Log in to download as PDF

(Read in ENGLISH)

தெய்வத்தின் மகள்கள்

ஐயாவுடன் உரையாடல் (33)

“கவலைப்படுகிறீர்கள்  போலிருக்கிறதே”, ஐயா என் தோளில் மெதுவாகத் தட்டிக் கொண்டே கேட்டார்.

எப்போதும் போல, அவரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

“இல்லை ஐயா, கவலைப்படவில்லை!  முடிவான தீர்வு தேவைப்படுகின்ற ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்! இப்போது நீங்கள் இங்கே வந்துவிட்டதால், முடிவு கிடைத்தாக நான் நிம்மதியாக இருக்கிறேன்.”

ஐயா சிரித்தார்!

“இப்பொழுது எந்தக் குற்றத்தைச் செய்துவிட்டாதாகக் கவலை?”

நான் சிரித்தேன்.

“இது ஒரு குற்றமாக இருக்காது என்று நம்புகிறேன். கடந்த ஞாயிறு அன்று, மஹா ருத்ர ஜப யக்ஞம் முடிந்த பிறகு, என் மனதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.”

“ஆமாம், நானும் அந்த வைபவத்தை இண்டர்நெட்டில்  லைவ் ஸ்ட்ரீமாகச் சில நிமிடங்கள்  பார்த்தேன்! இங்கிலாந்தில் அப்படி ஒரு நல்ல நிகழ்ச்சி நடப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் சிறு குழந்தைகள், சிறுமிகள் உட்பட ஸ்ரீ ருத்ரம் ஓதுவதைப் பார்க்கையில் மிகவும் வியப்பாக இருந்தது.”

ஐயாவால் என் மனதுள் எழும் எண்ணங்களைப் படிக்க முடியும் என்ற உணர்வு எனக்கு எப்போதும் உண்டு. இப்போதும் அதைத்தான் அவர்   செய்கிறாரோ என யோசித்தேன்!

“ஐயா, அதுதான் எனக்குப் பதிலைத் தேடும் கவலையைத் தூண்டியது.”

நான் படபடத்துச் சொன்னேன்!

“அன்று ஆர்வமுடன், ஒரு சில தாய்மார்கள் மற்றும் சிறுமிகள் தாமாக முன்வந்து ஸ்ரீ ருத்ரம் ஓதுவதைப் பலரும் பாராட்டினாலும், ஒரு சில  அறிஞர்கள் அதனைப் ‘பாபம்’ என்று கருதினார்கள் என்றால், அதனால் கவலை கொள்ள வேண்டியது  அவசியமில்லையா?”

ஐயா சிரித்தார்!

“பாபம்?  ம்ம்ம்…. அது ஒரு பெரிய வார்த்தை! ஒன்றை விழைந்து ஆவலினால் நாம் செய்கின்ற  ஒவ்வொரு செயலிலும், ‘புண்யம்’ மற்றும் ‘பாபம்’ ஆகிய இரண்டும் விளைகின்ற சாத்தியம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி இருக்கும்போது, ஒரு சிலர்  ‘பாபம்’ என்பதையே பொருட்டாகப் பார்த்தால், அப்படியே பார்த்துவிட்டுப் போகட்டும், அதில் உமக்கு என்ன கவலை?”

“ஐயா!  பெண்டிர் வேதமந்திரங்களைச் சொல்வது பற்றிய பல விவாதங்கள் என்றுமே உள்ளன என்பதை நான் அறிவேன், மேலும்  பல ஆசார்யர்கள் கூட, இதற்கான பதிலை வெவ்வேறு கருத்துக்களால் வெவ்வேறு விதமாக வலியுறுத்துகின்றனர்.  என்னுடைய கேள்வி இதுதான்: வேதமந்திரங்களைச் சொல்லப் பெண்களுக்குத் தகுதி இல்லையா? அதிலும் குறிப்பாக ஸ்ரீ ருத்ரம் சொல்வது…?”

ஆவலுடன் ஐயாவைப் பார்த்தேன்.

“வேதமாகிய சுருதியில் அத்தகைய நியமங்கள் எதுவும் நேரடியாகக் கொடுக்கப்படவில்லை என்பதே என் அறிவுக்குள் தெரிவது. ஆனலும், பெண்கள் வேதம் கற்பதைத் தடைசெய்யும் தெளிவான சில உத்தரவுகளையும்  ஒரு சில  ஸ்மிருதிகளிலும், புராணங்களிலும் காணலாம்.   இதற்குப் பகவான் பாதராயணரை மேற்கோள் காட்டிப்  பல ஆச்சார்யர்கள் கூறியிருப்பதையும் கேள்விப்பட்டிருக்கலாம்.”

ஐயா ஒரு ஸ்மிருதி வாசகத்தைச் சொன்னார்.

“ஸ்த்ரீ ஸுத்ரா த்விஜபந்தூனாம் த்ரேயி ந ஸ்ருதிகோசரா |

கர்மஸ்ரேயசி மூதானாம் ஸ்ரேய ஏவாம் பவேதிஹா |

இதி பாரதமாக்கியனாம் க்ருபயா முனினா க்ரதம் ||”

அந்த ஸ்ம்ருதி வசனத்தைச் சொல்லிவிட்டு  என்னைப் பார்த்தார்.

“ஐயா, ஆனால் இது ஒரு கருத்துக் குழப்பமாகத் தெரியவில்லையா?”

“அப்படித்தான் இருக்கிறது!  ஸ்ருதியாகிய வேத்தில் குறிப்பிடப்பட்ட,  மற்றும் ‘பிரம்மவாதிநிகள்’ என்று போற்றப்படுகின்ற  லோபமுத்ரா, வாக், ஷ்ரத்தா, யாமி போன்ற பல பெண்டிர்கள்  எல்லாம் வேதச் சான்றோர்களாக இருந்திருக்கிறார்கள்!  அவர்கள் வேதம் பயின்றவர்கள் மட்டுமல்ல, வேதங்களின் ஆழ்ந்த உண்மையினை தெளிவுபடுத்துகின்ற  போதகர்களாகவும் இருந்துள்ளனர்.”

