ஹ்ரிஷிகேஷ் – ஒரு வாரம், ஒரு வரம்

 

பசுமையும் உயரமும் கொண்ட மரங்கள் எல்லாம் விருட் விருட்டென காரின் கண்ணாடியில் விழுந்து மறைந்து கொண்டிருந்தன. பின் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, இருபுறமும் ஓடிக்கொண்டிருக்கும் மரங்களையும் தூரத்தில் தெரியும் சிவாலிக் மலைகளையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி.     வாடகைக் கார் என்னை, ஜாலி கிராண்ட் எனும் டேராடூன் விமான நிலையத்திலிருந்து ஹ்ரிஷிகேஷை நோக்கிச் சுமந்து கொண்டிருந்தது. அக்டோபர் மாதத்தில் டேராடூனில் 33 டிகிரி வெயிலை நான் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால், பளிச்சிடும் சூரியக் கதிர்களை எல்லாம், பச்சை மரங்கள் மறைத்தும், சித்திரமாய்ச் சிதைத்து இறைத்தும் காற்றில் மெதுவாகத் தலையை ஆட்டிக் கொண்டும் இருந்ததால், வெயிலின் தாக்கம் இல்லை. அப்போது மணி மதியம் 2:30. சீக்கிரம் ஹ்ரிஷிகேஷ் சென்று விடவேண்டும். ஏனெனில் மாலை 4 மணிக்கு விழா ஆரம்பிக்கிறது.

நான் ஹ்ரிஷிகேஷ் வந்த முக்கியக் காரணங்களில் ஒன்று, அங்கு ஒரு வாரத்திற்கு நடக்கவிருக்கும் ‘ஆத்ம ஞான தாரா’ எனும் அருமையான நிகழ்ச்சிதான்.3

எல்லோராலும் அன்பாலும், மரியாதையாலும் ‘அண்ணா’ என அழைக்கப்படுகின்ற நொச்சூர் ஆச்சாரியர் ஸ்ரீ S. வெங்கடராமன் அவர்கள், அங்கே ஏழு நாளும் பிரவசனம் செய்யப் போகிறார் என்பதும், அதை ஒட்டிய சத்சங்கம் கிடைக்கும் என்பதும்தான் எனது பயணத்தின் முக்கியக் காரணம். மேலும் ஹ்ரிஷிகேஷ் எனும் புண்ணிய பூமியில், பல காலங்களுக்கு முன் நடந்து திரிந்த, இப்பொழுதும்கூட நடந்தும், மறைந்தும் இருக்கின்ற ஞானிகளில் எவரையேனும் தரிசிக்கவோ, அல்லது அவர்களது நினைப்பைச் சுமந்தபடி நோக்கம் ஏதுமில்லாமல் சுற்றித் திரியவோ வேண்டும் என்பதும் என்னுடைய வெகுநாள் ஆசை.   அதனால்தான் ஒரு வாய்ப்பு வந்தவுடனே புறப்பட்டாகி விட்டது. உமாவும் வந்திருக்கலாம்தான். என் சார்பாகவும், வீட்டுக் கடமைகளை ஏற்றுக் கொண்டு, இந்த ஒரு வார விடுப்பை நான் மட்டுமே எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கழிக்க உதவி இருக்கிறார்.

நோக்கம் இல்லாமலோ, எதிர்பார்ப்புகள் இல்லாமலோ பயணிப்பது நேரத்தை வீணாக்குவது போலத் தோன்றலாம். ஆனால், நோக்கமில்லாப் பயணித்தில்தான் சுகம் இருக்கிறது, சுமைகள் இல்லை! அவ்வப்போதாவது, எதிர்பார்ப்புக்கள் இல்லாமல், நோக்கம் எதுவும் இல்லாமல், காற்றைப் போலச் சுற்றித் திரிகின்ற வாய்ப்புக்களை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கயிலை மலை, அமர்நாத், வாரநாசி என இந்தியாவில் சில இடங்களுக்குச் சென்றதும், அப்படி ஒரு நோக்கமும் எதிர்பார்ப்பும் இல்லாத பயணமாகத்தான். அவையெல்லாம், அதனாலேயோ என்னவோ, அப்படி இனித்தன.

கார் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது.   நான் லண்டனிலிருந்து புது டில்லி வந்து, அங்கிருந்து டேராடூனுக்கு ஒரு விமானத்தில் வந்தேன். விமானம் முழுதும் தென்னிந்தியர்கள்தான் இருந்தார்கள். தனியாகவும் குடும்பத்தோடும் வந்திருக்கும் அவர்கள், பெரும்பாலும் ஹ்ரிஷிகேஷ் நிகழ்ச்சிக்குத்தான் செல்கிறார்கள் என்பது புரிந்தது.   எனது உறவினர்கள் சிலரும் விமானத்தில் இருப்பதை நான் பார்த்திருந்தேன்.

அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரித்திருக்கின்ற காலம் அது. அதனால் அவ்வப்போது மனதுள் எட்டிப் பார்க்கும் அலுவலக எண்ணங்களையும் நான் எட்டி உதைத்துக் கொண்டிருந்தேன். இப்படியே பயணித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு சத்தம். கார் ஒரு குலுக்கலுடன் நின்றுவிட்டது. ‘பஞ்சர் ஆகிவிட்டது’, சுருக்கமாகச் சொல்லிவிட்டு டிரைவர் கீழே இறங்கிவிட்டார்.   ஹ்ரிஷிகேஷ் சீக்கிரம் போகவேண்டும் எனும் எனது உத்வேகத்திலும் ஒரு பஞ்சர் வந்தாற் போலானது.

நானும் கீழே இறங்கினேன். ஒரு வளைவான இடம் அது. கார்கள் அத்திருப்பத்தில் வேகமாக வந்து, எங்கள் காரைக் கண்டு, சற்றே வேகத்தைக் குறைத்து, கடந்து போய்க் கொண்டிருந்தன. ஏன் இப்படி ஆயிற்று! கீழே இறங்கிய நான் அருகிலிருந்த மரங்களின் நிழலில் போய் நின்றேன். அப்போது மற்றொரு கார் எங்கள் காரைத் தாண்டி, பிறகு மெதுவாக ரிவர்ஸ் செய்து வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர், திரு கோவிந்தராஜன். எனது மனைவியின் சித்தப்பா. அவரும் சித்தியும், மற்றும் காயத்ரி சித்தி அவரது நண்பர்களுடன் வந்திருக்கிறார்கள். ஏற்கனவே விமானத்தில் அவர்களைப் பார்த்திருந்தேன். ‘என்ன பஞ்சரா!’ எனச் சிரித்துக் கொண்டே கேட்டவர், ‘சரி, எல்லாத்தையும் சரி பண்ணிண்டு வாங்கோ’ என்று தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் கூறிவிட்டுச் சென்றார். பஞ்சர் இன்னும் ஒட்டிய பாடில்லை. ‘எல்லாத்தையும் சரி பண்ணிண்டு வா’ அப்படினா, நமக்கிட்ட எதுவோ சரியாய் இல்லையோ! ஆனா, எல்லாத்தையும் சரி பண்ணிக்கத்தானே சத்சங்கம், பிரவசனம், தீர்த்த யாத்திரை, ஞானியர் தரிசனம் அப்படினு போறது! எல்லாம் நமக்குச் சரியாய் இருந்தால், பிறகு எதுக்கு எங்கேயும் போகணும்!   மனதில் அவ்வாறு எண்ணிக் கொண்டே, ஏன் இப்படிப் பஞ்சர் ஆனதோ என யோசித்துக் கொண்டிருந்தேன்.

என்னுடைய திட்டம், ஹ்ரிஷிகேஷ் போனவுடனே, ரூமில் எல்லாவற்றையும் வைத்துவிட்டு, கங்கையில் குளித்துவிட்டு, விழாவிற்குப் போக வேண்டும் என்பதுதான். ‘அதுக்கு முடியாது போலிருக்கே! இறைவா, ஏன் சோதனை’ என நினைத்து, எதிரே பார்த்தால், சாலையின் எதிர்ப்புறம் தன்னந்தனியாக ஓர் சிவலிங்கம். பக்கத்தில் ஒரு சூலாயுதம் தரையிலே ஊன்றியிருக்கு. சின்னதான கோவில். வழிப்போக்கர்களுக்காகவே வைக்கப்பட்ட நடைபாதைக் கோவில். அதுக்கு முன்னேதான் கார் பஞ்சர் ஆகியிருக்கு! எனக்கு உடனே மனம் முழுதும் மட்டிலா மகிழ்ச்சி. பஞ்சர் ஆனதும் நல்லதுக்குத்தான்! வழியிலே நிறுத்தி, என்னை வணங்கிட்டுப் போ எனச் சொல்வதுபோல் அங்கு இலிங்கமான பரம்பொருள் இருக்கிறார் என எண்ணிக் கொண்டேன்.   சாலையைத் தாண்டி அவரை வணங்கிவிட்டுத் திரும்பிய சில நிமிடங்களில் காரும் ரெடி. மீண்டும் தொடர்ந்து பயணம்.

‘ரிஷிகேஷ்’ என்பதைவிட ‘ஹ்ரிஷிகேஷ்’ என்பதே சரியான பெயர் என்றே அறிஞர்கள் கூறுவர்.  ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவானை அர்ச்சுனன் ‘ஹ்ரிஷிகேஷ:’ என அழைக்கின்றான். அப்பெயர்க்கு, எல்லாப் புலனறிவுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் எனப் பொருள். ‘ஜிதேந்திர:’ அதாவது எல்லா இந்திரியங்களையும் வென்றவர். அப்படியானால், மனதை வென்றவர். மனம் என்பதோ, பதஞ்சலியின் யோக சாத்திரப்படி, ‘சித்த விருத்தி’ அல்லது எண்ண எழுச்சி என்பதே. எனவே ‘ஹ்ரிஷிகேஷ்’ எண்ண எழுச்சிகளை ஒடுக்கும் பூமி எனக் கொள்ளலாம். எங்கே எல்லாப் புலன்களுக்கும், உயர்வான உணவே படைக்கப்படுகிறதோ, எங்கே புலனறிவும், புலனுணர்வும் உயர் நிலையிலேயே இருத்தப்படுகிறதோ, அங்கேதான் ‘ஹ்ரிஷிகேஷ்’ இருக்கிறது. அதுவே மனம் ஒடுங்கி அடங்கும் உன்னத நிலைக்கு அழைத்துச் செல்லும் பூமி.   அந்தப் பூமியின் ஸாத்வீக குணத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பும் எனக்கு இந்தப் பயணத்தில் கிடைத்தது.

ஹ்ரிஷிகேஷ் நகரத்தினுள் வந்தவுடன், ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ் (AIMA) மருத்துவமனையை ஒட்டிய ஒரு திருப்பத்தில், வனாந்திரமான ஒரு குறுகிய சாலைக்குள் கார் சென்றது. அது தனியார் வழி. அதன் வழியாகச் செல்வதற்கு அனுமதி தேவை. அப்பாதை, இரவு 7 மணிக்கு மேல் மிருகங்கள் உலவும் என்பதால் மூடப்படுகிறது.   அருகே கங்கை ஒடிக் கொண்டிருக்கிறது. அச்சாலை வழியே 30 நிமிடம் பயணித்தால், பல ஆஸ்ரமங்களையும் கொண்டிருக்கும் ஸ்வர்க்காஸ்ரமச் சாலையை அடையலாம். அங்கேதான் பரமார்த் நிகேதன் இருக்கிறது. அங்குதான் விழா. அங்கும், அதை அடுத்து இருக்கும் கீதாபவன் ஆகிய இடங்களிலும்தான் விழாவிற்கு வந்திருப்பவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.   கார் அங்கே சென்றபோது, குறுகலான அத்தெருக்களில் தென்னிந்தியக் குடும்பங்கள், பெட்டிகளைச் சுமந்து கொண்டு, அங்கும் இங்குமாகத் தங்கள் அறைகளைத் தேடிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

எனக்கு கீதாபவன் 6 எனும் கட்டிடத்தில் ஒரு அறை ஒதுக்கப்பட்டிருப்பதாக, எல்லாவற்றையும் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கும் பேராசிரியர் திரு அனந்தராமன் அவர்கள் எனக்கு முன்பே ஈ-மெயில் அனுப்பி இருந்தார். அவரை நான் இலண்டனில் சந்தித்திருக்கிறேன். இறைவன்பால் பஜனை செய்வதும், இது போன்ற பெரிய விழாக்களை முன்னின்று திறம்பட நடத்துவதும் அன்னாருக்குப் புகழ் சேர்க்கும் சில காரணங்கள்.

டாக்ஸி டிரைவர் அக்குறுகிய சாலைகளில் கார் செல்ல முடியாது எனக் கூறி என்னை இறக்கிவிட, எனக்கு நான் செல்ல வேண்டிய கட்டிடத்தை அறிந்து, பெட்டியை இழுத்துக் கொண்டு போய்ச் சேருவதற்கு அரை மணிக்கு மேலே ஆகிவிட்டது. பெட்டியைத் தரதரவென அந்தக் கூட்டத்திற்கு இடையே   இழுத்துக் கொண்டு,   கூடவே, என்னயே குறி பார்த்துக் கொண்டு வரும் குரங்குகளையும் ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டு, போனிலும் பேசிக்கொண்டு, அலைந்து ஒரு வழியாக நான்கு மாடிகள் ஏறி, நான் இருக்க வேண்டிய அறைவாசலுக்கு வந்தேன். என்ன பயன்!   நானிருக்க வேண்டிய அறையில் வேறொருவர் இருக்கிறார்.   கடைசி நிமிடத்தில் பலவித மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இதுமாதிரி ஆகியிருக்கிறது.

