
வழியும்நீ வணங்கிடக் கதியும்நீ வந்தடையச் செய்வ நீயே
நம​: புரஸ்தாத₃த₂ ப்ருஷ்ட₂தஸ்தே
நமோ(அ)ஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ .
அனந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம்
ஸர்வம் ஸமாப்னோஷி ததோ(அ)ஸி ஸர்வ​: (11-40)

39 (40) உன்னை முன்னேயும், பின்னேயும், சுற்றிச் சுற்றி வந்தும் வணங்குவேன். எல்லையற்றவனே, எங்கும் நிறைந்தவனே, எனது குருவே.

முன்னே வணங் குவேன் முற்றும் வலம் வரப்
பின்னே வணங் குவேன் பேச்சும் இழந் துளம்
என்னே வேண்டு வேன் எங்கும் பரந் தருள்
கண்ணே கார் முகில்க் கருணையே குரு பரா
ஸகே₂தி மத்வா ப்ரஸப₄ம் யது₃க்தம்
ஹே க்ருஷ்ண ஹே யாத₃வ ஹே ஸகே₂தி .
அஜானதா மஹிமானம் தவேத₃ம்
மயா ப்ரமாதா₃த்ப்ரணயேன வாபி (11-41)

40 (41) உன்னுடைய பெருமைகளை அறியாமல், உன்னை என்னுடைய தோழன் என்று அறியாமையால் கருதி, ‘ஓ கிருஷணா, யாதவா’ என்று அன்பினாலும், சினத்தாலும் அழைத்த என்னுடைய மடமையை என்ன சொல்ல?

ஐயகோ என்ன செய்ய அற்புதம் அறியா துன்னைப்
பையனாய் அருகில் வைத்துப் பாலனாய் நண்ப னாகச்
செய்வனாய் கிருஷணா கண்ணா கேஸவா யாதவா என்று
எய்ததை என்ன சொல்ல என்பிழை ஏது சொல்ல
யச்சாவஹாஸார்த₂மஸத்க்ருதோ(அ)ஸி
விஹாரஶய்யாஸனபோ₄ஜனேஷு .
ஏகோ(அ)த₂வாப்யச்யுத தத்ஸமக்ஷம்
தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் (11-42)

41 (42) விளையாட்டாலும், வேடிக்கையாலும், களைப்பாறும் போதும், சாப்பிடும் போதும், பலர் எதிரிலும், தனிமையிலும், உன்னைப் பலவாறு அழைத்தும், அவமதித்தும் பேசியதை, தயை செய்து மன்னிப்பாயா?

வேடிக்கை விளையாட் டினிலே வெறுப்பிலே தனிமைப் பேச்சில்
கூடிக்கைப் பழக்கத் தினிலே கூட்டத்தில் பசியாரு கையிலே
வாடிக்கை வழக்கத் தினிலே வகையின்றிப் பேசிய தெல்லாம்
பேடிக்கை யால் ஆகாப் பிழையெனப் பொறுத்து ஏற்க
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஶ்ச கு₃ருர்க₃ரீயான் .
ந த்வத்ஸமோ(அ)ஸ்த்யப்₄யதி₄க​: குதோ(அ)ந்யோ
லோகத்ரயே(அ)ப்யப்ரதிமப்ரபா₄வ (11-43)

42 (43) இந்த சராசர உலகத்தின் தந்தை நீ. எனவே எல்லோராலும் வணங்கப்பட வேண்டியவன். உலகின் பரமகுரு நீயே. உனக்கு நிகர் யார்? ஒப்பற்றவனே, என்னை மன்னித்து அருள வேண்டும்.

தந்தைநீ உயிர்க் கருணைத் தருமன்நீ குருவும் நீயே
சிந்தைநீ செயற் கடனின் செல்வம்நீ சிறப்பும் நீயே
எந்தைநீ எவர்க் கறியா எண்ணம்நீ நானி ழைத்த
நிந்தைநீ மறந் தருளும் நிலைமைநீ அருளு வாயே
தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதா₄ய காயம்
ப்ரஸாத₃யே த்வாமஹமீஶமீட்₃யம் .
பிதேவ புத்ரஸ்ய ஸகே₂வ ஸக்₂யு​:
ப்ரிய​: ப்ரியாயார்ஹஸி தே₃வ ஸோடு₄ம் (11-44)

43 (44) பிள்ளையின் குற்றத்தை மறக்கும் தந்தையாக, காதலியின் தவறுகளை மறந்து ஏற்கும் காதலனாக, நட்புக்காக நண்பனின் பிழைகளை மன்னிக்கும் தோழனாக, நீ என்னை மன்னித்து ஏற்க வேண்டும்.