“ஐயா, ஆனால், வேதம் ஓதுவதற்கும், ‘வேதாத்யானம்’  செய்வதற்கும் தகுதி பெற, ‘உபநயனம்’ மற்றும் பிரம்மச்சரிய-ஆஸ்ரமத்தில் ஈடுபட்டிருத்தல் போன்ற முன்நிபந்தனைகள் எல்லாம் இருக்கின்றன, இல்லையா?”

“ஆம்!  எனவேதான் சொல்கிறேன், அந்த நாட்களில், இந்த முன்நிபந்தனைகள் எல்லாம் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக இருந்திருக்கலாம்!  அப்படி இருந்ததற்கும்  பல சான்றுகள் உள்ளன.”

“ஐயா, ‘உபநயனம்’ என்பது பிராமணராகப் பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றல்லவா நான்  நினைத்தேன்?”

ஐயா தனது புருவங்களை  உயர்த்தியபடி பதில் கூறினார்:

“பிராமணனாகப் பிறப்பதா! அப்படி  இல்லை, இல்லை! பிராமணனாக இருப்பது என்பது பிறப்புரிமை அல்ல! அது ஒருவரால் மனதார  ஏற்றுக் கொள்ளப்பட்ட கடமை! ஒருவர் தாம்  தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையிலிருந்து அடைகின்ற தகுதி! அது ‘சங்கல்பம்’ எனும் தெய்வ சாட்சியான உறுதியை  எடுத்துக்கொள்வதன் மூலம் அடையப்படுவது. வேத காலத்தில், பாரத நாட்டில் அனைவரும் தமது குணத்திற்கு ஏற்பத் தமக்கு விருப்பமான வாழ்க்கை முறையைத் தொடரவும், அதே சமயம்  சமூகத்தின் பொது நலனுக்கான  தேவைகளைப்  பூர்த்தி செய்யவும், எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியைத் தருவதற்கே, ‘உபநயனம்’ எனும் வைபவம் இருந்து. அது அதனை ஏற்பவர்களின்  ‘இரண்டாவது பிறப்பு’ – அதாவது ‘த்விஜஹா’- என்பதாகக் கொடுக்கப்பட்டது. வேத காலங்களில், இந்தச் சடங்கு அனைவருக்கும் பொதுவானது.”

ஐயா தொடர்ந்தார்.

“வேத காலத்தில், உபநயனம் எனும் இரண்டாம் பிறப்பைப் பெற்றவர்கள், அதற்கப்புறம் மூன்று வழிகளில் தங்களின் வாழ்வைத் தொடரலாம். அவை: வேத அறிவைக் கற்றும், அதனை அனைவர்க்கும் கற்றுக் கொடுத்தும், அறவழியைக் காட்டுகின்ற வாழ்க்கை, அல்லது மற்றவர்களின் பாதுகாப்பிற்காகத் தன்னையே  முழுமையாகத் தியாகம் செய்கின்ற தியாகப் பொறுப்புடைய வாழ்க்கை, அல்லது அனைவரின் நலனுக்காகவும் செல்வ வளத்தை உருவாக்குவதற்கும், பரிமாற்றம் செய்வதற்கும் உறுதியளிக்கின்ற சேவையாகிய  வாழ்க்கை என மூன்று ஆகும். இந்த மூன்று அணுகு முறைகளுமே முறையே ‘பிராமணர்’, ‘க்ஷத்திரியர்’ மற்றும் ‘வைசியர்’ என  மூன்று வர்ணங்களாக அறியப்பட்டன.  அதாவது ஒவ்வொரு வர்ணமும், அவரவர் செயலாற்ற ஒழுக்கத்தை ஒட்டிய தெளிவான பிரிவினால் பகுக்கப்பட்டும், ஒவ்வொரு வர்ணத்தினரும் ஒழுக வேண்டிய  கடுமையான நடத்தை நெறிமுறைகளால் தொகுக்கப்பட்டும் இருந்தன. அப்படி உபநயனம் ஏற்காத மற்ற அனைவரும், எப்படிப்  பிறப்பில் எல்லா மனிதர்களும் இருந்தார்களோ, அதுபோல ‘சூத்திரர்’ என்றே இருக்கட்டும் என விதித்திருந்து. இந்த நான்காவது வர்ணமானது மற்ற மூன்று வர்ணங்களுக்கு உதவ வேண்டிய கடமையைத் தவிர வேறு எந்தக் கடுமையான ஒழுக்கங்களாலும் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே ‘உபநயனம்’ என்பது ஒரு காலத்தில் ஆண், பெண் என அனைவருக்கும் பொதுவான சடங்காகவே இருந்திருக்கிறது.”

“ஐயா, இந்த வர்ணாசிரம ஒழுக்கத்தில், மேலானது கீழானது எனும் பாகுபாடுகள் இருந்தனவா? அப்படி இருந்ததாகவே பலராலும்  கருதப்பட்டு, அதனால் அது  அநீதியான செயலாகிறது எனவும் இன்னும் விமர்சிக்கப்படுகிறதே!”

“வேத காலங்களில், இப்படிச் சமுதாய நலம் சார்ந்து விதிக்கப்பட்ட வர்ணாஸ்ரம தர்மங்களுக்கிடையில் அப்படி எவ்விதப் பாகுபாடும், உயர்வு தாழ்வும்  இருக்கவில்லை!  ஆனால், வழி தவறி, பிறப்பின் அடிப்படையில், சாதி எனும் கருத்துத் திணிப்பால், ஏற்றுக்கொள்ள முடியாத  அநீதி இழைக்கப்பட்டு, சமூக ஒற்றுமையை அறுக்கும் விதமாக, தேவையற்ற சண்டைகளும் ஏற்பட்டுவிட்டன  என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்!  ஆனால், அத்தகைய கசப்பான பார்வைகள் முற்றிலும் தவறானவை.”

ஐயா தொடர்ந்தார்.