சோர்ந்து வந்து சேர்ந்த என்னை, சேர்ந்து அணைத்துஅறையுள் அழைத்த அன்பர் திரு மணிகண்டன் என்பவர்.   ‘வாங்கோ…. உட்காருங்கோ….முதல்ல தண்ணீர் சாப்பிடுங்கோ…. மெதுவாப் பேசலாம்’ என அன்பால் உபசரித்தார்.   அச்சமயத்தில் அதுவே மிகப் பெரிய நிம்மதியாய் இருந்தது.   ஒரு சில நிமிடங்கள் கழித்து, அனந்தராமன் மாமாவுடன் போனில் பேசியதில் விஷயம் புரிந்தது.   அதிகப் பேர் வந்ததாலும், விடுதிகளில் ஏற்பட்ட சில மாற்றங்களினாலும், கடைசி நிமிடத்தில் சில மாற்றங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

‘நீங்கள் பிரிட்ஜ்வாசி எனும் ஹோட்டல் இருக்கு. ஆஸ்ரமத்து எதிர்க்கேயே இருக்கு.   அங்கே மிஸ்டர் அகர்வால் இருப்பார். அவரிடம் சொல்லிவிட்டு, அங்கே தங்கிக்கலாம்’ என்றார்.

‘பிரிட்ஜ்வாசி’ என்றால் பாலத்தில் வசிப்பவன். அதாவது, அந்தப் பக்கமும் போகாமல், இந்தப் பக்கமும் போகாமல் இருக்கும் இரண்டும் கெட்டான். நமக்குச் சரியான இடம் தான் என மனசுக்குள் நினைத்தேன்.   ‘அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி’ எனும் மாணிக்கவாசகரின் திருவாசகம் மனதில் வந்தது. இரு வினைகளும் இல்லாமல் போவதும் இரண்டும் கெட்டவனாய் ஆவதுதான். விருப்பும் வெறுப்பும், சுகமும் துக்கமும் என இரட்டை அலைக்கழிப்புக்கள் இல்லாமல் இருப்பதும் இரண்டு கெட்டதாய் ஆவதுதான்.   அப்படி மட்டும் நம்மால் இருந்துவிட முடியுமென்றால்……!

மணிகண்டனிடம் சொன்னேன்.

‘ஓ, அது பிரிஜ்வாசி (BRIJWASI)! இங்கேயிருந்து ஒரு 200 அடிக்குள்ளதான் இருக்கு. இருங்கோ… இங்கே இலவசமா எலக்ட்ரிக் உந்து வண்டிகள் இருக்கு. அதுல போகலாம்’ என்றார். கூடவே வந்து, அங்கே வந்து கொண்டிருந்த ஒரு வண்டியை நிறுத்தி, அதில் அமர்ந்திருக்கும் நண்பர்களிடன் எனக்காகப் பேசி, அதிலேயே என்னையும் பெட்டியையும் ஏற்றி வழி அனுப்பி வைத்தார்.

சாத்வீகமான அந்த அறிமுகமே ஹ்ரிஷிகேஷில் எனக்கு ஒரு நல்ல தொடக்கம் எனத் தோன்றியது.

பிரிஜ்வாசி ஹோட்டலில் ஒரு அறையில் பெட்டியைப் போட்டுவிட்டுப் பார்த்தால் மணி 4! கங்கையில் குளிக்க நேரமில்லை. உடை மாற்றிக் கொண்டு, சில நிமிடங்களில், பரமார்த் நிகேதனுக்குள் சென்றேன். 5 நிமிட நடைதான். விழா நடக்கும் இடம் கங்கைக் கரைக்கு அருகிலேயே, அழகிய மேடையும், பந்தலும், அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு டீ, காபி என வெளியே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் நேரே விழாப் பந்தலுக்குள் சென்றேன். அங்கே அனந்தராமன் மாமா அவர்களைப் பார்த்தேன். அங்கும் இங்கும் ஓடி ஆடிச் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். ஏதாவது உதவி செய்யட்டுமா எனக் கேட்டேன். அப்போது மாமி, ‘மேடையிலே விளக்கிலே ஒரு திரிதான் போட்டிருக்கு. இன்னொரு திரியைப் போட்டு விளக்கேற்றுங்கோ.   ஆச்சாரியார் வரப்போறார் எந்த நிமிடத்திலும்.’ இப்படிச் சொல்லிக் கொண்டே மாமாவும் மாமியும் மற்ற வேலைகளுக்காக ஓடினர். மேடையில் ஏறினேன். விஸ்தாரமான, அலங்கரிக்கப்பட்ட மேடை. பகவான் ரமண மஹரிஷியின் அழகிய படம் ஒரு பக்கம் இருக்கிறது. பிரவசன நாதராகிய ஆச்சாரியர் அமர்வதற்கான கட்டில் நடுவில் இருக்கிறது. அதற்கு முன் ஒரு குத்துவிளக்கு, ஓர் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.   உதவி செய்து கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டு, நூல் திரியினை வாங்கினேன், விளக்கில் அதனையும் இட்டு, ஒளியினை ஏற்றும் பாக்கியம் கிடைத்தை மனதுக்குள் வியந்து மகிழ்ந்தேன்.   அடுத்த சில நிமிடங்களிலேயே, ஆச்சாரியர் அவர்களின் வருகையால், விழா மண்டபம் கலகலத்து நிறைந்தது.

கிட்டத்தட்ட ஆயிரம் பேராவது வந்திருப்பார்கள். விழாப்பந்தல் கங்கையின் கிழக்குக் கரையிலே போடப்பட்டிருந்தது. மாலை நேரச் சூரியன் தகதகவென ஒளியினை இறைத்துக் கொண்டிருந்தான். ‘ஹரஹர’ எனும் தொடர் முழக்கத்துடன், சரளவதியான கங்கை நதி, அருகே ஓடிக் கொண்டிருக்கிறாள். அன்பும், அமைதியும், அழுக்கற்ற பேரறிவும் கொண்டவராக, ஆச்சாரியார் மேடையிலே ஏறி அமர்ந்து இருக்கிறார். திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்த வேத விற்பன்னர்கள், வேத கோஷங்களால் சுற்றுப்புறத்தை எல்லாம் ஆனந்தத்தால் நிறைத்துக் கொண்டு இருந்தார்கள். ‘ஒரு பெரிய யக்ஞம் தொடங்கப் போகிறது, நல்லபடியாக நடக்க வேண்டுமே’ எனும் பெரிய மலையைத் தத்தம் மனங்களில் சுமந்து கொண்டு, அனந்தராமன் மாமா, அவருடன் சேர்ந்து உழைக்கின்ற பல பெரியவர்கள் பலரும் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

தரையில், நாற்காலியில், படியில், கங்கைக் கரையில் என எல்லா இடங்களிலும் பக்தர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். சிலரது கரங்களில் நோட்டும் பேனாவும். சிலர் கரங்களில் தியான புத்தகங்கள். சிலர் கரங்களில் காமெரா, போன் என எல்லாவற்றையும் பதித்துக் கொள்ளும் கருவிகள். எல்லோரும் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.   உற்சாகம் வந்ததாலோ என்னவோ, ஹ்ரிஷிகேஷில் பிரசித்தமான குரங்குப் படைகளும் விழாப்பந்தலின் கூரையில் குதித்துச் சப்தத்தைச் சில நிமிடங்கள் தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தன. பிறகு எல்லாம் மெதுவாய், கொஞ்சம் கொஞ்சமாய் அடங்க, ஆச்சார்யார் தமது பிரார்த்தனையால் யக்ஞத்தைத் தொடங்கினார்.

தெளிவான சிந்தனை, குறி தவறாத உரைநடை,  ஆரம்பித்த ஒரு சில வார்த்தைகளிலேயே கேட்போரை உயர்வான நிலையிலே உட்கார வைத்து, அதிலிருந்து சற்றும் விலகாமல் இருத்தி வைக்கும்படியான தொடர்வான கருத்துக்கள், முனிமொழி, கனிமொழி, ஆங்கிலம் எனப் பல வழிகளாலும் திகட்டாத் தேனாகச் சொற்பொழிவு காட்டி,  எல்லாக் கவலைகளையும் தூரப் போட்டுவிட்டு,   புலன், பொறி, அறிவு எனும் அற்பக் கருவிகளையும் கூடத் தள்ளி வைத்து விட்டு, ‘சிரத்தா’ எனும் ‘விழுப்பம்’ (ஒழுக்கத்துடன் கூடிய விருப்பம்) மட்டுமே துணையாகக் கொண்டு, ‘இங்கே வாருங்கள், ஆத்ம ஞான தாரா எனும் அருள் மழையில் நனையுங்கள்.  புத்தியால் புரிந்தாலும், புரியாவிட்டாலும், பக்தியால் இந்தப் பரிமள மழையில் நனையுங்கள்’ எனச் சொல்லாமற் சொல்லித் தனது உரையைத் தொடங்கினார்.

அன்னாரது கரிசனமும் அவரது முதல் வேண்டுகோளிலேயே  தெரிந்தது.   தகதகக்கும் மேலைச் சூரியனின் கதிர்கள், பக்தர்களை வாட்டமால் இருக்க வேண்டுமே என விழைந்து,  தன்னுடைய முன்னுரையிலேயே, ‘நாளை இந்த மேற்புறத்துக்குத் திரைச்சீலை வையுங்கள்’ எனும் அன்புக் கட்டளை இட்டார்.     என்ன ஆச்சரியம்!  அடுத்த நாள் முதல், அழகிய திரைசீலைகள் அங்கே இருந்தன!  விழாவினை நடத்துகின்ற பெரியோர்களது திறமையை என்னே சொல்வது!  அந்த வாரம் முழுதும், எந்தப் பிரச்சனையாய் இருப்பினும், அதனை இறைப்பணியாய் ஏற்று அவற்றைத் தீர்த்து வைக்கின்ற பெரிய பொறுப்பினை அவர்கள் அருமையாகச் செய்தார்கள்.

தினமும் அதிகாலையில் வேத பாராயணம் தொடங்கி, பிறகு கடோபநிஷத் பிரவசனமும், பிறகு காலை முதல் மதியம் வரை யோக வாசிஷ்டமும், மாலையில் சிவபுராண உரையும், இவற்றுக்கு இடையே, பலவிதமான பாராயணங்கள், பஜனை, பாட்டு, நடனம் என நிகழ்ச்சிகளும் நடக்க இருப்பது அறிவிக்கப்பட்டது.  காலைப் பிரவசனம் முடிந்த பிறகு,  மஹாளய திதிகள் என்பதால், கங்கையின் கரையில் மஹாளய சிரார்த்தம், நித்ய தர்ப்பணம் ஆகியன செய்ய விழைவோருக்கு, வேத விற்பன்னர்கள் வழிநடத்தி உதவுவார்கள் எனும் அறிவிப்பும் வழங்கப்பட்டது.    காலை 4:30 மணிக்கு காபி, டீ, பால் என விடுதிகளின் வாசலில் தரப்படுவதும்,  காலை, மதியம், மாலை, இரவு என உணவுக்கான இடங்களும், வழிமுறைகளும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும் தினசரி சரியாக மாலை 6:30 மணிக்குத் தொடங்கும் கங்கா ஆர்த்தி எனும் வைபவத்துக்குச் செல்லும் வகையில் விழா நிகழ்ச்சிகள் இருக்கும் என்பதும் முதல்நாள் அறிமுகத்திலேயே தெரிந்தது.  ஒரு பெரிய கல்யாண வீட்டிற்கு வந்திருப்பதுபோல,  எல்லோர் முகத்திலும் சந்தோஷம்.

அந்த முதல்நாள் மாலைப் பொழுதில்கங்கையின் அலையைவிட, கரையில் இருக்கும் மக்களின் மகிழ்ச்சி அலை அதிகம் இருப்பதாகவே தோன்றியது.  நான் கங்கையின் படிகளில் அமர்ந்து கொண்டேன். கங்கா ஆர்த்திக்கான கூட்டம் நிறைந்து இருந்தது.  தினம் இதனைப் பார்க்கப் போகிறோம் என்பதனால், அன்று கூட்டத்தை விட்டு விலகி, ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டேன். சூரியன் மறைந்தாகி விட்டது.

