15.சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

மாயப் பிறவியை அறுக்கும் வாள், இறைவனின் தாள் என்று பணிந்தவுடனே, நமது தலைவனாகிய இறைவனது திருவடிகளே,  மனச் சீர்மையைத் தருகின்ற பெரிய இடமாக, நமக்குத் தெளிகின்றது.

எனவே, எங்கே மனம் சீர்மை அடைகின்றதோ, அங்கேதான் ‘திருப்பெருந்துறை’ இருக்கின்றது.  அங்கேதான் தேவனின் திருவடிகள் மிளிர்கின்றது.  திருவாகிய மிகப் பெரும் செல்வம், பெருகி இருக்கின்ற இடமே திருப்பெருந்துறை. அதுவே ஆன்மா சுடர்விடுகின்ற ஆழ்மனக் கோவில்.

16. ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

திருக்கயிலை, திருவண்ணாமலை எனத் திருமலைகளை மெய்யடியார்கள் சிவமெனச் சேவிப்பர்.  திருமலைகளில் பெருகி வழிந்து, பெரும் சுகத்தில் ஆழ்த்தும் சிவானந்தலஹரீ எனும் பரசிவ சுகப் பெருவெள்ளமாக,  சிவச் சிந்தனையை யாசிப்பர்.   இவற்றையே இவ்வரிகளில் நினைவூட்டுகிறார்  திருவாதவூரர்.

17. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்

18. அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிவபிரான், நம்முடைய அறிவுள், அறிவாய் இருக்கின்றார். அதுவே ஆத்ம சக்தி.  அதன் கருணையினாலேயே,   அப்பேருண்மையை  இடைவிடாமல் நாடித் துதிக்கின்ற மனத்தெளிவும், திட அறிவும் நமக்கு கிடைக்கிறது.

‘சிந்தையுள் சிவன்’ எனச் சொன்னது, புலன், மனம், அறிவு எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கும் ஆத்மா என்பதே.  அதன் வெளிப்பாடே, ‘நான்’ எனும் உள்ளுணர்வு. பிறந்த குழந்தைக்கும்கூட, ‘தான்’ எனும் உணர்வு இயற்கையிலேயே இருக்கின்றது. அவ்வுணர்வு ‘அறியப்படுவதல்ல’.

ஒன்று அறியப்படுகின்றது என்றால், அறிபவன், அறியப்படும் பொருள் என இருமை வந்து விடும். ஆத்மா அறியப்படுவதில்லை. ஆத்மாவில், அறிவதும், அறிவும் ஒன்றாகவே இருக்கிறது.  ‘உள்ளதும், உணர்வதும்’ என ஆத்மா,  ‘சத்-சித்’ வடிவமாக இருக்கின்றது. அதன் ஒளியினாலேயே, மற்ற கரணங்கள் – மனம், புத்தி, புலன் என – எல்லாமும் ஒளியைப் பெறுகின்றன.

ஆனால் கரணங்களோ, தாம் வெறும் சடம் என்பதை மறந்து, தாமே ஒளிர்வதாக மயங்கி, ஆத்மனைப் பிரதிபலிக்கும் தமது தன்மையை வெளித் தோற்றங்களில், வீணடித்து, சம்சாரத் துயரத்தில் நம்மை ஆழ்த்துகின்றன.

வெளியில் இருக்கும் ஒளி, இருளை அகற்றினாலும், அதனால் இருளைக் காட்ட முடியாது.  சூரியனால் இருளைக் காட்ட முடியுமோ?   ஆனால், அச்சூரியனையும் காட்டி, இருளையும் காட்டி, ‘அது ஓளி, இது இருள்’ எனும் அறிவினைத் தருவதும், அறிவின் ஒளியான ஆத்மாவே. அதுவே இறையொளி.

அந்த இறையொளியாலேயே எல்லாம் அறியப்படுவதால், இறைவனின் அருள் நமக்கு இருந்தால் மட்டுமே,  பேருண்மையை நாடுகின்ற அறிவும், விருப்பமும் நமக்குள் வரும். இதனையே இவ்விரு அடிகளும் காட்டுகின்றன.

19. சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

சரி, இறைவனது கருணையினால், நமக்குள் இறையடியை நாடவேண்டும் என்று தோன்றட்டும். அப்படித் தோன்றுவதால், நம்மில் என்ன மாற்றம் வருகிறது?

இறைச் சிந்தனை வந்து விட்டால், இறைவனைப் பற்றிய இனிய எண்ணங்களே, இமைப் பொழுதும் நீங்காமல் மனதில் இருக்கும். சிவபுராணம் முதலான இறையருட்கதைகளையும், பாடல்களையும் எப்பொழுதும் இயற்றி, இசைத்து, கேட்டுச் சுவைத்து,

அதனால், மனம் முழுதும், மாறாத சுகம் பரவிக் கிடக்கும்.  வெளியிலே  இன்பத்தை நாடாமல், சிவ நினைவால், முழுமையான இன்பம் உள்ளத்திலே விளையும்.

20. முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்

அவ்வாறு சிந்தை மகிழ, இறைச்சிந்தனை வளர்ப்பதன் பயன் என்ன?

ஒளியில் இருள் மறைவது போல, நற்சிந்தனையின் பயனால், நம்முடைய வினைகளின் பாதிப்புக்கள் எல்லாம் ஓய்ந்துவிடும். ‘முந்தை வினை முழுதும்’ என்றால், முற்பிறவியில் குவித்து வைத்த, நம்மைப் பாதிக்கக் காத்திருக்கும் பாவ, புண்ணிய மூட்டைகள் எல்லாமும் என்பதாகும்.

பாவ புண்ணியங்கள் என்பன, நாம் ஆற்றிய கர்மங்களின் விளைவுகள். நாம் அனுபவிக்க வேண்டிய விளைவுகளை எல்லாம், நமது செயல்களே தீர்மானிக்கின்றன. சேமித்து வைத்த பாவ புண்ணிய மூட்டைகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதால், அந்த அனுபவங்களுக்கு ஏற்ற வகையில், உடலும், கால தேச சூழ்நிலைகளும் நமக்கு விளைகின்றன. இதுவே சம்சாரம் எனும் பெரு மரத்தின் வித்து. இவ்வுண்மையை உணர்ந்து, இறையடியில் நம்மைக் கிடத்திப் பணிந்து, மாயப் பிறவி அறுப்பவன் நம்முள் இருப்பவன் என உணர்ந்து, இறைவன் பெருமையை சிந்தை மகிழ நினைப்பவருக்கு, வைக்கோற் பொதியில் இட்ட நெருப்பாய், பகலில் மரித்த பனியாய், வினை மூட்டைகள், இறையருளில் வீழ்ந்து மறையும்.

மாணிக்கவாசகர், ‘ஓயும்’ என ஏன் சொன்னார்,  ‘ஒழியும்’ எனச் சொல்லி இருக்கலாமே என்றால், எங்கேயெல்லாம் ‘இருமை’ எனும் வேறுபாடு இருக்கிறதோ, அங்கெல்லாம் அறியாமை எனும் இருள், எப்போதும் இருக்கும்.  அதாவது, இறைவனை விட்டு விலகிய பசுக்களாக நாம் இருக்கும் வரை, வினைகளும், வினைகளால் அனுபவங்களும் நமக்கு ஓயாமல் வந்து கொண்டுதான் இருக்கும். அவை ஒருபோதும் ஒழிவதில்லை. அதனால், வினைகளின் ஒழிவு என்பது, இறைவனுடன் இரண்டறக் கலத்தல் என்பதால் மட்டுமே இயலும்.

பிறவியாய் இருக்கும் ஒவ்வொரு உயிர்களுக்கும், கர்ம விதி இருந்தாக வேண்டும்.  எனவே இங்கே ‘ஓயும்’ எனச் சொன்னதன் பொருள், வினை மூட்டைகள் ஒருவருக்கு எவ்வளவு பெரிதாக இருப்பினும், இறைவனது திருவடிகளில், அவர் எப்பொழுதும் சிந்தைனையை இருத்தி மகிழ்ந்து இருப்பாரேயானால், அவ்வினை மூட்டைகள் ‘ஒழியாமல்’ போனாலும், ‘ஓய்ந்தே’ இருக்கும். அதாவது, அவற்றால் எந்தப் பாதிப்பும் இருக்காது.

‘வறுத்த விதை முளைக்காது’ என்பது போல, சிவனடியார் செய்கின்ற வினைகள் எதுவாயினும், அவை, ஆத்ம ஞானத் தீயினால் வறுக்கப்பட்டு, எவ்விதப் பாதிப்பும் தராமல் வெறுமே பார்த்திருக்கும். ஒருவேளை, அவை வல்லுடலுக்கும், மெல்லுடலுக்கும் ஏற்கனவே பாதிப்பைத் தரத் தொடங்கி விட்டன என்றாலும், அவ்வுடல்களை ஒட்டாமல் இருக்கும் ‘நான்’ எனும் உணர்வுக்கு, அவையால் எவ்விதத்  துயரமும் இருக்காது.  அது, தன்னுடைய இயல்பான சுகத்துடன் எப்போதும்  இருக்கும். ‘உரைப்பன் யான்’ எனும் சொற்களினால், அத்தகைய பெரும் நலமான சிவபுராண உண்மையைத் தான் சொல்வதாக, மணிவாசகப் பெருமான் கூறுகின்றார்.

14. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

21. கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி

Related Posts

Share this Post