“உயர்வு தாழ்வு இல்லை! வேறுபாடு உண்டு என்றால், அதுவும்,  அவரவரின் ஒழுக்க விஷயத்தில்தான்.  உதாரணமாக, உலக இன்பங்களை அனுபவிப்பதில், பிராமணர்கள் அதிகபட்சக் கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்த வேண்டும், அறவழி நடந்து, எல்லா உயிர்களுக்கும் அன்பு செலுத்தி, சன்மார்க்கத்தில் மற்றவர்களுக்கு முதன்மையான முன்மாதிரியாக இருக்க வேண்டும் என நியதி இருந்தது. அது போலவே, பிறருடைய பாதுகாப்பிற்காகத் தங்கள் உயிரையும்  தியாகம் செய்யும் க்ஷத்திரியர்கள், மக்களை ஆள்பவராகவும், அறம் காப்பவராகவும் இருந்து, உயர்ந்த  சுகங்களை அனுபவிக்கும் பயனையும் பெற்றவராகினர்.   வைசியர்களுக்கும் வேத நியமங்கள் இருக்கின்றன.    குறிப்பாக மற்ற அனைவருக்கும் வேலை செய்தாலும்,  சூத்திரர்களுக்கு மட்டுமே எல்லாவித  உலக இன்பங்களையும், அனுபவிப்பதற்கு எந்தவிதமான  தடையும் இல்லை!  அறவழியில் அனுபவிக்க வேண்டும் என்பது மட்டுமே விதி!  எனவே நீங்கள் தேர்வு செய்யும் வாழ்க்கை நெறிக்கேற்ப, ஒழுக்கமும், சுதந்திரமும் வரையறுக்கப்பட்டிருந்தன.”

“ஐயா! அப்படியானால்,  வர்ணாசிர தர்மம் என்பது வேத காலத்தில், ஒவ்வொருவாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய வாழ்க்கை முறையாக இருந்தது,  பிறப்பால் அல்ல என்பது சரியா?”

“ஆம்! பிராமணர், க்ஷத்திரியர் மற்றும் வைசியர் ஆகிய மூவருக்கும் வேதங்களைப் படிக்கும் உரிமை இருந்தது! மேலும் அனைவரும்  வேதங்களைப் படித்திருப்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.  ஆனாலும், வேதங்களில் உள்ள அறிவு முடிவற்ற கடலாக  இருப்பதாலும், மனித வாழ்வு குறுகிய காலமாக இருப்பதாலும்,   ஒவ்வொரு வர்ணத்தாரும், தங்கள் வாழ்க்கை முறைக்கும், வாழ்க்கைத் தேவைகளுக்கும்  அவசியமானவற்றை மட்டுமே வேதங்களில்  படிக்கத் தேர்ந்தெடுத்தனர்.”

“அவை என்ன?”

“இவ்வுலகிலும், மறுவுலகிலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கான வழிமுறைகள் எதுவோ அவையே அனைவருக்கும் முதன்மையான குறிக்கோள். வேதங்கள் அவற்றை, ‘தர்மம்’, ‘அர்த்தம்’, ‘காமம்’ எனும் அறம், பொருள், இன்பமாகிய  மூன்று இலக்குகளாக் காட்டி, அவற்றை அடைவது ‘சரீரம்’ எனும்  உடலால் என்பதால், உடலாற் செய்ய வேண்டிய கர்மங்களை எல்லாம் தருகின்றன.  அதனால்தான் ‘வேதா-பூர்வா’ எனப்படும் வேதங்களின் முற்பகுதி ‘கர்மகாண்டம்’ என்றும், அதற்கான விளக்கங்கள், ‘சாரீரகபாஷ்யம்’ எனவும் கூறப்படுகின்றன. இவையே கர்மச் சடங்குகளுக்கும் வழிகாட்டுகின்றன.  உங்களுக்குப் புரிகிறதா?”

“புரிகிறது  ஐயா, ஆனால் என் கேள்வி பெண்கள் வேதம் ஓதுவதுபற்றி அல்லவா? அதற்கும்,  வேத பூர்வம் உடலுக்கான கர்மகாண்டம் என்பதற்கும்  என்ன தொடர்பு இருக்கிறது?”

“இருக்கிறது! உடலாற் செய்யப்படுவன எல்லாம், உடலின் தன்மையையைப் பொருத்தும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களை அனுசரித்தும் அமைய வேண்டும்! அதற்கான தேவை உள்ளது. ஆண்-பெண் எனும் இரு சாராரையும் ஒப்பிட்டால்,  சில விஷயங்களில், ஒரு சாரார் வலிமையானவர்கள், மறு சாரார் பலவீனம் ஆனவர்கள்! அதனால்தான் வேதச் சடங்குகளும்,  துறவுகளும் யாரால் எதனை முறையாகச் செய்ய முடியும் எனும் இயற்கை விதிக்கொப்ப வரையறுக்கப்பட்டு, அதற்கான அறிவுரையும் தரப்பட்டன.”

ஐயா ஒரு சில நிமிடங்கள் கழித்துச் சொன்னார்.

“ஆனால்,   நிச்சயமாக, அத்தகைய வழிகாட்டுதல்கள் எல்லாம் காலப்போக்கில்,  நடைமுறையில் தடை உத்தரவுகளாக மாறியுள்ளன!   இன்று வேத நியமத்தின் ஆலோசனைகளும் ஆணைகளாக ஆக்கப்பட்டுவிட்டன. வேதகாலத்தில்,  வெவ்வேறு வர்ணங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும், அவர்களுக்கான ஒழுக்கத்தில் தெளிவாக இருந்த காலத்தில், அவர்களுக்கு உகந்த, தனித்துவமான பாதைகள் இருந்தன. குழப்பம் இருக்கவில்லை!”

“ஐயா, அப்படி வேத காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் நவீன காலத்தில் அவை பொருந்தாது.”