எதிரில் சிவாலிக் மலைகளில், ஆங்காங்கே சிறு விளக்குகள் எரிகின்றன.  ஆங்காங்கே  தியானித்துக் கொண்டும், அந்த அமைதியை உள்வாங்கிக் கொண்டும் பலரும் அமர்ந்திருக்கிறார்கள்.  வானத்தில் இளம் பிறை, கீற்றாக இருக்கிறது.   காற்று முகத்தைத் தொட்டுத் தொட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்தச் சுகத்தை எல்லாம் எப்படி வாரி எடுத்துக் கொண்டு உற்றார், உறவினர், நண்பர்களுக்குக் கொடுப்பேன் என ஏக்கம் மனதில் இருக்கிறது.  ஆனாலும், அதனையும் மீறி, ஒரு அமைதி. அடுத்து வரும் நாட்களை எல்லாம், கொஞ்சமும் வீணாக்காமல் இப்பேரமைதியிலேயே கழிக்க வேண்டும்.  ஈ-மெயில் முதலான எந்தத் தொடர்பும் வேண்டாம் என உறுதி செய்து கொண்டேன்.  அப்படியே அந்த வாரம்  முழுதும் கழிந்தது.  ஈ-மெயில், டெலிவிஷன் போன்ற இடர்பாடுகள் இல்லாத நாட்கள் எல்லாம்பூரிப்பால் விரிந்து, அதிக நேரத்தை வாழ்வதற்காக நமக்கு அளிக்கின்றனவோ எனத் தோன்றுகிறது!

அந்த ஒருவார அனுபவத்தில் சிலவற்றையாவது பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப் பதிவு.

இதில் ஆச்சார்யரின் பிரவசனம் பற்றியோ, அதில் கூறப்பட்ட ஒப்பற்ற கருத்துக்களைப் பற்றியோ யான் எழுதப் போவதில்லை. அது இயலாத செயல். அப்படியே எழுதினும், அவை எல்லாமே முழுமையான கேள்வி அறிவை நிறைக்க முடியாது. மேலும் அவற்றை ஆச்சாரியரின் வாய்மொழியாகக் கேட்டுப் பயனடைவதே நலம்.   எனவே யான் அடைந்த அனுபவங்களின் ஒருபகுதியை மட்டுமே, இப்பதிப்பில் இருத்த நினைக்கிறேன்.   அதனால் எவருக்கேனும் இம்மாதிரியான பயணங்களையும், சத்சங்க அனுபவங்களையும் அடையவேண்டும் எனத் தோன்றினால், அதுவே இப்பதிப்புக்கான பரிசு.

இரண்டாம் நாளான இன்று, காலை 4 மணிக்கு எழுந்தாகிவிட்டது. அன்று தொடங்கிய அப்பழக்கம், அந்த வாரம் முழுதும் இயற்கையாகவே அமைந்து விட்டது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கங்கையில் குளித்து, கதிரவனை வரவேற்கும் வகையில் சந்தியா வந்தன ஒழுக்கங்களை முறையாகச் செய்ய இது நல்ல வாய்ப்பாகி விட்டது.   கதிர் விரியாத காலைப் பொழுதிலேயே, குறுகலான தெருக்களில் மக்களின் நடமாட்டம் தொடங்கி விடுகிறது.   சில மாடுகள் அங்கும் இங்குமாக நின்று கொண்டிருக்கின்றன.   ‘ஹரி ஓம்’ என்று சொல்லிக் கொண்டே ஒருவர், மாடுகளின் சாணங்களை எல்லாம் சாலையிலிருந்து நீக்கிக் கொண்டிருந்தார். இவரது செயலை நான் தினமும் ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும் பார்த்தேன். அவரது செயலில் எவ்வித மாற்றமும் இல்லை.   விடுதிகளின் வாயில்களில் நின்று கொண்டு, சிலர் காபி, டீ, பால் எனப் பாத்திரங்களில் சுமந்து கொண்டு, வருபவர்களுடைய டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்தார்கள். பெங்களூரிலிருந்து வந்திருக்கின்ற கிட்டத்தட்ட 70 – 80 பேர் கொண்ட குழு. அவர்கள்தான் உணவுக்கும், சிற்றுண்டி, காபி முதலிய பானங்களுக்கும்   பொறுப்பெடுத்துக் கொண்டவர்கள்.   அந்த ஒரு வாரமும், அவர்களது உழைப்பும், உபசரிப்பும் நிச்சயமாகப் பாராட்டப்படவேண்டியன.

விழா அமைப்பாளர்கள், எல்லோரும் ஒரு தட்டு, மற்றும் டம்ளர் கொண்டு வர வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்திருந்தனர்.   அவற்றைக் கொண்டு வராதவர்களுக்கு, அங்கேயே குறைந்த விலையில் அவற்றை வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நான் காபி,டீ ஆகியனவற்றை பெரும்பாலும் விட்டுவிட்டேன்.   சுடச் சுட நீரைக் காலையும், இரவில் உறங்கும் முன்பும் அருந்துங்கள் எனக் கயிலைப் பயணத்தின் போது, ஒரு நேபாளி கைடு சொன்னார்.   அப்பழக்கம் இப்பொழுது தினசரிக் கடனாகவே ஆகிவிட்டது.

என் அறையிலிருந்து, பரமார்த் நிகேதன் 5 நிமிட நடைதான். அன்று காலை 4:10க்கே கங்கைக் கறைக்குச் சென்றுவிட்டேன்.   7 அல்லது 8 பேர்தான் அங்கே இருந்தார்கள்.   அடுத்த நாளிலிருந்து, 4:45க்கு குளிக்க வந்தால் போதும் என நினைத்து, அப்படியே செய்தேன்.   அந்தக் காலை நேரத்தில், கங்கையின் சரள நடையின் ஒலி – ஆச்சார்யார் சொல்லியபடி, ‘ஹர ஹர’ எனத் தெளிவாகக் கேட்கிறது.   சுழித்துக் கொண்டு, எதையோ தேடி ஓடுகின்ற இளம் பெண்ணாக, கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாள். கங்கையைப் பாவையாக, அம்மாவாக, பாட்டியாக எனப் பலவாறாக நமது சாத்திரங்களும், துதிகளும் பணிகின்றன. குறிப்பாக ‘கங்காமா’ என்றுதான் வடநாட்டில் எல்லோரும் கங்கையை அழைப்பர்.   பாட்டி வடிவமாக கங்கை வந்து, பல யோகியருக்கும் அருளுபதேசம் செய்துள்ளதாகவும் வழக்கில் செய்திகள் உண்டு.

குளிர் இல்லாத, மெல்லிய காற்று முகத்தை வருடிக் கொண்டிருந்தது.   பாதுகாப்புக்காகக் கரைகளில் இரும்புச் சங்கிலிகள் இணைத்திருக்கிறார்கள். அவற்றைப் பிடித்துக் கொண்டு, நன்றாக மூழ்கிக் குளிக்கலாம்.   நான் நீரில் இறங்கி நின்றேன்.   ‘கிர்’ என்று ஒரு மின்சாரம் பாய்ந்தாற்போலக் காலைச் சுற்றி நீரின் ஓட்டம்.   குளிர்ச்சியைவிட, நீரின் வேகத்தால், கால்களில் ஒரு சில நிமிடங்களுக்கு, மத்தாப்பூ பூத்தாற்போல ஒரு சிலிர்ப்பு.   அங்கே கங்கை வடக்கு – தெற்காக ஓடுகின்றாள்.   சங்கிலியைப் பிடித்துக் கொண்டு, அவள் வரும் திசையை நோக்கி நின்று பார்த்தால், எத்தனை வேகமாக வந்து கொண்டிருக்கிறாள் என ஆச்சரியமாய் இருக்கிறது. உறுதியாகவும் நிற்க முடிகிறது. ஆனால் கிழக்காகவோ, மேற்காகவோ பார்த்து நின்றால், நீரின் வேகம் நம்மைத் தடுமாற வைக்கிறது. அவள் வரும் வழியைப் பார்க்காமல், தெற்கே திரும்பி நின்றால், தள்ளி விடுவாளோ எனவும் தோன்றுகிறது.   திரும்பவும், அவள் வரும் திசை நோக்கி நின்றேன். இடுப்பளவுத் தண்ணீரில் நின்ற சில நிமிடங்களில், உடம்பு முழுதும் சிலிர்த்துப் போய்விட்டது. படியில் நின்ற பெரியவர், ‘ரொம்ப கீழே போகாமல், அங்கேயே குளிங்கோ’ என்றார். அவர் படியில் உட்கார்ந்து, சொம்பினால் தலையில் நீரினை ஊற்றிக் கொண்டு, உரத்த குரலில், பாடிக் கொண்டிருந்தார்.

மனதார கங்கையைத் துதித்தேன். நந்நீர் நதி முடிந்த நாதன் கருணையினால் இழைய விட்ட அமிர்தம் அல்லவா கங்கை! உலகில் உள்ள எல்லா நதிகளுக்கும் தாயல்லவா இவள்! தெளிந்த கண்ணாடிபோலத் தூய்மையாய் ஓடும் புனிதமல்லவா இந்த ஓட்டம்! கண்களை மூடிக் கொண்டு, நல்லறமும், நல்லறிவும் எல்லோரும் பெறவேண்டும் என்ற வேண்டுதலுடன், ஒரு முழுக்குப் போட்டேன்.   தொடர்ந்து, நிறுத்தாமல், இரண்டு, மூன்று என ஒன்பது முழுக்கு. கிட்டத்தட்ட ஒரே மூச்சில் ஒவ்வொரு திசைக்கும்….   அப்பப்பா….   முழ்கி எழுந்தால், உடல் அப்படி ஒரு இலவம் பஞ்சாகிப் போனதுபோல் ஒரு உணர்வு.   ஒவ்வொரு மயிர்க்காலும், சீர்பட உருவிச் சிறப்படைந்தாற் போல ஒரு தெளிவு. கொஞ்சமும் குளிரவே இல்லை. மேலும், மேலும் குளிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இப்போது, கிட்டத்தட்ட 50 – 60 பேராவது அங்கே வந்திருப்பார்கள்.   கரையில் ஏறினேன். ஆடை மாற்றிக் கொண்டு, விபூதி இட்டுக் கொண்டு, கங்கையின் நின்று, காலை சந்தியா வந்தனம் செய்தேன். பலரும் அவ்வாறே செய்து கொண்டிருக்கிறார்கள்.

சந்தியா வந்தனம் எனும் ஒழுக்கம் தினமும் மும்முறை செய்யச் சொல்லியிருப்பினும், அவற்றை நம்மில் பலருக்கும் செய்ய முடிவதில்லை. அதனைச் செய்வதால் என்ன பயன் என்பதைவிட, செய்யாததால் என்ன இடர் வரும் என்பதைத்தான் சாஸ்திரங்கள் சொல்கின்றன. மனச்சீர்மை இல்லாமல் போய்விடும். அதுதானே எல்லாக் கேட்டிற்கும் வித்து!   உண்மையில், இவ்வாறு தினமும் மனச்சீர்மைக்கான நெறிகளை எல்லா மனிதர்களுக்கும் சநாதன தர்மம் விதித்திருக்கிறது. ஒரு காலத்தில், முறையான தர்மத்துடன் வாழும் எல்லோருமே, பிறப்பினால் ஜாதி எனும் பேதங்கள் இல்லாமல் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்தனராம்.   அது ஏனோ மாறிவிட்டது.   எனினும் ஐந்து முக்கிய கடமைகளை நமது சநாதந தர்மத்தில் வாழும் எல்லா மனிதர்களும் செய்ய வேண்டும் என்றிருக்கிறது. அவை இறைசேவை, ரிஷி சேவை, பிதுர் எனும் மூதாதையர் சேவை, அதிதி எனும் விருந்தாளிகள் சேவை, மற்ற உயிரனங்களுக்கான சேவை என்பன. இவ்வைந்தையும் தினசரி நமது வாழ்க்கையில் வழக்கமாகக் கொள்ள வேண்டும். இறைவனது சேவை என்பதை இறைச் சிந்தனையிலும், ரிஷிசேவை என்பதை அவர்களின் நூல்களைப் படிப்பதிலும், மூதாதையர் சேவை என்பதை, முன்னோர்களை நினைப்பதிலும், விருந்தாளிகள் சேவை என்பதை மற்றவர்களுக்கு அன்பான பேச்சினையாவது கொடுத்து ஆறுதல் தருவதிலும்,   உயிரினங்களுக்கான சேவை என்பதை, மரம் செடி கொடிகளுக்கு நீரிடலிலும், பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் உணவிடுதலிலும் நாம் காட்ட முடியும்.   ஒரு நாளைக்கு, ஒரு ஐந்து நிமிடமாவது இவ்வொவ்வொரு சேவையையும் நாம் செய்து, அவற்றைச் செய்தோமா என இரவில் உறுதிப் படுத்திக் கொண்டே உறங்கப் போவது எவ்வளவு சிறப்பு!   சநாதன தர்மத்தில் நம்மை வழிநடத்திச் செல்லும் பெரியோர்கள், ஜாதி மத வேறுபாடு இல்லாமல், எல்லா மக்களும் தினசரிச் செய்வதற்கான நெறிகளை, எளிமையாகச் சுட்டிக் காட்டி, அவற்றையும் நாமெல்லாம் செயல்படுத்தினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்! எண்ணிக் கொண்டே கரையில் ஏறினேன்.