நோதலைப் பெற்றோன் பிள்ளை நோய்த்ததைப் பொறுத்தல் போலே
காதலி குற்றம் விட்டுக் காதலை ஏற்பான் போலே
மோதலைத் தோழமை யாலே முறித்திடும் நண்பன் போலே
நீதலைப் படுவாய் என்னை நிச்சயம் மன்னிப் பாயே
அத்₃ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோ(அ)ஸ்மி த்₃ருஷ்ட்வா
ப₄யேன ச ப்ரவ்யதி₂தம் மனோ மே .
ததே₃வ மே த₃ர்ஶய தே₃வ ரூபம்
ப்ரஸீத₃ தே₃வேஶ ஜக₃ன்னிவாஸ (11-45)

44 (45) எவரும் காணாததைக் கண்டு களிப்படைந்தேன். எனினும் உன்னுடைய வடிவத்தின் மகத்துவத்தால், எனது மனம் பயமும் சோர்வும் அடைகிறது. தேவதேவா, என்னிடம் கருணை காட்டு உன்னுடைய முந்தைய வடிவத்தை எனக்குக் காட்டு.

காணாத தெல்லாங் கண்டேன் கண்டதில் களிப்ப டைந்தேன்
ஏனோ மனதில் இன்னும் ஏக்கமும் பயமும் கொண்டேன்
வானோ டியங்கும் விஸவ வடிவத்தை மறைத் துனது
ஊனோ டுலகில் வைத்த உயர்திரு வுருவம் காட்டு
கிரீடினம் க₃தி₃னம் சக்ரஹஸ்தம்
இச்சா₂மி த்வாம் த்₃ரஷ்டுமஹம் ததை₂வ .
தேனைவ ரூபேண சதுர்பு₄ஜேன
ஸஹஸ்ரபா₃ஹோ ப₄வ விஶ்வமூர்தே (11-46)

45 (46) நான் உன்னுடைய பழைய வடிவத்திலேயே, சங்கு சக்கர கதையுடன், தலையில் கிரீடத்துடன். நான்கு கைகளுடன் காண விரும்புகிறேன். (அதாவது, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்குமே கரங்கள். சங்கே நாதப்பிரம்மம். சக்கரமே காலம். கிரீடமே ஞானம்.)

நாற்கரம் சித்தம் சிந்தை நல்லகங் காரம் புத்தி
ஏற்கவே சங்குச் சக்ரம் என்பதோங் காரம் காலம்
பார்க்கவே ரத்னக் கிரீடம் பட்டுடைப் பொலியு மேனி
சேர்க்கவே வேண்டும் சன்மம் சேர்ந்திட விசயன் கேட்டான்

46 (மனதில் இன்னமும் ஞானநிலையும், பக்குவமும் அடையாத காரணத்தால், பரம்பொருளின் திருவுருவ தரிசனத்தைக் கண்டும் காணமுடியாதவனாகி, விசயன் தனக்குப் பழக்கமான வடிவத்திலேயே பகவானைப் பார்க்க விரும்பினான். உண்மையே என்றாலும், எந்தவொரு தத்துவத்தையும், காரணத்தையும் புரிந்து கொள்ள, மனதில் பக்குவமும், அறிவில் முதிர்ச்சியும் தேவை.)

பக்குவப் படாத தாலே பகுத்தறி விலாத தாலே
திக்குற விரிந்த ருபம் தெரிந்தும் தெரியாத தாலே
நக்குர மரவன் ஞானம் நயத்திடும் வரையில் மனதில்
நிற்கிற வடிவம் ஒன்றே நிர்மலம் என்ற றிந்தான்

ஶ்ரீப₄க₃வானுவாச .

மயா ப்ரஸன்னேன தவார்ஜுனேத₃ம்
ரூபம் பரம் த₃ர்ஶிதமாத்மயோகா₃த் .
தேஜோமயம் விஶ்வமனந்தமாத்₃யம்
யன்மே த்வத₃ன்யேன ந த்₃ருஷ்டபூர்வம் (11-47)

ஸ்ரீகிருஷ்ணர் உரை

47 (47) விசயா, உன்னிடம் அருள் கொண்டு, என்னுடைய யோக பலத்தால், ஒளிபெற்றதும், ஆதியானதும், எல்லையற்றதும், அனைத்துமான என்னுடைய ஆனந்த வடிவத்தை உனக்குக் காட்டினேன். இதனைப் பார்த்தவர் யாரும் இல்லை.