“நிச்சயமாக! அதனால்தான் வழிமுறை அறிவு-நூல்களாக பல ஸ்ம்ருதிகள்,  எப்பொழுதும் மாறுதலை ஏற்பனவாக உள்ளன! அதனால்தான் நமது சாத்திரமும், அதை ஒட்டிய நமது கலாச்சாரமும் எப்போதும் புதியதாக இருக்க முடிகிறது. அதனால்தான் நம்முடையது ‘ஸனாதன தர்மம்’ என்று அழைக்கப்படுகிறது. நமது கொள்கைகள் மூர்க்கத்தனமானதும், பழமையில் பாழடைவதும், திணிக்கப்படுவதும் அல்ல! மாறாத பேருண்மைக்காக, மாறுதலடைகின்ற காலத்திற்கேற்ற வழிமுறையில் அறம் வளர்க்கின்ற நடைமுறை நமது அணுகுமுறை.!

“ஆமாம் ஐயா! ஆனால் நவீன காலத்திற்கு பொருந்தாத விதிகள் நம்மிடம் இன்னும் உள்ளனவே!”

“ஆம்!  அத்தகைய நடைமுறை விதிகளை நாம்தான் மரியாதையுடனும், அறிவுடனும்  விசாரித்து, செய்யும் சடங்குகளின் புனிதம் மாறாத வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும்! நிச்சயமாக வேதச் சடங்குகளைச் செய்து வழிகாட்டுகின்ற பெரியோர்களைக் கேட்டே அதற்கான தெளிவினை அடைய வேண்டும்.”

ஐயா தொடர்ந்து கூறினார்:

“ஆனால் ஆன்மீகப் பாதையில் பயணம் செய்பவர்களுக்கு அப்படியான  நிபந்தனைகள் இல்லை.”

“எனக்கு புரியவில்லை ஐயா.”

“நல்லது,  இக்காலத்தில்,  வர்ணாசிரம வழிமுறையும், அதை ஒட்டிய ஒழுக்கமும் வேத காலத்தின்படி நடக்கச் சாத்தியமில்லை. பிறந்த சாதியின் அடிப்படையில் வர்ணாசிரம வாழ்க்கை முறை என்பது  நிராகரிக்கப் படுகிறது என்பதாலேயே, ‘வர்ணாசிரம தர்மம்’ தொடர்புடைய அனைத்தும் தொலைந்து போய்விட்டதாக நாம் தவறாக முடிவு செய்யக் கூடாது. ஏனெனில், ஆழமாகக் கவனித்தால், நாம் ஒவ்வொருவருமே, அன்றாட வாழ்க்கையில், நமக்குள்ளேயே ஒவ்வொரு வர்ணத்தின் பண்புகளையும் கொண்டவர்கள் ஆகிறோம்.”

“எப்படி ஐயா?”

“நாம் இறையருளைத் தேடியும், எல்லா உயிர்களுக்கும் கருணை செய்தும், எல்லாவற்றிலும் தெய்வீகத்தைத் தேடவும் முயலும் ஒவ்வொரு செயலின் போதும்  பிராமணர்களாக இருக்கிறோம்! அறவழி காத்து நமது உடல்,பொருள், ஆவி என எதையும் தியாகம் செய்து மற்றவர்களின் நலம் காக்க விழையும் போதெல்லாம், நாம் எல்லாம் க்ஷத்ரியர் ஆவோம்! அனைவரின் நலனுக்காகவும் செல்வத்தை உருவாக்கவும், அவற்றை அறம் வழுவாமல்  பரிவர்த்தனை செய்யவும் உழைக்கும்போது, ​​நாம் வைசியர் ஆகிறோம்!  பிறரிடம் ஊதியத்திற்கு உழைத்துப் பணிவிடை செய்கின்றபோது, நாம் எல்லாம் சூத்திரர்கள் ஆகிறோம்! ஆகவே, ஒரு குறிப்பிட்ட குடும்பத்திலோ அல்லது சாதியிலோ பிறந்ததால் அல்ல,  நல்லறத்தைச் செய்வதற்காகவே நாம் அனைவரும், எத்தொழில் செய்தாலும் சரி,   வேத தர்மத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வேதங்கள் எல்லா நேரங்களிலும், எல்லா மனிதர்களுக்கும் துணை தருபவை ஆகும்.”

“அது எப்படி ஐயா? வேதச் சடங்குகள், வேத நம்பிக்கைகள், வேத கர்மாக்கள் – இவை அனைத்தும் இந்துக்கள் அல்லாத அனைவருக்கும் எவ்வாறு பொருந்தும்? தொலைதூர நிலத்தில் பிறந்த ஒருவர் எப்படி வேதங்களைத் தங்கள் வாழ்க்கையின்  வழிகாட்டியாகக் கருத முடியும்? குறிப்பாகப் பல வேதச் சடங்குகள் மற்றவர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு முற்றிலும் அந்நியமானவை அல்லவா?  எனவே வேதங்கள் எப்படி உலகளாவியதாக இருக்க முடியும்?”

“இது ஒரு நியாயமான கேள்வி. வேதச் சடங்குகள் இந்துக்களுக்கானதாகவே தெரிகின்றன. அதுவும் இந்த நவீன காலத்தில், ஒரு இனம் அல்லது சமுதாயத்தின் அறிவை எப்படி உலகளாவிய அறிவு என்று கூற முடியும்!”

எனது கேள்வியை ஆமோதிப்பதுபோல்,  ஐயா திரும்பச் சொன்னார். பிறகு பதிலளித்தார்.

“வேதம் என்பது ஒரு பெரிய வனம் போன்றது. அது ‘வேதாரண்யம்’ ஆகும்!  அதன் பரப்பளவு  எல்லையற்றது! ஆழமானது. அத்தகைய  வேதத்தின் தெய்வீக சப்தங்கள் சத்தியத்தினை விழைந்து தியானம் செய்து கொண்டிருந்த பாரதப் புண்ணிய பூமியின் முனிவர்களால், (உண்மையப் பார்க்கின்ற  பார்ப்பனர்களால்) மட்டுமே கேட்கப்பட்டன!  அப்படிக் கேட்டவற்றை, அந்த முனிவர்களே, தங்கள் வாயொலியின் வெளிப்பாடாகவும், மற்றவர்கள் கேட்கின்ற ‘ஸ்ருதி’ ஆகவும்  பிரச்சாரம் செய்தனர். அதனால்தான்,  வேத பூர்வ மந்திரங்கள், உரைகள் எல்லாம் அவர்கள் வாழும் நிலம் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்றவாறு பரிமளிக்கின்றன.  எனவே, பாரதத்தில் பிறக்காதவர்களுக்கு அல்லது பரம்பரையாகப் பாரத்தின் வாழ்க்கை முறையைப் பேணாதவர்களுக்கு,  அந்த  வேத பூர்வத்தின் பெரும்பகுதி உடனடியாகப் பொருந்தாது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.”