ஒரு அம்மா, கிண்ணத்தில் கொண்டுவந்த பவள மல்லிப்பூக்களை ஒவ்வொன்றாகத் தூவி கங்கைக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். அவரை தினம் காலையில் இவ்வாறே நான் பார்க்க முடிந்தது என் பாக்கியம். பரமார்த் நிகேதன் ஒரு அமைதிப் பூங்கா. அங்கே பூமரங்களும், துளசியும், வில்வமும் விளைந்திருக்கின்றன. காலையில் கங்கையை நோக்கி நடந்து வரும்போதெல்லாம், வழியில் பவளமல்லிப் பூமழை பொழிந்து கொண்டே இருப்பதையும், அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் குடலைகளில் சேர்த்துக் கொண்டிருக்கும் தாய்மார்களையும் பார்க்க முடிந்தது. அதிகாலையில், பரமார்த் நிகேதன் அலுவலகத்திலிருந்து `ஹரி ஓம்` எனும் மந்திரம் ஒலி பரப்பாகி, அக்காலை வேளைகளுக்கு மேலும் களையூட்டிக் கொண்டிருக்கும். அங்கிருக்கும் கங்கைக் கரையிலேயே ஆலயங்களும் இருக்கின்றன. அபிஷேகப் பிரியரான பரசிவம், அங்கே இலிங்க வடிவாக இருக்கிறார். குளித்தவுடன், கங்கை நந்நீரை ஒரு பாத்திரத்தில் கொணர்ந்து அவருக்குத் தினமும் அபிஷேகம் செய்ய முடிந்தது. இதை எல்லோருமே செய்கிறார்கள். பக்கத்திலேயே, ஆஞ்சனேயரின் பிரம்மாண்டமான உருவம் அற்புதமாக இருக்கிறது.   ஆஸ்ரமத்தினுள்ளும் சிவன், விஷ்ணு, அம்பிகை எனப் பல ஆலயங்களும் இருக்கின்றன.   இதைப் போலவே, கீதாபவன், வானப்ரஸ்த ஆஸ்ரமம் என அருகில் இருக்கும் எல்லா ஆஸ்ரமங்களிலும் அழகும் பக்தியும் கொட்டிக் கிடக்கிறது.

தினசரி காலை 5 மணி முதல் 6 மணிவரை பரமார்த் நிகேதனில், குரு உபதேசம் நடக்கிறது. அடியார்களும், பக்தர்களும் அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் ஹாலின் வாசலில் நின்று, நமஸ்கரித்துவிட்டு அறைக்குச் சென்று, ஆடை மாற்றிக் கொண்டு, விழாவிற்கு வரவேண்டும்.   அதனை விரைவாகச் செய்ய வேண்டும்.

விழா மேடையில் முதலில் வேதபாராயணம் நடக்கும். அதனைத் தொடர்ந்து 6 மணிக்குக் கடோபநிஷத் பிரவசனம் ஆரம்பித்து, 8:30 மணிவரை நடக்கும்.   இதுதான் தினசரி காலை வைபவம்.

அறைக்குச் சென்று மீண்டும் விழா மண்டபத்துக்கு வந்தேன். ‘பளிச்’சென்று எங்கு பார்த்தாலும் அடியார்கள் கூட்டம்.   பூவும் பொட்டுமாய்த் தாய்மார்கள். பஞ்சக்கச்சமும், பட்டை பட்டையாய் விபூதியும் தரித்து வேத விற்பன்னர்களும், பெரியோர்களும்.   தம்பதிகளாக, தனியாக என எல்லோரும் ஆவலுடன் விழாப் பந்தலுக்குள் வந்து அமர்கிறார்கள். வருபவர்கள் எல்லாம், பக்தியோடு ஒரு நமஸ்காரத்தைச் செய்துவிட்டு, சிராவணம் எனும் பெரும் தவத்திற்குத் தம்மைத் தயார் செய்து கொள்கிறார்கள்.

‘சிராவணம்’ எனும் கேள்வி ஞானம் மிக மிக உயர்வானது அல்லவா!   ஒரு அறிவினைப் புத்தகத்தினைப் படித்து அறிந்து கொள்ளலாம். ஆனால், அதே அறிவினை, தக்க ஆசானின் வாய்வழியாகக் கேட்பதால் மட்டுமே, அதன் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

‘அறிந்து கொள், உணர்ந்து கொள்’ என்றெல்லாம், தமிழில் இரண்டு வினைச் சொற்கள் இருப்பதற்குக் காரணம் ‘கொள்’ எனும் ‘பிடித்து இருத்திக் கொள்ளும்’ பெருமையைக் காட்டத்தான். அறிதலை விட அறிந்து கொள்ளுதல் உயர்வு. உணர்வதை விட, உணர்ந்து கொள்ளுதல் உயர்வு. இங்கே ‘கொள்ளுதல்’ என்பதைத் தடுமாற்றம் அற்ற பிடிப்பு என எடுத்துக் கொள்ள வேண்டும். எனவேதான்,   கடோப நிஷதம், யோக வாசிஷ்டம், சிவபுராணம் என எல்லாவற்றையும் நூல்கள் வாயிலாகத் திறம்படக் கற்றவர்களாக அங்கே பலர் இருந்தாலும், அவற்றைத் தகுதியான ஆச்சாரியரின் வாயிலாகச் சிராவணம் செய்யும்போதுதான், அவ்வரிய நூல்கள் மறைத்திருக்கும் மறைபொருளை, உளமார உணர்ந்து கொள்ள முடியும் என்ற காரணத்தால் தேடி வந்திருக்கிறார்கள். அதனால்தான் விழா மண்டபத்தில் அத்தனை எதிர்பார்ப்புக்கள்!

நான் முன்னேயே கூறியபடி, ஆச்சாரியரின் பிரவசன உண்மைகளை இங்கே தொகுத்துக் கொடுக்கப் போவதில்லை. அது என்னால் முடியாத செயல். மழையில் நனைந்தவனால், மழையைக் கொடுக்கவா முடியும்? அதில் நனைந்த ஈரப் பதத்தை வேண்டுமானல் காட்ட முடியும்.   இப்பதிவின் நோக்கம், இப்பயணத்தில் யான் அனுபவித்த ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே.

தினசரி கடோபநிஷதம் முடிந்தவுடன், அன்றைய நிகழ்ச்சிக்கான அறிவுப்புக்கள் இருக்கும். கலைஞர்களும்,   வித்வான்களும் மேடையில் நிகழ்ச்சிகளைக் கொடுப்பார்கள்.   காலைப் பிரவசனம் முடிந்தவுடன், எல்லோரும் காலைச் சிற்றுண்டிக்குச் செல்வர். சிலர், நேரே கங்கைக்குச் சென்று, குளித்து, மாத்யானிக கர்மங்களைச் செய்து, மஹாளய நித்ய தர்ப்பணமோ, சிரார்த்தமோ செய்வர்.

நானும் அதனையே பின்பற்றினேன். எனது அண்ணாவிற்கே முதல் அதிகாரம் இருப்பதால், தினசரி மஹாளய தர்ப்பணங்களை மட்டுமே கங்கைக் கரையில் செய்ய வேண்டும் என்பது என் தவம்.   அதனை அங்கிருந்த ஒவ்வொரு நாளும் முறையாகச் செய்ய முடிந்ததும் இறையருளே.

தர்ப்பணம் எனும் சொல்லே, திருப்திப்படுத்தச் செய்யப்படும் தவம் என்பதாகும். மறைந்த மூதாதையருக்காக நாம் மனதாரச் செலுத்தும் மரியாதை. இம்மந்திரங்களைப் புரிந்து கொண்டால், அவை உள்ளத்தைத் தொடுவனவாக இருக்கின்றன. உதாரணமாக, தர்ப்பணம் செய்யும் இடத்தைச் சுத்தம் செய்யும்போது, ‘இங்கு என்னுடனே எப்பொழுதும் இருக்கும் மரணமே, இந்த இடத்தையும், நேரத்தையும் தர்ப்பணத்திற்காக எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். எனவே இங்கிருந்து செல்’ எனச் சொல்கிறது. அதாவது, மரணம் என்பது நிச்சயித்த உண்மையானாலும், எவன் ஒருவன் தர்ப்பணம் எனும் கடமையைச் செய்கிறானோ, அவனைத் தர்ப்பணம் செய்யும் காலத்தில் மரணமும் அணுகாதாம். மற்றொரு மந்திரம், ‘நான் கொடுக்கும் இந்த எள்ளும் தண்ணீரும், நீங்கள் எப்பிறவியில் இருந்தாலும் அதற்கேற்ற உணவாக வந்தடையட்டும்’ எனக் கூறுகிறது. அப்படி அன்பினால் படைப்பதுவே, அதிர்ஷட பலனாக (கண்ணுக்குத் தெரியாத பலனாக) ஒருவருக்குக் கிடைக்கிறதோ?   ‘நதிகள் செழுமையாக ஓடட்டும், மரங்கள் சுகந்தமான காற்றை வீசட்டும், அமைதி கிடைக்கட்டும்’ எனப் பொதுநலத்தையும் வேண்டுவனவாகவும் தர்ப்பணம் அமைகின்றது.

ஆனாலும் சந்தியா வந்தனம், தர்ப்பணம் முதலான கர்மங்களையோ, அல்லது ஒவ்வொருவருக்கும் அவரவர் பரம்பரை பரம்பரையாகச் சொல்லித்தரப்பட்ட ஒழுக்கங்களையோ இயந்திரமாய்ச் செய்து வருவது `ஆசாரம்` ஆகாது. அவை `தேசாச்சரம்` என ஒரு இடத்துக்கும், காலத்துக்கும் கட்டுப்பட்டு மாறிக் கொண்டே இருப்பவைதானே! ஆத்ம பாவனை எனும் உள் நோக்கத்தில், யாவும் ஒன்றே எனும் `ஸமதரிசனம்` கொண்டு, எல்லாரையும், எல்லாவற்றையும் மாறுபாடில்லாத ஆத்மாவாகவே பாவிக்கின்ற ஒழுக்கமே ஆசாரம் அல்லவா! எனவே ஜாதி, மதம் என்றோ, படித்தோன், படிக்காதோன் என்றோ, ஆண் பெண் என்றோ எந்தப் பாகுபாடும், உலக வழக்கில் எப்படி இருந்தாலும், நம்முடைய உள் நோக்கில் `ஸமதரிசனம்` என்ற வெளிச்சத்தால், வேறுபடாமல் ஒன்றாய் இருப்பதே ஆச்சாரம்.

வேத விற்பன்னரான ஸ்ரீ செந்தில்நாதர், திருவண்ணாமலை திருமறைப் பள்ளியில், வேதங்கள் கற்றுத்தரும் ஆசான். அன்னாரும், அவரது சீடர்களும்தான், ஆச்சார்யருடன் வந்திருந்து, தினசரி வேத பாராயணமும், அடியார்களுக்கு கர்மானுஷ்டானங்கள் செய்யவும் வழிகாட்டி வந்தனர். அவற்றை எத்தனை பேர், எவ்வளவு சிரத்தையுடன் செய்கின்றார்கள் எனப் பார்த்து மனதில் மகிழ்ச்சியும், அவர்கள்பால் மரியாதையும் ஏற்பட்டது. அப்படிச் சந்தித்தவர்களில் இருவர்தான் சென்னையிலிருந்து வந்திருந்த திரு ராம்சந்தர் தம்பதி. அவர்களது நட்பும், அவர்களுடனேயே சில இடங்களுக்குச் சென்று தரிசிக்கவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

தர்ப்பணம் முடிந்து, காலைச் சிற்றுண்டி முடித்து வந்தால், மீண்டும் 11 மணிக்கு யோக வாசிஷ்டம். அப்பிரவசனம் சுமார் 1 மணிக்கு முடியும். பிறகு மதிய உணவு. பிறகு மீண்டும் 4 முதல் 6:30 வரை சிவபுராணம். பிறகு கங்கா ஆர்த்தி. தொடர்ந்து பாடல், நடனம், பஜனை என மனதை வருடும் நிகழ்ச்சிகள். பிறகு 8 மணி முதல் இரவு உணவு. இப்படியே ஒவ்வொரு நாளும் முறையாக நிகழ்ச்சிகள்.

தொடர்ச்சியாக, இப்படிப் பிரவசனத்தின் மூலம், பெரிதான விஷயங்களை, அரிதான கருத்துக்களை, குறுகிய காலத்தில் நம்மால் எப்படி ஏற்று ஜீரணிக்க முடியும்,   எதைப் பிடித்துக் கொள்வது, எதைப் புரிந்து கொள்வது…… இப்படி எல்லாம் எவரும் ஐயம் கொள்ளவே தேவையில்லை. ஏனெனில் உண்மை ஒன்றுதான்! அவ்வுண்மை ஒன்றைத்தான் நல்லாசானால் உரைக்க முடியும், காட்ட முடியும். ஆனால், அவ்வொரு உண்மையைக் காட்டுவதற்குத்தான் எத்தனை எத்தனை படிகள், வழிகள், உரைகள், முறைகள், நெறிகள்!

