வினாவிடை மணிமாலை

சம்ஸ்கிருத மொழியிலே ‘ப்ரசனோத்ர ரத்ன மாலிகா’ என்பதன் பொருள், ‘வினா விடைகளாம் ரத்தினக் கற்கள் பதித்த மாலை’ என்பது ஆகும். பகவான் ஸ்ரீ ஆதி சங்கரர் படைத்த இவ்வரிய நூல், சுமார் 181 வினாக்களையும் அதற்கான நேரடியான விடைகளையும் தருகின்றது. இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு, அறவழிப்பாதையில் நடக்க விழையும் ஒவ்வொருவருக்கும், சரியான வழிகாட்டும் கையேடாக இந்நூல் இருக்கிறது. இந்நூலின் அழகு, இதன் எளிமை! வினாக்கள் எல்லாம் நம் மனதில் பொதுவாக விளைபவை. அவைக்கான விடைகள், சுற்றி வளைக்காமல், சட்டெனப் புரியச் செய்பவை. இப்பாடல்களில் குழப்பமான தத்துவங்களோ, கடினமான வார்த்தைப் பயனோ இல்லை. சம்ஸ்கிருத மொழியில் வாக்கிய அமைப்புக்களைக் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக, எளிய வாக்கியங்களும், எளிய சொற்களும் கொண்டு விளங்குகின்றது இவ்வரிய நூல். ஒரு தந்தை குழந்தைக்குச் சொல்வது போல, அல்லது, ஒரு ஆசிரியன் தன்னிடம் நம்பிக்கை கொண்ட மாணவனுக்குச் சொல்லித்தருவது போல, இக்கேள்வி பதில்கள் அமைந்துள்ளன. பதில்கள் எல்லாம் பளிச்சென்று விளங்கும் கட்டளைகள் அல்லது உறுதியான குறிக்கோள்கள். இந்நூல் ஆழமான தத்துவ விசாரணைகளையோ, ஆராய்ச்சிகளையோ தருவதற்கல்ல, ஆனால் முடிவான வழியினை, எளிதாகக் காட்டி இல்லறனின் நல்லறத்தை உணர்த்துவதற்காகப் படைக்கப்பட்டது. இதனைப் படித்து, இதன்படி நடப்பவன், நிச்சயமாக, ஆழமான ஆய்வினால் அரிய உண்மையினைத் தன்னுள் தானே உணரும் தகுதியினைப் பெறுகிறான்.

இப்பாடல்களை மேலாகப் படிக்கும் ஒருவருக்கு, இதில் கேள்விகள் எவ்விதமான தொடர்பும் இன்றிப் பின்னப் பட்டிருப்பதாகத் தோன்றலாம். ஆனால் நல்லாசிரியன் காட்டும் போது, அக்கேள்விகளின் இடையே ஒரு தொடர்பு இருப்பதையும் அவை பின்னப்பட்ட விதம் ஆழ்ந்த உறுதியை நமக்கு விளைவிக்கும் என்கிற உண்மையையும் அறிய முடியும். சில கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்படுவது, அவற்றின் பொருள் ஆழப் பதிய வேண்டும் என்பதற்காகவும், அல்லது அக்கேள்விகளுக்கு வேறு ஒரு விடை வடிவம் கொடுப்பதற்காகவும் என்பதையும் நாம் உணரமுடிகிறது.

சில கருத்துக்கள் புதிய பரிமாணத்தில் படைக்கப்படுவதும் இதன் சிறப்பு. எடுத்துக்காட்டாக 44-ம் பாட்டில், “உலகில் எவன் மகிழ்கிறான் (லோகே சுகி பவத் கோ?)” எனும் வினாவிற்குச் “செல்வந்தன்” என்பது விடை. இது நாம் எல்லோரும் நம்புவது தானே! பணக்காரன் ஆக இருந்தால் மகிழ்ச்சி நிச்சயம் என்பது தானே நமது எண்ணம்! ஆனால் அடுத்த “செல்வம் என்பது என்ன? (தனமபி ச கிம்?)” எனும் வினாவிற்கு “எதனால் ஆசைகள் முடிந்து நிறைவு வருமோ அதுவே செல்வம்” என்ற விடை வருகிறது. செல்வம் என்பது பணமாகிய சொத்துக்கள் அல்ல; செல்வம் என்பது நிறைவுடமை ஆகும் எனப்புரிகிறது. அதனால், வெளிப்பொருளைத் தேடாமல், மனதில் நிறைவைத் தேடுவதே செல்வத்தைத் தேடுவது ஆகும்.

ஆதி சங்கரர் உண்மைச் சுகத்துக்கான அறிவின் பாதையை இப்பாடல்களின் வழியாகக் காட்டுகின்றார். அவ்வறிவு மிக மேலானது; அதற்கு அகலாத பக்தி அவசியம். ஓம் எனும் அரிய ஒலியின் வடிவம், ஆழ்ந்த பக்தியும், ஆழ்ந்த ஞானமும் இணைந்து பரம்பொருளைக் காட்டுவது. அதுவே வேதங்களின் வித்தும், விளைவும் ஆகும். இப்பாடல்கள் அத்தகைய பக்தியும் ஞானமும் அடையும் பாதையைக் காட்டி முடிகின்றன. அத்தகைய ரத்தினங்கள் கோர்த்த மாலையைக் கழுத்தில் அணிபவன், எண்ணத்திற்கும், பேச்சுக்கும் மூலமான கழுத்திலே, பேருண்மையைச் சேர்த்தவன் ஆகிறான்.

நன்முனைப்பால் ஆங்கிலத்திலும் தமிழிலும் செய்த இம்மொழிபெயர்ப்பு, நாம் படித்துணர உதவும் ஒரு முயற்சி எனப் பணிகிறேன்.

மீ. ராஜகோபாலன்

Related Posts

Share this Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*