ஐயா தொடர்ந்தார்.

“ஆனால் ‘வேதாந்தம்’ எனும் வேதத்தின் கடைசி அல்லது முக்கிய பகுதி,  வேத்தின் முதலில் இருக்கும் பகுதியைப்போல  ‘சரீரம்’ பற்றியது அல்ல!  அது, ‘ஆத்மா’ பற்றியது.  ‘ஆத்மா’ எல்லா உடலுக்குள்ளும் ஒளிர்ந்து, எல்லாச் சட உடலையும் உயிர்ப்பிப்பது! தூய்மையான விழிப்புணர்வின் பிரகாசமாகிய ‘ஆத்மா’ மட்டுமே உலகின் அனைத்துப் பொருளாக்கத்திற்கும் காரணமாகும். அந்த ஆத்மா பிரிக்க முடியாதது, எல்லையற்றது, பற்றற்றது, நித்தியமானது, எல்லாவற்றிலும் வியாபித்துள்ளது! மற்றும் அனைத்தையும்  உள்ளிழுக்கும் உண்மையும் அதுவே! இதை எல்லாம் நீங்களும் அறிவீர்கள்! அதனால்தான் ‘வேத அந்தம்’ என்பது ‘வேத பூர்வம்’  போல இல்லாமல், உலகில் அனைவருக்கும் பொருந்திய,   உலகளாவிய பேருண்மை!  வேதம் என்பது அதனால், வேத முடிவும், வேத மகுடமும் ஆகிய வேதாந்தத்தினாலேயே அப்படிப் பொதுத்தன்மையையும், சிறப்பையும் அடைகிறது! தெரிந்து கொள்ளுங்கள்:  வேதம் என்பது  ‘இந்துப்’ புத்தகமும் அல்ல. இது முழு மனிதகுலத்திற்கான ‘முழுமையான’ வெளிப்பாடு.   நம்மிடையே அது பரவி இருப்பதால், அது நமக்குப் பெருமை தருவதாக இருந்தாலும், அது உலகில் உள்ள எல்லா மனிதர்களின் சொத்து! அதனை  அறியவும், படிக்கவும்  உரிமையும்,  கடமையும் எவருக்கும் உண்டு. வேதாந்தத்தைப் பற்றிப் படிக்காமல், அதன் உண்மையை மனதில்  ஆழச் சிந்திக்காமல் விட்டுவிட்டால், இந்த  அரிய மனிதப் பிறவியின் பயனை நாம்  தவறவிட்ட பெரும் பழியாகிவிடும்! அதனால்தான் வேதங்கள் உலகளாவியது எனப் புகழப்படுகின்றன.”

“ஐயா அப்படியானால் நாம் ஏன் வேதபூர்வத்தில் உள்ள கர்மச்சடங்குகள் பற்றியெல்லாம் கவலைப்படுகிறோம்!  வேதாந்தத்தில் அடங்கியுள்ள ‘ஆத்மஞானம்’ போன்ற முக்கியமான விஷயங்களுக்கு நாம் ஏன் நேரடியாகச் செல்ல முடியாது?”

“படிப்பறிவற்றவர்கள் டாக்டர் பட்டம் பெற ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக,  பல்கலைக் கழகங்கள் அவர்களை நேரடியாக ‘பிஎச்டி’ திட்டங்களில் சேர்க்கத் தொடங்கும் போது, நீங்களும் அப்படிச் செய்யலாம்.”

ஐயா சிரித்தார்.

“இல்லை ஐயா, அது சாத்தியமில்லை! ஒருவர் முதலில் அடிப்படைக் கல்வியைப் பெற வேண்டும்! மேலும் முனைவர் பட்டத்திற்குச் செல்ல,  ஆராய்ச்சியின் தலைப்பில் தீவிர ஆர்வத்தையும்  செலுத்த வேண்டும்.”

“சரியாகச் சொன்னீர்கள்! அதனால்தான் விதிக்கப்பட்ட,  மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, கர்மாக்களை முறையாகச்  செய்வதுதான்  முக்கியமான முதற்படிகள்.  எனவே உங்கள் குணாதிசயங்கள், சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்புகளுக்கு ஏற்ற உங்களது வாழ்க்கை முறையை முதலில் தேர்ந்தெடுங்கள். பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றி, நேர்மையான செயல்களைச் செய்யுங்கள். உங்களுக்கான பாதுகாப்பைத் தேடுங்கள்! உலகை ரசிக்க வைக்கும் செல்வங்களை எல்லாம்  சம்பாதித்துக் கொள்ளுங்கள்!  அப்படி வாழும்போதே,  கஷ்டப்பட்டுச் சம்பாதித்த செல்வங்களும்,  உறவுகளும் கடைசியில் எப்படிக்  கைவிட்டுப் போகின்றன எனவும், எப்படித் துயரத்தைத் தருகின்றன எனவும் உணருங்கள்! உலக இன்பங்களின் பயனற்ற தன்மையையும் உடலின் தற்காலிகத் தன்மையையும் கவனியுங்கள். அந்தக் கவனிப்பால் உந்தப்பட்டு,  அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்ற கேள்வியால் குமையுங்கள்!  உண்மையின் தாகம் அப்பொழுதான் உங்களுக்குள் எழுகின்றது!  அப்போதுதான் வேதாந்தம் உங்களிடம் வருகின்றது!  எவருக்கும் துணை தருகின்றது.”

“ஐயா, ஸ்ரீ ருத்ரம் என்பது வேதாந்தமா?”

நான் என்னுடைய அடிப்படைக் கேள்விக்குத் திரும்பினேன்.