நொச்சூர் ஆச்சாரியர் ஈரற்றதான அவ்வுண்மையை மட்டுமே கெட்டியாகப் பிடித்துக் கொண்டவர் என்பது தெளிவு. அப்பிடிப்பினை பகவான் ரமணர் அளித்த படிப்பினையாக மனதில் ஆழப் பதித்துக் கொண்டவர் என்பதும் வெளிப்படை. அதனால்தான் வேத வேதாந்தங்களும், பாகவதமும், யோக வாசிஷ்டமும், சிவானந்த லஹரியும், உபநிஷதமும், திருமறைகளும், தாயுமானவர் பாடல்களும், திருக்குறளும், நாராயணீயமும் – என எல்லாவித ஆழ்கடலுக்குள்ளும் பிரவசனப் பிராவகத்தால் நம்மை அவர் மூழ்கடித்தாலும், பேரறிவாகிய பேரலைகளுள் நம்மைத் தள்ளித் தாலாட்டினாலும்,   ‘அய்யே அதி சுலபம்’ எனப் பகர்ந்த பகவான் ரமணரது திருவடிகளைச் சற்றும் விலகாமல், அதனையே ஓர் அச்சாரமாக்கி, அவ்வுண்மை ஒன்றையே பிடிப்பாக நமக்குத் தருகின்றார்.

அதனால்தான்,   மிகவும் பரந்து கிடக்கும் வேத சாஸ்திரங்களினால் பிரமிப்போ, இவற்றை எல்லாம் கற்று, உணர்ந்து என்று கடைத்தேறுவது எனும் பயமோ நமக்குச் சற்றும் வருவதில்லை. எங்கே சுற்றினாலும், மாறாத ஓர் உண்மைக்குத்தான் நம்மை அவர் அழைத்துச் செல்லப் போகிறார் எனும் நம்பிக்கையுடன், நாம் சிரவணம் செய்தாற் போதும். எப்படி ஒரு சாலையைக் கடக்க, குழந்தை தன் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டதும், கடக்க வைக்கும் பொறுப்பு அப்பாவிடம் போய்விடுகிறதோ, குழந்தையும் அஞ்சிக் கடக்க வேண்டிய சாலையையே இரசித்துக்கொண்டு கடந்து விடுமோ, அதுபோல நம்மாலும் கரையேறிவிட முடியும்.

எனவே அதற்கு சிரத்தை ஒன்றுதான் முக்கியம்.

`ஆச்சார்யார் பெரிய பெரிய விஷயமெல்லாம் சொல்றார். எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிறது ரொம்பா நாளாகுமே` என ஒரு நண்பர் கேட்டார். நாம் எதற்காக எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கணும். ‘இப்படித் தெரிஞ்சுக்கணும்னு நமக்குள்ள கேட்கிறது யார்’ என்று உணர்ந்தால் போதுமே! அதைத்தானே பகவான் ரமணர் காட்டினார். ஆச்சார்யாரும் அப்பேருண்மை ஒன்றைத்தானே, பிரவசனத் தலைப்பு எதாகிலும், அதற்குள் பொருளாக விதைக்கிறார்!   எனவே வார்த்தைகள் முழுதுமாய்ச் செவிகளில் புகட்டும். அவை அறிவால் வெறுமனே ஆயப்படமால் மனதுள் விதையாய்ப் பதியட்டும். மெள்ள மெள்ள வார்த்தைகள் மறைந்து, பொருளே மலர்ந்து, பூரணமான அமைதிப் பூ பூக்கட்டும். அதுதான் பிரவசனம் பிரசவிக்கும் அருட்குழவி!   அதுதான் கேள்வியாம் வேள்வி!

நமக்கு அறிவுப் பளு ஏற்படாமல், அமைதிப்பூ மட்டுமே பூக்க வேண்டுமானால்,   சிராவண சிரத்தை எனும் ‘கேள்வியின் விழுப்பம்’ மட்டுமே போதுமே! ஆனாலும் அப்படி ஒருமித்த மனத்துடன் நல்லுபதேசங்களைக் கேட்பதற்கும், நமக்குப் பயிற்சியும், பண்பும் தேவைப்படுகிறது என்பதை அலைபாயும் நமது மனதைப் பார்த்தாலே புரிகிறது!

பிரவசனத்தின் இடைவெளியிலும், சில நாட்கள் மற்ற கலை நிகழ்ச்சிகளை வருத்தத்துடன் தவறவிட்டு அப்போது கிடைக்கும் நேரங்களையும் பயன்படுத்தியே மற்ற ஆஸ்ரமங்களைத் தரிசிக்க முடிந்தது.

ஹ்ரிஷிகேஷில் புஷ்கர் மந்திர், ரகுநாத் மந்திர், திருமலை தேவஸ்தான ஆலயம் எனப் பல ஆலயங்கள் இருக்கின்றன. ராமனின் சகோதரர்களான லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கனன் ஆகியவர்களுக்கும் கோவில்கள் இருக்கின்றன. ஹ்ரிஷிகேஷில் மிகவும் புகழ் வாய்ந்தன ராம்ஜூலா, லக்ஷ்மண்ஜூலா எனும் இரண்டு பாலங்கள்.

ராம்ஜூலா அருகில்தான் ஸ்வாமி ஆத்ம பிரகாக்ஷ காலி காம்லிவாலே எனும் மஹானால் உருவாக்கப்பட்ட ஸ்வர்க்கா ஆஸ்ரம், கிழக்குக் கரையில் இருக்கிறது. அதே வரிசையில்தான் விழா நடக்கும் பரமார்த்த நிகேதன், அதனை ஒட்டியே கீதா பவன், வானப்ரஸ்த ஆஸ்ரமங்கள் இருக்கின்றன.

கீதாபவன், மிகவும் புகழ் வாய்ந்த கோரக்பூர் டிரஸ்ட் எனும் நிறுவனத்தால் அமைக்கப்பட்டது.   மிகக் குறைந்த விலையில் பகவத்கீதை மற்றும் பல தர்ம நூல்களைப் பல மொழிகளிலும் வெளியிட்டுச் சேவை செய்யும் இந்த நிறுவனம், நமது ஸநாதன தர்மத்திற்குப் பெரும் தொண்டாற்றி வருகின்றது.   கீதாபவனில் அழகிய லக்ஷ்மி நாராயணர் கோவில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் புத்தகங்களும், துளசி, அரளி, மல்லிகை போன்ற மலர்களும் இருக்கின்றன. எதிர்க் கரையில் சிவானந்த ஆஸ்ரமம் இருக்கிறது. எதிர்க் கரைக்குப் போக 10 ரூபாய்க்குப் படகைப் பயன்படுத்தலாம். ராம்ஜூலாவில் நடந்தும் நதியைக் கடந்து செல்லலாம். இரண்டு அனுபவங்களும் அருமையானவை. சிவானந்த ஆஸ்ரமம் டிவைன் லைஃப் சொசைடி எனும் சேவை நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சிவானந்தரின் உபதேசங்கள் அடங்கிய புத்தகங்களும், மாதாந்திர இதழ்களும் இங்கிருந்தே வெளியிடப்படுகின்றன.   சுவாமி சிவானந்தர் மருத்துவராக அரும்பணி ஆற்றி, பிறகு வேதாந்த உண்மைகளை உணர்ந்து, அதனையே மருந்தாக எல்லோர்க்கும் கொடுத்து அருட்சேவை செய்த மஹான். அன்னாரின் வாழ்க்கையினை விளக்கும் சிலை வடிவங்கள் அங்கே மிக அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன.   அங்கு இருந்த ஒரு சாது, பிரசாதங்கள் கொடுத்து, `அடுத்த முறை வரும்போது, சிவானந்த ஆஸ்ரமத்தில் வந்து தங்குங்கள்` என அன்புடன் கூறினார். அருகிலேயே ஓங்காரனந்தா ஆஸ்ரம் இருக்கிறது. அவற்றையும் தரிசித்தேன்.

சுவாமி தயானந்த சரஸ்வதி இறையடி சேர்ந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. அன்னார் ஸநாதந தர்ம சாரத்தை உலகோர்க்கெல்லாம் உவகையுடன் கொடுத்தருளிய பெரியோர்.   இறையுடன் கலந்த அன்னாரின் சமாதியினை வணங்கும் பாக்கியத்தை வழுவ விடக்கூடாது என்பதால், ஒரு நாள் மதியம் ஸ்ரீ தயானந்த ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்துக்குச் செல்லும் பேறு கிடைத்தது.   அன்று ஸ்ரீ தயானந்த ஆஸ்ரமம் வெகுவாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.   சுவாமிஜியின் சமாதியில் பூவும் மாலைகளும் கட்டி, அன்னாரின் திருவுருவப் படமும் ஆராதனைக்கு வைக்கப்பட்டிருந்தது.   அருகில் சாதுக்களும், அடியார்களும், பக்தர்களும் வரிசையாக அமர்ந்திருக்க, அவர்களுக்கெல்லாம் அறுசுவை உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.   ஆஸ்ரமத்தினை ஒட்டி, அழகு நதியான கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாள்.

அன்னை வாலாம்பாள் அருட்தந்தை கோபாலன்
முன்னை ஆள்நடராஜ மூத்தமக வாய்ப்பிறந்து
மஞ்சக் குடிமகிழ மண்ணுதித்த மறையாளன்
நெஞ்சக் கனலுள்ளே நிர்மலத்தை யேதேடி

வேதவே தாந்தமெது விரிவோ நெறிமுறையோ
ஓதும் பயிற்சியதோ உயர்பள்ளிப் பாடமதோ
என்றுலவித் தேடி எத்தனையோ குருவடிகள்
சென்றுதவி கேட்டு சீலன்தபோ வனராஜன்

நற்பிரணவ ஆனந்தன் நலஞ்சின்மயா னந்தன்
சொற்படியே கேட்டுச் சுடர்த்துறவு ஒளிஏற்று
உயர்வாய்த் தயாநந்த உத்தமநற் குருவாகி
தயவாய் ஆன்மநிதி தந்துலகை வாழ்வித்தார்!

நற்குருவாய் நாளெலாம் நல்லருளாய் நற்செயலை
அற்புதமாய்த் தந்துலகில் அர்ப்பணித்த நல்லாசான்
கங்கைமடி சாய்ந்து கண்மூடித் துகிலுடலை
பங்கயமாய் வைத்துப் பதித்தயிடம் பணிகின்றேன்!
முக்தர்களுக் கில்லை முடிவோ பிறப்பில்லை
நித்தியமாய் ஆகிவிட்ட நிர்மலனைப் பணிகின்றேன்.

 
ஸ்ரீ தயானந்தசுவாமியின் ஸமாதியைத் தொழுதுவிட்டு, அருகில் இருந்த ஆலயத்தில் மௌன குருவாய் விளங்கும் தக்ஷிணாமூர்த்தியையும் தரிசனம் செய்து புறப்பட்டேன். பிறகு அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கும் லக்ஷ்மன் ஜூலா அருகில் சென்றேன். அங்கே 13 மாடிகள் கொண்ட ஒரு ஆலயம் இருக்கிறது. அதில் எல்லாவிதமான இறைவன் திருவுருவங்களும் இருக்கின்றன. கடைவீதியும் கூட்டத்தால் நிரம்பியே இருக்கின்றன. பிரம்ம குண்ட் என ஹரித்வாரில் இருப்பது போல, திரிவேணி காட் என கங்கை, யமுனை, சரஸ்வதி கூடிய புனிதப் படித்துறையும் ஹ்ரிஷிகேஷில் இருக்கிறது. அருகில் கோவிலும், நூற்றுக்கணக்கான சாதுக்களின் கூட்டமும் இருக்கின்றன.

நாம் இலண்டனில் இருந்து புறப்படும்போதே, டாக்டர் ரங்கநாதன் மாமா, என்னிடம் கன்வ ரிஷியின் ஆஸ்ரமத்தைப் பற்றிக் கூறியிருந்தார். அங்கேதான் சகுந்தலை சில காலம் தங்கியிருந்ததாக மஹாகவி காளிதாஸ் தன்னுடைய சாகுந்தலம் எனும் காவியத்தில் வருணித்திருக்கிறார்.   ஆனால், கன்வ ரிஷி ஆஸ்ரமம், கோத்வாரா எனுமிடத்தில் இருக்கிறது என்றும் காரில் போவதற்கே 2 மணி நேரமாவது ஆகும் என்று அறிந்ததால், அடுத்த முறை வரும்போது பார்க்க வேண்டிய இடமாக மனதுள் வைத்துக் கொண்டேன்.

மற்றொரு காலை, நீலகண்ட மஹாதேவ் ஆலயத்திற்குச் செல்ல திரு சந்திரசேகர் மற்றும் ராம்சந்தர் தம்பதியருடன் வாய்ப்புக் கிடைத்தது. லக்ஷ்மன் ஜூலாவிலிருந்து சுமார் 15 கிமீ தூரத்தில், சுமார் 5000 அடி உயரத்தில் மலையில் உள்ள சிறிய ஆலயம். இங்கேதான் சிவன் ஆலஹால விஷத்தை உண்டதாக ஒரு புராணம். கொஞ்சம் கடினமான மலைப் பாதை. கீழே ஆழ்ந்த பள்ளத்தாக்கு. கங்கை ஓடிக்கொண்டிருக்கிறாள்.

திரு ராம்சந்தர் அவர்களும், அவரது மனைவியும் மிகவும் பக்தியும், சிரத்தையுமாய் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்வதும், ஆலய, ஆஸ்ரம தரிசனங்கள் செய்வதுமாய் இருந்தார்கள்.

