21. கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி

நுதல் என்பதற்கு நெற்றி என்பது ஒரு பொருள்.  சிவபெருமான், நெற்றிக் கண்ணுடன் ‘முக்கண்ணன்’ என விளங்குகிறார்.  நெற்றிக் கண்ணைத் திறந்தால், எல்லா உலகங்களும் அழிந்து விடும், அக்கண், ஊழிக் காலத்தில் திறப்பது, அக்கண்ணின் தீயிலேதான் காமன் அழிந்தான் என்றெல்லாம் புராணங்கள் காட்டுகின்றன.

அழிக்கின்ற கண்களோ, சிவபெருமானின் கருணைக் கண்கள்! அல்ல!

நுதற்கண்ணே முதற்கண்.  அதுவே முடிவுக்கண்.  அக்கண்,  ஈரற்றதான ‘அத்வைத’ ஞானத்தீயை அளிப்பது.  அந்த ஞானம், அஞ்ஞானம் எனும் அறியாமையால் தாங்கிக் கொள்ள முடியாத அறிவுத் தணல்.  ஏன்?

அத்வைதமாகிய ‘ஈரற்ற நிலை’ என்பது, பரம்பொருளே யாவும், அப்பரம்பொருளை விட்டு வேறு யாதும் இல்லை என்பது.  அவ்வுண்மை,   உலகங்களாகவும், உயிர்களாகவும், தோன்றித் தோன்றி மறைகின்ற மாயப் பிரபஞ்சம் எனும் நீர்க்குமிழையை உடைக்கின்ற பெரு நெருப்பு.

இறைவனைத் தவிர வேறு யாதுமே இல்லை எனும் போது, வேறு எதில், ஆசை அல்லது காமம்  இருக்க முடியும்!   அதுவே காமனை அழித்தல் எனும் ‘நெற்றிக் கண்ணால் மன்மதனை அவித்த’ கதை!  ஆனாலும், தனித்திருக்கையில் ரசித்திருக்கவோ என்னவோ,  பரம்பொருளின் சக்தியே, காம கலா காமேஸ்வரியாக, சிவனாரின் நுதற்கண்ணை யோகமெனும் இமைகளால் மூடி,  தனது மாயா சக்தியால், பரம்பொருளை ஆதாரமாக வைத்தே, பல உலகங்களையும் தோற்றங்களையும் மீண்டும் மீண்டும் காட்டி வருகின்றாள்.

அந்த சுத்த மாயையினாலேயே ஆக்கம், காப்பு, அழிவு, அருள், மறைத்தல் எனும் ஐந்து தொழில்களால்,  எல்லாப் புவனங்களும், பரம்பொருளினுள்ளேயே எழுந்தும், மறைந்தும் விடுகின்றன.

இவ்வரிய ஞானத்தைக் காட்டுதற்கோ, தமது சக்தியை அளவிட முடியாத பேரொளியாக, சிவபெருமான் அருளினார்!

22. எண்ணுதற்கு எட்டா எழிலார்கழல் இறைஞ்சி

23. விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,

24. எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்

அளவிட முடியாத பெருஞ்சக்தியாய் இறைவன் இருக்கிறான் எனில், எவ்வாறு அச்சக்தியின் தாள்களை  அடைவது?  எது அடி, எது முடி எனத் தேடுவது?   திருமாலுக்கும், பிரம்மனுக்கும் அப்படி ஒரு எண்ணம் வந்து, அதனால் மிகவும் அலைந்து, இறுதியில், சிவனாரின் அருளாலே மட்டுமே, அன்னாரின் திருவடிகளை உணர்ந்தனர் எனும் புராணத்தை ஒட்டியே, இவ்வரிகளும்  நமக்கு ஓர் அரிய உண்மையை விளக்குகின்றன.

அமுதத்தமிழில், ‘எண்’ என்பது மற்றுமொரு ஆழமான சொல்.

‘எண்’ எனும் வினைச் சொல்லுக்கு, ஒன்றைப் பற்றி ‘நினை’ என்றும், ஒவ்வொன்றாக எண்ணிக் ‘கணக்கிடு’ என்றும் பொருள் உண்டு. கணக்கிடுவது, ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்துவது என்பதால், ‘எண்’ என்பது தனிப்படுத்தப்படுவது (quantized) ஆகிறது.

எண்ணம் என்பதும், தொடர்ச்சியாக வருவது போலத் தோன்றினாலும், ஒவ்வொரு எண்ணமும் தனியானதுதான்.  ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு ஆரம்பமும், முடிவும் இருந்தாக வேண்டும். எல்லைகள் இருந்தால் மட்டுமே, ஒன்றை அளக்கவோ, முழுதுமாக விளக்கவோ முடியும்.   எதற்கு எல்லைகள் இல்லையோ, அது எண்ணப்பட முடியாதது. எனவே அதற்கு உருவம் எனவும்  எதையும் கொடுக்க முடியாது.

மேலும் எல்லையற்றது என்றால், அது எல்லா இடத்திலும் முழு நிறைவாக இருப்பதாகும். அதுவே  ஆனந்தம்,  பூரணம்.

ஆரம்பமும், முடிவு இல்லை என்றால்,  காலம் எனும் கட்டுப் பாடும் இல்லை. எனவே எல்லையற்றதே சத்தியமாகும். இவ்வாறு எல்லையற்று, சத்தியமாக, பூரணமாக, அளக்கப்பட முடியாதவனாக  இறைவன் இருக்கின்றான்.

‘எண்ணுதற்கு எட்டா’ இறைவனது திருவடிகளை ‘இங்குதான் இருக்கின்றன’ என நம்மால் அறிய முடியாது. எனவேதான், உருவ வழிபாடு எனும் உதவியைச் செய்து, அதனை நமது சிற்றறிவில் படிப்படியாப் பேரறிவைச் செதுக்கப் பயன்படுத்தும் கருவியாக, நமது முன்னோர்கள் காட்டியிருக்கிறார்கள்.  மனதுக்குள் அவ்வழகிய திருவடிகளைத் துதித்து ‘எழிலார் கழல் இறைஞ்சி’ எனக் காட்டினார் ஆசிரியர்.

இறைவனை உருவாகக் கண்டால் அளந்து விட முடியும் எனத் துணிந்த அரிக்கும், அயனுக்கும், அவர்கள்  முன்னே  வானமும், நிலமும் முற்றும் நிறைக்க, பேரொளியாய் விளைந்து நின்ற பரசிவனை, திருஅண்ணாமலை அரனை, ‘விண் நிறைந்தும், மண் நிறைந்தும், மிக்காய், விளங்கும் ஒளியாய்’ என மணிவாசகப் பெருமான் காட்டுகின்றார்.

ஒளியாகிய உருவாய் எழுந்து நின்ற அரனை, அப்போதும்கூட அரியாலும், அயனாலும் அளக்க முடியவில்லை. அதாவது அளக்க முயலும் ‘எண்களும்’ இறந்து விட்டன. ‘எண்ணங்களும்’ ஓய்ந்து விட்டன. அப்படி எல்லை இல்லாப் பூரணமாகிய இறைவனை ‘எண் இறந்த எல்லை இலாதனே’ என்று அழைத்து, ‘உன்னுடைய புகழை எப்படிப் பாடப் போகின்றேன்’ என வியக்கின்றார் மாணிக்கவாசகர்.

20. முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்

25. பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

Related Posts

Share this Post