“அமைப்பின்படி,  ஸ்ரீ ருத்ரம் இறைவனுக்கு காணிக்கை செலுத்துவதற்கான  வேள்வி மந்திரங்களாகப் படிக்கப்படுவதாலும், அதிலும்   முக்கியமாகப்  பொருள் வளத்தையும், சுகத்தையும்   இம்மையிலும், மறுமையிலும், உடலமைந்த வாழ்க்கை தொடர்பான அனைத்தையும்  தேடுவதற்கும், துக்கத்தைப் போக்குவதற்கும் ஒரு வேதச் சடங்காகச் செய்யப்படுவதாலும் – ஆம், நீங்கள் சொல்வத்போல  ஸ்ரீ ருத்ரம் வேத பூர்வத்தின் ஒரு பகுதி என்பதே சரி! எனவே அவ்வகையில், உலக இன்பமே குறிக்கோளாகச் செய்யப்படும் எல்லாச் சடங்குகளுக்கும்,  அனைத்து கர்ம நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.  அப்படிச் செய்கின்ற வேள்வி, ‘திரவ்ய யக்ஞம்’ என்பதாகும். அங்கே பல பொருட்களும் தியாகம் செய்யப்படுகின்றன.  எனவே, எவரும் ஸ்ரீ ருத்ரம், ஏன், எந்த ஒரு வேதச் சடங்கையும் தமது சுயநலத்துக்காக,  எதிர்கால இன்பங்களுக்கான முதலீடாகிய ‘புண்யம்’ பெறுவதற்காகச் செய்வார்களாயின், அவற்றை வேத கர்மாவாகவே செய்ய வேண்டும்!  அப்படிச் செய்வதற்குக்  கர்ம விதிகளைப் பின்பற்றத்தான் வேண்டும்! பரிந்துரைக்கப்பட்ட அனைத்து சடங்குகளையும் பின்பற்றுவது – தூய்மை, குறிப்பிட்ட  ஆடை அணிவது, சரியான வகையில் மந்திரப்ப் பிரயோகம் செய்வது, யாகம் செய்விக்கின்ற ஆச்சாரியரின் அறிவுரைப்படி நடப்பது என  அனைத்துமே பின்பற்றப்பட வேண்டும்.  கர்மமே அங்கு முக்கியம் என்பதாலும், கர்ம பலனையே நாம் விழைகிறோம் என்பதாலும், ஈஸ்வரன் ‘கர்மபலதாதா’ எனும், கர்மபலனை முறையாக அளிக்கின்ற காவலராகவே கருதப்படுகிறார்.”

“ஐயா! அப்படிக் கருமபலனை விழையாமல் பாராயணம் செய்வதற்கு, வேறொரு முன்னோக்கும்  இருக்கிறதா?”

“ஆமாம் இருக்கிறது!  ஸ்ரீ ருத்ரம் பாராயணம் செய்வது உலக அமைதிக்கும், பொது நலத்திற்கும், தம்முடைய ஆத்ம ஞானத்திற்கும் என்றால், அங்கே கர்ம-பலத்யாகம் என்பது நடக்கிறது. அங்கு விஷயம் வேறு.”

“கர்ம பலனைத் தியாகம் செய்வதா! புண்ணியத்தையும் விட்டுடுங்கன்னு சொல்வதா?” – தீவிர ஆர்வத்துடன் கேட்டேன்.

“ஆம், ‘புண்ணியம்’ எனும் நல்வினைப் பயன்தான் நமது உலக வாழ்க்கையில் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. ஆனால்  சுக வாழ்க்கை நிலையானதாக இல்லையே! சுகம் போய்விடும் என்பதே நமக்குக் கவலையையும் துக்கத்தையும் ஏற்படுகிறதே! நிச்சயமாக, உங்களுக்குத் தெரியும், ‘பாபம்’ எனும் கெடுவினைப் பலனே  துக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மாறி மாறி வரும் சுக துக்கம் என்பது, முடிவில் துக்கத்திலேயே முடிவதால், துக்கமே சுகமாகவும், துயரமாகவும் வருகிறது. எனவே இவை இரண்டையுமே பொருட்ட்டாக எண்ணாமல் தியாகம் செய்துவிடலாம்!”

“அப்படிச் செய்வதால் என்ன பயன்?”

“அதன் பயன், ஊசலாடுகின்ற மனம் ஒரு நிலைப்படுவதுதான்! மனம் தூய்மையாகிறது! உறுதியான நிலையைப் பெறுகிறது! களங்கம் இல்லாத கண்ணாடி போல மனம் ஆவதினால், உள்ளத்தில் இருக்கும் உண்மையாகிய ஆத்மா, அந்த் தூய மனதில் பிரகாசிக்கிறது. அந்தப் பலன், ஆத்மாவாகவே இருக்கின்ற பெரும் பேறு.”

“ஐயா, சுயநலமில்லாமல் சடங்குகளைச் செய்வதால்தான், ஆத்மாவை உணரமுடிகிறது என்கிறீர்களா?”

“ஆமாம்! ஆனால் அதனால் மட்டுமே இல்லை!”

சிறிது இடைவெளிக்குப் பிறகு ஐயா தொடர்ந்தார்.

“பொதுநலம் விழைந்து செயலாற்றுவது என்பது, ஆத்ம ஞானமாகிய முதுகலை படிப்புக்குத் தேவையான இளங்கலை படிப்பு போன்றது. அந்த வகையில், செயலின் பலனைத் தியாகம் செய்யும் தன்னலமற்ற வழியே, உண்மையைத் தேடுபவருக்கான முதற் தகுதி. ‘கர்மயோகம்’ எனப்படும், தியாகத்துடன் செய்கின்ற கருமங்களால், கர்மம் செய்பவரின் மனம் தூய்மை அடைகிறது! ஆத்மாவை உணரத் தேவையான உறுதியையும், தெளிவையும் பெறுகிறது. அப்பொழுது மனம், ஆத்மாவின் ஒளியினால் நிரப்பப்படும் பாத்திரமாக ஆகிறது.”

“சரி, அப்படியானல் கர்மபலத் தியாகம்தான் முக்திக்கு வழியாகிவிடுகிறதே! அப்புறம் எதற்காக, அது மட்டுமே போதாது என்றும் சொன்னீர்கள்?”