திரு சந்திரசேகர் பெங்களூரிலிருந்து வந்திருந்த இளைஞர். அவரும், அவரது குடும்பத்தாரும் நொச்சூர் ஆச்சாரியரின் பரம அடியார்கள். சந்திரசேகர் பயணித்தின் போது ஆன்மீகமாகவே பேசிக் கொண்டு வந்தார். வேலைப்பளுவின் காரணமாக ஆன்மீகப் பாதையில் போதிய நேரத்தைச் செலவிட முடியாத கஷ்டம் எனத் தன் மனதில் நடத்திவரும் போராட்டங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். இது நம்மில் பலருக்கும் இருக்கும் தடுமாற்றம்தானே!   செய்யும் வேலையையே தெய்வப் பணியாய்ச் செய்யும் திறனையும், பாவனையையும் பெற்று விட்டால், ஆன்மீகமே நமது வாழ்க்கையாகி விடாதா! அவரது மனப் போராட்டம், ஒரு தவம் என்பதால், அது தொடர்ந்து நடந்து, நல்வழியை அவருக்குக் காட்டட்டும் என மனதுள் வேண்டினேன்.

மலை மேல் இருக்கும் ஸ்ரீ நீலகண்டர் ஆலயத்தின் முகப்பில் ஓர் சிறிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. இளநீரைப் போலச் சுவைக்கும் தண்ணீர்.   மூலவரான சிவபிரான் மிகச் சிறிதான இலிங்க வடிவில் இருக்கின்றார். அவரைத் தரிசனம் செய்து அங்கிருந்து தொலைவில் தெரியும் இமயமலைத் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது.

மற்றொருநாள் வசிஷ்டர் குகைக்குச் சென்றேன். இது ராம்ஜூலாவிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கூடவே சில அன்பர்களும் வந்தார்கள். நாற்பது நிமிடக் கார் பயணத்தில் அடைந்து விடலாம்.   வசிஷ்டர் தவம் செய்த குகை அங்கே இருக்கிறது. அருகிலே மிகப் பெரிதாக, அகண்ட கங்கை ஓடிக் கொண்டிருக்கிறது. குகைக்குள் கும்மிருட்டாக இருந்தாலும்,   உள்ளே ஏற்றி வைக்கப்பட்ட விளக்கின் ஒளியில் ஓரளவு பார்க்க முடிகிறது. அப்போது மதியம் 12 மணி இருக்கும். வெளியே வெயிலின் சூடு. ஆனால், குகைக்கு உள்ளே அப்படி ஒரு குளிர்ச்சி. மெதுவாக நடந்து உள்ளே சென்ற ஒரு சில நிமிடங்களில், அந்த இருட்டில், ஒரு சிலர் கீழே உட்கார்ந்து தியானித்துக் கொண்டிருப்பதும் கண்களில் மெல்லத் தெரிந்தது.   ஒரு இருபது நிமிடங்கள் கண்களை மூடி அங்கு உட்கார்வது மனதுக்கு அத்தனை உற்சாகத்தையும் அமைதியையும் தருவதாக இருக்கிறது.

பிறகு வெளியே வந்தால், எதிரே ஒரு நூறடி அளவிலான மணற்கரை. அதைத் தாண்டி அகண்ட கங்கை ஓடுகின்றாள். அருமையான இடம். சூடான மணலில் காலை அரைகுறையாய்ப் பதித்து, கங்கையை நோக்கி ஓடி, அவளுடைய குளிர்ச்சியான ஓட்டத்தில் கால்களை நனைத்தேன்.   அங்கிருந்த பாறை ஒன்றில் ஒரு சாது அமைதியாக உட்கார்ந்திருந்தார்.   நான் ஒரு கல்லின் மேல் அமர்ந்து, கங்கையின் ஓட்டத்தையும், அங்கு சுற்றியும் இருக்கும் மலைப் பகுதியையும் ரசித்துக் கொண்டிருந்தேன் . ‘பக்கத்திலேயே அருந்ததி குகை இருக்கிறது. பார்க்கலாம் வாருங்கள்’ எனக் கூட வந்திருந்த நண்பர் சொன்னார்.   அவசரமாக அங்கிருந்த பாறைகளில் காலை வைத்துக் கடக்கும்போது, கால் தடுமாறியது. அப்போது, சட்டென என் கையைப் பிடித்து ‘மெள்ள மெள்ள’ என்று தமிழில் கூறினார் அந்த சாது.   ‘நன்றி’ என அவர் கையைப் பிடித்து என்னைச் சரி செய்து கொண்ட நான், தமிழில் பேசினாரே என்ற மகிழ்ச்சியில், அவரைப் பார்த்து, ‘சுவாமிஜி, தாங்கள் தமிழா?’ எனக் கேட்டேன். பதிலில்லை.   சரி, காதில் விழவில்லை போலிருக்கிறது என மீண்டும் என் கேள்வியைக் கேட்டேன்.   உஹூம்…. அவர் பழையபடியே அமர்ந்து கொண்டு, கங்கையைத் தாண்டிய ஒரு வெட்ட வெளியைப் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தார்.   பூர்வாசிரம விஷயங்களைக் கேட்டு, சாதுக்களின் மனதில் சஞ்சலத்தை எழுப்புவது தவறு என்பதால், அவரை வணங்கி விட்டுப் புறப்பட்டேன்.

அருந்ததி குகை என ஒரு சிறிய குகையும் அருகிலேயே இருக்கிறது. அதைப் பார்த்தோம்.   அதைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.

மற்றொரு மதியம், ஹ்ரிஷிகேஷில் இருக்கும் சாஶ்த்ர நேத்ராலயா எனும் ஆஸ்ரமத்திற்குச் சென்றேன். அங்கிருக்கும் திராவிடாசார்யா எனும் சுவாமிஜியைப் பார்க்க வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.   அன்னார், தமிழ்நாட்டில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தியவர் என்றும், அதையெல்லாம் விட்டு, இளவயதிலேயே ஹ்ரிஷிகேஷ் சென்று, வேத சாஸ்திரங்கள் எல்லாம் பழுதறப் பயின்று, பயின்றவற்றை எல்லாம் மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து அறத்தை வளர்த்து வருபவர் எனவும் நான் அறிந்திருந்தேன்.   இலண்டனில் இருக்கும் என் நண்பர் திரு பாலாஜி இவரைப் பற்றிக் கூறியிருந்தார்.

அவரது இருப்பிடம், ராம்நகரில், பாபா காலி கம்லி வாலே எனுமிடத்தில், ஆத்ம விக்ஞான பவன் எனும் ஆஸ்ரமங்களில் இருக்கிறது. ஸ்ரீ பாபா விஶுத்த நந்தா ஜி மஹராஜ் எனும் மஹானால் ஏற்படுத்தப்பட்ட இவ்விடத்தில்,   சாதுக்கள் தங்கித் தவம் புரிய இருப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.   மிகவும் எளிமையும், இனிமையும் நிறைந்த இடம். அங்கு வர விருக்கும் விருப்பத்தை, சுவாமிஜியிடம் நான் முன்னமேயே தெரிவித்திருந்தேன்.   என்னை அன்புடன் வரவேற்று, ஒரு அரைமணி நேரமாவது உரையாடியிருப்பார். அவரைச் சுற்றியும் புத்தகங்களும், எழுத்துக்களும் இரைந்து கிடக்கின்றன.   விவேக சூடாமணி, ப்ரஸன்னோத்ர ரத்ன மாலிகா எனும் ஆதிசங்கரரின் மூல நூலுக்குத் தாம் எழுதியிருந்த விளக்க நூல்களை எனக்கும், பாலாஜி மற்றும் நண்பர்களுக்காகவும் கொடுத்தார். தனியாக இருந்து கொண்டு, தவமாக சாஸ்திர ஞானத்தை எல்லோருக்கும் அளித்துவரும் அத்தகைய தியாக சீலர்களை எல்லாம் போற்றி வணங்க வேண்டும். அன்னாரைப் போன்ற பெரியோர்களைப் பார்க்க எனக்கு இருந்த ஆவலுக்கு முக்கியக் காரணம், அவர்களின் வைராக்கியம் தான்.

வைராக்கியம் என்பது மிகவும் அரிதான செல்வம். அதனை அடைவது கடினம். அதனை அடைவதால் நாம் அனுபவிக்கும் விடுதலையே முக்தி எனப் பதஞ்சலியின் யோக சாத்திரம் கூறுகிறது.   வேதாந்த ஞானத்தை உணர்வதற்கு வைராக்கியம் ஒரு முக்கியமான தகுதி.

`விஷயி` என நாம் உலக விஷயங்களில் மட்டுமே ஈடுபாடு கொண்டு, செயலாற்றியும் (கர்த்தா), அனுபவித்தும் (போக்தா) வாழ்நாளைக் கழித்து வருகிறோம். இச்செயல்கள் எல்லாம் அறவழியில் அமைந்தால், அதுவே உலகில் நாம் நல்லவர்களாக உயர்வதற்கான முதல் தகுதியாகும்.

ஆனால் சுகமும் துக்கமும் மாறி மாறி வருகின்றனவே, எது உண்மையான ஆனந்தம் என்று தெரியவில்லையே எனும் எண்ணம் தோன்றும்போதுதான், நமக்குப் பகுத்தறிவு பிறக்கிறது. அதைப் பிடித்துக் கொண்டு உயர்பவரே `விவேகி` என்பவராக, எல்லாவற்றையும் ஆராய்ந்து, மாறிக் கொண்டே இருக்கும் உலக சுகங்கள் எல்லாம் நிலையற்றது எனவும், மாறாத உண்மை ஒன்றுதான் நிலையானது எனவும் அதனையே நாடவேண்டும் என்றும் புரிந்து கொள்கிறார்.

ஆனால், விவேகம் மட்டுமே முழுமையான ஞானத்தைக் கொடுத்து விடாது. பகுத்தறிவினை ஒரு படியாக ஏறி, உண்மையை நாம் தொகுத்துணர வேண்டும். ஏனெனில் மனம் எனும் விசை, மீண்டும் மீண்டும் சுக துக்கங்களிலும், ஆசையிலும் நம்மை ஆழ்த்திக் கொண்டே இருக்கும். எனவே விவேகம் எனும் ஒரு துடுப்புக்குப் பக்க பலமாக பற்றின்மையாகிய வைராக்கியம் எனும் மற்றுமொரு துடுப்பு வேண்டும். அதனை அடைவதற்கு, சித்த சுத்தி எனும் தெளிந்த உள்ளமும், திருட புத்தி எனும் உறுதியான அறிவும் வேண்டும். அதுவே பற்றின்மைக்கு வழிகாட்டும். அந்நிலையை அடைபவர்தான் `வைராகி`. அதன் ஆதாரத்தில்தான் முழுமையான ஞானத்தை அவரால் அடைய முடியும். கர்ம யோகம், பக்தி யோகம், தியான யோகம் என நமக்கு வைக்கப்பட்டுள்ள வழிகள் எல்லாம் அதற்குத்தான்.  அவ்வழிகளில் நாம் வைக்கும் விழுப்பம்தான் சிரத்தை.

வைராக்கிய சாதகம் மிகக் கடினம். அதுவும் விவேகத்துடன் கூடிய வைராக்கியம் பெரும் பேறு. எனவேதான் எல்லாம் இருந்தும், அவற்றை எல்லாம் வைராக்கியத்தால் சட்டென விலக்கி, கூர்மையான கத்தி போன்ற ஞான விசாரப் பாதையில் பயணிக்க விழைகின்ற பெருமக்களைக் காணும்போது, நமக்கு வியப்பும், பக்தியும் விளைகிறது.   ஹ்ரிஷிகேஷில் அப்படிப் பட்ட சாதுக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.   அவர்களைப் பார்ப்பது ஒரு பாக்கியம் என்பதாலேயே, நாம் இப் புண்ணிய பூமியில் அத்தகையோரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உண்மைத் துறவிகள் மலையிலும், குகையிலும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் வீட்டிலும், நகரிலும் கூட இருக்கலாம். ஏனெனில் சந்யாஸம் என்பது முற்றும் பற்றற வாழ்தல். காவியும் வேடமும் அணிந்து, காட்டிலும், மலையிலும் வாழ்ந்தால் மட்டுமே துறவு என்பது அல்ல. சாத்திரங்களில் விவித சந்யாஸம் (வைராக்கியத்தை வளர்த்துக் கொள்வதற்கான துறவு), வித்யா சந்யாஸம் (ஞானத்தால் துறவு), அபய சந்யாஸம் (மரணத்தின் முன் எடுத்துக் கொள்ளும் துறவு) என்றெல்லாம் பல வழிகள் காட்டப்பட்டுள்ளன.   வித்யா சந்யாஸம் எனும் ஞானத்தால் உண்மைத் துறவினை மனதில் ஏற்று, நம்முடனேயே, சாதாரணமான தோற்றமும், எளிமையும் கொண்டு பலரும் உலகில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் உண்மை. அன்னார்களை நாம் விழைந்து தேடினால் மட்டுமே, அவர்களை நம்மால் சரியாக அடையாளம் காண முடியும்.     தேடுதல் நமக்குள் எழுந்தாலே, பார்வையில் நேர்மையும், மற்றவர் பார்வைக்குத் தெரியாத பல தரிசனங்களும் நமக்குக் கிடைத்துவிடும் என்பதே பெரியோர் வாக்கு.

