அம்மாவுக்குப் பதினாறு

(அமரத்துவம் அடைந்த அன்னைக்குப் பதினாறு பிண்டங்கள்) – (மாத்ரு ஷோடஸி ஸ்லோகம்)

கருவிலென் பளுவது வீங்கிக் கால்தடு மாறிடத் தாங்கி
அருநடை மேடுகள் பள்ளம் ஆவன யாவையும் தாண்டி
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (1)

ஒருவொரு மாதமு மாக உதரமுட் பாரமு மாக
கருவொரு காலமு மாக கனமுமுத் தாரமு மாக
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (2)

கருவினில் இட்டாய்! எந்தன் காலுதை பட்டாய் பட்டும்
முறுவலில் விட்டாய்! உந்தன் மூட்டுடல் வலிகலி ளுற்றாய்!
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (3)

உதரமுள் பத்துத் திங்கள் உனக்கிடர் தந்தேன் நொந்தாய்
கதறியோர் கவளப் பிண்டம் கரந்திட வந்தேன் எந்தாய்!
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (4)

செருமலைக் களைப்புடன் மூச்சைச் சேர்ந்திழுத் தயர்த்திடும் வீச்சை
பொறுமையில் ஏற்றுடற் கொண்டாய்! பூக்கரு போற்றிடக் கொண்டு
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (5)

தடுமலை நோயினைச் சேயன் தவிர்த்திடக் காயமுந் தேயும்
கடுமையைக் கசப்பினை உண்டாய்! கருணையி னாலது நேயம்
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (6)

கருவெளி வந்தது என்று கண்டுநீ உண்டிடேன் என்று
ஒருவழிப் பட்டனை! முந்நாள் ஒன்றுமே உண்ணாள் செந்தீ
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (7)

இரவிலென் மலநீர் ஓடி ஈரமுன் னாடைகள் மூடிப்
பரவிடும் பார்த்தது சகித்தாய்! பரிசெனச் சேர்த்தெனை அணைத்தாய்
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (8)

தருவதாய்த் தாயுமென் றாகித் தனயனென் பசியுடன் தாகந்
திருவதாய்த் தீர்த்துவுன் னாசைத் தேவைகள் தூர்த்துயர் வாகப்
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (9)

இருமுலைப் பாலுன துபயம்! ஈர்த்திழுத் தழுத்திய துயரம்!
வருமுழைப் பாயுடல் லேற்றனை! வலிமிகுந் ததுநிதம் நூற்றனை!
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (10)

பனிமழை வெயிலரும் வாடை பலவனு பவமிடை யேனை
கனிவலை யாயிதங் காத்தாய்! கவினுடல் தளர்வுற வேர்த்தாய்!
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (11)

சிறிதென நோய்வாய்ப் படினும் சேயனுக் காய்மனம் இளகிப்
பிரிவென விலகா தருகில் பிணித்திருந் தாய்மனம் உருகிப்
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (12)

அருவுரு வாகினை அந்தோ அந்தகன் ஆக்கிய பாதை
ஒருசிறு இடரெதும் இன்றி உன்துணை ஆகிடல் வேண்டும்
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (13)

அறிவுடை யாரவர் செய்வார் அன்பினிற் தாய்க்கருஞ் சேவை
தெரிவுற யானுணர்ந் தேனே! தெரியா திடர்கள்தந் தேனே!
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (14)

என்நலம் என்வளம் என்று எனக்கென எப்பொழு தென்று
தன்நலம் அற்றனை தாயே! தனக்கென அற்றநல் நீயே!
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (15)

கருவிலும் சிறுவுரு பிள்ளைக் கவினுடல் எனமிகத் தொல்லை
தருமெனைத் தயவுரு வதனால் தந்தனை நொந்திட லில்லை!
பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன்
படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (16)

Related Posts

Share this Post