“ஏனென்றால், தூய்மையான மனம் இன்றியமையாத தகுதியாக இருந்தாலும், அதுமட்டும் போதுமானதாக இல்லை. தெளிந்த மனத்துடன் ஒருவர், ஆத்மாவின் தன்மையை விசாரிக்க வேண்டும். விழைவுடன் பேருன்மையை விசாரிக்கின்ற தெய்வீக விசாரணையே ‘மீமாம்ஸம்’ எனப்படுவது.  அப்படி உண்மை விசாரணையால் வெளிப்படுத்துகின்ற அறிவே வேதாந்தம். எனவே தெளிந்த மனம் ‘ஆத்மவிசாரம்’ செய்வதற்கு வழிகாட்டுகிறது என்றும், ‘ஆத்ம விசாரம்’ ஒன்றே ஆத்மஞானத்தைத் தருகிறது என்றும், அதுவே விடுதலை என்றும் அறிந்து கொள்ளுங்கள். உண்மை அறிவுதான் முக்திக்கு வழி!”

“ஏன்?”

“ஏனென்றால், ‘அவித்யா’ எனும் அறியாமையினால்தான், தன்னைப் பற்றியும், உலகைப்பற்றியும் நமக்குத் தவறான புரிதல் ஏற்பட்டு, அதனால் துயரம் விளைகிறது. ”

“எதைப் போல?”

“பொதுவாக ‘நான் இந்த உடல்’ என்று நினைப்பதுபோல! ‘வெளியில் இருக்கும் உலகம் நித்தியமானது’  என்று நினைப்பது போல! ‘எனக்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்கிறது’ என்று தன்னை ஒரு அழியும் பொருளாக எண்ணுவது போல!”

“ஐயா, அது எப்படி அறியாமை? என் மரணத்தோடு நான் முடிவடைந்து விடவில்லையா! பிறப்பிலிருந்துதானே நான் ஆரம்பம் ஆனேன்!”

“இல்லை! ஆரம்பமும் முடிவும் இந்த உடலுடனான உங்களது தொடர்பின் முனைப் புள்ளிகள் மட்டுமே ஆகும்!  இந்த வாழ்க்கை என்பது, உங்களுக்கும், உங்களது உடலுக்கும் இடையிலான குத்தகை ஏற்பாடாகும்.”

“நீங்கள் ‘உங்கள்’ எனச் சொல்வது எனது ஆத்மாவையா? ”

“உங்களை, ஆத்மாவில் நிலைத்திருக்கும் ‘ஜீவன்’ என முதலில் கொள்ளுங்கள். ”

“யார் ஜீவன்?”

“ஜீவன் என்பது வல்லுடலாகிய உங்கள் உடம்பையும், மெல்லுடலாகிய உங்கள் மனதையும் குத்தகைக்குப் பெற்றிருக்கும் ஒளி!  வல்லுடலின் தொடர்பு துண்டிக்கப்பட்டால், ஜீவன் என்பது மெல்லுடலாகிய மனம் மட்டுமே! ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், சடமாகிய வல்லுடலைப் போலவே, மனமும் சடமானதுதான். ஆனாலும், வல்லுடலுடன் ஒப்பிடும்போது, மெல்லுடலாகிய மனம் மிகவும் நுட்பமாக இருப்பதால், அதற்கு பிரதிபலிக்கும் சக்தி அதிகமாக உள்ளது. எந்தப் பொருளும் நுண்மை அடைய அடைய, பிரதிபலிக்கின்ற சக்தியும் பெருகின்றது அல்லவா! அதனால்தான், மனம் ‘சித்’ எனப் புகழப்படும் ஆத்மாவின் ஒளியினைப் பிரதிபலிக்கின்ற ‘சிதாபாசம்’ எனத் திகழ்கிறது.”

“சிதாபாசம் என்றால்?”

“வடமொழியில் ‘ஆபாசம்’ என்றால், பிரதிபலிப்பு, போலியான பிரதி எனும் பொருள் உண்டு. எப்படி ஒரு கண்ணாடித் துண்டு சூரியஒளியால், சூரியனைப்போலவே ஒளியைத் தருகிறதோ, அதுபோலவே மனமானது, ஆத்மாவைப்போல ஒளிர்கிறது.”

“அப்படியானால் ஜீவன் வல்லுடலின் குத்தகை முடிவடையும் போது என்ன செய்கிறது?”

“அது மற்றொரு வல்லுடலைத் தேடிச் செல்கிறது. அதன் தேடலும், தேடும் திசையும், அந்த ஜீவன்  சுமந்து கொண்டிருக்கும் ‘கர்ம பலம்’ எனும் பூக்களின் மணத்தினால் (வாசனையினால்) தீர்மானிக்கப்படுகிறது. எனவே மற்றொரு உடல், மற்றொரு பிறவி, மற்றொரு உலகம் என மாறி மாறி, இந்த சுழற்சி ஜீவனுக்குத் தொடர்கிறது! அதுதான் ‘சம்சாரம்’ எனக் கூறப்படுகிறது.”

“அப்படியானால், ஆத்மா அப்படியேதான் இருக்கிறது, இல்லையா?” – நான் கேட்டேன்.

“ஆம்! ஆத்மா எப்போதும் இருக்கிறது! ஆத்மா என்றால் ஏதோ வேறு ஒரு பொருள் என எண்ணாதீர்கள்! ஆத்மா என்பது நான் எனத் தெளியுங்கள்.  நான் மட்டுமே இருக்கிறேன்! ஜீவன், தான் இந்த வல்லுடலும் இல்லை, மெல்லுடலும் இல்லை, அவற்றுக் காரணமான ‘கர்மவாசனைகளான’, காரண உடலும் இல்லை எனத் தெளிகின்ற போது, அங்கே ஆத்மாவாகிய நான் மட்டுமே இருக்கிறேன்.  அதனை உணர்கின்ற ஜீவன், ‘ஆத்மபோதம்’ எனும் ஞான ஒளியினால் பிராகசப்பட்டு, அதன் விளைவாக, அதுவரை மூடியிருந்த ‘ஜீவ-பாவம்’ எனும் புகைஇருளை விலக்கிக் கொள்கிறான். அதனால் விடுதலை பெற்றவனாக ஆகிறான்!”