விரிந்து நின்ற தேவன் விசயனின் வினயம் கேட்டுப்
பரிந்து சொல்ல லானான் பார்த்தனே உனக்கு மட்டும்
தெரிந்து கொள்வ தான தேஜோம யானந் தத்தை
அறிந்து காண வைத்த அருளினைத் தெரிந்து கொள்க
ந வேத₃யஜ்ஞாத்₄யயனைர்ன தா₃னைர்-
ந ச க்ரியாபி₄ர்ன தபோபி₄ருக்₃ரை​: .
ஏவம்ரூப​: ஶக்ய அஹம் ந்ருலோகே
த்₃ரஷ்டும் த்வத₃ன்யேன குருப்ரவீர (11-48)

48 (48) வேதங்களைப் படிப்பதாலோ, யாகத்தாலோ, கர்மத்தாலோ, தவத்தாலோ, என்னுடைய இந்த வடிவத்தைக் காண முடியாது. துாய பக்தியால் சரண் அடைந்த உன்னால் மட்டுமே இது முடிந்தது.

படித்திடும் வேத் தாலோ பயத்திடும் யாகத் தாலோ
முடித்திடும் கர்மத் தாலோ முயற்றிடும் தவத்தி னாலோ
வடித்திடும் விஸவ ருபம் வயப்பட ஆகா துள்ளம்
அடிப்பட வேண்டும் பக்தி அமைந்திட வேண்டு மய்யா
மா தே வ்யதா₂ மா ச விமூட₄பா₄வோ
த்₃ருஷ்ட்வா ரூபம் கோ₄ரமீத்₃ருங்மமேத₃ம் .
வ்யபேதபீ₄​: ப்ரீதமனா​: புனஸ்த்வம்
ததே₃வ மே ரூபமித₃ம் ப்ரபஶ்ய (11-49)

49 (49) என்னுடைய பயங்கரமான வடிவம் காலத்தின் இறுதியில் வருவதாகும். இதனைக் கண்டு அச்சப் படாதே. மகிழ்ச்சியுடன் என்னுடைய முந்தைய வடிவத்தைப் பார். (எனக் கருணையுடன் இறைவன் தனது விஸவருபத்தை மறைத்து, விசயனுக்குப் பழக்கமான வடிவத்தால் நின்றான்.)

துலக்கிட உனது கர்மம் துாக்கிடக் காட்டி வைத்த
கலக்கிட எனது ருபம் காலத்தின் முடிவில் தோன்றும்
விலக்கிட விஸவ ருபம் விரும்பிய வடிவம் காட்டிப்
பழக்கிடத் தெரிவேன் என்னைப் பார்த்திடு பரமன் சொன்னான்

ஸஞ்ஜய உவாச .

இத்யர்ஜுனம் வாஸுதே₃வஸ்ததோ₂க்த்வா
ஸ்வகம் ரூபம் த₃ர்ஶயாமாஸ பூ₄ய​: .
ஆஶ்வாஸயாமாஸ ச பீ₄தமேனம்
பூ₄த்வா புன​: ஸௌம்யவபுர்மஹாத்மா (11-50)

சஞ்சயன் உரை

50 (50) இவ்வாறு விசயனிடம் கூறிவிட்டு ஸ்ரீவாசுதேவன், மீண்டும் தனது அழகிய பழைய உருவத்தினராகி, அர்ச்சுனனுக்கு ஆறுதலான வடிவத்தில் விளங்கினார்.

மீண்டும் பழைய வடிவத்தில் மிளிரும் நீல வர்ணத்தில்
தூண்டும் கருணை உருவத்தில் துலங்கும் துளசி இதயத்தில்
நீண்டும் நிமிரும் கைகளிலே நிலைக்கும் சங்குச் சக்கரத்தில்
வேண்டும் பயனைத் தருவதற்கு வேதத் தலைவன் தரிசனமே

அர்ஜுன உவாச .

த்₃ருஷ்ட்வேத₃ம் மானுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜனார்த₃ன .
இதா₃னீமஸ்மி ஸம்வ்ருத்த​: ஸசேதா​: ப்ரக்ருதிம் க₃த​: (11-51)

விசயன் உரை

51 (51) ஜனார்த்தனா, உன்னுடைய மென்மையான வடிவத்தால், எனது பயம் விலகி உள்ளத்தில் மீண்டும் அமைதி வந்தது.