பிரவசனம் பெருமருந்தாகவும், அருவிருந்தாகவும் நடந்து கொண்டிருந்தது. நொச்சூர் ஆச்சார்யருக்கு நன்றியைக் காட்டும் பொருட்டு, ஓர் நாள் மாலையில், அன்பினால் ஓர் கவிதை எழுதியிருந்தேன். அதனைப் படித்த சித்தப்பா திரு கோவிந்தராஜன், `நீங்கள் இதனை மேடையில் படியுங்கள்` எனக் கோரிக்கை வைத்தார். அதற்குத் தகுதியும், அனுமதியும் பெறாமல் செய்வது ஆகாது என்பதால், விழா அமைப்பாளர்களைக் கேட்டுச் செய்யலாம் என நினைத்தேன். ஆச்சாரியரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்காலம் என எண்ணி, ஸ்ரீ செந்தில்நாத கனபாடிகளிடம் சென்று, என் விண்ணப்பத்தைத் தெரிவித்தேன்.

அப்போது, அவரின் அருகே, வயதில் முதிர்ந்தும், முகத்தில் முழுமையான புன்முறுவலுமாய், ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரை நமஸ்கரித்து விசாரித்தபோது, அவர் ஸ்ரீ செந்தில்நாத கனபாடிகளின் தந்தை என்றும், திருவண்ணாமலையில் வசிப்பவர் என்றும், அன்னார் பெயர் ஸ்ரீ கௌரி சங்கர் என்றும் தெரிந்தது. அப்பெயரை அவருக்கு அளித்தவரே பகவான் ரமண மகரிஷிதானாம். அதைக் கேட்டு மகிழ்ச்சியாய் இருந்தது.   ஏனெனில், என் தந்தையார் பெயர் கௌரி மீனாக்ஷிசுந்தரம். அவர் பகவான் ரமணரிடம் இருந்தவர். பகவான் மேல் பலநூறு கீர்த்தனைகளை எழுதியவர். பகவான் கருணையினாலே பிறந்த முதற் புதல்வன் என என் அண்ணாவிற்கு கௌரி சங்கரன் என்றும் ரமணன் என்றும் பெயரிட்டவர். இதை எல்லாம் அப்பெரியவரிடம் சொல்லி வணங்கினேன். அவருக்கும் மிகவும் உற்சாகம். பிறகு யான் எழுதியிருந்த ஒரு சில புத்தகங்களையும்,   நொச்சூர் ஆச்சாரியாருக்காக எழுதியிருந்த கவிதையையும் ஆர்வமுடன் படித்தவர், அப்படியே அதில் லயித்து, பிறகு கடகடவென அருமைத் தமிழில் எனக்கு ஆசீர்வாதமாக ஒரு தமிழ்க் கவிதையை ஒப்புவித்தார்.   என்னே பெருமை! ஆசு கவியாய் விளங்கும் அன்னாரைச் சந்தித்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி.   ஒருவேளை மேடையில் இதனைப் படித்து ஆச்சார்யருக்கு சமர்ப்பிக்க அனுமதி கிடைத்தால், இதனைப் படித்து அளிப்பதற்கு, ஸ்ரீ கௌரி சங்கர் மாமாவே தகுதியுடையவர் என விழைந்து. மாமாவிடம் அதனைத் தெரிவித்தேன்.   நிச்சயமாக என உறுதி அளித்த அன்னார்,   அன்று இரவே திருவண்ணாமலை போவதாக இருப்பதால், ஒருவேளை அன்று படித்தளிக்க வாய்ப்பில்லை என்றால், தனது ஆசிகளை எல்லாம் என் தலையில் ஏற்றி, என்னையே படித்தளிக்க உத்தரவிட்டார்.

ஆச்சார்யரை அடுத்த நாள் தனியாக சந்திக்க எனக்கு உத்தரவாகி இருந்தது. ஒரு பதினைந்து நிமிடம் அவரைச் சந்தித்து, அன்னாருடன் உரையாடும் பாக்கியமும் கிடைத்தது. கிரஹாஸ்ரமத்தில் இருந்து கொண்டே உயர்வான துறவியாய் விளங்கும் அன்னார், நமக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கிறார் என்பது மனதில் ஆழமாகப் பதிந்தது.

வியாழன் காலைப் பிரவசனம் முடிந்து நடந்து கொண்டிருந்தேன். திரு ராம்சந்தர் தம்பதியரும் மற்றும் இரண்டு பேருடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது, நிறுத்தி, `குஞ்சபுரி எனும் சக்திபீடத்தில் ஒன்றான ஆலயத்திற்குச் செல்கிறோம். வாருங்கள்` என்றனர். அவ்வரிய வாய்ப்பை விடமுடியுமா என்ன?

குஞ்சபுரி ஹ்ரிஷிகேஷிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இருந்தாலும், அது ஒரு மலைப் பாதை வழியாக அடையப்பட வேண்டிய இடம்.   குஞ்சபுரி மலை தேஹ்ரி மாவட்டத்தில் இருக்கிறது. குஞ்சபுரிக்குத் தெற்கில் ஹ்ரிஷிகேஷ், ஹரித்வார், டூன் பள்ளத்தாக்கு இருக்கின்றன. மலைப் பாதையில் போகப் போக, இவற்றை வானவீதியிலிருந்து பார்க்க முடிகிறது.   அதன் வடக்கே இமயமலைத் தொடர் எழும்பி நிற்கின்றது. கர்வால் மலைகள் என அறியப்படும் அவற்றில் தான் ஸ்வர்க்க ரோகிணி, கங்கோத்ரி, பந்தெர்பஞ்ச், சுகம்பா முதலியன இருக்கின்றனவாம். ஆலயம் மலையின் உச்சியில் இருக்கிறது.   சக்தியின் ஆலயம். சக்தி பீடங்கள் எனக் கருதப்படும் முக்கியமான ஆலயங்களில் இதுவும் ஒன்று.   தேஹ்ரி மாவட்டத்தில் மூன்று சக்தி பீடங்கள் உள்ளன. சுர்கண்ட தேவி, சந்த்ரபத்னி, குஞ்சலாம்பாள் எனும் மூன்று சக்தி பீடங்கள், திரிகோணமாக இந்த மாவட்டத்தில் ஆதிசங்கரரால் அமைக்கப்பட்டவை என்பதைக் கோவிலின் பூசாரியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இவை மூன்றும் சிவாலிக் மலைத் தொடர்களில் இருக்கும் பதின்மூன்று சக்தி பீடங்களில் அடங்கும்.   பராசக்தியின் உடல்   52 இடங்களில் வித்தாக வீழ்ந்ததாயும், அவையே சக்தி பீடங்கள் எனவும், அவை எல்லாம் ஒப்பற்ற புண்ணிய க்ஷேத்திரங்களாக இருப்பதாயும் பெரியோர் கூறுவர்.

அடுத்த நான்கு நாட்கள் கழிந்து நவராத்திரி ஆரம்பிக்கப் போகின்றது. பராசக்தியை, சக்திபீடமான ஆலயத்தில் தரிசிக்கும் வாய்ப்பினை வியந்து ஆலயத்திற்குள் சென்றோம். கிட்டத்தட்ட 250 படிகள் ஏற வேண்டும். கொஞ்சம் கடினம்தான். இரண்டு பக்கமும் குரங்குகள் குதித்துக் கொண்டு இருக்கின்றன. அம்பாளுக்கு வாங்கிச் சென்ற அர்ச்சனைப் பொருட்களை, பையில் மூடி எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கீழே கடைக்காரர் சொல்லி இருந்தார். குரங்குகளும் அவற்றைத் தான் குறிபார்க்கின்றன. ஆலயத்துள் அம்பாளின் அடையாளமாக ஒரு சிறிய இலிங்கம் இருக்கிறது. உள்ளே அப்படி ஒரு புனிதமும், அமைதியும் விளங்குகிறது.   மக்கள், அன்னைக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு பிரசாதமாகப் பெற்ற ஒரு சிறிய வண்ணத்துணியை வெளியே இருக்கும் ஒரு மரத்தில் பக்தியுடன் கட்டுகின்றனர்.   பூசாரி என்னிடமும் ஒரு துணியைக் கொடுத்தார். `நீங்கள் வெளியூரில் இருப்பவர் என்றால், இதனை மரத்தில் கட்ட வேண்டாம். வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்` என்றார். அதனைப் பெற்றுக் கொண்டு, மலையிலிருந்து சுற்றிலும் தெரியும் அழகான காட்சிகளை சிறிது நேரம் ரசித்துக் கொண்டிருந்தோம். பிறகு மீண்டும் ஹ்ரிஷிகேஷ் திரும்பினோம்.

வியாழன் இரவு குரு பூஜை. அன்றே சிவபுராண உரை பூர்த்தியானவுடன், விழா அமைப்பாளர்களும், எல்லோரின் சார்பில் குரு வணக்கம் செய்து, ஆச்சார்யருக்கு சமர்ப்பணம் செய்வதான நிகழ்ச்சி நடந்தது.   அதற்கு முன்னேயே, அனந்தராமன் மாமா மற்றும் அவருடன் இருந்த அமைப்பாளர்கள் என்னிடம் கூறியிருந்தனர்.   `எல்லா அர்ப்பணிப்பும் முடிந்த பிறகு, உங்களைக் கூப்பிடுவோம். மேடையில் வந்து கவிதையைப் படியுங்கள்` என்று.

நிர்வாகத்தில் உதவி செய்த பெரியோர்கள், உணவு அமைத்துக் கொடுத்த நன்மக்கள், பரமார்த் நிகேதன் குருமார்கள் எனத் தக்கோர் எல்லோருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்த பிறகு, அன்றைய நிகழ்ச்சியின் இறுதியாக, மேடையில் ஆசாரிய வணக்கம் செலுத்தும் வாய்ப்பினை எனக்கு ஆண்டவன் அருளியிருந்தார்.     ஓர் உளமார்ந்த கவிதையினைப் படித்து, அன்னாரிடம் அனைவரது சார்பாகவும் சமர்ப்பித்தேன்.

புகழும் போற்றுதலும் விரும்பாதவர்கள் பெரியோர்கள். அவர்களைப் போற்றிப் பணிவதை நாம் ஒரு பணியாகச் செய்தாலும், அச்செயலால் அவர்களின் கொள்கைக்கும், பணிவுக்கும் சற்றும் இடர் இருக்கக் கூடாது. அதே சமயம், அன்னாரின் பெருமையைப் போற்றும் நமது உள்ளக்கிடங்கையும் வெளிப்படுத்திவிட வேண்டும். இவ்விரண்டு குறிக்கோளையும் பழுதில்லாமல் நிறைவேற்ற முடிந்ததற்கு இறையருளையும், அதற்கான அனுமதியும் வாய்ப்பும் அளித்துதவிய பெரியவர்களுக்கும் யான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

 

வியாழன் இரவுடன் பெருவிழாவின் நல்முடிவு ஆரம்பமானது. அடுத்த நாள் காலை, கடோபநிஷத் நிறைவுற்று விழா பூரணத்துவம் பெற வேண்டும்.   வியாழன் இரவே எல்லோர் மனதிலும், ஒரு பக்கம் நாளை ஊருக்குச் செல்லத் தயாராக வேண்டுமே என ஒரு அவசரம், அதற்குள் இந்தப் பொன்னான வாரம் முடிகின்றதே என்ற ஏக்கம் மறுபுறம்.

கடைசி நிமிட ஷாப்பிங் பலருக்கு. குறுகலான அந்த வீதியில் இருக்கும் கடைகளில் பெரும்பாலும் நம்மவர்களின் கூட்டம்தான். எனக்கு சனிக்கிழமைதான் விமானம் என்பதால் நேரம் இருக்கிறது. அன்று இரவு வானப்ரஸ்த ஆஸ்ரமத்திற்குச் சென்றேன். சிலர் கங்கைக்கு முன்னே நடனம் ஆடி பூஜை செய்து கொண்டிருந்தார்கள்.   அந்தப் படிக்கட்டிலேயே அமர்ந்து அருகே விர்ரெனச் சென்று கொண்டிருக்கும் கங்கையையும், அவ்வப்போது அதிலே ஈர்த்துச் செல்லப்படும் சிறு விளக்குகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.   அற்புதமான இரவுப் பொழுது. வானப்ரஸ்த ஆஸ்ரமத்தில் இருக்கும் ஆலயமும் அதில் கொலுவிருக்கும் தெய்வங்களும் அப்படி ஒரு அழகு.   மனம் கொள்ள எல்லாவற்றையும் பார்த்து விட்டு, அறைக்கு வரும்போது நள்ளிரவு ஆகிவிட்டது.

வெள்ளிக்கிழமை, விழாவின் இறுதிநாள். இன்று காலை பிரவசனத்துடன் விழா பூர்த்தியாகி, முடிந்த ஒரு மணி நேரத்திலேயே பெரும்பாலோர் கார்களில் புறப்பட்டு விட்டார்கள். விழா மண்டபம் விரைவில் வெறிச்சோடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒன்றை இழந்தாற்போல் தோன்றினாலும், அது ஒரு கல்யாண வீட்டில் கட்டுசாதம் கொடுத்து அனுப்பிய பிறகு இருக்குமே, அத்ததைய நிம்மதியான, முழுமையான தனிமை. கட்டுசாதம் போலவேதான், பயணிப்பவர்களுக்கு உணவுப் பார்சலையும் நிர்வாகத்தினர் அன்புடன் கொடுத்திருந்தார்கள். நான் வழக்கம்போல, தர்ப்பணத்தை முடித்து விட்டு அன்று ஹரித்வார் சென்று வர முடிவு செய்தேன்.