“ஐயா, ஸ்ரீ ருத்ரம் பாராயணத்துக்குத் திரும்பி வருகிறேன்!” – எனது சந்தேகத்துக்கான விளக்கத்தைக் கேட்க, அந்த உரையாடலை மீண்டும் என் கேள்விக்குத் திருப்பினேன்.

“நல்லது! புரிந்து கொள்ளுங்கள்! உண்மையை விழையும், பார்க்கும் பார்ப்பனர்களாகிய முனிவர்கள், ஸனாதன தர்மத்தில், தெய்வீக விசாரணைக்கான திறவுகோல்களை எல்லாம், வேதங்களின் மறையொலியினில் மட்டுமல்ல, எளிதான பிரார்த்தனைகளின் சாதாரண சொற்களுக்குள்ளும் விதைத்துள்ளனர். நாம்தான் விழிப்புடன் தேடி, அந்தச் சாவிகளைக் கைப்பற்றி, அவற்றின் உதவியால், சிந்தனைக்குள் ஆத்ம விசாரத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படியான திறவுகோல்களுடன் விளங்குகிண்ற ஸ்ரீ ருத்ரம் ஆகிய வேதமந்திரங்கள், அதனால்தான் ‘ஸ்ரீருத்ரோபநிஷத்’ என அழைக்கப்படும் வேதாந்தமாகவும் விளங்குகிறது. அதன் சப்தத்தில் (அதாவது அதனைக் கேட்பதன் மூலம்),  மற்றும் அர்த்தத்தில் (அதாவது அதன் பொருளை விசாரிப்பதன் மூலம்) புதைந்திருக்கும் உண்மைப் பொக்கிஷங்களின் திறவுகோல்களை எவர்  அடையாளம் காண்பாரோ அவருக்கு ஆத்மா வெளிப்படுத்துகிறது. அதாவது அவரது கர்மச் சடங்கு ஒரு  ஆழமான ஆத்மவிசாரமாக மாறிவிடுகிறது. அதாவது ஸ்ரீ ருத்ர ஜப யக்ஞம் எனும் திரவ்ய-யக்ஞம் ஒப்பற்ற ஞான யக்ஞமாகிறது. ஒருவருக்கு அத்தகைய உயர்வான ஞானயக்ஞமே குறிக்கோளாக இருக்கும்போது, அங்கே பாகுபாடு பற்றிய கேள்வி எப்படி வரமுடியும்? ஆணா பெண்ணா என்ற கேள்வி எங்கே? ‘ஷ்ரத்தா’ மற்றும் ‘பக்தி’ இவை இரண்டுதானே இன்றியமையாத தகுதிகள்!  ‘வைராக்கியம்’ எனும் சத்தியம் அல்லாத மற்ற எல்லாவற்றிலிருந்தும் விலகிச் செல்கின்ற உறுதி அல்லவா முக்கியத் தேவை!”

என் பதட்டம்  தணிந்துவிட்டதால் அமைதியாக அமர்ந்திருந்தேன்.

ஐயா தொடர்ந்தார்.

“சரி, இப்போதும்  ஸ்ரீ ருத்ர மந்திரங்களைப் படிக்கும் பெண்களின் புனிதம் மற்றும் உரிமை பற்றி வாதிட விரும்புகிறீர்களா?”

“இல்லை ஐயா! பெண்களைச் சேர்த்துக் கொண்டு ஸ்ரீ ருத்ரம் பாராயணம் செய்வதால் பாபம் விளையும் என்று யாரோ சொன்னதால் எனக்கு கவலையாக இருந்தது!”

“கவலை வேண்டாம்! பாபமும் புண்ணியமும் சடப் பொருள் இன்பத்தினை உலகில் விழைபவர்களுக்கு மட்டுமே! அமைதியையும்,  நிறைவையும் தேடுபவர்களுக்கு, உலக நலனுக்காக பிரார்த்தனை செய்பவர்களுக்கு, உண்மையின் நிலைக்க விரும்புபவர்களுக்கு, இந்தப் பாவ-புண்ணிய ஜோடியின்  எதிர் நிலைகள் தேவையற்றவை!”

“ஐயா, ஆத்மஞானம் என்ற இலக்கை மட்டுமே எடுத்துக்கொண்டு, வேத மந்திரங்களைக் கேட்பதால், ஓதுவதால், உலக வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்குமா?”

“கவலைப்படாதீர்கள்! ஆத்மஞானம் நாட்டம் என்பது முழுமையான கர்ம பலத் தியாகத்தின் மீது மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் சொல்கிறேன்: ‘தியாகம்’ என்பது உங்களுக்குச் சொந்தமான ஒன்றை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுப்பது போல, ஒரு செயல் அல்ல! அப்படி நினைப்பது அகங்காரம்! ‘தியாகம்’ என்பது முழுமையான சரணாகதியின் விளைவு! எல்லாமே ஈஸ்வரனுடையது என்பதால், எதை நாம் உரிமை கொள்வது, எதைத் தியாகம் செய்வது! ‘நான்’, ‘எனது’ எனும் ஜீவபாவத்தை விடுவதும், அதனால் முழுமையாக ஈஸ்வரனைச் சரணடைவதுமே போதும்! அப்படி ஆகிவிட்டால், உமது உயிர் எனச் சொல்லப்படுவது, முற்றிலும் ஈஸ்வரனுடைய காவலில் உள்ளது. பிறகு பயப்பட ஒன்றுமில்லை! எது வந்தாலும், ஏற்றுக் கொள்ளும்  திறன் உங்களுக்கு இருக்கும்.”

நான் சிரித்தேன்.

“கவலைப்பட வேண்டாம்” என்றார் ஐயா.

“கவலைப்படவில்லை”,  என்றேன் நான்.

தெளிந்த மனமுடையவனாக,    ஐயாவிடம் விடைபெற்றேன்.

Mee. Rajagopalan

8 May 2023

Related Posts

Share this Post