பழகிய வடிவம் பார்த்ததினால் பயமும் விலகிப் போனதனால்
அழகிய விசயன் அழைப்பானே அன்பால் ஹரிஹரி ஜனார்தனா
விலகிய தச்சம் விச்ராந்தி விரும்பிய உருவத் தருளாலே
உலகிய லறமும் புரிகிறது உள்ளம் அமைதி பெறுகிறது

ஶ்ரீப₄க₃வானுவாச .

ஸுது₃ர்த₃ர்ஶமித₃ம் ரூபம் த்₃ருஷ்டவானஸி யன்மம .
தே₃வா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் த₃ர்ஶனகாங்க்ஷிண​: (11-52)

நாஹம் வேதை₃ர்ன தபஸா ந தா₃னேன ந சேஜ்யயா .
ஶக்ய ஏவம்விதோ₄ த்₃ரஷ்டும் த்₃ருஷ்டவானஸி மாம் யதா₂ (11-53)

ஸ்ரீகிருஷணர் உரை

52 (52-53) காண்பதற்கரிய இந்த வடிவத்தை நீ கண்டாய். தேவர்களும் என்னை இந்த வடிவத்தில் காண ஆவலாய் இருக்கிறார்கள். வேதத்தினாலும், தவத்தினாலும், பரிசினாலும், யாகத்தினாலும் நீ இப்போது கண்ட வடிவத்தில் என்னைக் காண முடியாது. அதற்கு தூய பக்தி ஒன்றே வழி.

பார்க்க அறியா வடிவத்தைப் பார்த்தவன் ஒருவன் நீயே
பார்க்க ஆவல் கொண்டு பயப்பவர் தேவர் என்னைப்
பார்க்க வேதா கர்மப் பரிசினால் தவத்தா லாகா
பார்க்க மனதில் வேண்டும் பக்தியே ஏது வாகும்
ப₄க்த்யா த்வனன்யயா ஶக்ய அஹமேவம்விதோ₄(அ)ர்ஜுன .
ஜ்ஞாதும் த்₃ரஷ்டும் ச தத்த்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப (11-54)

53 (54) பக்தியால் தன்னுளே என்னை அனுபவத்தால் அறிவதே இதற்கான அறிவு முறை. ( புத்தியினால் அறிதல், மனத்தால் அந்த உண்மையைப் பற்றியே சிந்தித்து உணர்தல், அனுபவத்தால் தன்னையே இழந்து உண்மையுடன் கலத்தல் என்பதாக உண்மையை அறிதல் மூன்று வகைப்படும்.)

புத்தியால் உண்மை ஒன்றைப் புலர்வது முதல்நிலை அறிவு
நித்தியம் உணர்வில் உண்மை நிலைப்பது அடுத்தது செறிவு
சித்தியும் சிந்தை எண்ணம் சீவனுக் குள்ளகங் காரம்
இத்தியும் இழந்து என்னுள் இழைவது அறிவின் முதிர்வு
மத்கர்மக்ருன்மத்பரமோ மத்₃ப₄க்த​: ஸங்க₃வர்ஜித​: .
நிர்வைர​: ஸர்வபூ₄தேஷு ய​: ஸ மாமேதி பாண்ட₃வ (11-55)

54 (55) எவன் ஒருவன் எனக்காகத் தொழில் செய்கிறானோ, என்னைப் பரம்பொருளாக மதிக்கிறானோ, எவன் பற்றுதலற்றவனாகிறானோ, எவன் சுயநலத்தால், யாரிடமும் பகைமை கொள்ளாதிருக்கிறானோ அவன் என்னை (மேலே சொல்லப்பட்ட அறிவால்) அடைகிறான்.

என்னருள் ஒன்றே உண்மை என்பதை அறிவார் கருமம்
என்னருள் நின்றே பலனும் என்னையே சேரச் செய்யும்
என்னருள் அதனால் பகைமை ஏஅற்பதும் இகழ்வதும் இல்லா
என்னருள் தனயன் ஆவார் என்னையே அடைவர் என்றான்

ஓம் தத்ஸதி₃தி ஶ்ரீமத்₃ப₄க₃வத்₃கீ₃தாஸூபனிஷத்ஸு ப்₃ரஹ்மவித்₃யாயாம் யோக₃ஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே₃
விஶ்வரூபத₃ர்ஶனயோகோ₃ நாமைகாத₃ஶோ(அ)த்₄யாய​: (11)

இவ்வாறு அனைத்துருவக் காட்சி நெறி எனும் பதினோராம் பாகம் நிறைவுபெறுகிறது

 10 – விபூதியோகம்

 12 – பக்தி யோகம்

Related Posts

Share this Post