ஹரித்வார், ஹ்ரிஷிகேஷ் இவை இரண்டுமே மற்ற புனித யாத்திரைக்கான தலங்களான பத்ரிநாத், கேதாரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவற்றுக்கான ஆரம்பமாக இருக்கின்றது. `தேவபூமி` என இவ்விடத்திலிருந்து இமயம் வரை இருக்கின்ற பூமி அழைக்கப்படுகிறது. வேகவதியான அலகாநந்தாவும், சாந்தஸ்வரூபிணியான மந்தாகினியும், கங்கையுடன் கலக்கின்ற ருத்ரப்ரயாகை, தேவப்ரயாகை எனும் புண்ணிய இடங்களுக்கெல்லாம், இந்தப் பூமியிலிருந்துதான் பயணம் செய்ய வேண்டும். சாலைகளில் திசையும், தொலைவும் காட்டுகின்ற மைல் கல்களைக் காணும் போதெல்லாம், இவற்றை எல்லாம் சென்று, கண்டு, அனுபவிக்கும் வாய்ப்பை இறைவன் வழங்க வேண்டும் என்ற பிரார்த்தனையை மனதுக்குள் விதைத்துக் கொண்டேன்.

சிவாலிக் மலைகள் வலப்புறமும், கங்கை இடப்புறமும் இருக்க, ஹரித்வார் நகரம், மிக முக்கியமான புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக இருக்கிறது. ஊரின் முழு அழகையும், பக்கத்தில் இருக்கும் கங்கல், ஜ்வாலபூர் ஆகிய தலங்களையும் ஹரித்வாரில் மலைமேல் திகழும் மானஸ தேவியின் ஆலயத்திலிருந்தே பார்த்துவிடலாம்.   நான் முன்பொரு முறை ஹரித்வார் வந்திருக்கிறேன். நேரமின்மையால், மானஸ தேவி கோவிலையும், பிரம்ம குண்ட் எனும் இடத்தையும் மட்டுமாவது பார்த்துச் செல்லவேண்டும் என நினைத்தேன். `ஹர்-த்வார்` அல்லது கடவுளர் கதவு என்பது இவ்வூரின் பெயர். `ஹர்-கி-புரா` எனவும் ஒரு பெயர் உண்டு. மாநதியாகிய கங்கையைப் பூமிக்குக் கொணர்ந்த பகீரத அரசனின் பூமி இது.

புராணப்படி, இக்ஷவாகு வம்ச மன்னன் சாகர் என்பவன் அஶ்வமேத யாகம் செய்தான். அதன்படி, அரசனின் குதிரை யாக முத்திரையைச் சுமந்து தேசத்தை வலம் வந்தது. தேவர்களின் தலைவன் அக்குதிரையைப் பிடித்து மஹாயோகியான கபிலரின் ஆஸ்ரமத்தில் கட்டி விடுகிறான். குதிரையைத் தேடி வந்த மன்னரின் 60,000 புத்திரர்களும் கபிலரின் ஆஸ்ரமத்தில் அதனைக் கண்டு, அங்கிருந்த முனிவர் எதற்கும் அசையாமல் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு அவரின் மேல் கோபம் கொண்டு, அவரைத் தாக்க முயல்கின்றனர். கண்களைத் திறந்த கபிலர் அவர்களை எல்லாம் நொடியில் சாம்பலாக்கி விடுகின்றார். புத்திரர்கள் இல்லாமற் போனதால், கர்ம விதிகளை முறையாகச் செய்ய முடியாமல், சாகர் மன்னனும், அவனது சந்ததியினரும் தவிக்கின்றனர். அவர்கள் காலம் இவ்வாறே பெருங்குறையுடன் கழிகிறது.   வெகு காலம் கழித்து, அப்பரம்பரையில் வந்த பகீரதன் எனும் அரசன், இச்சாபத்திற்கு முடிவு காண விழைகின்றான். தேவலோகத்தில் இருக்கும் ஆகாய கங்கை பூமியில் வந்தாலே, சாபம் நீங்கித் தெளிவு பிறக்கும் என அறிந்து, கடும் தவம் இயற்றி, ஸ்ரீமந் நாரயணரின் அருளைப் பெற்று அவரது அனுமதியுடன் தேவாமிர்தமான கங்கை, நதியாகப் பூமியில் வரவேண்டும் என வரம் கேட்கிறான். அவ்வரத்தின் பயனால் ஆக்ரோஷமாகத் திரண்டு வந்த கங்கையை, அவள் வேகம் தணிந்து சாந்த ஸ்வரூபிணியாக உலகிற்கு வரவேண்டும் எனக் கருணையினால் கனிந்து, சிவபெருமான் கங்கையைத் தன் முடிமேல் வாங்கிச் சூடி, பிறகு மென்மையாய் கங்கோத்ரி வழியே அனுப்பிவைத்தார். மஹா யோகியரின் தவத்தால் சிரசிலிருந்து ஒழுகும் அமிர்தமே, சிவனின் முடியிலிருந்து பெருகும் கங்கை.

பகீரதன் மேலும் முயன்று, கங்கை ஹரித்வாருக்கு வரவேண்டும் என வேண்ட கங்கையும் `என்னைக் கூட்டிச் செல்` எனச் சொல்கிறாள். பகீரதன் கங்கையைத் தான் செல்லும் பாதையைத் தொடர்ந்து வருக என வேண்டிக் கொண்டு, தனது ரதத்தை ஹரித்வார் நோக்கி ஓட்டி வருகிறான். பின்னேயே ஓடிவந்த கங்கை, சப்தரிஷிகளின் ஆஸ்ரமத்தை அடையும்போது, அம்முனிவர்களின் அன்பாலும், பலத்தாலும் அவ்விடத்திலேயே நின்று விடுகிறாள். பிறகு பகீரதன் மேலும் தவத்தைச் செய்து, அம்முனிவர்களின் அன்புக்கு ஆளாகி, மீண்டும் கங்கையை அழைக்கிறான். அதன்படியே, ஏழு முனிவர்களின் ஆசிகளோடு ஏழு வழியாக கங்கை பூமியில் ஓடிக் கொண்டிருக்கிறாள்.     எனவேதான் கங்கையின் பெருமைக்கு, பகீரதனின் பெருந்தவமும், ஹரித்வார் நகரமும் மிகப் பெரிய பங்களித்திருக்கிறது. பகீரதனின் தவமே நமது வாழ்க்கையாக வேண்டும். ஆத்ம ஞானமாகிய அமிர்த கங்கையே, ஜீவபாவம் எனும் நமது `நான் எனும் அறியாச் செருக்கை` முற்றும் கறைத்து, இதயத்தில் ஆனந்த வெள்ளமாகப் பிரவாகிக்க வேண்டும். கங்கோத்ரியும், மணிகர்ணிகாவும் நம்முள்ளேயே விளைந்து, அதில் நாம் மூழ்கி முழுமையான சுகத்தைப் பெறவேண்டும். இதனைக் காட்டதானே தீர்த்தக் கரைகளும், புனித யாத்திரைகளும்!

ஹரித்வாரில் கங்கைக் கரையில் முக்கியமான பல படித்துறைகள் இருக்கின்றன. அதில் `பிரம்ம குண்ட்` பிரசித்தமானது. இது ஹர்-கி-புரி எனுமிடத்தில் இருக்கிறது. இவ்விடத்தில் கங்கையை தரிசிப்பதும், மூழ்கி எழுவதும் மிகவும் புண்ணியம் விளைப்பவை என்பது புராணங்களின் கருத்து. அங்கே நிறையக் கோவில்களும் இருக்கின்றன.   பிரம்ம குண்ட் சென்று, புனித நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு மானஸா தேவி கோவிலுக்குப் புறப்பட்டேன்.

மானஸாதேவி ஆலயம் ஓர் மலைமேல் இருக்கிறது. மானஸாதேவி ஆலயத்திற்கு கேபிள் காரில் போகலாம். நடந்தும் மலை ஏறிப் போகலாம். நான் மானஸாதேவி கோவிலுக்கு கேபிள் காரில் சென்றேன். நல்ல கூட்டம். மானஸாதேவி நான்கு முகங்களுடன் அழகாகக் காட்சியளிக்கிறாள். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, இவை எல்லாம் கலந்த மன சக்தியாக அம்பாள் காட்சியளிக்கிறாள். அங்கிருந்து பார்த்தால், எதிர்த்தாற்போல் இருக்கும் மலையில் சண்டி தேவி கோவில் தெரிகிறது. அங்கிருந்தே அன்னையை வணங்கிவிட்டுக் கீழே இறங்கி வந்தேன். ஹரித்வாரின் பெரிய மணிக்கூண்டும், சுமார் 30 அடிக்கும் மேலான சிவபெருமான் சிலையும் மிகவும் புகழ் வாய்ந்தவை. ஹரித்வாரில் பார்ப்பதற்கு நிறைய ஆஸ்ரமங்களும், ஆலயங்களும் இருக்கின்றன. மற்றொரு முறை அவற்றைத் தரிசிக்க வாய்ப்பினை இறைவன் அருள வேண்டும்.

ஹ்ரிஷிகேஷ் வரும்போது இரவு 7:30.   படகு சர்வீஸ் நின்று விட்டதால், ராம்ஜூலா பாலத்தை நடந்தே கடந்து, வழியில் கீதாபவனுக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன். நாளை குளித்து, தர்ப்பணக் காரியங்களை முடித்துவிட்டு,   புனித கங்கை நதி நீரை, இலண்டனில் ஆலயத்திற்கும், அன்பர்களுக்கும் கொடுக்க எடுத்துச் செல்ல வேண்டும் என முடிவெடுத்து அதற்காக இரண்டும் பிளாஸ்டிக் குடுவைகளை மட்டும் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினேன்.

சனிக்கிழமை! இன்று ஊர் திரும்ப வேண்டிய நாள். வழக்கம்போல் 4:45க்கு கங்கைக்கு வந்தால், அங்கே இரண்டு மூன்று பேர்கள்தான் அந்த நேரத்தில் இருந்தார்கள். விழா மண்டபத்தில் யாரும் இல்லை.   பந்தல் கலைக்கப்பட்டிருந்தது. ஆசை தீரக் குளித்துவிட்டு, ஆலயங்களை மீண்டும் ஒருமுறை பார்த்து அறைக்குத் திரும்பினேன்.   மீண்டும் 9 மணிக்கு மேல் வந்து தர்ப்பணத்தை முடித்துவிட்டு, அறைக்குத் திரும்பி 2 மணிக்குள்ளாக விமான நிலையம் போக வேண்டும்.     அதற்கு முன், கரையோரம் நடக்கலாம் என சுமார் 2 மணி நேரம் சுற்றிக் கொண்டிருந்தேன்.   அந்த பூமி அமைதியாகத்தான் இருக்கிறது.   மக்களும் சாத்வீகமான குணத்துடனே இருக்கிறார்கள். அதுதான் மண்வாசனை என்பதோ!   கவலைகளை எல்லாம் உறிஞ்சிக் கொண்டு ஓடிவிடுபவளாக கங்கை அங்கே இருக்கின்றாள். அரசாங்கத்தின் ‘ஸ்வச் பாரத்’ பேனர் கட்டிய ஒரு ராக்ஷத எந்திரம், கங்கைக் கரையில் இருந்து தூர் வாரிக் கொண்டு இருக்கிறது.   நடக்கட்டும். புனிதவதியான கங்கையைத் தூய்மைப்படுத்துவது என்பதன் உட்பொருளே, நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வதுதான் என்பது புரிகிறது.    இப்படியே யோசித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன்.

வயிற்றின் அருகே பெருமூச்சும் ஈரப்பதமான துழாவலும். பார்த்தால், ஒரு பசுமாடு என் வயிற்றில் நாக்கை வைத்துக் கொண்டிருந்தது. அருகிலிருந்த கடையில் வாழைப் பழங்களை வாங்கிக் கொடுத்தேன். பலரும் இவ்வாறு கொடுப்பதை நான் வாரம் முழுதும் பார்த்துப் பெருமைப் பட்டிருக்கிறேன்.  பழங்களைக் கொடுக்கும்போது அதன் நாக்கு வேகமாகத் துழாவுகிறதே என அஞ்சி நுனிக் கரத்தால் கொடுக்கையில், ஒரு பழம் கீழே விழுந்து விட்டது. சரி, அது பழத்தைத் தரையில் இருந்து எடுத்துச் சாப்பிடும் எனப் பார்த்தால், உஹூம்…. நான் அதைக் கீழேயிருந்து எடுத்து அதன் வாயில் கொடுக்க வேண்டும்!   சிறிது நேரம் அதனுடன் இருந்து விட்டு, அன்றைய திட்டப்படி எல்லாம் முடித்து, விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டேன். இவ்வாறு ஹ்ரிஷிகேஷில் ஒரு வாரம் ஒரு வரமாக அமைந்ததற்கு இறைவனது கருணையே காரணம் எனப் பணிகிறேன்.

Related Posts

Share this Post